Friday 18 September 2015

கட்சிகட்டும் முறை ஜே.வி.ஸ்ராலின்



கட்சிகட்டும் முறை

ஜே. வி. ஸ்டாலின்

நமது கட்சியின் வரலாற்றில் மூன்று காலப்பகுதிகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் காலப்பகுதி 

உருவாக்கக் காலப்பகுதியாகும்; 

இக்காலப்பகுதியில் தான் நம் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இக்காலப்பகுதி ஏறத்தாழ இஸ்க்ரா  தொடங்கப்பட்டதிலிருந்து மூன்றாவது கட்சிப் பேராயம் (காங்கிரஸ்) நடந்து முடிந்தது வரையிலானது (1900 இன் முடிவிலிருந்து 1905 இன் தொடக்கம் வரையிலானது.)

இக்காலப்பகுதியில் கட்சி ஒரு செலுத்து சக்தி என்ற அளவில் வலிமை குன்றி இருந்தது. கட்சியே இளம் பருவத்தில் இருந்ததால் மட்டும் அது வலிமை குன்றி இருக்கவில்லை; ஆனால் அப்போது உழைக்கும் வர்க்க இயக்கம் முழுவதுமே இளம்பருவத்தினதாக இருந்தது. குறிப்பாக இக்காலப்பகுதியின் தொடக்கக் காலகட்டங்களில் புரட்சிகர நிலைமை காரணமாகப் புரட்சிகர இயக்கம் குறைபாடுடையதாக இருந்தது. அல்லது வளர்ந்திருக்கவில்லை ( உழவர் வர்க்கம் அமைதியாக இருந்தது அல்லது சிடுசிடுத்த முணுமுணுப்புக்குமேல் போகவில்லை: தொழிலாளர்கள் பகுதிநேரப் பொருளியல் வேலை நிறுத்தங்களை, அல்லது அரசியல் வேலை நிறுத்தங்களை மட்டுமே ஒரு முழுநகர அளவில் நடத்தினர்; இயக்கத்தின் வடிவங்கள் தலைமறைவு அல்லது அரைச்சட்ட ரீதியிலிருந்தன. தொழிலாளர் வர்க்க அமைப்பின் வடிவங்களும் முக்கியமாகத் தலைமறைவுத் தன்மையுடையதாகவே இருந்தது.)
போர்த்தந்திரம் சேமிப்புச் சக்திகள் இருக்கின்றன என்றும் அவற்றைத் திறமை வாய்ந்த தி்ட்டத்துடன் கையாள வேண்டுமென்றும் முன்னதாகவே எண்ணுகிறபடியால், கட்சியின் போர்த்தந்திரம் இன்றியமையாதவாறு குறுகியதாகவும், கட்டுப்பட்டதாகவும் இருக்கிறது. இயக்கத்தின் போர்த்தந்திரத் திட்டத்தை அதாவது இயக்கம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை வரைவதில் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மற்றும் கட்சியின் சேமிப்புச் சக்திகள்- ரஷ்யாவுக்கு உள்ளும் புறமும் இருக்கிற எதிரிகளின் முகாமுக்குள்ளே இருக்கிற முரண்பாடுகள்- பயன்படுத்தாமலோ அல்லது பெரும்பாலும் பயன்படுத்தாமலோ இருந்தன. கட்சியின் பலவீனமே இதற்குக் காரணமாகும்.

மக்கள் திரளை வென்றெடுப்பதையும், போர்த்தந்திர வெற்றியையும் நோக்கமாகக் கொண்டு, இயக்கத்தின் எல்லா வடிவங்களையும் பாட்டாளிவர்க்க அமைப்பின் வடிவங்களையும் அவற்றை ஒன்று கலத்தல் மற்றும் ஒன்றுக்கொன்று விடுபட்டதை நிரப்புதல் என்பன போன்றவற்றைப் பயன்படுத்துவதைச் செயல்தந்திரம் முன்னதாகவே எண்ணுகிறது. எனவே கட்சியின் செயல்தந்திரம் இன்றியமையாதவாறு குறுகியதாகவும், செயல்வாய்ப்பு இல்லாமலும் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் கட்சி தனது கவனத்தையும், அக்கறையையும் கட்சியின் மீதே, அது நின்று நிலவுவதிலும், அழியாமல் பாதுகாப்பதிலும் செலுத்திற்று. இந்தக் காலகட்டத்தில் அது தன்னை ஒருவகை சுயதேவையைப் பூர்த்தி செய்யும் சக்தியாக மதித்துக் கொண்டது. இது இயற்கையானதே. கட்சியின் மீது ஜாரிசம் தொடுத்த கொடிய தாக்குதல்களும், கட்சியை உள்ளிருந்தே சிதறடிக்க மென்ஷெவிக்குகள் செய்த முயற்சிகளும், கட்சி ஊழியர்களை அகற்றி ஓர் உருவமற்ற கட்சியற்ற ஒன்றை அவர்களிடத்தில் வைப்பதும், ( அக்சல்ராடு ( Axelrod ) டுடைய குறிப்பிடக்கூடிய குறு நூலான   “ மக்களது டூமாவும், தொழிலாளர் பேராயமும்”  1905 என்பதுடன் தொடர்புபடுத்தி மென்ஷெவிக்குகள் ஒரு தொழிலாளர் பேராயத்தை நடத்தும்படி ஓர் இயக்கம் நடத்தியதை நினைவு கூரவும் ) கட்சி நின்று நிலவுவதையே அச்சுறுத்தியது. கட்சியைப் பாதுகாப்பது என்ற பிரச்சனை எல்லாவற்றுக்கும் மேலான முக்கியத்துவம் பெற்றது. 

அந்தக் காலகட்டத்தில் ரஷ்யாவில் பொதுவுடைமையின் முதன்மையான கடமை தொழிலாளர் வர்க்கத்தின் மிகச் சிறந்தவர்களை மிகவும் செயலுாக்க முடைய பாட்டாளிவர்க்க குறிக்கோளுக்காக மிகவும் ( அர்ப்பணித்துக் கொண்ட) பக்திசிரத்தையுடன் ஈடுபடக் கூடியவர்களைக் கட்சிக்குள் சேர்ப்பதாகும்; பாட்டாளி வர்க்கக்கட்சி அணிகளை உருவாக்கி, கட்சியை அதன் கால்களில் உறுதியாக நிற்க வைப்பதுமாகும். 
தோழர் லெனின் இந்தக் கடமையைப் பின்வருமாறு வகுத்துக் கொடுக்கிறார்     
 “ பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையைப் பொதுவுடைமையின்பால் வென்றெடுப்பது” 
(இடது சாரியக் கொம்ஜூனிசம் என்ற நூலைப் பார்க்கவும்)

இரண்டாவது காலப்பகுதி 

தொழிலாளர் மற்றும் உழவர்களின் பரந்த மக்கள் திரளைக் கட்சியின்பால், பாட்டாளிவர்க்க முன்னணிப்படையின்பால் வென்றெடுப்பதாகும்.  
இது ஏறத்தாழ அக்டோபர் 1905 முதல் அக்டோபர் 1917 முடிய உள்ள காலகட்டத்தை ஒட்டி வருவது..இந்தக் காலகட்டத்தில் நிலைமை முந்திய காலகட்டத்தை விட அதிகமான, செழுமையானதும் சிக்கலானதுமான நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது. ஒருபுறம் மஞ்சூரியப் போர்க்களத்திலும் மறுபுறம் ரஷ்ய-ஜப்பானியப் போர் நிறுத்தம், எதிர்ப்புரட்சியின் வெற்றி, புரட்சி வெற்றியடைந்ததால் பெற்ற ஆதாயங்களைத் துடைத்தழித்தல், மூன்றாவதாக ஏகாதிபத்தியப் போர், 1917 பிப்ரவரிப் புரட்சியும், அனைவருமறிந்த “ இரட்டை அதிகாரமும்” (Dual Power)  - இந்த எல்லா நிகழ்ச்சிகளும் ரஷ்யாவிலுள்ள எல்லா வர்க்கங்களையும் கிளர்ந்தெழச் செய்து அரசியல் அரங்கில் ஒன்றின் பின் மற்றொன்றாக அவைகளைத் தள்ளி விட்டன; பொதுவுடைமைக் கட்சியை வலுப்படுத்தின; உழவர்களில் பெருந்திரளானோரை அரசியல் வாழ்வில் விழிப்படையச் செய்தன.
பொது அரசியல் வேலைநிறுத்தம் மற்றும் ஆயுதந்தாங்கிய எழுச்சி -போன்ற திறன்மிக்கவடிவங்களால் பாட்டாளிவர்க்க இயக்கம் செழுமை ஊட்டப்பட்டது. நிலப்பிரபுக்களைப் புறக்கணித்ததன் மூலம் உழவர் இயக்கம் செழுமை பெற்றது. (நிலப்பிரபுக்களை அவர்களுடைய மாவட்ட நிலைகளிலிருந்து அகற்றித் திரையிடல் (smoking) இது பின்னர் ஆட்சிக்கு எதிரான ஆயுத எழுச்சியாக மாறியது. பாராளுமன்றத்துக்குப் புறம்பான, சட்டரீதியான வெளிப்படை வடிவம் போன்ற கைதேர்ந்த வடிவங்களில் வேலை செய்ததன் மூலம் கட்சி மற்றும் வேறு புரட்சிகர அமைப்புகளின் நடவடிக்கைகள் ஊக்கமூட்டப்பட்டன.

தொழிலாளர் வர்க்க அமைப்பு தொழிற்சங்கங்கள் போன்ற தேர்ந்த முக்கியமான வடிவத்தால் மட்டுமன்றி வரலாற்றில் இதற்குமுன் நிகழ்ந்திராத வடிவமான தொழிலாளர் பேராண்மைச் சோவியத்துகள் (Soviets Of Workers Deputies) போன்ற திறன்மிகு தொழிலாளர் வர்க்க அமைப்பாலும் கூட செழுமையாக்கப்பட்டது.

தொழிலாளர் வர்க்கத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி உழவர்களும் உழவர் பேராண்மைச் சோவியத்துகளை (Soviets Of Peasants Deputies) அமைத்துக் கொண்டனர். 

கட்சியின் சேமிப்புச் சக்திகளும் செழுமை பெற்றன. பாட்டாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்குமான வற்றாத சேமிப்புச் சக்தியாக உழவர் வர்க்கம் சேர்ந்து உருவாகும் என்பது போராட்டக் காலத்தினுாடே தெளிவாகியது. மூலதன ஆட்சியைத் தூக்கி எறிவதில் பாட்டாளி வர்க்கமும் அதன் கட்சியும் தலைமை வகிக்கும் என்பதும் கூடத் தெளிவாகியது. 

இந்தக் காலப்பகுதியில் கட்சி இதற்கு முன்பு இருந்ததைப் போல அவ்வளவு வலிமை குன்றி இருக்கவில்லை; இயங்கு சக்தி என்ற வகையில் அது மிக முக்கியமான காரணி ஆகியது. இப்போது கட்சியின் வாழ்வும் வளர்ச்சியும் திடமாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் அது சுயதேவைப் பூர்த்திப்படையாக இதற்கு மேலும் நீடிக்க முடியாது. அது சுயதேவைப் பூர்த்திப்படை என்பதிலிருந்து தொழிலாளர் மற்றும் உழவர் திரள்களை வென்றெடுக்கும் ஒரு கருவியாக  மாறியது;  மூலதன ஆட்சியைத் தூக்கி எறிவதில் மக்கள் திரளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கான கருவியாக மாறியது. 

இந்தக் காலப்பகுதியில் கட்சியின் போர்த்தந்திரம் பரந்த செயல்வாய்ப்பைப் (Scope) பெற்றது;  உழவர் வர்க்கத்தை ஒரு சேமிப்புச் சக்தியாக வெல்லுவதையும் பயன்படுத்துவதையும் நோக்கி அது முதலாவதாக இயக்கப்பட்டது;  அது இந்த வேலையில் முக்கிய வெற்றி பெற்றது.
இதற்கு முன்பு இல்லாத புதிய வடிவங்களால் மக்கள் திரள் இயக்கங்களும் , அவற்றின் அமைப்புகளும் கட்சி மற்றும் பிற புரட்சிகர நிறுவனங்களின் நடவடிக்கைகளும் செழுமையாக்கப்பட்டதன் விளைவாகக் கட்சியின் செயல் தந்திரமும் கூடப் பரந்த செயல் வாய்ப்பைப் பெற்றது.
இந்தக் காலப்பகுதியில் கட்சியின் தலையாய கடமை உடைமை வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவதைக் குறிக்கோளாகக் கொண்டு, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு பரந்துப்பட்ட மக்கள் திரளைப் பாட்டாளிவர்க்க முன்னணிப்படையின்பால் கட்சியின் பக்கம் வென்றெடுப்பதாக இருந்தது. கட்சி இப்போது தன்மீதேயன்றிப் பரந்துப்பட்ட மக்களின்பாலும் தன் கவனத்தைக் குவித்தது. தோழர் லெனின் இக்கடமையைப் பின்வருமாறு வகுக்கிறார்: “ இனி வரவிருக்கிற தீர்மானகரமான போர்களில்” வெற்றியை உறுதி செய்வதற்குத் தகுந்த வகையில் சமூக முன்னணியில் “ பரந்துப்பட்ட மக்களை மனம் பற்றச் செய்தல்” ( தோழர் லெனின் மேலே குறிப்பிட்ட பெயரில் எழுதிய சிறு வெளியீட்டைப் பார்க்கவும்.)

நமது கட்சியின் வளர்ச்சியில் முதலிரு காலப்பகுதிகளின் தனியியல்புச் சிறப்புக் கூறுகள் இத்தகையனவாகும்.முதலாவது காலப்பகுதிக்கும் இரண்டாவது காலப்பகுதிக்கும் இடையிலான வேறுபாடு ஐயத்திற்கிடமின்றி மிகப் பெரியதாகும். ஆனால் இவையிரண்டுக்கும் இடையிலான பொதுவான கூறுகளும் சில உண்டு. 

முதலாவது காலப்பகுதியிலும், இரண்டாவது காலப்பகுதியிலும் கட்சி முழுவதுமாக இல்லாவிட்டாலு்ம் பத்தில் ஒன்பது பங்கு ஒரு தேசிய சக்தியாகவே –ருஷ்யாவுக்கு மட்டுமே ருஷ்யாவுக்கு உள்ளேயேயுள்ளதாக இருந்தது (அமைப்பாக்கப்பட்ட பன்னாட்டு பாட்டாளி வர்க்கத்தின் படைப் பிரிவுகளில் ஒன்றாக இருந்தது.) இது முதலாவது முக்கிய செய்தியாகும்.

இரண்டாவது முக்கிய செய்தி என்னவென்றால் முதலாவது காலப்பகுதியிலும் இரண்டாவது காலப்பகுதியிலும் ருஷ்யப் பொதுவுடைமைக் கட்சி எழுச்சியை மேலே கொண்டுவரும் கட்சியாக ருஷ்யாவுக்குள் புரட்சி செய்யும் கட்சியாக இருந்தது. எனவே இந்தக் காலப்பகுதிகளில் பழைய அமைப்பை (Order) விமர்சனம் செய்தல், அழித்தல் ஆகிய கூறுகள் அதன் வேலையில் மேம்பட்டிருந்தன
.
இப்போது நாம் இருக்கிற காலப்பகுதி முற்றிலும் வேறுபட்ட சித்திரத்தை அளிக்கிறது.

மூன்றாவது காலப்பகுதி 

கீழ்க்காணும் இரண்டு காரணங்களுக்காக அரசு அதிகாரத்தை எடுத்து வைத்துக் (holding) கொள்கிறது. ஒருபுறம் சோசலிசப் பொருளாதாரத்தையும் செம்படையையும் கட்டும் வேலையில் ரஷ்ய உழைக்கும் மக்கள் அனைவரையும் இழுப்பது, மறுபுறம், மூலதனத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டத்தில் பன்னாட்டுப் பாட்டாளிவர்க்கத்துக்கு உதவி அளிப்பதற்காக எல்லாச் சக்திகளையும் மூல வளங்களையும் (Resource) பயன்படுத்துதல், இந்தக் காலப்பகுதி அக்டோபர் 1917 முதல் இன்று வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தை ஒட்டி வருவது.
ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது என்ற உண்மை பன்னாட்டு அளவிலும், ரஷ்யாவுக்குள்ளும் ஒரு தெளிவான நிலைமையை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலைமையை உலகம் இதற்கு முன்னால் கண்டதே இல்லை.
========================================================================
(கட்சி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் முன்பும் பின்பும் என்ற கட்டுரையில் இருந்து)
     பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றிய சமரன்  தொகுப்பு பக்கம் 357-362   
ஜே. வி. ஸ்டாலி்ன்   
நன்றி அச்சுப்பதிவு கழகத் தோழர் மதி 18-09- 2015