Tuesday 15 November 2011

கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்வது-மாவோ

கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்வது-மாவோ

கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்வது
(1939, அக்டோபர் 4)
மாவோ
பதிப்பாளர் குறிப்பு :

"'கம்யூனிஸ்ட்'டை அறிமுகம் செய்வது" என்ற கட்டுரை பீக்கிங் மக்கள் பதிப்பகத்தினரால் பிரசுரிக்கப்பட்ட "தேர்ந்தெடுக்கப்பட்ட மாசேதுங் படைப்புகள்" வால்யும் 2-லே (1952, ஆகஸ்ட், முதலாவது பதிப்பின்படி 1968, டிசம்பரில் பதிப்பிக்கப்பட்டது) கண்டுள்ள சீன வாசகத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அயல் மொழிகளிலே தனிக் கட்டுரையாக வெளியிடும் தேவையையொட்டி, இக்கட்டுரையிலுள்ள குறிப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

தோழர் மாசேதுங் அவர்களின், " 'கம்யூனிஸ்ட்'டை அறிமுகம் செய்வது" என்ற இக்கட்டுரை 1939, அக்டோபர் 4ந் தேதி எழுதப்பட்டது.

- சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாசேதுங் படைப்புகளைப் பிரசுரிப்பதற்கான கமிட்டி.


மத்திய கமிட்டி உட்கட்சிப் பத்திரிக்கையொன்றைப் பிரசுரிப்பதற்கு நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தது. கடைசியில், தற்போது அந்தத் திட்டம் உண்மையாக்கப்பட்டுவிட்டது. தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ’வியமயமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைப்பதற்கு இப்படிப்பட்ட பிரசுரம் ஒன்று அவசியம். தற்போதைய நிலைமையில் இந்தத் தேவை மேலும் தெளிவாகத் தெரியக் கூடியதாயுள்ளது. தற்போதைய நிலைமையின் விசேஷ அம்சங்கள் பின்வருமாறு:
 
ஒருபுறம், ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக்குள் சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றது. மறுபுறம், எமது கட்சி தனது குறுகிய எல்லைகளைத் தாண்டி, தேசிய அளவிலான பிரதான கட்சியாகின்றது சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்பாராதபடி நிகழக்கூடிய சம்பவங்கள் அனைத்தையும் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்யவும் பொதுமக்களை அணிதிரட்டுவதே கட்சியின் கடமையாகும். இதனால், எதிர்பாராதபடி நிகழக்கூடிய சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. இது போன்றதொரு சமயத்தில் ஒரு உட்கட்சிப் பத்திரிகை வெளியிடுவது உண்மையிலேயே மிக அவசியமானது.

இந்த உட்கட்சிப் பத்திரிக்கை "கம்யூனிஸ்ட்" என்றழைக்கப்படுகின்றது. அதன் கடமை என்ன? அது என்ன அம்சத்தைக் கொண்டிருக்கும்? அது ஏனைய கட்சிப் பிரசுரங்களினின்றும் எவ்வகையில் வேறுபட்டதாயிருக்கும்?

தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ’வியமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைக்க உதவுவதே அதன் கடமையாகும். இப்படிபட்ட கட்சி ஒன்றைக் கட்டியமைப்பது சீனப் புரட்சியின் வெற்றிக்கு மிக அவசியம். பொதுவாக, அதற்குரிய அகநிலை நிலைமைகளும் புறநிலை நிலைமைகளும் இப்போதுள்ளன. இந்த மகத்தான திட்டம் உண்மையில் இப்பொழுது முன்னேற்றமடைகிறது. சாதாரண கட்சிப் பிரசுரம் ஒன்றின் ஆற்றலுக்கப்பாற்பட்ட இந்த மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதில் உதவுவதற்கு விசேஷக் கட்சி வெளியீடொன்று அவசியம். ஆகவேதான், இப்பொழுது "கம்யூனிஸ்ட்" வெளியிடப்படுகின்றது.

எமது கட்சி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தேசிய அளவிலானதாகவும் வெகுஜன இயல்புடையதாகவுமிருக்கின்றது. அதன் தலைமை மையத்தையும் அதன் அங்கத்தவரில் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் அதன் பொது மார்க்கத்தையும் புரட்சி வேலையையும் பொறுத்தவரை அது ஏற்கனவே சித்தாந்தரீதியிலும் அரசியல்ரீதியிலும், ஸ்தாபனரீதியிலும் ஸ்திரப்படுத்தப்பட்டதும் போல்ஷ்விய மயமானதுமான ஒரு கட்சியாக இருக்கின்றது.

அப்படியானால் இப்போது ஒரு புதுக்கடமையை முன்வைப்பது ஏன்?

காரணம் என்னவென்றால், எமக்குத் தற்போது பல புதிய கிளைகள் உள்ளன; அவை பெருந்தொகையான புதிய அங்கத்தினர்களைக் கொண்டுள்ளன; அவை இன்னும் வெகுஜன இயல்புடையனவாகவோ சித்தாந்தரீதியிலும், அரசியல்ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் ஸ்திரப்படுத்தப் பட்டனவாகவோ அன்றி போல்ஷ்விய மயமானவையாகவோ கருதப்படக் கூடியனவாய் இல்லை. அதே வேளையில், பழைய கட்சி அங்கத்தினர்களின் அரசியலறிவின் மட்டத்தை உயர்த்துவது, பழைய கட்சிக் கிளைகளைச் சித்தாந்தரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஸ்தாபனரீதியிலும் மேலும் ஸ்திரப்படுத்துவது, அவற்றை மேலும் போல்ஷ’வியமயமாக்குவது என்ற பிரச்சினையும் இருக்கின்றது. கட்சி எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் கட்சி தோள்கொடுக்கும் பொறுப்புக்களும் புரட்சிகர உள்நாட்டு யுத்த காலத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் பெருமளவில் வேறுபட்டனவாயுள்ளன; தற்போதைய சூழ்நிலைகள் முன்பைவிட மிகக்கூடிய அளவு குழப்பமுடையனவாயும் பொறுப்புக்கள் மிகவும் சுமையானவையாயும் உள்ளன.

இது தேசிய ஐக்கிய முன்னணிக் காலம், நாம் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருக்கின்றோம்; இது ஜப்பானிய - எதிர்ப்பு யுத்த காலம், எமது கட்சியின் ஆயுதந்தாங்கிய சக்திகள் போர்முனையில் நேசப் படைகளுடன் சேர்ந்து எதிரிகளுடன் ஈவிரக்கமற்ற போரில் ஈடுபடுகின்றன. எமது கட்சி தேசிய அளவிலானதொரு பிரதான கட்சியாகிய காலம் இதுதான். அப்படியாகியதால், எமது கட்சி இனிமேலும் முன்பிருந்தது போலிருக்காது. இவ்வம்சங்களெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துப் பார்ப்போமானால், நாமாகவே முன்வைத்த கடமை, அதாவது, "தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ்வியமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைக்கும்" கடமை எவ்வளவு மேன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

இவ்வகையான கட்சியொன்றை அமைப்பதற்கே இப்பொழுது நாம் விரும்புகின்றோம். ஆனால், அதற்கு எப்படி வேலைசெய்யத் தொடங்கவேண்டும்? எமது கட்சியின் வரலாற்றையும் அதன் பதினெட்டாண்டு காலப் போராட்டச் சரித்திரத்தையும் ஆராயாது இந்தக் கேள்விக்கு எம்மால் விடைகூறமுடியாது.

1921ல் நடந்த எமது முதலாவது தேசிய மாநாடு முதல் இன்றுவரை எமது கட்சியின் வரலாற்றுக்காலம் முற்றாகப் பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது. இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் எமது கட்சி பல மகத்தான போராட்டங்களுக்கூடாகச் சென்றிருக்கிறது. கட்சியின் அங்கத்தவர்களும் அதன் ஊழியர்களும் ஸ்தாபனங்களும் இந்த மகத்தான போரட்டங்களில் புடம்போட்டு எடுக்கப்பட்டள்ளனர். அவர்கள் புரட்சியில் மகத்தான வெற்றிகளையும் பாரதூரமான தோல்விகளையும் அனுபவித்தனர். இந்தக் கட்சி முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு தேசிய ஜக்கிய முன்னணியை நிறுவியது. பின்னர் இந்தத் தேசிய ஐக்கிய முன்னணி தகர்ந்ததனால் பெரும் முதலாளித்துவ வர்க்கதுடனும் அதன் கூட்டாளிகளுடனும் ஒரு கசப்பான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. கடந்த மூன்றாண்டுகாலத்தில், அது முதலாளித்துவ வர்க்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணிக் காலத்திற்குள் திரும்பவும் பிரவேசித்திருக்கின்றது. சீன முதலாளித்துவ வர்க்கத்துடனுள்ள இவ்வகையான சிக்கலான தொடர்பு மூலந்தான் சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தம் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. இது ஒரு விசேஷ சரித்திர அம்சம், காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளிலுள்ள புரட்சிக்குச் சிறப்பான, எந்த முதலாளித்துவ நாட்டு புரட்சிச் சரித்திரத்திலும் காணமுடியாததோர் விசேஷ சரித்திர அம்சம். மேலும், சீனா ஒரு அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதனாலும் அதன் அரசியல், பொருளாதார, கலாச்சார வளர்ச்சிகள் சமமானதாக இல்லாததானாலும் அதன் பொருளாதாரம் பிரதானமாக அரை நிலப்பிரபுத்துவமாகவும் அதன் பரப்பு விஸ்தீரணமானதாகவும் இருப்பதனாலும் இந்தக் கட்டத்தில், சீனப் புரட்சி இயல்பில் முதலாளித்துவ வர்க்க ஜனநாயகப் புரட்சியாக உள்ளது, அதன் பிரதான இலக்குகள் ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமுமாகவும் அதன் அடிப்படை உந்து சக்திகள் பாட்டாளிவர்க்கமும் விவசாயிகளும் நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கமுமாகவும் உள்ளன. இதில் தேசிய முதலாளித்துவ வர்க்கமும் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவு பங்கெடுக்கும்.

அத்துடன் சீனப் புரட்சியின் பிரதான போராட்ட வடிவம் ஆயுதப் போராட்டமாகவும் இருக்கின்றது. உண்மையில், எமது கட்சிச் சரித்திரம் ஆயுதப் போராட்டச் சரித்திரம் என்று கூறப்படலாம். "சீனாவில் ஆயுதந்தாங்கிய புரட்சி ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியுடன் போரிடுகின்றது. அது சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்களிலொன்றாகவும் அதன் மேம்பாடுகளிலொன்றாகவும் இருக்கின்றது," எனத் தோழர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மையானது. அரைக்காலனித்துவச் சீனாவிற்கே சிறப்பாக உரிய இந்த அம்சம் முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் தலைமை தாங்கப்பட்ட புரட்சிகளின் சரித்திரத்தில் காணப்படவேயில்லை; அல்லது அது அந்த நாடுகளில் இருப்பவற்றிலிருந்து வேறுபட்டதாயுள்ளது. ஆகவே, சீன முதலாளித்துவ வர்க்க ஜனநாயகப் புரட்சியில் இரண்டு விசேஷ அடிப்படை அம்சங்கள் உள்ளன:

1). பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்து புரட்சிகரத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றை நிறுவுகின்றது, அல்லது அதைத் தகர்க்க நிர்பந்திக்கப்படுகின்றது.

2). ஆயுதப் போராட்டம் புரட்சியின் பிரதான வடிவமாயிருக்கின்றது.

எமது கட்சிக்கு விவசாயிகளுடனும் நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்துடனும் உள்ள உறவுகளை அடிப்படையான சிறப்பு அம்சமாக இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஏனென்றால் முதலாவதாக, இந்த உறவுகள் கோட்பாட்டு ரீதியில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்நோக்கியவை போன்றதே. இரண்டாவதாக, சீனாவிலுள்ள ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லப் போனால் அது சாராம்சத்தில் விவசாயி யுத்தமாக இருக்கிறது; கட்சிக்கும் விவசாயிகளுக்கும் இடையிலுள்ள உறவுகளைப் பற்றிக் கூறின், அவை கட்சிக்கும் விவசாயி யுத்தத்திற்கும் இடையிலுள்ள நெருங்கிய உறவுகளாக இருக்கின்றன.

இந்த இரண்டு சிறப்பு அடிப்படை அம்சங்களின் காரணமாகவே, உண்மையில் அவற்றின் காரணமாகவேதான் எமது கட்சியின் அமைப்பு போல்ஷ்விய மயமாக்கப்பட்ட வர்க்கமும் சிறப்பான சூழ்நிலைகளில் முன்னேறுகின்றன. கட்சியின் தோல்விகள் அல்லது வெற்றிகள், அதன் பின்னடைவுகள் அல்லது முன்னேற்றங்கள், அதன் சுருக்கங்கள் அல்லது விரிவுகள், அதன் வளர்ச்சி, ஸ்திரப்பாடு ஆகியன முதலாளித்துவ வர்க்கத்திற்கும் கட்சிக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் இடையிலுள்ள உறவுகளுடன் தவிர்க்கப்பட முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைப்பது அல்லது அதைத் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றபோது அதைத் தகர்ப்பது என்ற பிரச்சினையில் சரியான அரசியல் மார்க்கமொன்றைக் கைக்கொள்ளும்போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் ஸ்திரப்பாட்டிலும் போல்ஷ்வியமய மாக்கத்திலும் ஒரு படி முன்னேறுகின்றது; ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துடனுள்ள உறவுகளில் தவறான மார்க்கமொன்றைக் கைக்கொள்ளும்போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் ஸ்திரப்பாட்டிலும் போல்ஷ்வியமயமாக்கத்திலும் ஒரு படி பின்னடைகின்றது. அது போலவே, எமது கட்சி புரட்சிகர ஆயுதப் போராட்டப் பிரச்சினையைச் சரியான முறையில் கையாளும்போது தன் வளர்ச்சியிலும் ஸ்திரப்பாட்டிலும் போல்ஷ்வியமய மாக்கத்திலும் ஒரு படி முன்னேறுகின்றது; ஆனால், அந்தப் பிரச்சினையைத் தவறாகக் கையாளும்போது அது ஒரு படி பின்னடைகிறது.

இவ்வாறு, பதினெட்டு ஆண்டுகளாக, கட்சியின் அமைப்பும் போல்ஷ்விய மயமாக்கமும் அதன் அரசியல் மார்க்கத்துடன், ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சனைகளைச் சரியாக அல்லது தவறாக கையாள்வதுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தால் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. வேறு விதமாகக் கூறின், கட்சி எவ்வளவிற்குப் போல்ஷ்வியமயமாகின்றதோ அவ்வளவிற்குத் தனது அரசியல் மார்க்கத்தைச் சரியாகத் தீர்மானிக்கவும் ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சினைகளைச் சரியாகக் கையாளவும் முடியும். இந்த முடிவும் எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தாலேயே தெளிவாக நிரூபிக்கப்படுகின்றது.

ஆகவே, ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமும் கட்சி அமைப்புமே சீனப் புரட்சியில் எமது கட்சியின் மூன்று அடிப்படைப் பிரச்சினைகளாக இருக்கின்றன. இந்த மூன்று பிரச்சினைகளையும் அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளையும் சரியாகக் கிரகித்துக்கொள்வது சீனப் புரட்சி முழுவதிற்கும் தகுந்த தலைமையளிப்பதற்குச் சமமாகும். எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தில் பெற்ற எமது செழிப்பான அனுபவத்தினால், தோல்வி வெற்றிகளினதும் பின்னேற்ற முன்னேற்றங்களினதும் சுருக்க விரிவுகளினதும் ஆழமான செழுமைமிக்க எமது அனுபவத்தினால் நாம் இந்த மூன்று பிரச்சினைகளையும் பொறுத்தவரை இப்பொழுது சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறோம். அதாவது நாம் இப்பொழுது ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம், கட்சி அமைப்பு ஆகிய பிரச்சினைகளைச் சரியான முறையில் கையாளக்கூடியவர்களாக இருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறின், ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமும் கட்சி அமைப்பும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று மந்திர ஆயுதங்கள், சீனப் புரட்சியில் எதிரியைத் தோற்கடிப்பதற்கான அதன் மூன்று முக்கிய மந்திர ஆயுதங்கள் என எமது பதினெட்டாண்டுகால அனுபவம் எமக்குக் கற்பித்திருக்கின்றது. இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான சாதனை; இது சீனப் புரட்சியின் மகத்தான சாதனையுமாகும்.

மூன்று மந்திர ஆயுதங்களில் ஒவ்வொன்றையும், மூன்று பிரச்சினைகளில் ஒவ்வொன்றையும் இங்கே சுருக்கமாக ஆராய்வோம்.

முதலாளித்துவ வர்க்கத்துடனும் பிற வர்க்கங்களுடனும் சீனப் பாட்டாளி வர்க்கத்திற்குள்ள ஐக்கிய முன்னணி கடந்த பதினெட்டு ஆண்டுகளில் மூன்று வேறுபட்ட சூழ்நிலைகளில், மூன்று வேறுபட்ட கால கட்டங்களுக்கு ஊடாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அதாவது, 1924ம் ஆண்டிற்கும் 1927ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட முதலாவது மாபெரும் புரட்சி, 1927ம் ஆண்டிற்கும் 1937ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட நிலப்புரட்சி யுத்தம் தற்போதைய ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தம். இந்த மூன்று கட்டங்களினதும் சரித்திரம் பின்வரும் நியதிகளை நிரூபித்திருக்கின்றது:

1) சீனா உட்படுத்தப்பட்டுள்ள அந்நிய அடக்குமுறை, அடக்குமுறைகளிலே மிகப் பெரியதாய் இருப்பதன் காரணமாக, சீனத் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவ யுத்தப்பிரபுக்களுக்கும் எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவிற்குப் பங்குபெறும். ஆகவே, அப்படிப்பட்ட சமயங்களில் பாட்டாளிவர்க்கம் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்து அதை இயலுமானவரை நிலைநிறுத்த வேண்டும்.

2) சீனத் தேசிய முதலாளித்துவ வர்க்கம் தன் பொருளாதார, அரசியல் உறுதிப்பாடின்மை காரணமாக, பிற சரித்திரச் சூழ்நிலைகளில் ஊசலாட்டமும் மாறும் இயல்பும் உள்ளதாகும். ஆகவே சீனாவின் புரட்சிகர ஐக்கிய முன்னணியின் அமைப்பு தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறக்கூடியதாக இருக்கின்றது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒரு காலத்தில் அதில் பங்கு பற்றலாம், இன்னொருகாலத்திற் பங்கு பற்றாமலிருக்கலாம்.

3) தரகு முதலாளித்துவத் தன்மையுடைய சீனப் பெரும் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாகச் சேவை செய்து, அதனால் ஊட்டிவளர்க்கப்படும் வர்க்கம். இதனால் தரகு முதலாளித்துவத் தன்மையுடைய சீனப் பெரும் முதலாளித்துவ வர்க்கம் எப்பொழுதும் புரட்சியின் இலக்காக இருந்துவருகின்றது. இருப்பினும், இந்தப் பெரும் முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ள வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்தியங்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஆகவே இந்த ஏகாதிபத்தியங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையும் போதும் புரட்சியின் முனை குறிப்பிட்ட ஏகாதிபத்தியமொன்றிற்கு எதிராகப் பிரதானமாக நீட்டப்படும் பொழுதும் பிற ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருக்கும் இப்பெரும் முதலாளித்துவ வர்க்கக் கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சேரலாம். அப்படிபட்ட சமயங்களில் எதிரியைப் பலவீனப்படுத்தவும் தனது சொந்தச் சேமிப்பு சக்தியைப் பலப்படுத்தவும் சீனப் பாட்டாளி வர்க்கம் இந்தப் பெரும் முதலாளித்துவ வர்க்கக் கும்பல்களுடன் சாத்தியமான ஐக்கிய முன்னணியொன்றை ஏற்படுத்தலாம். அத்துடன் அது புரட்சிக்குச் சாதகமானதாயிருக்கும் வரை அதை இயலுமான அளவு நிலை நிறுத்தவும் வேண்டும்.

4) தரகு முதலாளித்துவத்தன்மையுடைய பெரும் முதலாளித்துவ வர்க்கம் ஐக்கிய முன்னணியிற் சேர்ந்து பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடும் போதும் அது தொடர்ந்து மிகவும் பிற்போக்கானதாகவே இருக்கிறது. அது பாட்டாளி வர்க்கத்தினதும் பாட்டாளி வர்க்கக் கட்சியினதும் சித்தாந்த, அரசியல், ஸ்தாபனரீதிகளிலான எந்த வளர்ச்சியையும் பிடிவாதமாக எதிர்க்கிறது; அவற்றிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க முயல்கிறது; வஞ்சகம், முகஸ்துதி, "அரித்தல்", தாக்குதல்கள் போன்ற சீர்குலைக்கக்கூடிய கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றது; மேலும், எதிரிகளிடம் சரணடைவதற்கும் தயார் செய்வதற்காகவே இவற்றையெல்லாம் செய்கிறது.

5) விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான நேச அணியாவர்.

6) நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கமும் ஒரு நம்பகமான நேச அணியாகும். இந்த நியதிகள் சரியானவை என்பது முதலாம் மாபெரும் புரட்சியின் போதும் நிலப்புரட்சியின் போதும் நிரூபிக்கப்பட்டது மாத்திரமல்ல அது தற்போதைய ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின்போதும் திரும்பவும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே முதலாளித்துவ வார்க்கத்துடன் ( சிறப்பாகப் பெரும் முதலாளித்துவ வர்க்கத்துடன்) ஐக்கிய முன்னணியை அமைப்பதில் பாட்டாளி வர்க்க அரசியல் கட்சி இரண்டு முன்னணிகளில் திடமான, கடுமையான போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். ஒருபுறம், முதலாளித்துவ வர்க்கம் ஒரு குறிப்பிட காலத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலும் புரட்சிகரப் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்ற சாத்தியப்பாட்டை அலட்சியம் செய்யவும் தவற்றை எதிர்த்துப் போரிடுவது அவசியம்.

இந்தத் தவறு சீனாவிலுள்ள முதலாளித்துவ வர்க்கத்தை முதலாளித்துவ நாடுகளிலுள்ளவற்றைப்போல் கருதி முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றினை உருவாக்கி அதை இயலுமான அளவிற்கு நிலைநிறுத்தும் கொள்கையை அலட்சியம் செய்வதில் அமைந்துள்ளது. இது "இடதுசாரிக்" கதவடைப்புவாதம் ஆகும். மறுபுறம், பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம், கொள்கை, சித்தாந்தம், நடைமுறை, இன்னோரன்ன பிறவற்றை முதலாளித்துவ வர்க்கத்தினுடையனவற்றைப்போல் கருதி, இவற்றிற்கிடையிலுள்ள கோட்பாட்டு ரீதியான வித்தியாசங்களை அலட்சியம் செய்வது என்ற தவற்றை எதிர்த்தும் போரிடுவது அவசியம். இந்தத் தவறு முதலாளித்துவ வர்க்கம் (சிறப்பாகப் பெரும் முதலாளித்துவ வர்க்கம்) குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மீதும் விவசாயிகள் மீதும் தன் செல்வாக்கைத் தீவிரமாகச் செலுத்துவது மட்டுமின்றி, பாட்டாளி வர்க்கத்தின் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் தன் செல்வாக்கைச் செலுத்தி, பாட்டாளி வர்க்கத்தினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சித்தாந்த, அரசியல், ஸ்தாபன சுதந்திரத்தை அழிப்பதற்கும் அவற்றை முதலாளித்துவ வர்க்கத்தினதும் அதன் அரசியல் கட்சியினதும் தொங்கு தசையாக மாற்றுவதற்கும், தன் அரசியல் கட்சியே தனியாகப் புரட்சியின் கனிகளை அறுவடை செய்வதற்கும் தன்னால் இயன்றமட்டும் முயலும் என்ற உண்மையை அலட்சியம் செய்வதில் அமைந்திருக்கிறது.அத்துடன் முதலாளித்துவ வர்க்கம் (சிறப்பாகப் பெரும் முதலாளித்துவ வர்க்கம்) தன் சொந்த அரசியல் கட்சியின் சுயநலன்களுடனோ புரட்சி மோதும்போது புரட்சிக்குத் துரோகம் செய்யும் என்பதை அலட்சியம் செய்வதிலும் இந்தத் தவறு அமைந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் அலட்சியம் செய்வது வலதுசாரிச் சந்தர்ப்பவாதமாகும். முன்பு சென்து-சியூவின் வலதுசாரிச் சந்தர்ப்பவாதத்தின் விசேஷ அம்சம் என்னவென்றால் முதலாளித்துவ வர்க்கத்தினதும் அதன் அரசியல் கட்சியினதும் சுயநலன்களுக்கு இசைவாக பாட்டாளி வர்க்கத்தை வழி நடத்திசென்றதேயாகும். இது முதலாவது மாபெரும் புரட்சியின் தோல்வியின் அகநிலைக் காரணமாகவும் இருந்தது. முதலாளித்துவ வர்க்க ஜனநாயகப் புரட்சியின் சீன முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த இரட்டைத் தன்மை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மார்க்கத்திற்கும் கட்சி அமைப்பிற்கும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த இரட்டைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மார்க்கத்தையும் கட்சி அமைப்பையும் புரிந்துகொள்ள முடியாது.முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதோடு அதற்கெதிராகப் போராடுவது என்ற கொள்கை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வழியின் ஒரு முக்கிய பகுதியாகும். உண்மையில், முதலாளித்துவ வர்க்கத்துடனுள்ள ஐக்கியத்திற்கும் போராட்டத்திற்கும் ஊடாக ஏற்படும் கட்சியின் வளர்ச்சியும் புடமிடப்படுத்தலும் கட்சியமைப்பின் முக்கிய பகுதியாகும். ஐக்கியமென்பது இங்கு முதலாளித்துவ வர்க்கத்துடனான ஐக்கிய முன்னணியைக் குறிக்கிறது. போராட்டம் எனப்து இங்கு நாம் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமுடையவராயிருக்கையில் இருக்கும் "சமாதான" மான, "ரத்தம் சிந்தாத", சித்தாந்த, அரசியல், ஸ்தாபனரீதிகளிலான போராட்டத்தைக் குறிக்கிறது. நாம் அதனுடன் பிளவுபடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுது அது ஆயுதப் போராட்டமாக மாறும். குறிப்பிட்ட சமயத்தில் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டுமென்பதை எமது கட்சி உணர்ந்து கொள்ளாவிட்டால் அதனால் முன்னேறமுடியாது, புரட்சியும் வளர்ச்சியடைய முடியாது.முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமுடையதாயிருக்கும்போது அதனுடன் திடமான, கடுமையான, "சமாதான" மான போராட்டம் நடத்தவேண்டும் என்பதை எமது கட்சி உணராவிட்டால் எமது கட்சி சித்தாந்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் சிதைவுறும்; புரட்சியும் தோல்வியடையும். முதலாளித்துவ வர்க்கத்துடன் பிளவுபட நிர்ப்பந்திக்கப்படும்போது எமது கட்சி திடமான, கடுமையான ஆயுதப் போராட்டத்தை நிகழ்தாவிட்டாலும் அது சிதைவுறும்; புரட்சியும் தோல்வியடையும். இந்த உண்மைகளெல்லாம் கடந்த பதினெட்டாண்டுகால வரலாற்றால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாயி யுத்தம் ஆகும். இந்த ஆயுதப் போராட்டத்தின் சரித்திரமும் மூன்று காலகட்டங்களாக பிரிக்கப்படுகிறது. முதலாவது காலகட்டத்தில் நாம் வடபடையெடுப்பில் ஈடுபட்டோம். அக்காலத்தில் எமது கட்சி ஏற்கனவே ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியிருந்தது, ஆனால், அதை அப்போது முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை; ஆயுதப் போராட்டம் சீனப் புரட்சியின் பிரதான போராட்ட வடிவம் என்பதை அது அப்போது புரிந்துகொள்ளவில்லை. இரண்டாவது கால கட்டம் நிலப்புரட்சி யுத்தம். அந்தக் காலத்தில் எமது கட்சி தன் சொந்த ஆயுதப்படையை ஏற்கனவே கட்டியமைத்திருந்தது; தனக்கேயுரிய யுத்தக்கலையைக் கற்றுக் கொண்டது, அத்துடன் மக்கள் அரசியலதிகாரத்தையும் தளப்பிரதேசங்களையும் நிறுவியது. எமது கட்சி பிரதான போராட்ட வடிவமாகிய ஆயுதப் போராட்டத்தை இதர பல அவசியமான போராட்ட வடிவங்களுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக இணைக்க இயலுமானதாயிருந்தது. அதாவது, அதனைத் தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் (இதுதான் பிரதானமானது), இளைஞர், பெண்கள், மக்களின் ஏனைய பிரிவுகள் அனைத்தினதும் போராட்டங்கள், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம், பொருளாதார, தேசத்துரோகி எதிர்ப்பு, சித்தாந்தத் துறைகளிலுள்ள போராட்டங்கள், இதர போராட்ட வடிவங்கள் ஆகியவற்றுடன் தேசியரீதியில் நேரடியாக அல்லது மறைமுகமாக இணைப்பதற்கு இயலுமானதாயிருந்தது. அத்துடன் இந்த ஆயுதப் போராட்டம் உண்மையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாயி நிலப்புரட்சிப் போராட்டமாகவும் இருந்தது. மூன்றாவது காலகட்டம் தற்போதைய ஜப்பானிய-எதிர்ப்பு யுத்தக் காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் முதலாவது காலகட்டத்தினதும் விசேஷமாக இரண்டாவது காலகட்டத்தினதும் எமது ஆயுதப் போராட்ட அனுபவத்தையும் ஆயுதப் போராட்டத்தைத் தேவையான இதர போராட்ட வடிவங்களணைத்துடனும் இணைப்பதில் பெற்ற அனுபவத்தையும் பயனுடையதாக்கக் கூடியவர்களாயிருக்கிறோம். பொதுவாகக் கூறின், ஆயுதப்போராட்டம் என்பது இப்போது கொரில்லா யுத்தத்தையே குறிக்கிறது. கொரில்லா யுத்தமென்றால் என்ன? அது பின்தங்கிய நாடொன்றில், பெரிய அரைக்காலனித்துவ நாடொன்றில் மக்களின் ஆயுதப் படைகள் ஆயுதபாணியாக்கப்பட்ட எதிரியை முறியடித்துத் தம் சொந்தத் தளப்பிரதேசங்களை அமைப்பதற்கு நீண்டகாலம் சார்ந்திருக்க வேண்டிய ஒன்றாகவும் அதன் காரணமாக மிக சிறந்த போராட்ட வடிவமாகவும் விளங்குகிறது. இதுகாலம்வரை எமது கட்சியின் அரசியல் வழியும், கட்சி கட்டுதல் ஆகிய இரண்டும் இந்தப் போராட்ட வடிவத்துடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கின்றன. ஆயுதப் போராட்டத்தையும் கொரில்லா யுத்தத்தையும் கைவிட்டால் எமது அரசியல் மார்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியாததோடு எமது கட்சி கட்டும் முறையையும் புரிந்துகொள்ள முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது எமது அரசியல் வழியின் ஒரு முக்கியப் பகுதியாகும். பதினெட்டு ஆண்டுகளாக, எமது கட்சி ஆயுதப் போராட்டம் நிகழ்த்தப் படிப்படியாகக் கற்று அதில் ஊன்றி நின்றுள்ளது. சீனாவில் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால், பாட்டாளி வர்க்கத்துக்கு எவ்வித அந்தஸ்தும் கிடையாது; மக்களுக்கு எந்தவித அந்தஸ்தும் கிடையாது; கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித அந்தஸ்தும் கிடையாது; புரட்சியும் வாகை சூடாதென்று புரிந்து கொண்டோம். பதினெட்டு ஆண்டுகளில் நமது கட்சியின் வளர்ச்சியும் ஸ்திரப்பாடும் போல்ஷ்வியமயமாக்கமும் புரட்சி யுத்தங்களின் மத்தியில்தான் நடைபெற்றன. ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சி இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது. ரத்தம் சிந்திப் பெற்ற இந்த அனுபவத்தைக் கட்சித் தோழர்கள் ஒருவரும் மறந்துவிடக்கூடாது.

முன்னவை போலவே, கட்சி அமைப்பிலும் அதாவது அதன் வளர்ச்சி, ஸ்திரப்பாடு, போல்ஷ்வியமயமாக்கம் ஆகியவற்றிலும் மூன்று தெளிவான கட்டங்கள் இருந்திருக்கின்றன. முதலாவது கட்டம் கட்சியின் குழந்தைப் பிராயம். இந்தக் கட்டத்தின் ஆரம்பகாலத்திலும் மத்திய காலத்திலும் கட்சியின் வழி சரியாகவும் கட்சி அங்கத்தவர்களினதும் ஊழியர்களினதும் புரட்சிகர உற்சாகம் மிக உயர்ந்ததாகவும் இருந்தன. இதன் விளைவானதே முதலாம் மாபெரும் புரட்சியின் வெற்றிகள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக எமது கட்சி அப்பொழுது குழந்தைப் பிராயத்தில் உள்ள ஒரு கட்சியாக இருந்தது. ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம், கட்சி கட்டும்முறை ஆகிய மூன்று அடிப்படைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை அனுபவமற்றதாக இருந்தது. அது சீனச் சரித்திர நிலைமையைப் பற்றியோ அன்றிச் சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்கள் பற்றியோ, சீனப் புரட்சியின் நியதிகள் பற்றியோ நன்கு அறிந்திருக்கவில்லை. மார்க்சிய - லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கு இடையிலுள்ள ஐக்கியத்தை விபரமாகப் புரிந்துகொள்வதில் குறைபாடுடையதாக இருந்தது. இதனால் இந்தக் கட்டத்தின் கடைசிக் காலத்தில், அதாவது இந்தக் கட்டத்தின் நெருக்கடியான தருணத்தில், கட்சியின் தலைமைப் பகுதியில் அதிகார அந்தஸ்துடையவராயிருந்தோர் புரட்சியின் வெற்றிகளை ஸ்திரப்படுத்துவதில் முழு கட்சியையும் வழிநடத்தத் தவறி, முதலாளித்துவ வர்க்கத்தினால் ஏமாற்றப்பட்டுப் புரட்சிக்குத் தோல்வியைக் கொண்டு வந்தனர். இந்தக் கட்டத்தில் கட்சி ஸ்தாபனங்கள் விரிவடைந்தன; ஆனால் அவை ஸ்திரப்படுத்தப்படவில்லை. அத்துடன் கட்சி அங்கத்தவர்களும் ஊழியர்களும் சித்தாந்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் திடமானவராக ஆகுவதற்கு உதவவும் அவை தவறிவிட்டன. பல புதிய கட்சி அங்கத்தவர்களிருந்தனர்; ஆனால், அவர்களுக்குத் தேவையான மார்க்சிய - லெனினியக் கல்வி அளிக்கப்படவில்லை. வேலையில் மிகுந்த அனுபவம் இருந்தபோதிலும் அது தகுந்த முறையிற் தொகுக்கப்படவில்லை. பதவி வேட்டையாளர் பலர் கட்சிக்குள் நுழைந்தனர்; ஆனால் அவர்கள் வெளியே இழுத்தெறியப்படவில்லை. கட்சி எதிரிகளினதும் நேச அணிகளினது சூழ்ச்சிகளாலும் சதிகளாலும் சுற்றிவளைக்கப் பட்டிருந்த போதிலும் அது போதிய விழிப்புணர்வுடையதாக இருக்கவில்லை. கட்சிக்குள் உற்சாகிகள் பெருந்தொகையாக முன்வந்தனர்; ஆனால் அவர்கள் தகுந்த சமயத்திற் கட்சியின் முதுகெலும்பாகப் பயிற்றுவிக்கப் படவில்லை. கட்சி ஆயுதந்தாங்கிய புரட்சிகரப் பிரிவுகள் சிலவற்றைத் தன் ஆணைக்கீழ்க் கொண்டிருந்தது; ஆனால், அதனால் அவற்றை இறுகப்பற்றமுடியவில்லை. அனுபவமின்மையும் புரட்சிகர அறிவாற்றலில் போதிய ஆழமின்மையும் மார்க்சிய-லெனினியத் தத்துவத்தைச் சீனப் புரட்சியின் நடைமுறையுடன் சரியாக இணைப்பதில் தேர்ச்சி பெறாமையுமே இவையனைத்துக்குமான காரணங்கள்; இப்படியானதுதான் கட்சி அமைப்பின் முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நிலப்புரட்சி யுத்தகாலம். முதலாவது கட்டத்தில் பெற்ற அனுபவத்தாலும் சீன வரலாற்று நிலைமை, சீன சமுதாய நிலைமை, சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்கள், சீனப் புரட்சியின் நியதிகள் ஆகியவை பற்றி முன்பைவிட நன்கு புரிந்துகொண்டதாலும் அதன் ஊழியர்கள் மார்க்சிய-லெனினியத் தத்துவத்தை முன்பைவிட நன்கு கிரகித்து அதனைச் சீனப் புரட்சியின் நடைமுறையுடன் மேலும் இணைக்கக்கூடியவர்களாக இருந்தாலும் எமது கட்சி நிலப்புரட்சிப் போராட்டமொன்றினைப் பத்து வருடங்களுக்கு வெற்றிகரமாக நிகழ்த்தக்கூடியதாயிருந்தது.

முதலாளித்துவ வர்க்கம் துரோகம் செய்தபோதிலும் எமது கட்சி திடமாக விவசாயிகளை சார்ந்து நின்றது. கட்சி ஸ்தாபனம் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்ல அது ஸ்திரப்பாடுடையதாகவும் ஆயிற்று. நாளிலும் பொழுதிலும் எதிரி எமது கட்சியைக் கவிழ்க்க முயன்றபோதிலும் கட்சி சதிகாரர்களை வெளியே துரத்தியது. மீண்டும் ஒருமுறை பெருந்தொகையான ஊழியர்கள் கட்சிக்குள் வந்ததோடு கட்சியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தனர். கட்சி, மக்கள் அரசியல் அதிகாரப் பாதையைத் திறந்துவைத்ததன் பயனாக ஆட்சிக் கலையைக் கற்றுக்கொண்டது. எமது கட்சி பலம் வாய்ந்த ஆயுதப் படைகளை உருவாக்கியதன் பயனாக யுத்தக்கலையைக் கற்றுக் கொண்டது. இவை எல்லாம் எமது கட்சியின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் சாதனைகளும் ஆகும். இருந்த போதிலும், இந்த மகத்தான போராட்டங்களின் போக்கில் எமது தோழர்களில் சிலர் சந்தர்ப்பவாதச் சேற்றில் மூழ்கினர் அல்லது குறைந்தது சிறிது காலத்திற்காவது அவ்வாறாயினர். காரணங்கள் திரும்பவும், அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து அடக்கமாகக் கற்றுக் கொள்ளாமையும் சீன வரலாற்று நிலைமை, சீன சமுதாய நிலைமை, சீனப் புரட்சியின் சிறப்பு அம்சங்கள், சீனப் புரட்சியின் நியதிகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமையும் அவர்களுக்கு மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையில் அறிவாற்ற இன்மையும் ஆகும். ஆகவே இந்தக் கட்டம் பூராவும், கட்சியின் தலைமை பதவிகளில் இருந்து சிலர் அரசியல், ஸ்தாபனரீதிகளிலான சரியான மார்க்கங்களில் ஊன்றி நிற்கத் தவறினர். கட்சியும் புரட்சியும் ஒருசமயம் தோழர் லீ லி - சன்னின் "இடதுசாரி" சந்தர்ப்பவாதத்தால் பாதிக்கப்பட்டன; இன்னொருசமயம் புரட்சிகர யுத்தத்திலும் வெண்பிரதேச வேலைகளிலுமிருந்த "இடதுசாரி"ச் சந்தர்ப்பவாதத்தால் பாதிக்கப்பட்டன. சுன்யிக் கூட்டத்தின் (1935ம் ஆண்டு ஜனவரி மாதம் குவெய்சௌ மாகாணத்திலுள்ள சுன்யியில் நடந்த மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் கூட்டம்) பின்னர் கட்சி போல்ஷ்வியமயமாக்கப் பாதையை முற்றாக மேற்கொண்டதோடு, அதைத் தொடர்ந்து சாங் கோ-தௌவின் வலதுசாரிச் சந்தர்ப்பவாதத்தை வெற்றி கொள்வதற்கும் ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றினை ஸ்தாபிப்பதற்குமான அஸ்த்திவாரத்தையும் இட்டது. இதுதான் கட்சியின் வளர்ச்சியின் இரண்டாவது கட்டம். கட்சியின் வளர்ச்சியின் மூன்றாவது கட்டம் ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக் காலம். இந்தக் கட்டத்தில் மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இம்மூன்றாண்டுப் போராட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னைய இரண்டு புரட்சிகரக் காலகட்டங்களினதும் அனுபவத்தினாலும் தனது ஸ்தாபன பலம், ஆயுத சக்திகளின் பலம் ஆகியவற்றினாலும் நாடுபூராவுமுள்ள மக்களிடையே தனக்குள்ள உயர்ந்த அரசியல் செல்வாக்காலும் மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் இடையேயுள்ள ஐக்கியத்தில் தனக்குள்ள மேலும் ஆழமான அறிவாற்றலாலும் எமது கட்சி ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருப்பது மட்டுமின்றி, மாபெரும் ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தையும் நடத்துகின்றது. ஸ்தாபனரீதியில், அது தன் குறுகிய எல்லையைக் கடந்து, தேசிய அளவிலான ஒரு பிரதான கட்சியாகியிருக்கிறது. கட்சியின் ஆயுத சக்திகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கெதிரான போராட்டத்தில் திரும்பவும் வளர்வதோடு மேலும் பலமுடையதாகவும் ஆகின்றன. நாடு பூராவுமுள்ள மக்களிடையேயும் கட்சியின் செல்வாக்கு இன்னும் பரந்ததாகின்றது. இவையெல்லாம் மகத்தான சாதனைகள். இருப்பினும், எமது கட்சியின் புதிய அங்கத்தவர் பலருக்கு இன்னும் கல்வியளிக்கப்படவில்லை. புதிய ஸ்தாபானங்கள் பல இன்னும் ஸ்திரப்படுத்தப் படவில்லை. கட்சியின் புதிய அங்கத்தவருக்கும் பழைய அங்கத்தவருக்கும் இடையிலும் பெரிய வித்தியாசம் இன்னும் நிலவுகின்றது. கட்சியின் புதிய அங்கத்தவர் பலரும் ஊழியர் பலரும் இன்னும் போதியளவு புரட்சிகர அனுபவம் பெறவில்லை. அவர்கள் சீனாவின் வரலாற்று நிலைமை, சமுதாய நிலைமை ஆகியவை பற்றியும், சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்கள், நியதிகள் ஆகியன பற்றியும் எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது இன்னும் சிறிதளவே அறிந்திருக்கின்றனர்; மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அவர்களின் ஆற்றல் விரிவானதாயுள்ளது என்று கூறுவதற்கே இடமில்லை.

கட்சி ஸ்தாபனத்தின் வளர்ச்சியின்போது, மத்திய கமிட்டி, "கட்சியைத் தைரியமாக வளருங்கள்; ஆனால், தீயநபர்கள் ஒருவரையும் கட்சிக்குள் அனுமதிக்காதீர்கள்" என்ற முழக்கத்தை வலியுறுத்தி முன்வைத்தைபோதிலும் உண்மையில் கணிசமான அளவு பதவி வேட்கையாளரும் எதேச்சதிகாரரும் கட்சிக்குள் நுழைவதில் வெற்றிக்கண்டனர். ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள் நிலைநிறுத்தப்பட்டபோதிலும், முதலாளித்துவ வர்க்கம் குறிப்பாக, பெரும் முதலாளித்துவ வர்க்கம் எமது கட்சியை அழிப்பதற்கு இடைவிடாது முயல்கின்றது; பெரும் முதலாளித்துவ வர்க்கச் சரணாகதிவாதிகளினதும் பிடிவாதவாதிகளினதும் தலைமையிலான கடுமையான மோதல்கள் நாடுமுழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன; கம்யூனிஸ்ட் கட்சி - எதிர்ப்புக் கூச்சலுக்கும் ஓய்வில்லை. இவையெல்லாம் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைத் தகர்ப்பதற்கும் சீனாவைப் பின்நோக்கி இழுத்துச்செல்வதற்கும் தயார் செய்வதற்காகப் பெரும் முதலாளித்துவ வர்க்கச் சராணாகதிவாதிகளாலும் பிடிவாதவாதிகளாலும் உபயோகிக்கப் படுகின்றன.

பெரும்முதலாளித்துவ வர்க்கம் சித்தாந்த ரீதியிலே கம்யூனிஸத்தை "அரிக்க" முயல்கிறது. அதேவேளையில் அரசியல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எல்லைப்பிரதேசத்திற்கும் கட்சியின் ஆயுத சக்திகளுக்கும் முடிவுகட்ட முயல்கின்றது. இச்சூழ்நிலைகளில், சந்தேகமின்றி, எமது கடமை சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களைச் சமாளிப்பதும் தேசிய ஐக்கிய முன்னணியையும் கோமிந்தாங் - கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டுறவையும் இயன்ற அளவு நிலைநிறுத்துவதும் தொடர்ந்து ஜப்பானிய - எதிர்ப்பிற்காகவும் ஐக்கியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவும் வேலை செய்வதுமாகும். அதேவேளையில், எதிர்பாராதபடி சம்பவிக்கக்கூடிய சம்பவங்களைச் சமாளிப்பதற்குத் தயார் செய்யவேண்டும். இதனால், அச்சம்பவங்கள் நிகழும் சமயத்திற் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. ஆகவே, நாம் எமது கட்சி ஸ்தாபனத்தையும் அதன் ஆயுதசக்திகளையும் ஸ்திரப்படுத்தி, சரணடைவிற்கும், பிளவிற்கும், பின்னடைவிற்கும் எதிரான திடமான போராட்டத்திற்காக நாடுபூராவுமுள்ள மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவது கட்சி முழுவதினதும் முயற்சிகளிலும் கட்சி அங்கத்தவர்களைனைவரதும் ஊழியர்கள் அனைவரதும், எல்லா மட்டங்களிலும் இடங்களிலுமுள்ள ஸ்தாபனங்கள் அனைத்தினதும் தளராத, உறுதியான போராட்டத்திலும் தங்கியுள்ளது. பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனுபவமிக்க பழைய அங்கத்தவரதும் ஊழியரதும் சுறுசுறுப்பும் இளமையுமுடைய புதிய அங்கத்தவரதும் ஊழியரதும் கூட்டு முயற்சிகளினாலும், புடமிடப்பட்டு, போல்ஷ்வியமயமாக்கப்பட்ட மத்திய கமிட்டியினதும் அதன் ஸ்தல ஸ்தாபனங்களினதும் கூட்டு முயற்ச்சிகளினாலும் அதன் பலமிக்க ஆயுத சக்திகளினதும் முற்போக்கான பொதுமக்களினதும் கூட்டு முயற்சிகளினாலும் இந்த நோக்கங்களை நிறைவேற்ற இயலும் என நம்புகின்றோம்.

இவையெல்லாம் எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தின் பிரதான அனுபவங்களும் அதன் பிரதான பிரச்சினைகளுமாகும்.

ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமுந்தான் எதிரியைத் தோற்கடிப்பதற்கான இரண்டு அடிப்படை ஆயுதங்களென எமது பதினெட்டாண்டுகால அனுபவங்கள் காட்டுகின்றன. ஐக்கிய முன்னணி ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்துவதற்கான ஐக்கிய முன்னணியாகும். கட்சி ஸ்தாபனந்தான் எதிரியின் நிலைகளைத் தகர்ப்பதற்கு இவ்விரு ஆயுதங்களையும் அதாவது ஐக்கிய முன்னணியையும் ஆயுதப் போராட்டத்தையும் கையாளும் வீரமிக்க போர்வீரன். இவ்வாறுதான் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையனவாய் உள்ளன.

நாம் இன்று எமது கட்சியை எப்படிக் கட்சியமைக்க வேண்டும்? "தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபான ரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ்வியமயமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினை" எம்மால் எப்படிக் கட்டியமைக்க முடியும்? கட்சியின் சரித்திரத்தை ஆராய்வதுமூலமும், ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகவும், முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமாவது அதற்கெதிராகப் போராடுவது என்ற பிரச்சினையுடனும் எட்டாவது மார்க்க ராணுவமும் புதிய நான்காவது சேனையும் ஜப்பானுக்கெதிரான கொரில்லா யுத்தத்தில் ஊன்றிநிற்பது ஜப்பானிய - எதிர்ப்புத் தளப்பிரதேசங்களை நிறுவுவது ஆகிய பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாகவும் எமது கட்சி அமைப்பைப் பற்றி ஆராய்வதன்மூலமும் இந்தக் கேள்விகளுக்கு விடை காணமுடியும்.

எமது கட்சி எஃகைப் போன்று திடமானதாக அமையவும் எமது கட்சி கடந்தகால வரலாற்றிலுள்ள தவறுகள் திரும்பவும் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் அடிப்படையில் எமது பதினெட்டாண்டுகால அனுபவத்தையும் எமது தற்போதைய புதிய அனுபவத்தையும் தொகுத்து, அதனைக் கட்சி முழுவதும் பரப்ப வேண்டும். இதுதான் எமது கடமை.



குறிப்புகள் :
1. ஜே.வி.ஸ்டாலின், "சீனப் புரட்சியின் எதிர்கால வாய்ப்புகள்".
2. சென் து-சியூ, முதலில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியனாக இருந்தான்; "புதிய வாலிபர்" என்ற இதழின் ஆசிரியரான காரணத்தால், அவன் பெயர் போனவனானான். செந்து-சியூ கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களுள் ஒருவனாவான். மே 4 இயக்ககாலத்தில் அவனுக்குக் கிடைத்த புகழாலும், ஆரம்ப கடத்தில் கடசி பக்குவமடையாததாயிருந்ததாலும் அவன் கட்சியின் பொதுச் செயலாளராகினான். 1924 - 1927ப் புரட்சியின் பிற்பகுதியில் கட்சியின் சென்து-சியூவாற் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட வலதுசாரிச் சிந்தனை சரணாகதிவாத மார்க்கமாக வளர்ந்தது. அப்போதைய "சரணாகதிவாதிகள் கட்சியின், விவசாயி வெகு ஜனங்களுக்கும் நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்குமான தலைமையைத் தாமாகவே கைவிட்டு, குறிப்பாக, கட்சியின், ஆயுத சக்திகளுக்கான தலைமையைக் கைவிட்டுப் புரட்சியைத் தோல்விக்குள்ளாக்கினர்" (மாசேதுங், "இன்றைய நிலைமையும் நமது கடமைகளும்"). 1927ப் புரட்சியின் தோல்விக்கும் பின்னர் செந்து - சியூவும் இதர ஒருசில சரணாகதிவாதிகளும் புரட்சியின் எதிர்காலத்தில் நம்பிக்கை யிழந்து விலகல்வாதிகளாயினர். அவர்கள் பிற்போக்கு ட்ரொஸ்கியவாத நிலைப்பாட்டை மேற்கொண்டு, ட்ரொஸ்கியவாதிகளுடன் கூடி ஒரு சிறிய கட்சி - எதிர்ப்புக்கும்பலை உருவாக்கினர். இதனால் 1929 நவம்பரில் சென் து-சியூ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டான். 1942ல் அவன் இறந்தான்.
3. பொதுவாகக் கூறின், சீனப் புரட்சியின் ஆயுதப் போராட்டம் என்றால் கொரில்லா யுத்தமென்றே பொருள்படும் என்று கூறுமிடத்துத் தோழர் மாசேதுங் அவர்கள் இரண்டாவது புரசிகர உள்நாட்டு யுத்தம்முதல் ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின் ஆரம்பகாலம் வரையிலான சீனாவின் புரட்சிகர யுத்த அனுபவங்களைத் தொகுக்கிறார். இரண்டாவது புரட்சிகர உள்நாட்டு யுத்த நீண்ட காலத்தின்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய போராட்டங்களனைத்தும் கொரில்லா யுத்தமுறையிலேயே அமைந்தன. அந்தக் காலத்தின் பிற்பகுதியில், செஞ்சேனையின் பலம் அதிகரித்ததன் காரணமாகக் கொரில்லா யுத்தம், கொரில்லாத் தன்மையுடைய நடமாட்ட யுத்தமாக மாறியது (இந்நடமாட்ட யுத்தம், தோழர் மாசேதுங் அவர்களால் வகுத்துக் கூறப்பட்டது போல, உயர்ந்த தரத்திலமைந்த கொரில்லா யுத்தமாகும்). ஆனால், ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தில், எதிரி நிலைமைகளின் மாற்றங்காரணமாக, கொரில்லாத் தன்மையுடைய நடமாட்ட யுத்தம் திரும்பவும் கொரில்லா யுத்தமாக மாறியது. ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின் ஆரம்ப நாட்களில், வலதுசாரிச் சந்தர்ப்பவாதத் தவறிழைத்த கட்சித் தோழர்கள் கட்சி தலைமை தாங்கிய கொரில்லா யுத்தத்தைப் புறக்கணித்து, கோமிந்தாங் படையின் யுத்த நடவடிக்கைகளில் தமது நம்பிக்கையை வைத்துக்கொண்டனர். தோழர் மாசேதுங் அவர்கள் தமது "ஜப்பானிய - எதிர்ப்புக் கொரில்லா யுத்தத்தில் யுத்த தந்திரப் பிரச்சினைகள்", "நீண்ட கால யுத்தம் பற்றி", "யுத்தத்தையும் யுத்த தந்திரத்தையும் பற்றிய பிரச்சினைகள்" ஆகிய கட்டுரைகளில் அவர்களது கருத்துக்களை மறுத்துரைத்ததோடு, இக்கட்டுரையிற் சீனப் புரட்சியின் கொரில்லா யுத்த வடிவிலமைந்த நீண்டகால ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தியதில் பெற்ற அனுபவத்தையும் தத்துவார்த்த முறையில் தொகுத்தளித்தார். ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின் இறுதிக்காலத்தில், குறிப்பாக முன்றாவது புரட்சிகர உள்நாட்டு யுத்த (1945-49) காலத்தில், புரட்சிகர சக்திகளின் வளர்ச்சிகளினதும் எதிரி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினதும் காரணமாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆயுதப் போராட்டத்தின் பிரதான வடிவம் கொரில்லா யுத்தத்திலிருந்து ஒழுங்கான யுத்தமாக மாறியது. மூன்றாவது புரட்சிகர உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இது நன்கு அரண் செய்யப்பட்ட எதிரி நிலையங்களைத் தாக்கும் நடவடிக்கை உட்பட, கனரக ஆயுதந்தாங்கிய, பெரிய படைப்பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யுத்தமாக வளர்ந்தது.
4. லீ லி-சன்னின் "இடதுசாரி"ச் சந்தர்ப்பவாதம் பொதுவாக "லீ லி-சன் வழி" எனப்படுகிறது. அது, 1930 ஜூன்முதல் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கட்சியில் நிலைத்திருந்ததும் அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியில் பிரதான தலைமை உருப்பினராயிருந்த தோழர் லீ லி-சனைப் பிரதிநிதியாகக் கொண்டதுமான "இடதுசாரி"ச் சந்தர்ப்பவாத மார்க்கத்தைக் குறிக்கிறது. லீ லி-சன் வழி பின்வரும் இயல்புகளைக் கொண்டிருந்தது: அது கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டுக் கொள்கையை மீறி நடந்தது. புரட்சிக்கு மக்கள் பலத்தைக் கட்டிவளர்க்க வேண்டுமென்பதையும் புரட்சியின் வளர்ச்சி சமமட்டமானதல்ல என்பதையும் ஏற்கவில்லை; தோழர் மாசேதுங் அவர்களின், பிரதானமாகக் கிராமியத் தளப்பிரதேசங்களை உருவாக்குவதில் நாம் நீண்டகாலம் எமது கவனத்தைச் செலுத்தவேண்டும்; நகரங்களைச் சுற்றிவளைப்பதற்குக் கிராமியத் தளப்பிரதேசங்களை உபயோகிக்கவேண்டும் என்ற கருத்துக்களை "மிகவும் தவறானது" "விவசாயி மனப்போக்கின் சிறுபகுதிக்குரிய இயல்பும் பழைமை போற்றும் பண்பும்" என்று கருதியது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உடனடியான கிளர்ச்சிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் கருதியது. இந்தத் தவறான வழியின் அடிப்படையில், தோழர் லீ லி-சன் நாடுமுழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் உடனடியான ஆயுதக்கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்குத் துணிச்சல்வாதத் திட்டமொன்றைத் தீட்டினார். அதே சமயத்தில், லீ லி-சன் வழி உலகப் புரட்சியின் வளர்ச்சி சமமட்டமானதல்ல எனபதை ஏற்க மறுத்து, சீனப் புரட்சியின் பொதுவெடிப்பு தவிக்க முடியாதபடி ஒரு உலகப் புரட்சியின் பொதுவெடிப்புக்கு வழிகோலும் எனவும் உலகப் புரட்சியின் பொதுவெடிப்பிலேதான் சீனப் புரட்சி வெற்றி பெறமுடியுமெனவும் கருதியது; அத்துடன், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களில் ஏற்படும் வெற்றியின் ஆரம்பங்களே சோஷலிசப் புரட்சிக்கு மாறுவதற்கான ஆரம்பத்தைக் குறிக்கின்றன எனக் கருதி, சீனாவின் முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியின் நீடித்த தன்மையையும் ஏற்றுக்கொள்ள மறுத்து, இதன் காரணமாக, காலத்திற்கேற்காத பல "இடது சாரி"த் துணிச்சல்வாதக் கொள்கைகளை வகுத்தது. தோழர் மாசேதுங் அவர்கள் இந்தத் தவறான மார்க்கத்தை எதிர்த்தார்; முழுக் கட்சியினதும் மிகப் பரந்துபட்ட ஊழியர்களும் அங்கத்தவர்களுங்கூட அதைத் திருத்த வேண்டுமெனக் கோரினர். 1930 செப்டம்பரில் நடந்த கட்சி ஆறாவது மத்திய கமிட்டியின் மூன்றாவது பிளீனக் கூட்டத்திலே சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளைத் தோழர் லீ லி- சன் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், மத்திய கமிட்டியிலிருந்து தன் தலைமைப் பதவியைக் கைவிட்டார். தோழர் லீ லி-சன் நீண்டகால நேரத்திலே தன் தவறான கருத்துக்களைத் திருத்தனார், ஆகவே அவர் கட்சியின் ஏழாவது தேசிய காங்கிரசின் போது மத்திய கமிட்டி அங்கத்தவராகத் திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5. 1930 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் ஆறாவது மத்தியக் கமிட்டியின் மூன்றாவது பிளீனக் கூட்டமும் அதற்குப் பிந்தைய மத்திய தலைமையும் லீ லி-சன் மார்க்கத்துக்குப் முற்றுப்புள்ளி வைக்க பல ஊக்கமான நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால் கட்சியின் ஆறாவது மத்தியக் கமிட்டியின் மூன்றாவது பிளீனக் கூட்டத்தின் பின்னர், சென்ஷாஓ-யு (வாங் மிங்), சின் பங்-சியென் (பொ கு) ஆகியோர் தலைமையிலான, நடைமுறைப் புரட்சிப் போராட்டத்தில் அனுபவமற்ற ஒரு கட்சித் தோழர்கள் மத்திய தலைமை எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நின்றனர். அவர்கள் “இரண்டு மார்க்கங்கள்” அல்லது “சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை மேலும் போல்ஷிவிமயமாக்குவதற்கான போராட்டம்” என்ற துண்டுப் பிரசுரத்தில் அப்பொழுது கட்சியில் நிலவிய பிரதான ஆபத்து “இடசாரி” சந்தர்ப்பவாதமல்ல “வலதுசாரி” சந்தரப்பவாதமாகும் என்று சிறப்பாக வலியுறுத்திக் கூறியதுடன் தமது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த லீ லி-சன் மார்க்கத்தை “வலதுசாரி” வழி என “விமர்சி”த்தார்கள். லீ லி-சன் மார்க்கத்தையும் இதர “இடதுசாரி”க் கருத்துகளையும் கொள்கைகளையும் புதிய போர்வையில் நீடித்து, புத்தியிர் அளித்து அல்லது விருத்தி செய்த புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை அவர்கள் முன்வைத்து, தோழர் மா-சே-துங் அவர்களின் சரியான வழிக்கு எதிராக தம்மை நிறுத்தினார்கள். இந்த தவறான புதிய “இடதுசாரி” வழி 1931 ஜனவரியில் நடைபெற்ற ஆறாவது மத்தியக் கமிட்டியின் நாலாவது பிளீனக் கூட்டம் முதல் இந்தத் தவறான மார்க்கத்தின் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து தோழர் மா-சே-துங் அவர்களைத் தலைமையாகக் கொண்ட புதிய மத்திய தலைமையை நிறுவி, 1935 ஜனவரியில் குவெய்சௌ மாகாண சுன்யியில் மத்தியக் கமிட்டியால் கூட்டப்பட்ட அரசியல் குழுக்கூட்டம் வரை கட்சியில் மேலோங்கியிருந்தது. இத்தவறான “இடதுசாரி” வழி கட்சியில் குறிப்பிடத்தக்க அளவு நீண்டகாலம் (நான்கு ஆண்டுகள்) மேலோங்கியிருந்து கட்சிக்கும் புரட்சிக்கும் மிகவும் பெரிய சேதங்களை ஏற்படுத்தியது. அந்த நாசகரமான விளைவுகள் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனச் செஞ்சேனை, அதன் தளப்பிரதேசங்களிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் கோமிந்தாங்கின் கொடிய அடக்குமுறையை அனுபவிக்க நேர்ந்தது; சீனப் புரட்சியின் முன்னேற்றம் தாமதப்படுத்தப்பட்டது. தவறிழைத்த தோழர்களில் மிகப் பெரும்பான்மையினர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் நீண்ட போக்கின் மூலம் தமது தவறுகளைப் புரிந்துக்கொண்டு திருத்தி, கட்சிக்கும் மக்களுக்குமாக அநேக நல்ல வேலை செய்துள்ளார்கள். தோழர் மா-சே-துங் அவர்களின் தலைமையில் பொது அரசியல் விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் இப்பொழுது கட்சியிலுள்ள இதர பரந்துபட்ட தோழர்களுடன் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.
6. சாங் கோ-தௌ சீனப் புரட்சியின் ஒரு துரோகியாவான். அவன் புரட்சியில் லாபம் பெற எண்ணித் தன் வாலிபத்திலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்டான். கட்சியில் அவன் பல தவறுகளை இழைத்துப் பாராதூரமான குற்றங்கள் புரிந்தான். மிகவும் கேடுகெட்டது என்னவென்றால், 1935ல் அவன் செஞ்சேனை வடக்கு நோக்கிச் செல்லுவதை எதிர்த்து, செஞ்சேனை கஸூவன் சீகாங் எல்லையிலுள்ள சிறுபானமைத் தேசிய இனப் பிரதேசங்களுக்குப் பின்வாங்கவேண்டுமென்ற தோல்விவாத, விலகல்வாதக் கொள்கையொன்றை முன்வைத்து, கட்சிக்கும் மத்தியக் கமிட்டிக்கும் எதிராகத் துரோக நடவடிக்கைகளில் பகிரங்கமாக ஈடுபட்டு ஒற்றுமையைச் சீர்குலைத்து, செஞ்சேனையின் நான்காவது முன்னணிப்படைக்குப் பெரும் இழப்புகளைக் கொண்டுவந்ததாகும். தோழர் மா-சே-துங் அவர்களதும் மத்தியக் கமிட்டியினதும் பொறுமையான போதனையினால் செஞ்சேனையின் நான்காவது முன்னணிப்படையும் அதன் பரந்துபட்ட ஊழியர்களும் விரைவாகத் திரும்பவும் கட்சி மத்தியக் கமிட்டியின் சரியான தலைமையின் கீழ் வந்து, தொடர்ந்து நடந்த போராட்டங்களில் ஒரு புகழ்மிக்க பாத்திரம் வகித்தனர். எப்படியாயினும் காங்-கோ-தௌ தான் திருத்தப்பட முடியாதவன் என நிரூபித்து, 1938 வசந்த காலத்தில் சென்சி-கன்சு-நிங்சியா எல்லை பிரதேசத்திலிருந்து தானாகவே தப்பி கோமிங்டானின் ரகசியப் போலீசில் சேர்ந்தான்.

Monday 14 November 2011

மார்க்சியமும் திருத்தல்வாதமும்


மார்க்சியமும் திருத்தல்வாதமும்
   வடிவ கணித வெளிப்படை உண்மைகள் மனித நலன்களைப் பாதிக்குமாயின் அவற்றை மறுக்க நிச்சயம் முயற்சி செய்வார்களெனக் கூறும் பிரபல முதுமொழி ஒன்று உண்டு; இறையியலின் பழங்காலத் தப்பெண்ணங்களுக்கு முரணான இயற்கை – வரலாற்றுத் தத்துவங்களுக்கு வெறித்தனமான எதிர்ப்புக் காட்டப்பட்டது. இனியும் காட்டப்பட்டு வருகிறது. ஆகவே மார்க்சியத் தத்துவம்- தற்கால சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொளி கூட்டி அதனை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக் காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு (பொருளாதார வளர்ச்சி காரணமாய்) தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்புத் தோன்றுமென்பதை நிருபிப்பதுமான இந்த மார்க்சியத் தத்துவம் – அதன் வாழ்வு முழுவதும் போராடியே ஒவ்வொரு அடியாய் முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.
     மார்க்சியமானது முதலாளித்துவ விஞ்ஞானத்துக்கும் தத்துவவியலுக்கும் எதிரானது என்பதைக் கூறத் தேவையில்லை சொத்துடைத்த வர்க்கங்களின் வளரும் தலைமுறையை மழுங்கடிக்கவும், உள்நாட்டு, வெளிநாட்டுப் பகைவர்களுக்கு எதிராய் அதைப் “பயிற்றுவிக்கவும்” அதிகாரபூர்வமான பேராசிரியர்களால் அதிகாரபூர்வமாய் இவை போதிக்கப்படுகிறவை. இந்த விஞ்ஞானம் மார்க்சியம் என்பதாய் ஒன்று இருப்பதைக் கேட்பதற்குக் கூட மறுக்கிறது; மார்க்சியம் ஏற்கனவே பொய்யென நிரூபிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு விட்டதெனக் கூறுகிறது. சோக்ஷலிசத்தை மறுத்துப் பிழைப்புத் தேடிக்கொள்ளும் இளம் அறிவியலாளர்களும், காலாவதியாகிவிட்ட எல்லா வித “அமைப்புக்களின்” மரபுகளையும் பாதுகாத்து நிற்கும் தள்ளாத கிழவர்களும் ஒருங்கே துடித்தெழுந்து மார்க்சைத் தாக்குகின்றனர். மார்க்சியத்தின் முன்னேற்றமானது, தொழிலாளி வர்க்கத்தினரிடையே அதன் கருத்துக்கள் பரவி வேரூன்றி உறுதி பெறுவதானது, மார்க்சியத்தின் மீதான இந்த முதலாளித்துவ தாக்குதல்களின் வேகத்தையும் கடுமையையும் தவிர்க்க முடியாதபடி அதிகரிக்கச் செய்கிறது. அதிகாரபூர்வமான விஞ்ஞானத்தால் “அழித்தொழிக்கப்படும்” ஒவ்வொரு தரமும் மார்க்சியம் மேலும் மேலும் வலுவும் உறுதியும் சக்தியும் பெற்று ஓங்குகிறது.
   தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடன் தொடர்புகொண்டு பிரதானமாய்ப் பாட்டாளி வர்க்கத்திடம் நிலவும் தத்துவங்களிடையேகூட மார்க்சியம் தனது நிலையை  எடுத்தயெடுப்பிலேயே உறுதியாய் நாட்டிக் கொண்டுவிடவில்லை. அதன் வாழ்வின் முதல் அரை நூற்றாண்டில் (1840 ஆம் ஆண்டுகளிலிருந்து தொடங்கி) மார்க்சியம் அடிப்படையிலேயே தனக்கு விரோதமான தத்துவங்களுக்கு எதிராய்ப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது நாற்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் மார்க்சும் எங்கெல்சும் தத்துவவியல் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தினராய் இருந்த தீவிர இளம் ஹெகலியர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொண்டனர். நாற்பதாம் ஆண்டுகளின் முடிவில் பொருளாதாரத் தத்துவத் துறையில் புருத்தோனியத்தை18 எதிர்த்து போராட்டம் ஆரம்பமாயிற்று. கொந்தளிப்பு மிக்க 1848 ல் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட கட்சிகளையும் தத்துவங்களையும் பற்றிய விமர்சனத்தின் வாயிலாய்  ஐம்பதாம் ஆண்டுகளில் இந்தப் போராட்டம் முடிவடையலாயிற்று. அறுபதாம் ஆண்டுகளில் போராட்டம் பொதுத் தத்துவத் துறையிலிருந்து நேரடியான தொழிலாளர் இயக்கத்துக்கு மேலும் நெருங்கிய ஒரு துறைக்கு இடம் பெயர்ந்து சென்றது. அகிலத்திலிருந்து பக்கூனினியம்19  வெளியேற்றப்பட்டதில் இது முடிவுற்றது. எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சிறிது காலத்துக்குப் புருதோனியர் முல்பெர்கரும், எழுபதாம் ஆண்டுகளின் கடைசிப் பகுதியில் நேர்காட்சிவாதி டூரிங்கும் ஜெர்மனியில் அரங்கிலே ஆடினர். ஆனால் பாட்டாளி வர்க்கத்திடம் ஏற்கனவே மிகச் சொற்பச் செல்வாக்கே இருந்தது. தொழிலாளர் இயக்கத்தில் ஏனைய எல்லாச் சித்தாந்தங்களின் மீதும் இதற்குள்ளாகவே மார்க்சியம் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி வெற்றிகண்டு வந்தது.
        தொண்ணூறாம் ஆண்டுகளுக்குள் இந்த வெற்றி பிரதானமாய் நிறைவு எய்திவிட்டது.  புருத்தோனிய மரபுகள் வேறு எங்கையும்விட மிக அதிகக் காலத்துக்கு நிலைத்திருந்த லத்தீனிய நாடுகளிலுங்கூட, தொழிலாளர் கட்சிகள் தமது வேலைத்திட்டங்களையும் போர்த்தந்திரங்களையும் நடைமுறையில் மார்க்சிய அடித்தளங்கள் மீதுதான் வகுத்துக் கொண்டன. தொழிலாளர் இயக்கத்தின் புத்துயிர் பெற்ற சர்வதேச நிறுவனம் – காலத்துக்குக் காலம் கூடிய சர்வதேச காங்கிரஸ்களின் வடிவில் அமைந்த இது – தொடக்கத்திலிருந்து அநேகமாய்ப் போராட்டமின்றியே மார்க்சியக் கருத்தோட்டத்தையே முக்கியமான எல்லாக் கூறுகளிலும் ஏற்று வந்தது. இவ்விதம் மார்க்சியம் தனக்கு விரோதமான அதிக அளவுக்கோ குறைந்த அளவுக்கோ ஒருமித்ததாய் அமைந்த தத்துவங்கள் யாவற்றையும் வெளியேற்றியபின், அந்தத் தத்துவங்களில் அடங்கிய  போக்குகள் பிற வழிகளில் தலைகாட்ட முற்பட்டன. போராட்டத்தின் வடிவங்களும் முகாந்திரங்களும் மாறியனவேயன்றி போராட்டம் தொடர்ந்து நடைபெற்றே வந்தது. மார்க்சியத்தின் இரண்டாவது அரைநூற்றாண்டானது (தொண்ணூறாம் ஆண்டுகளிலிருந்து) மார்க்சியத்துக்கு விரோதமாய் மார்க்சியத்தினுள்ளிருந்தே செயல்பட்ட ஒரு போக்கிற்கு எதிரான போராட்டத்துடன் தொடங்கிற்று.
     ஒரு காலத்தில் வைதீக மார்க்சியவாதியாய் இருந்த பெர்ன்க்ஷ்டைன் மிகுந்த சப்தம் எழுப்பி, மார்க்சுக்குத் திருத்தங்கள் செய்வதன், மார்க்சைத் திருத்துவதன், திருத்தல்வாதத்தின் மிகமுனைப்பான வெளிப்பாடாய் முன்வந்ததால், இந்த போக்கு பெர்ன்க்ஷ்டைனின் பெயரில் அழைக்கப்பட லாயிற்று. ருக்ஷ்யாவிலும்கூட, நாட்டின் பொருளாதாரப் பிற்பட்ட நிலை காரணமாகவும், பண்ணையடிமை முறையின் மீதமிச்சகளின் சுமையால் இருத்தப்பட்ட விவசாயிகள் மக்கள் தொகையில் பெரும்பான்மையோராய் இருப்பதன் காரணமாகவும் மார்க்சியமல்லாத சோக்ஷலிசம் இயல்பாகவே வெறெங்கையும்விட மிக நெடுங்காலத்துக்கு நிலைத்திருந்துள்ள ருக்ஷ்யா விலுங்கூட,  தெட்டத் தெளிவாய் நம் கண்முன்னே இது திருத்தல்வாதமாய்  மாறிக் கொண்டிருக்கிறது. நிலப் பிரச்சனையிலும் (நிலம் அனைத்தையும் ஸ்தல அரசுடைமையாக்கும் திட்டத்திலும்) மற்றும் வேலைத்திட்டம்,  போர்த்தந்திரம் பற்றிய பொதுப் பிரச்சனைகளிலும் நமது சமூக- நரோத்னிக்குகள்20 தமது பழைய கருத்தமைப்பின் அழுகிப்போன, காலாவதியாகிவிட்ட, மீதமிச்சங்களுக்குப் பதிலாய் மார்க்சுக்குத் “திருத்தங்கள்” செய்வதை மேலும் மேலும் கைக்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பழைய கருத்தமைப்பு அதற்குரிய வழியில் ஒருமித்தமாய் அமைந்து அடிப்படையிலேயே மார்க்சியத்துக்குப் பகைமையானதாய் இருந்தது.
        மார்க்சியத்துக்கு முற்பட்ட சோக்ஷலிசம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. அது  தொடர்ந்து நடத்தியே வருகிறது. ஆனால் முன்புபோல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாதமாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது. ஆகவே திருத்தல்வாதத்தின் சித்தாந்த உள்ளடக்கத்தைப் பரிசீலனை செய்வோமாக.
         தத்துவவியல் அரங்கில் திருத்தல்வாதமானது முதலாளித்துவ பேராசிரிய “விஞ்ஞானத்தைப்” பின்தொடர்ந்து சென்றது. பேராசிரியர்கள் “கான்டுக்குத் திரும்பிச் சென்றனர்” திருத்தல்வாதம் உடனே நவீன-கான்டியர்களின்21 வாலைப் பற்றிக் கொண்டு பின்சென்றது. தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை எதிர்த்துப் பாதிரிமார்கள் ஆயிரம் தரம் கூறிவந்திருக்கும் வழக்கமான வெற்றுரைகளைப் பேராசிரியர்கள் திருப்பிக் கூறினர் – உடனே திருத்தல்வாதிகளும் இளக்காரமாய் நகைத்துக் கொண்டு பொருள்முதல்வாதம் நெடுங்காலத்துக்கு முன்பே “தவறென நிரூபிக்கப்பட்டு விட்டதே” என்று (கடைசியாய் வெளிவந்த Handbuch கிலிருந்து சொல்லுக்குச் சொல் அப்படியே திருப்பிக் கூறி) ஜபமந்திரத்தை முணுமுணுப்பது போல முணுமுணுத்தனர். பேராசிரியர் ஹெகலைச் “செத்த நாய்” என ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதேபோதில் ஹெகலினுடையதைவிட ஆயிரம் மடங்கு அற்பமான, படுமட்டமான கருத்துமுதல்வாதத்தை உபதேசம் செய்து, மிக அலட்சியமாய் இயக்கவியலிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர் – உடனே திருத்தல்வாதிகள் அவர்கள் பின்னால் ஓடி, “சாதுர்யமான” (மற்றும் புரட்சிகரமான)  இயக்கவியலைக் கைவிட்டு அதற்குப் பதில் “எளிய” (மற்றும் அமைதியான) “பரிணாமத்தைக்” கைக்கொண்டு, விஞ்ஞானத்தைக் கொச்சையாக்கி இழிவுபடுத்தும் தத்துவவியல் சகதிக் குழியிலே மூழ்கினர். பேராசிரியர்கள் தமது கருத்துமுதல்வாத “விமர்சன” அமைப்புக்களை ஆதிக்கத்திலிருந்த மத்திய காலத் “தத்துவவியலுக்கு” (அதாவது இறையியலுக்கு) உகந்தவாறு சரிசெய்து அதிகாரபூர்வமான தமது சம்பளக்களைச் சம்பாதித்துக் கொண்டனர் – திருத்தல்வாதிகளும் உடனே அவர்களை நெருங்கிச்சென்று மதத்தை, தற்கால அரசு சம்பந்தமாய் மட்டுமின்றி முன்னேறிய வர்க்கத்தின் கட்சி சம்பந்தமாகவுங்கூட, அவரது ”சொந்த விவகாரமாக்க” முயன்றனர்.
          மார்க்சுக்குச் செய்யப்பட்ட இத்தகைய ”திருத்தங்களுக்கு” வர்க்க முறையில் மெய்யான பொருள் என்னவென்பது கூறாமலே விளங்குகிறது. சர்வதேச சமூக-ஜனநாயக இயக்கத்தில் பிளெஹானவ் ஒருவர்தான் திருத்தல்வாதிகளுடைய படுமோசமான இந்த வெற்றுரைகளை முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணேட்டத்திலிருந்து விமர்சித்துக் கண்டித்த மார்க்சியவாதி என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். பிளெஹானவின் போர்த்தந்திரச் சந்தர்ப்பவாதத்தைப் பற்றிய விமர்சனமாய் மூடிமறைத்து பழைய பிற்போக்குத் தத்துவவியல் குப்பைக் கூளத்தைக் கள்ளத்தனமாய் உள்ளே கொண்டுவர மிகவும் தவறான முயற்சிகள் செய்யப்படும் இத்தருணத்தில் இதை மேலும் அழுத்தம் திருத்தமாய் வலியுறுத்துவது அவசியமாகும்.*
          அரசியல் பொருளாராதத்துக்கு வருவோமாயின் இத் துறையில் திருத்தல்வாதிகளுடைய “திருத்தங்கள்” மேலும் அதிக விரிவாகவும் நுட்ப விபரங்கள் வழிப்பட்டனவாயும் இருந்ததை முதற்கண் குறிப்பிதல் வேண்டும். “பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய விவரங்களைக்” கொண்டு பொது மக்களை வயப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. பெருவீத உற்பத்தி குவிவதும் சிறுவீத உற்பத்தியை அது அகற்றிவிடுவதும் விவசாயத்தில் நடைபெறவே இல்லையென்றும், வர்த்தகத்திலும் தொழில் துறையிலும் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது. நெருக்கடிகள்
*பக்தானவ், பஸாரவ் மற்றும் சிலர் எழுதும் மார்க்சியத்தின் தத்துவவியலில் ஆராய்ச்சிகள் என்னும் புத்தகத்தைப் பார்க்கவும். இப்புத்தகத்தைப் பரிசீலிக்க இதுவல்ல இடம். நவீன கான்டியத் திருத்தல்வாதிகளைப் பற்றி மேலே நாம் கூறியுள்ளவை யாவும் இந்தப் “புதிய” நவீன-ஹியூமிய, நவீன-பேர்கிலியத் திருத்தவாதிகளுக்கும் சாரம்சத்தில் பொருந்தும் என்பதை வருங்காலத்தில் கூடிய சீக்கிரம் ஒரு கட்டுரைத் தொடரிலோ, தனிப் பிரசுரத்திலோ நிரூபிப்பேன் என்று மட்டும் தற்போது குறிப்பிடுகிறேன்.                                            
இப்பொழுது அரிதாகியதோடு பலம் குறைந்துவிட்டதாகவும், இவற்றை அறவே நீக்கிவிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுக்களும் மூலதனத்துக்கு அளித்திடுமென எதிர்பார்க்கலாம் என்பதாகவும் கூறப்பட்டது. முதலாளித்துவம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் “தகர்வு பற்றிய தத்துவம்” வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் வலிமை குறைந்து தணிந்துவிடும் போக்கின் காரணத்தால் ஆதாரமற்றதாகுமெனக் கூறப்பட்டது. முடிவில் மார்க்சின் மதிப்புத் தத்துவத்தையும் பேம்-பாவர்க்கின் வழியில் திருத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டது.
      இந்த பிரச்சனைகளில் திருத்தல்வாதிகளை எதிர்த்து நடத்திய போராட்டமானது, இதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு டூரிங்குடன் எங்கெல்ஸ் நடத்திய சர்ச்சையைப் போல் அதே அளவுக்குப் பயனுள்ள முறையில் சர்வதேச சோக்ஷலிசத்தில் தத்துவார்த்தச் சிந்தனையை மறுமலர்ச்சி பெறச் செய்தது. உண்மைகள், புள்ளிவிவரங்கள் இவற்றின் துணைகொண்டு திருத்தல்வாதிகளுடைய வாதங்கள் பகுத்தாரயப்பட்டன. தற்காலச் சிறுவீத உற்பத்தி குறித்து திருத்தல்வாதிகள் முனைந்து நின்று பகட்டான சித்திரம் தீட்டினர் என்று நிரூபிக்கப்பட்டது. தொழில் துறையில் மட்டுமின்றி, விவசாயத்திலுங்கூட சிறுவீத உற்பத்தியைவிடப் பெருவீத உற்பத்தியே தொழில்நுட்ப வழியிலும் வர்த்தக வழியிலும் மேலானது என்பது மறுக்க முடியாத உண்மைகளால் மெய்ப்பிக்கப்படுகிறது. ஆனால் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி விவசாயத்தில் குறைந்த அளவு வளர்ச்சியே பெற்றிருக்கிறது; தற்காலப் புள்ளிவிபர இயலாளர்களும் பொருளியலாள ர்களும். பொதுவாகப் பேசுமிடத்து, உலக பொருளாதாரத்தின் பரிவர்த்தனை நிகழ்ச்சிப் போக்கினுள் விவசாயம் மேலும் மேலும்  இழுத்துக் கொள்ளப் படுவதைச் சுட்டிக்காட்டும் தனிக்கிளையையும் (சில நேரங்களில் செயற்பாடு களையுங் கூட)  தேர்வாய்வு செய்வதில் அதிகத் தேர்ச்சியுடையோராய் இல்லை. சிறிவீத உற்பத்தியானது இயற்கைப் பொருளாதாரத்தின் இடிபாடுகள் மீது தன்னை நிலைநிறுத்திக் கொள்வது எப்படியெனில், இடையறாது உணவுத் தரத்தை மோசமாக்கியும், நிரந்தர பட்டினியாலும் வேலை நேரத்தை அதிகமாக்கிச் சென்றும் கால்நடைகளின் தரத்தையும் பராமரிப்பையும் சீர்கேடுறச் செய்தும்தான் – சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவ பட்டறை
 உற்பத்தியை எதிர்த்துக் கைத்தொழில் உற்பத்தி தன்னை நிலைநிறுத்தி வந்த அதே வழிகளில்தான், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் முதலாளித்துவ சமுதாயத்தில் சிறுவீத உற்பத்தியின்  அடித்தளங்களுக்குத்  தவிர்க்க முடியாதவாறும் விடாப்பிடி யாகவும் குழிபறிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் குழப்படியாகவும் சிக்கலாகவுமுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்கை அதன் எல்லா வடிவங்களிலும் ஆராய்வதும், சிறு உற்பத்தியாளரால் முதலாளித்துவத்தில் விவசாயியின் சிறு சாகுபடிக்கு விடிமோட்சமில்லை என்பதையும் பாட்டாளியின் கண்ணோட்டத்தை விவசாயி ஏற்பது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்திக் காட்டுவதும் சோக்ஷலிசப் பொருளியலுக்குரிய கடமையாகும். இந்த பிரச்சனையில் திருத்தல்வாதிகள் ஒருச்சார்பாகவும் முதலாளித்துவத்தின் முழு அமைப்புடன் தொடர்பின்றியும் தேர்வு செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மேம்போக்கான பொது முடிவுகளுக்கு வந்து விஞ்ஞானத்தின் கண்ணோட்டத்தில் கேடு புரிந்தனர். புரட்சிகர பாட்டாளியின் பார்வை நிலையை ஏற்குமாறு வற்புறுத்துவதற்குப் பதிலாய் சிறு உடமையாளனின் போக்கை (அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தாரின் போக்கை) ஏற்குமாறு தெரிந்தோ தெரியாமலே தவிர்க்க முடியாதபடி விவசாயியை அழைப்பதன் மூலம், அல்லது வற்புறுத்தியதன் மூலம் அவர்கள் அரசியலின் கண்ணோட்டத்தில் கேடு புரிந்தனர்.
    நெருக்கடிகளின் தத்துவம் குறித்தும் தகர்வின் தத்துவம் குறித்தும் திருத்தல்வாதத்தின் நிலை மேலும் படுமோசமானதாகவே இருந்தது.  மிக சொற்ப காலத்துக்கு மட்டுமேதான், அதுவும் மிக மோசமான கிட்டப்பார்வை கொண்டவரால்தான், ஒரு சில ஆண்டு காலத் தொழில் துறை ஏற்ற நிலையாலும் சுபீட்சத்தாலும் வயப்படுத்தப்பட்டு, மார்க்சின் தத்துவத்தினு டைய அடிப்படைகளைத் திருத்தியமைக்க வேண்டுமென நினைக்க முடியும். நெருக்கடிகள் கடந்த காலத்துக்குரியனவாகிவிட வில்லை, சுபீட்சத்தைப் பின்தொடர்ந்து நெருக்கடி வருகிறது என்பதை எதார்த்த நிலைமைகள் மிக விரைவாகவே திருத்தல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்தின. குறிப்பிட்ட நெருக்கடிகளின் வடிவங்களும் வரிசைமுறையும் சித்திரமும் மாறியனவே யன்றி, நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாய்த்தான் நிலைத்திருந்தன.  கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் உற்பத்தியை ஒன்றுபடுத்திய அதே நேரத்தில், எல்லோருக்கும் கண்கூடாய்த் தெரியும்படியான முறையில் உற்பத்தியின் அராஜகத்தையும் பாட்டாளி வர்க்கத்தினுடைய வாழ்வின் காவந்தின்மையையும் மூலதனத்தின் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி, இதன் மூலம் வர்க்கப் பகைமைகளை முன்பின் கண்டிராத அளவுக்குக் கடுமையாக்குகின்றன. முதலாளித்துவ மானது அழிவை நோக்கி – தனிப்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடிகளைக் குறிக்கும் பொருளிலும் முதலாளித்துவ அமைப்பு அனைத்தின் முழுநிறைத் தகர்வைக் குறிக்கும் பொருளிலும் – விரைந்தோடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பாய் இதே புதிய பகாசுர டிரஸ்டுகளின் மூலம் மிகமிகத் தெளிவாகவும் மிகமிகப் பெரிய அளவிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியும் ஐரோப்பா பூராவிலும் பயங்கரமாய் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டமும் – எக்கணமும் மூண்டுவிடும் நிலையிலுள்ள தொழில் துறை நெருக்கடியைப் பற்றிக் கூறவே வேண்டாம், பல அறிகுறிகள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றன – திருத்தல்வாதிகளுடைய அண்மைக் காலத்தியத் “தத்துவங்கள்” எல்லோராலும், திருத்தல்வாதிகளிடையேகூட பலரும் அடங்கலாய் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் நிலையை உண்டாக்கியுள்ளன. ஆனால் அறிவுத்துறையினரது இந்த நிலையின்மை தொழிலாளி வர்க்கத்துக்கு அளித்திடும் படிப்பினைகள் ஒருபோதும் மறக்கப்படலாகாது.
      மதிப்புத் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் பேம்-பாவர்க்கின் பாணியில் சிறிதும் தெளிவற்ற சூசகங்களையும் பெருமூச்சுக்களையும் தவிர்த்து, திருத்தல்வாதிகள் வேறு எதுவுமே அளித்திடவில்லை. ஆகவே விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சியில் எவ்வித தடமும் விட்டுச் செல்லவில்லை என்பதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.
       அரசியல் துறையில், திருத்தல்வாதமானது மார்க்சியத்தின் அடித் தளத்தை, அதாவது வர்க்கப் போராட்டத் தத்துவத்தைத் திருத்த மெய்யாகவே பெருமுயற்சி செய்தது. அரசியல் சுதந்திரமும் ஜனநாயகமும் அனைத்து மக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்துக்கான அடிநிலையை அகற்றிவிடுவதாகவும், தொழிலாளி வர்க்கத்துக்குத் தாய்நாடில்லை என்கிற கம்யூனிஸ்டு அறிக்கையின் பழம்பெரும் நிர்ணயிப்பைப் பொய்யாக்கி விடுவதாகவும் கூறினார்கள். ஏனெனில் ஜனநாயகத்தில் ‘பெரும்பான்மை யோரின் சித்தம்” ஆதிக்கம் செலுத்துவதால், அரசை வர்க்க ஆதிக்கத்திற்கான உறுப்பாய் யாரும் கருதலாகாதென்றும், பிற்போக்காளர்களுக்கு எதிராய் முற்போக்கான, சமுதாய-சீர்திருத்த முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டுக்கள் நிறுவிக்கொள்வதை நிராகரிக்கலாகாதென்றும் கூறினர்.
        திருத்தல்வாதிகளின் இந்த வாதங்கள் ஓரளவு பாங்குற வகுக்கப் பெற்ற கருத்தமைப்பாகும் என்பதை, அதாவது பிரசித்தமான பழைய மிதவாத-முதலாளித்துவ கருத்தமைப்பாகும் என்பதை மறுப்பதற்கில்லை.  முதலாளித்துவப் பாராளுமன்ற முறையில் வாக்குரிமையையும் அரசாங்க விவகாரங்களில் பங்கு கொள்ளும் உரிமையையும் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்வதால் இது வர்க்கங்களையும் வர்க்கப் பிரிவினைகளையும் ஒழித்திடுகிறது என்று மிதவாதிகள் எப்பொழுதுமே கூறி வந்துள்ளனர். இத்தகைய கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பாவின் வரலாறு அனைத்தும், இருபதாம் நூற்றண்டின் துவக்க ஆண்டுகளில் ருக்ஷ்யப் புரட்சியின் வரலாறு அனைத்தும் கண்கூடாய்க் காட்டுகின்றன. “ஜனநாயக“ முதலாளித்துவத்தின் சுதந்திரத்தில் பொருளாதாரப் பாகுபாடுகள் மேலும் தீவிரமாகிக் கடுமையாகின்றனவே ஒழிய குறைந்துவிடவில்லை. மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசுகளிலுங்கூட பாராளுமன்ற முறை இக் குடியரசுகளும் வர்க்க ஒடுக்குமுறை அமைப்புகளே என்ற அவற்றின் உள்ளியல்பான தன்மையை அப்பட்டமாய்த் தெரியப்படுத்துகிறதேயன்றி, அவற்றின் வர்க்க ஒடுக்குமுறையை அகற்றிவிடவில்லை. அரசியல் நிகழ்சிகளில் முன்பு நேரடிப் பங்கு பெற்ற பகுதிகளைக் காட்டிலும் அளவிட முடியாத விரிவான மக்கள் பகுதியோருக்கு அறிவொளியூட்டி அவற்றை ஒழுங்கமைத்திடத் துணைபுரிவதன் மூலம் பாராளுமன்ற முறை நெருக்கடிகளையும் அரசியல் புரட்சிகளையும் அகற்றிவிடவில்லை. இப் புரட்சிகளின்போது உள்நாட்டு யுத்தம் அதிகபட்ச அளவுக்கு கடுமையாகும்படியே செய்கிறது. தவிக்க முடியாதபடி எப்படி இது கடுமையாகிவிடுகிறது என்பதை1871 ஆம் ஆண்டு வசந்தத்தில் பாரீஸ் நிகழ்ச்சிகளும்1905 குளிர்காலத்தில் ருக்ஷ்ய நிகழ்ச்சிகளூம்22 மிக மிகத் தெளிவாய்க் காட்டின. பாட்டாளிவர்க்க இயக்கத்தை நசுக்கும் பொருட்டு பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் ஒரு கணங்கூடத் தயங்காது தேசம் அனைத்துக்கும் எதிரான பகைவனுடன்,  பிரஞ்சு நாட்டைச் சீரழியச் செய்த அந்நியச் சேனையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பாராளுமன்ற முறை, முதலாளித்துவ ஜனநாயகம் இவற்றின் தவிக்க இயலாத உள்ளார்ந்த இயக்கவியலை – சர்ச்சைக்கு வெகுஜனப் பலாத்காரத்தின் மூலம்முன்னிலும் கூர்மையான முடிவுகாண வழிவகுக்கும் இதனை – புரிந்து கொள்ளாத எவராலும் இந்தப் பாராளுமன்ற முறையின் அடிப்படையில் கோட்பாட்டு வழியில் முரணின்றியும் தொழிலாளி வர்க்க வெகுஜனங்கள் இந்த “சர்ச்சைகளில்” வெற்றிகர பங்கு கொள்ள மெய்யாகவே அவர்களைத் தயார் செய்யும் விதத்திலும் பிரசாரமும் கிளர்ச்சியும் நடத்த ஒருபோதும் முடியாது. மேற்கு நாடுகளில் சமுக-சீர்திருத்த மிதவாதிகளுடனும், ருக்ஷ்யப் புரட்சியில் மிதவாதசீர்திருத்தவாதிகளுடனும் (கார்டேட்டுக்கள்24) செய்து கொள்ளப்பட்ட கூட்டணிகள், ஒப்பந்தங்கள், இணைப்புக்கள் இவற்றின் அனுபவமானது,  வெகுஜனங்களுடைய உணர்வை மழுங்கடிக்கவே இந்த ஒப்பந்தங்கள் உதவுகின்றன, போராடும் வீரர்களை அவை சிறிதும் போராடும் ஆற்றலற்ற, மிகுந்த ஊசலாட்டமும் துரோகத் தன்மையும் கொண்டவர்களுடன் இணையச் செய்து, வெகுஜனங்களுடைய போராட்டத்தின் மெய்யான முக்கியத்துவத்தைப் பலவீனப்படுத்துகின்றனவே அன்றி அதனை உயர்த்தவில்லை என்பதை ஐயந்திரிபற நிரூபித்துக் காட்டியுள்ளது. பிரன்சில் மில்லிரண்டிசம்25- விரிவான, மெய்யாகவே தேச அளவில் திருத்தல்வாத அரசியல் போர்த்தந்திரத்தைக் கையாளுவதில் மிகப் பெரிய முயற்சியான இது-  உலகெங்கணும் பாட்டாளி வர்க்கம் எந்நாளும் மறக்க முடியாத வகையில் திருத்தல்வாதம் குறித்து நடைமுறை வாயிலான ஒரு பதிப்பீட்டை அளித்திருக்கிறது.
      சோக்ஷலிச இயக்கத்தின் இறுதி நோக்கம் குறித்து திருத்தல்வாதம் அனுசரிக்கும் போக்கு அதன் பொருளாதார, அரசியல் போக்குகளுடன் சேர்ந்து அதன் முழு உருவையும் பூர்த்தி செய்து காட்டும் இயற்கையான நிரப்புக் கூறாகும். “இயக்கமே யாவும், இறுதி நோக்கம் ஒரு பொருட்டல்ல”- பெர்ன்க்ஷ்டைனுடைய இந்த தாரகமந்திரம் நீண்ட பல வியாக்கியானங்களைக் காட்டிலும் சிறப்பாய் திருத்தல்வாதத்தின் உட்பொருளைத் தெரிவிக்கிறது. தனது நடத்தையை சந்தர்ப்பத்துக்குச் சந்தர்ப்பம் மாற்றி நிர்ணயித்துக் கொள்ளுதல், அன்றன்றைக்குமான நிகழ்ச்சிகளுக்கும் அற்ப விவகார அரசியல் திருப்பங்களுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளுதல், பாட்டாளி வர்க்கத்தின் தலையாய நலன்களையும் முதலாளித்துவ அமைப்பு அனைத்தின், முதலாளித்துவ பிரிணாமம் அனைத்தின் அடிப்படைக் கூறுகளையும் மறந்துவிடுதல்,  இந்தத் தலையாய நலன்களை அந்தந்த தருணத்துக்குரிய மெய்யான அல்லது கற்பிதமான நலன்களுக்காக பலியிடுதல் – இவையேதான் திருத்தல்வாதத்தின் கொள்கை. இந்தக் கொள்கையின் தன்மையிலிருந்தே வெளிப்படையாய் பெறப்படுவது என்னவெனில், இது எண்ணிலடங்கா பல்வேறு வடிவங்களை ஏற்கும் என்பதும், ஓரளவுக்கோ பெருமளவுக்கோ “புதுமையான” ஒவ்வொரு பிரச்சனையும் நிகழ்ச்சிகளில் ஓரளவுக்கோ பெருமளவுக்கோ எதிர்பாராத, முன்னறியாத ஒவ்வொரு திருப்பமும் – அடிப்படை வளர்ச்சித் திசையை அது மிகச் சொற்ப அளவுக்கு மட்டுமேதான், மிகமிகச் சொற்ப காலத்துக்கேதான் மாற்றுகிறது என்றாலுங்கூட – தவிக்க முடியாத வகையில் ஏதேனும் ஒரு வகைத் திருத்தல்வாதத்தை எப்பொழுதும் தோற்றுவிக்கவே செய்யும் என்பதுதான்.
     திருத்தல்வாதம் தவிர்க்க முடியாததாய் இருப்பதற்குத் தற்கால சமுதாயத்தில் அதற்குள்ள வர்க்க வேர்கள்தான் காரணம். திருத்தல்வாதம் ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு. ஜெர்மனியில் வைதீகவாதிகளுக்கும்25 பெர்ன்க்ஷ்டைனியர்களுக்கும்26 பிரான்சில் கெட்டிஸ்டிகளுக்கும்27 ழொரேசிஸ் டுகளுக்கும்28  (தற்போது இன்னும் முக்கியமாய் புருசிஸ்டுக்களுக்கும்), கிரேட் பிரிட்டனில் சமுக-ஜனநாயக சம்மேளனத்துக்கும் சுயேட்சைத் தொழிற் கட்சிக்கும்29 பெல்ஜியத்தில் புருக்கேருக்கும் வன்டெர்வேல்டேக்கும் இத்தாலியில் முழுமையாளர்களுக்கும்30 சீர்திருத்தவாதிகளுக்கும், ருக்ஷ்யா வில் போல்க்ஷிவிக்குகளுக்கும் மென்க்ஷிவிக்குக்ளுக்கும் இடையிலான உறவிநிலை இந் நாடுகள் யாவற்றின் தற்போதைய நிலையில் இருந்துவரும் மிகப் பல்வேறுபட்ட தேசிய நிலைமைகளையும் வரலாற்றுக் கூறுகளையும் மீறி,, சாரம்சத்தில் எங்கும் ஒன்றேபோல் இருக்கிறது: சிறிதளவேணும் தகவல் தெரிந்த சிந்தனை ஆற்றல் கொண்ட எந்த சோக்ஷலிஸ்டுக்கும் இதுகுறித்துக் கடுகளவும் சந்தேகம் இருக்க முடியாது உண்மையில் இன்றைய சர்வதேச சோக்ஷலிஸ்டு இயக்கத்தினுள் நிலவும் “பிரிவினை” தற்போது உலகின் பல்வேறு நாடுகள் யாவற்றிலும் ஒரேவிதமான வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறது. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளிலும் பல்வேறுபட்ட போக்குகள் சர்வதேச சோக்ஷலிஸ்டு இயக்கம் ஒன்றினுள் போராடிக் கொண்டிருந்ததுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலைமை பிரமாண்டமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்குச் சான்று பகர்கிறது. லத்தீனிய நாடுகளில் “புரட்சிகர சிண்டுக்கலிசயாய்”31 உருவாகியுள்ள அந்த “இடதுசாரியிலிருந்தான திருத்தல்வாதமுங்” கூட தன்னனை மார்க்சியத்துக்குத் தகவமைத்து, மார்க்சியத்தைத் ”திருத்தி வருகிறது” இத்தாலியில் லப்ரியோலாவும் பிரான்சில் லாக்ர்டேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சின் நிலையிலிருந்து சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சின் நிலைக்கு அடிக்கடி வேண்டுகோள் விடுக்கின்றனர்.
       சந்தர்ப்பவாதத் திருத்தல்வாதத்தைப் போல அதே அளவுக்கு வளர்ச்சியடையாது இருந்து வரும் இந்தத் திருத்தல்வாதத்தின் சித்தார்ந்த உள்ளடக்கத்தை இங்கு நாம் பகுத்தாராய்வதற்கில்லை. இந்த திருத்தல்வாதம் இன்னும் சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு ஆகவில்லை, எந்தவொரு நாட்டிலும் சோக்ஷலிஸ்டுக் கட்சியுடன் இன்னமும் அது எந்தவொரு பெரிய நடை முறைப் போராட்டத்தின் சோதனையையும் கண்டதில்லை. ஆகவே, மேலே சித்தரிக்கப்பட்ட “வலதுசாரியிலிருந்தான திருத்தல்வாதத்தைப்” பரிசீலிப்ப துடன் நாம் நிறுத்திக் கொள்கிறோம்.
         முதலாளித்துவ சமுதாயத்தில் இது தவிக்க முடியாததாய் இருப்பதன் மூலகாரணம் என்ன? தேசியத் தனி இயல்புகளிலும் முதலாளித் துவ வளர்ச்சியின் அளவுகளிலும் இருக்கும் வேறுபாடுகளைக் காட்டிலும் இது ஆழமுடையதாய் இருப்பது ஏன்? ஏனெனில் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்துடன் கூடவே விரிவான குட்டிபூர்க்ஷுவாப் பகுதியோர், சிறு உடமையாளர் பகுதியோர் எப்பொழுதுமே இருந்து வருகிறார்கள். முதலாளித்துவம் சிறுவீத உற்பத்தியாளர்களிடமிருந்துதான் தோன்றியது. இடையறாது தோன்றிக் கொண்டும் இருக்கிறது. முதலாளித்து வம் தவிக்க முடியாதபடி மீண்டும் மீண்டும் பல புதிய “மத்தியதரப் பகுதிகளை” (ஆலைகளை அண்டிப் பிழைக்கும் தொழிலாளர்கள், வீட்டுப்பணித் துறை, சைக்கிள், மோட்டார் தொழில்களைப் போன்ற பெருந் தொழில்களை யுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடெங்கும் சிதறிக் கிடக்கும் சிறு தொழிலகங்கள், இன்ன பல) தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறு புதிய உற்பத்தியாளர்கள் இதே போலத் தவிர்க்க முடியாதபடித் திருப்பவும் பாட்டாளி வர்க்க அணிகளுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். விரிவான தொழிலாளர் கட்சிகளின் அணிகளில் குட்டிபூர்க்ஷுவா உலகக் கண்ணோட்டம் திரும்பத் திரும்பத் தலைதூக்குவது இயற்கையே. பாட்டாளி வர்க்கப் புரட்சியால் கதி மாற்றங்கள் ஏற்படுகின்ற வரையில் இது இயற்கையே. அதுவரை எப்பொழுதும் இப்படியேதான் நடைபெறும். ஏனெனில் இத்தகைய ஒரு புரட்சியை உண்டாக்க மக்கள் தொகையில் பெரும்வாரியானோர் “அறவே” பாட்டாளி வர்க்கத்தவராக்கப்படுவது அவசியமென நினைப்பது மிகப் பெரும் தவறாகும். இப்பொழுது அடிக்கடி நாம் சித்தாந்தத் துறையில் மட்டும் அனுபவித்து வருகின்றவை, அதாவது மார்க்சுக்குத் தத்துவார்த்தத் திருத்தங்கள் செய்வது குறித்த சர்ச்சைகள் – நடைமுறையில் தற்போது தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்டத் துணைப் பிரச்சனைகள் குறித்து மட்டும் திருத்தல்வாதிகளுடனான போர்த்தந்திரக் கருத்து வேறுபாடுகளாகவும் அவற்றின் அடிப்படையிலான பிளவுகளாகவும் தலைதூக்குகின்றவை – பாட்டாளி வர்க்கப் புரட்சியானது சர்ச்சைக்குரிய எல்லாப் பிரச்சனைகளையும்  கூர்மையாக்கிவிடும்போதும், வெகுஜனங்களின் நடத்தையை நிர்ணயிப்பதில் மிகுந்த உடனடி முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பற்றிய எல்லாக் கருத்து வேறுபாடுகளையும் ஒன்றுகுவியச் செய்யும்போதும், மும்முரமான போராட்டத்துக்கிடையில் நண்பர்களிடமிருந்து பகைவர்களை இனங்கண்டு கொள்வதையும் முடிவுகட்டும்படியான விதத்தில் பகைவனுக்கு அடிகொடுக்கும் பொருட்டு மோசமான கூட்டாளிகளை விலக்கித் தள்ளுவதையும் அவசியமாக்கிவிடும்போதும் ஒப்பிடமுடியாத மிகப்பெரிய அளவிலே வருங்காலத்தில் தொழிலாளி வர்க்கம் நிச்சயம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
       பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் திருத்தல்வாதத்தை எதிர்த்துப் புரட்சிகர மார்க்சியசம் நடத்தும் சித்தாந்தப் போராட்டமானது, குட்டிபூர்க்ஷுவா அற்பவாதிகளின் எல்லா ஊசலாட்டங்களையும் மீறித் தனது இலட்சியத்தின் முழுநிறை வெற்றியை நோக்கி முன்னேறி வீறு நடைபோடும் பாட்டாளி வர்க்கத்தினுடைய மபெரும் புரட்சிப் போர்களின் பீடிகையே ஆகும்.
                                                                       
1908 மார்ச் பிற்பாதியில்—                                      நூல்திரட்டு,
ஏப்ரல் 3 (16)க்குப்                                       தொகுதி 17,
பிற்படாமல்- எழுதப்பெற்றது.                            பக்கங்கள் 15-26

1908 செப்டம்பர் 25க்கும்]அக்டோபர் 2க்கும் (அக்டோபர் 8க்கும் 15க்கும்)இடையில்
கார்ல் மார்க்ஸ் (1818-1883),எஸ்.பீட்டர்ஸ்பர்க் என்னும் திரட்டில் வெளிவந்த்து.
ஒப்பம்: விளா.இலியின்.

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்




மார்க்சியத்தின்
மூன்று தோற்றுவாய்களும்
மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
      மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான பூர்க்ஷுவா விஞ்ஞானம் அனைத்திட மிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பி விடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான “நச்சுத் தன்மை கொண்ட குறுங்குழுவாதம்” ஆகுமென அவை கருதுகின்றன. அவற்றிடமிருந்து வேறு எந்தவிதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் ”பாரபட்சமற்ற” சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும், ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சனையில் முதலாளிகள் பாரபட்சமற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எவ்வளவு அசட்டுத்தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித் தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் பாரபட்சமற்றதாக இருக்குமென எதிர்பார்பது அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.
      அது மட்டுமல்ல. தத்துவவியலின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் “குறுங்குழுவாதம்” போன்றதெதுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப் போன வரட்டுத் தத்துவமல்ல; உலக நாகரிக வளர்ச்சியினது ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில்தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவவியல், அரசியல் பொருளாதாரம், சோக்ஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத்தான் மார்க்சின் போதனை எழுந்தது.
        மார்க்சின் போதனை மெய்யானது, பிழையற்றது; அதனால் தான் அது சர்வவல்லமைப் பெற்றிருக்கிறது, அது பரிபூரணமான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஒரு சர்வாங்கமான உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவவியல், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரஞ்சு சோக்ஷலிசம் என்ற வடிவத்தில் 19 ம் நூற்றாண்டில் மனிதகுலம் சிருக்ஷ்டித்த தலைசிறந்த சிருக்ஷ்டிகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.
        இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றை சுருக்கமாக கவனிப்போம்.

1
பொருள்முதல்வாதம்தான் (materialism) மார்க்சியத்தின் தத்துவவியலாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவவியலாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப் பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீனகால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்தியகாலக் குப்பைக்கூளங்களையும் நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தையும் எதிர்த்து நடைபெற்ற முடிவான கடும் போரின் களனாயிருந்த பிரஞ்சு நாட்டில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக நிரூபணமாகியது. ஆகவே பொருள்முதல்வாதத்தை “மறுப்பதற்கும்” பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும் ஜனநாயக வைரிகள் முழுமூச்சாக முயன்று பார்த்தார்கள். தத்துவவியல் கருத்துமுதல்வாதத்தின் (idealism) பல வகைப்பட்ட வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைப்பட்ட கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோ செய்கிறது.
         மார்க்சும் எங்கெல்சும் தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் பாயர்பாக், டூரிங்குக்கு மறுப்பு1 என்ற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள், மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக்கு அறிக்கை என்ற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளருக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.
      18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்கஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவவியலை முன்னேறச் செய்தார். முதுபெரும் ஜெர்மன் தத்துவவியல் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவமுறை – இதிலிருந்தே பாயர்பாகின் பொருள்முதல்வாதம் தோன்றியது.- திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்த செல்வங்களில் பிரதானமாக விளக்குவது இயக்கவியல்தான் (dialecties). இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒருதலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிப;லித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது – இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புக்களெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்பதை வியக்கத்தக்க முறையில் ஊர்ஜிதம் செய்துள்ளன. அழுகிப் போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய “புதிய” மறுவியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவ தத்துவவியலாளர்கள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.
        தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்துப் பூர்ணமாக்கினார். இயற்கை பற்றிய அதன் ஞானத்தை மனித சமுதாயம் பற்றிய ஞானமாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறை பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன் பெல்லாம் வரலாற்றைப் பற்றிய கருத்துக்களிலும் அரசியலைப் பற்றிய கருத்துக்களிலும் குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், ஒருமித்த முழுமையும், உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்து விட்டது. வரலாற்றுத்துறை பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை – உதாரணமாக, நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை – அது காட்டுகிறது.
     இயற்கை என்பது – அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது – மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலத்தான் மனித சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவவியல், மதம். அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொருளாதார அஸ்திவாரத்தின் மீது நிறுவப்பட்ட மேல்கட்டுமானமேயாகும். உதாரணமாக நவீன ஐரேப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின்மேல் முதலாளித்துவ வர்க்கம் செலுத்திவரும் ஆதிக்கத்தைப் பலப்படுத்தப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.
        மார்க்சின் தத்துவவியல் பூரணத்துவம் பெற்ற தத்துவவியல் பொருள்முதல் வாதமாகும். இந்த பொருள்முதல்வாதம் மனிதகுலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
2
    பொருளாதார அமைப்புமுறை என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகிறது என்று தெளிந்து ஏற்றுக்கொண்டவுடன், மார்க்ஸ் தனது பெரும்பாலான கவனத்தை இந்த பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய – அதாவது முதலாளித்துவ – சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.
     மார்க்சுக்கு முற்பட்டதான முதுபெரும் அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம் ஸ்மித்தும் டேவிட் ரிகார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து உழைப்பின் அளவைக் கொண்டு பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் தத்துவத்துக்கு (Labour theory of value) அஸ்திவாரமிட்டார்கள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவை திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விபரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்.
         முதலாளித்துவ பொருளாதாரவாதிகள், பண்டங்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விபரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படு த்தினார். பண்டப் பரிவர்த்தனை தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம், இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம், இந்த பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது: அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே பரிவர்த்தனைப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் செலவிடுகிறான். மறுபகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பைச் சிருக்ஷ்டித்துத் தருகிறான். இந்த உபரி மதிப்புத்தான் லாபத்துக்குத் தோற்றுவாய். அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.
     உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு மூலைக்கல் ஆகும்.
       தொழிலாளியின் உழைப்பால் சிருக்ஷ்டிக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை நாசம் செய்து வேலையில்லாதோர் பட்டாளத்தை சிருக்ஷ்டிப்பதின் மூலமாகத் தொழிலாளியை நெருக்குகிறது. தொழில்துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும்.பெருவீத முதலாளித்துவ விவசாயத்தின் சிறப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது; விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது; ரொக்க மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில்நுட்பத்தின் சுமையால் அழித்தப்பட்டு நாசமடைகிறது. விவசாயத்துறையில் சிறுவீத உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
       மூலதனமானது, சிறுவீத உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலை படைப்பிக்கப்படுவதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மையைப் பெறுகிறது; ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர் பிணைக்கப் பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு அமைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கி றார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது; வெகுஜனங்களது வாழ்வின் நிலையின்மையும் அபாயமும் அதிகரிக்கின்றன.
      முதலாளித்துவ முறை, தொழிலாளர்கள் மூலதனதை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையைத் தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுதரண்ட தொழிலாளர்களின் மாபெரும் பலத்தையும் சிருக்ஷ்டித்துவிடுகிறது.
        பரிவர்த்தனைப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரண பரிவர்த்தனையிலிருந்து தொடங்கி, பரிவர்த்தனையின் மிக உயர்ந்த வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவதின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.
         பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியத் தத்துவம் பிழையற்றதாகும் என்பதை ஆண்டுதோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிரூபித்திக் காட்டிவருகிறது. உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி மூலதனத்தின்மீது உழைப்புக் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.


3
    பிரபுத்துவ அமைப்பு வீழ்த்தப்பட்டு ”சுதந்திரமான” முதலாளித்துவ சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்த சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்பையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்களாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோக்ஷலிசப் போதனைகள் உடனே தலைதூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்பகாலத்திய சோக்ஷலிசம் கற்பனா சோக்ஷலிசமாகத் தான் இருந்தது. அது முதலாளித்துவ சமுதாயத்தை விமர்சித்தது, கண்டித்தது, சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனாக் கண்டது; அதை விட மேலான ஒரு அமைப்பு முறையைப் பற்றி ஆகாயக்கோட்டைக் கட்டி வந்தது; சுரண்டுவது ஒழிக்கக் கேடான செயலாகுமெனப் பணக்காரர்களுக்கு உணர்த்த அது முயற்சித்தது.
      ஆனால் கற்பனா சோக்ஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாரம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் சிருக்ஷ்டிகர்த்தாவாக அமையவல்ல சமுதாய சக்தியை அதனால் சுட்டிக்காட்டவும் முடியவில்லை.
      இதற்கிடையில்,பிரபுத்துவ வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும்,குறிப்பாக பிரான்சிலும் ஏற்பட்ட புயல் போன்ற .புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம்தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்திஉ விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.
    பிரபுத்துவ வர்க்கத்திற்கெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை.முதலாளித்துவ சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரண போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான,ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்றுவிடவில்லை.
    வேறு எவருக்கும் முன்பு மார்க்ஸ் உலக வரலாறு போதிக்கும் முடிபை இதிலிருந்து கண்டறியவும், அந்த முடிபை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது என்பதில்தான் அவருடைய மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது. வர்க்கப் போரட்டத்தைப் பற்றிய போதனைதான் அதன் முடிபாகும்.
   நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்கு களுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைந்றுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும்  புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான  சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.
    மார்க்சின் தத்துவவியல் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத் தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளிவர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.  மார்க்சின் பொருளாதார தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.
       அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாபிரிக்கா வரை, உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான ஸ்தாபனங்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. தமது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாய்ப் பாட்டாளி வர்க்கம் ஞானமும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவ சமுதாயத்தின் தப்பெண்ணங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது; தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது; தடை செய்யமுடியாதபடி வளர்ந்து வருகிறது.

ப்ரோஸ்வெக்ஷ்சேனியே,                                        நூல்திரட்டு
இதழ் 3, 1913,மார்ச்சு                                            தொகுதி 23,
ஒப்பம் வி.இ.                                                   பக்கங்கள் 40-48
லெனின் சோக்ஷலிச சித்தாந்தமும் கலாச்சாரமும் குறித்து
பக்கங்கள் 5-15