Thursday 20 October 2011

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை: 1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்




1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை

தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குறைந்தது பன்னிரண்டு பதிப்புகளில் ஜெர்மன் மொழியில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் முதன்முதலாக 1850-இல் லண்டன் நகரத்துச் சிவப்புக் குடியரசுவாதி (Red Republican)[3] பத்திரிக்கையில் வெளியானது. இந்த மொழிப்பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மக்ஃபர்லேன் (Helen Macfarlane). 1871-இல், அமெரிக்காவில் குறைந்தது மூன்று வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு முதன்முதலில், 1848-ஆம் ஆண்டு ஜூன் எழுச்சிக்குச்[4] சிறிது காலத்துக்கு முன்பாகப் பாரிசில் வெளியானது, அண்மையில் நியூயார்க் நகரத்து சோஷலிஸ்டு (Le Socialiste)[5] பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதலில் ஜெர்மன் மொழியில் வெளிவந்த சிறிது காலத்திலேயே போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியானது. அறுபதுகளில் ருஷ்ய மொழிபெயர்ப்பு ஒன்று ஜெனீவாவில் வெளிவந்தது. முதன்முதலில் வெளியாகிய குறுகிய காலத்துக்குள்ளேயே டேனிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது.

ஆனாலும் அறிக்கையானது[7] ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜூன் 24, 1872.




நன்றி: மார்க்சிஸ்ட் இணையத் தொகுப்பகம்