Thursday 29 September 2011

அடித்தளமும் மேற்கட்டுமானமும்.மாமேதை கார்ல் மார்க்ஸ்


அடித்தளமும் மேற்கட்டுமானமும்.
மார்க்ஸின் மேற்கோள்
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு
ஒரு கருத்துரையின் முன்னுரையிலிருந்து
    
காரல் மார்க்ஸ்
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு,ஒரு கருத்துரை 1982, முன்னேற்றம் பதிப்பகம், பக். 9-11)
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்   
 செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு           
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 91- 93

என்னை வாட்டிய ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்காக நான் செய்த முதல் ஆராய்ச்சி;
சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவத்தை விமர்சன ரீதியாக (மறுபரிசீலனை) மீளாய்வு செய்ததாகும்…..

சட்ட உறவுகளையோ அல்லது அரசியல் வடிவங்களையோ, தனித்தனியாகவோ அல்லது மனித அறிவின் பொதுவான வளர்ச்சிப் போக்கு என்று சொல்லப்படுகிற அடிப்படையைக் கொண்டோ புரிந்து கொள்ள முடியாது; அதற்கு மாறாக அவை வாழ்க்கையின் பொருளாதாய நிலைமைகளில் பிறக்கின்றன; இவற்றின் முழுத் தொகுதியையே ஹெகல், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில, பிரஞ்சுத் தத்துவஞானிகளின் உதாரணங்களைப் பின்பற்றி “சிவில் சமூகம்” (Civil society) என்ற சொற்களில் அடைக்கிறார்; எனினும் இந்த சிவில் சமூகத்தின் உள்ளமைப்பை அரசியல் பொருளாதாரத்தில் தேடவேண்டும்- என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக  மேற்கூறிய முடிவுகளுக்கு வந்தேன்.

பாரிசில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஆனால் திரு கிஸோ என்னைப் பிரான்சிலிருந்து வெளியேற உத்தரவிட்டபடியால் இந்த ஆராய்ச்சியைப் பிரல்ஸல்ஸ் நகரத்தில் தொடர்ந்து செய்தேன். இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை- இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது – பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாதாய சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற  மேற்கட்டுமானம் எழுப்பப்பட்டு அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாதாய வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது.* (அழுத்தம் எமது)  மனிதர்களின் உணர்வு அவர்களது வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாதாய உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருந்த உற்பத்தி உறவுகளோடு – அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வெளிப்படுத்துகிற சொத்துரிமை உறவுகளோடு – இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே விரைந்தோ அல்லது சற்று தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன.

இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது, உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களும் (இயற்கை அறிவியலைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.) சட்டம், அரசியல், சமயம், கலைத்துறை அல்லது தத்துவ அறிவுத் துறைகளில் – சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் – இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காக போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்போதும் அவசியமாகும். ஒரு தனிமனிதர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை மாறாக, அவர் என்னவாக இருக்கின்றார் என்பதைக்கொண்டே முடிவு செய்கின்றோம். அதுபோலவே இப்படி மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாதாய வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை; புதிய உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாதாய நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை.
எனவே, மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய பொருளாதாய நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சனையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆரய்கின்ற பொழுது புலப்படும். விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால நிலவுடமை, நவீனமுதலாளிய உற்பத்திமுறைகளைச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளிய உற்பத்தி முறைதான் உற்பத்திமுறையின் சமூக நிகழ்வில் இறுதி முரணியல் வடிவம்  - முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல, தனியாட்களின் வாழ்வாதாரங்களின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே; ஆனால் முதலாளிய சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாதாய நிலைமைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்தச் சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.

Friday 23 September 2011

விவசாயப் பிரச்சினை பற்றிய கட்சியின் மூன்று அடிப்படையான முழக்கங்கள் ஜே.வி.ஸ்டாலின்

விவசாயப் பிரச்சினை பற்றிய
கட்சியின் மூன்று
அடிப்படை முழக்கங்கள்
 யான் – ஸ்கியிக்கு பதிலுரை
ஜே.வி.ஸ்டாலின்
(லெனினியத்தின் பிரச்சினைகள்)
உண்மையிலேயே, சரியான நேரத்தில் தங்களது கடிதம் எனக்குக் கிடைத்தது. சிறிது தாமதமாக நான் பதில் எழுதுகிறேன்; அதற்காக தயவு செய்து மன்னிக்கவும்,
1. லெனின் கூறுகிறார்: “ஒவ்வொரு புரட்சியினுடைய தலையாய பிரச்சினை அரசு அதிகாரத்தைப் பற்றிய பிரச்சினைதான்” (தொகுப்பு. 12. பக். 142-ஐப் பார்க்கவும்).எந்த வர்க்கத்தின் அல்லது வர்க்கங்களின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ளது; எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் தூக்கியெறியப்பட வேண்டும்; எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் – “ஒவ்வொரு புரட்சியினதும் முக்கியமான பிரச்சினை” இத்தகையதாகத்தான் உள்ளது.
புரட்சியின் எந்தவொரு குறிப்பான கட்டத்தின் காலப்பகுதி முழுமைக்கும் செல்லுபடியாகும் தன்மையை கொண்டிருக்கின்ற கட்சியின் அடிப்படையான போர்த்தந்திர முழக்கங்கள் லெனினது இந்த முக்கியமான கோட்பாட்டை முழுமையான அடிப்படையாக கொண்டிருக்காவிட்டால் அவை அடிப்படையான முழக்கங்கள் என்று அழைக்கப்பட முடியாது.
வர்க்கச் சக்திகளைப் பற்றிய மார்க்சியப் பகுப்பாய்வைக் கொண்டிருந்தால் மட்டுமே, வர்க்கப் போராட்ட முனையில் புரட்சிகர சக்திகளை முன்னிறுத்துவதற்கான சரியான திட்டத்தை  வரையறுத்திருந்தால் மட்டுமே,  புரட்சியின் வெற்றிக்கான போராட்ட முனைக்கு, புதிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்ட முனைக்கு மக்கள் திரளைக் கொண்டு வருவதற்கு உதவினால் மட்டுமே,  இந்த பணியை நிறைவு செய்வதற்கு அவசியமாக உள்ள ஒரு பெரிய, சக்திவாய்ந்த ஒரு அரசியல் இராணுவத்தை  பரந்துபட்ட மக்கள் திரளிலிருந்து அமைக்கக் கட்சிக்கு உதவினால் மட்டுமே, அடிப்படையான முழக்கங்கள் சரியான முழக்கங்களாகும்.
புரட்சியின் எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்தின் போதும் தோல்விகளும் பின்வாங்குதல்களும், தோல்விகளும் செயல்தந்திரத் தவறுகளும் ஏற்படலாம்; ஆனால் அதற்காக அடிப்படையான போர்த் தந்திர முழக்கம் தவறு என்று பொருளாகாது. இவ்வாறு எடுத்துக் காட்டாக, நமது புரட்சியின் முதல் கட்டத்தில், “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் வெற்றியாக ஜாருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக விவசாய வர்க்கம் முழுவதுடனும், நடுநிலையாக்கப்பட்ட முதலாளிகளுடனும் ஒன்றுபடுக” – என்ற அடிப்படை முழக்கமானது, 1905-ம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தது என்றாலும் கூட முழுக்க முழுக்க சரியானதொரு முழக்கமாக இருந்தது.
எனவே, கட்சியின் அடிப்படை முழக்கப் பிரச்சினையை புரட்சியின் வளர்ச்சிகளின் எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்தின் வெற்றிகள் அல்லது பின்னடைவுகளின் பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
அடிப்படை முழக்கத்திலிருந்து எழுகின்ற புரட்சியின் பல முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் போதோ அல்லது அவை நிறைவேற்றப்படுவது ஒரு நீண்ட காலத்துக்கு தாமதப்படுத்தப்பட்டிருக்கும் போதோ அல்லது அவை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு புதிய புரட்சி தேவைப்படலாம் என்ற நிலை இருக்கும் போதோ கட்சியின் அடிப்படை முழக்கம் புரட்சியின் போக்கில்  பழைய வர்க்கங்களின் அல்லது வர்க்கத்தின் அதிகாரம் தூக்கியெறியப் படுவதற்கு ஏற்கனவே இட்டுச் சென்றிருப்பதும் நடக்கலாம். ஆனால் இதற்காக அடிப்படைமுழக்கம் தவறாக இருந்தது என்று பொருளாகாது. இவ்வாறு எடுத்துக்காட்டாக, 1917-ம் ஆண்டு பிப்ரவரி புரட்சி ஜாராட்சியையும் நிலப்பிரபுக்களையும் தூக்கியெறிந்தது! ஆனால் நிலப்பிரபுக்களின் எஸ்டேட்டுக்களை பறிமுதல் செய்தல் போன்றவற்றிற்கு அது இட்டுச் செல்ல வில்லை. ஆனால், அதற்காக, புரட்சியின் முதல் கட்டத்தில் நமது அடிப்படை முழக்கம் தவறு என்று பொருளாகாது.
அல்லது வேறு உதாரணங்கள்; அக்டோபர் புரட்சி முதலாளிய வர்க்கத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்திடம் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தது; ஆனால் அது
(அ) பொதுவாக முதலாளித்துவப் புரட்சி நிறைவு செய்யப்படுவதற்கும்
(ஆ) குறிப்பாக, கிராமப்புற மாவட்டங்களில் குலாக்குகள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் உடனடியாக இட்டுச் சென்று விடவில்லை.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவை தாமதமாயின. ஆனால், அதற்காகப் புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் நமது அடிப்படை முழக்கம் – “பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்திற்காக, நடுத்தர விவசாயிகளை நடுநிலையாக்கி, நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஏழைவிவசாயிகளுடன் ஒன்றிணைக” – என்பது தப்பு என்று பொருளாகாது.
எனவே, கட்சியின் அடிப்படை முழக்கத்தின் பிரச்சினையை, அந்த முழக்கத்திலிருந்து எழுகிற எந்தவொரு குறிப்பான கோரிக்கையையும் நிறைவேற்றுகின்ற காலம், வடிவங்கள் ஆகியவற்றின் பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
எனவேதான், எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும் புரட்சிகர இயக்கத்தின் பகுதியான வெற்றிகள் அல்லது தோல்விகளைக் கணக்கில் கொண்டு நமது கட்சியின் போர்த்தந்திர முழக்கங்களை மதிப்பிட முடியாது; மேலும் அந்த முழக்கங்களிலிருந்து எந்தவொரு குறிப்பான கோரிக்கையை அடைகின்ற காலம், வடிவங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் அவை மதிப்பிடப்பட முடியாது. புரட்சியின் வெற்றிக்காக, புதிய வர்க்கத்தின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதற்காக, வர்க்கச் சக்திகள் பற்றியும் ஒரு மார்க்சியப் பகுப்பாய்வின் கண்ணோட்டத்தின் மூலம் மட்டுமே கட்சியின் போர்த்தந்திர முழக்கங்கள் மதிப்பிடப்பட முடியும்.
இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுமுறை பற்றிய பிரச்சினையை நீங்கள் பார்க்காமல் விடுவதில் அல்லது அதனைப் புரிந்து கொள்ளாததில் உங்களது தவறு அடங்கியிருக்கிறது.
2.  நீங்கள் உங்கள் கடிதத்தில் எழுதுகிறீர்கள்:
”அக்டோபர் வரை மட்டுமே நாம் விவசாய வர்க்கம் முழுவதுடனும் இணைந்திருப்போம் எனக் கருதுவது சரியா? இல்லை; அது சரியில்லை. ‘விவசாய வர்க்கம் முழுவதுடனும் கூட்டணி’ என்ற முழக்கமானது- முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதில்        விவசாய வர்க்கம் முழு அக்கறை காட்டியது என்ற அளவில்- அக்டோபருக்கு முன்பும், அக்டோபரின் போதும், அக்டோபருக்குப் பிந்திய முதல் காலகட்டத்திலும் செல்லுபடியானதாக இருந்தது.”

ஜார், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் அதிகாரத்தைத் தூக்கியெறிவதும், பாட்டாளி வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரத்தை நிறுவுவதும் பணியாக இருந்த புரட்சியின் முதல் கட்டத்தின் போது (1905 முதல் 1917 பிப்ரவரி வரை) கட்சியின் போர்த்தந்திர முழக்கமானது, முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிவதும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவதும் பணியாக இருந்த  புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் போதான (பிப்ரவரி 1917-லிருந்து அக்டோபர் 1917 வரை) போர்த்தந்திர முழக்கத்திலிருந்து வேறுபடவில்லை என்பதையே மேற்கண்ட மேற்கோள் தெரிவிக்கிறது..
      இதன் விளைவாக, நீங்கள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் பாட்டாளிவர்க்க-சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாட்டை மறுக்கிறீர்கள். புரட்சியின் குறிப்பிட்ட கட்டத்தில் அதிகாரத்தைப்பற்றிய பிரச்சினைதான், எந்த வர்க்கம் தூக்கியெறியப்படுகிறது. எந்த வர்க்கத்துக்கு அதிகாரம் மாற்றித் தரப்படுகிறது என்ற பிரச்சினைதான் ஒரு போர்த்தந்திர முழக்கத்தின் அடிப்படையான  கருத்துரு என்ற மிக எளிமையான ஒரு பொருளைப் புரிந்து கொள்ள நீங்கள் மறுப்பதால்தான், இந்தத் தவறைச் செய்கிறீர்கள் என்பது தெளிவு. இந்த விக்ஷயத்தில் நீங்கள் அடிப்படையிலேயே தவறிழைத்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையில்லை.
      அக்டோபரின் போதும் அக்டோபருக்குப் பிந்திய முதல் கால கட்டத்திலும்,முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதில் விவசாய வர்க்கம் முழுவதும் ஆர்வம் காட்டிய வரை “விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றிணைக” என்ற முழக்கத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அக்டோபர் கிளர்ச்சியும் அக்டோபர் புரட்சியும் இத்தோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டன என்று அல்லது அவற்றின் பிரதானப் பணி முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வது தான் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்கள் இதை எங்கிருந்து பெற்றீர்கள்? முதலாளிய வர்க்க அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது என்பது முதலாளித்துவப் புரட்சியின் கட்டமைப்புக்குள்ளேயே நடைபெறும் என நீங்கள் கருதுகின்றீர்களா? பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை அடைவது என்பது முதலாளித்துவப் புரட்சியின் கட்டமைப்புக்கு அப்பால் செல்வது எனப் பொருள்பட வில்லையா?
      குலாக்குகள் (உண்மையிலேயே அவர்களும் விவசாயிகள்தான்) முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்திடம் அதிகாரத்தை மாற்றித்தருவதை ஆதரித்தார்கள் என்று எவ்வாறு நீங்கள் உறுதியாக கருத முடியும்?
      நிலத்தை தேசிய மயமாக்குதல், நிலத்தின் தனியுடைமையை ஒழித்தல், நிலத்தை வாங்குவதற்கும், விற்பதற்கும் தடைவிதித்தல் போன்றவற்றின் மீதான சட்டத்தை – அது ஒரு சோசலிச சட்டமாகக் கருதப்பட முடியாது என்ற போதிலும் – நாம் குலாக்குகளுடன் கூட்டணியாக இல்லாமல், அவர்களை எதிர்த்த ஒரு போராட்டத்தின் மத்தியில் அமுலாக்கினோம் என்பதை எவ்வாறு உங்களால் மறுக்கமுடியும்?
      குலாக்குகள் (அவர்களும் கூட விவசாயிகள்தான்) மில்கள், தொழிற்சாலைகள், ரயில் பாதைகள், வங்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்வதற்கான சோவியத் அரசாங்கத்தின் ஆணைகளை அல்லது ஏகாதிபத்தியப் போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுதல் பற்றிய பாட்டாளிவர்க்க முழக்கத்தை ஆதரித்தார்கள் என்று நீங்கள் எப்படி வலியுறுத்திச் சொல்லமுடியும்.
      அக்டோபரில் அடிப்படையான விக்ஷயம் இதைப் போன்ற செயல்கள் அல்ல, முதலாத்துவத்தைத் தூக்கியெறிவது அல்ல, ஆனால் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதே ஆகும் என்று நீங்கள் எப்படி வலியுறுத்திச் சொல்ல முடியும்?
      அக்டோபர் புரட்சியின் பிரதான பணிகளில் ஒன்றாக முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்வது இருந்தது என்பதையும், அக்டோபர் புரட்சி இல்லாமல் அது பூர்த்தி செய்யப்பட்டிருக்க முடியாது என்பதையும், முதலாளித்துவப் புரட்சி பூர்த்தி செய்யப்படாமல் அக்டோபர் புரட்சியை உறுதி செய்திருக்க முடியாது என்பதையும், அக்டோபர் புரட்சி முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்தது என்ற அளவில் அது எல்லா விவசாயிகளின் ஆதரவையும் பொறுவதற்கு உரியதாக இருந்தது என்பதையும் யாரும் மறுக்கவில்லை. இவையனைத்தும் மறுக்கப்பட முடியாதவை. ஆனால் இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்வது என்பது அக்டோபர் புரட்சியின் துணை நிகழ்வு அல்ல  மாறாக அதனுடைய சாரம்சமாக, அதனுடைய பிரதான குறிக்கோளாக இருந்தது என்று கருதப்படமுடியுமா? அப்படியானால் முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிதல், பாட்டாளிவர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதாவது புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் போர்த்தந்திர முழக்கத்தின் முக்கிய கருத்துருவாக உள்ள பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாக வெளிப்படவில்லையா?
      பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று என்னவென்றால், அது முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்து மத்தியகால அசிங்கங்களைத் துடைத்தெறி்ந்துவிட்டது என்பதாகும் நாட்டுப்புற மாவட்டங்களில் இது அனைத்துக்கும் மேலானதாகவும், உண்மையிலேயே தீர்மானகரமான முக்கியத்துவம் உடையதாகவும் இருந்தது. இதில் தவறியிருந்தால் கடந்த நூற்றாண்டின் பின்பாதியில் மார்க்ஸ் கூறிய பாட்டாளி வர்க்கப் புரட்சியை விவசாயப் போர்களுடன் ஒன்றிணைத்தல் என்ற ஒன்றைக் கொண்டுவந்திருக்க முடியாது; இதில் தவறியிருந்தால், பாட்டாளிவர்க்கப் புரட்சியே கூட நிலைநிறுத்தப்பட்டிருக்க முடியாது.
      மேலும் கூடுதலாக, கீழ்வருகின்ற முக்கியமான சூழ்நிலைகள் மனதில் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தி ஒரே வீச்சில் அடையப்பட்டிருக்க முடியாது. உண்மையிலேயே அது நீங்கள் உங்கள் க்டிதத்தில் கூறியிருப்பது போல் 1918 ம் ஆண்டின் ஒரு பகுதியை மட்டும் தழுவியில்லாமல் 1919 ம் ஆண்டின் ஒரு பகுதியையும் (வோல்கா மாகாணங்களும் யூரல்களும்) 1919-1920 ம் ஆண்டுகளின் பகுதியையும் (உக்ரைன்)இது தழுவிப் பரவியிருந்தது. நிலப் பிரபுக்களின் ஆட்சி அதிகாரம் மீண்டும் கொண்டுவரப்படும் அபாயத்தை விவசாய வர்க்கம் முழுமையும் எதிர் நோக்கிய போது, முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்யும் பொருட்டும், அந்த புரட்சியின் பலன்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும் சோவியத் அதிகாரத்தைச் சுற்றி அணிதிரள விவசாய வர்க்கம் முழுவதுமே நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் இருந்த சூழ்நிலையை அதாவது கோல்சாக், டெனிகின் ஆகிய  தளபதிகளின் முன்னேற்றத்தைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். லெனினது படைப்புக்களில் இருந்து நீங்கள் மேற்கோள் காட்டுகின்ற பகுதிகளையும் கட்சியின் முழக்கங்களைச் செயலுக்குக் கொண்டுவரும் நுட்பங்களையும் நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமா னால், நிலவும் யதார்த்தத்தின் இந்தச் சிக்கலான வேறுபட்ட நிகழ்ச்சிப் போக்குகள் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்யும் பணியுடன் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் நேரடியான சோசலிசப் பணிகள் இணைந்திருக்கின்ற இந்த “விநோதமான” பின்னிப் பிணைந்த நிலைமைகள் ஆகியவற்றை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
      புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் போது கட்சி முழக்கம் தவறாக இருந்தது என்றும் அந்த முழக்கம் புரட்சியின் முதற் கட்டத்தின் போதிருந்த முழக்கத்திலிருந்து மாறுபட்டது என்றும் இந்தப் பின்னிப் பிணைந்த நிலை நிரூப்பிக்கிறது என்று சொல்ல முடியுமா?  இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. இதற்கு மாறாக, பாட்டாளிவர்க்க அதிகாரம் போன்றவற்றுக்காக நகர்ப்புறத்திலும், நாட்டுப்புறத்திலும் ‘தொழில் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக ஏழை விவசாயிகளுடன் ஒன்றிணைக’ என்கிற புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் கட்சியின் முழக்கமானது சரியானது என்பதையே இந்தப் பின்னிப் பிணைந்த நிலை உறுதிப்படுத்துகின்றது. ஏன்? ஏனெனில் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதற்கு முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிலை நாட்டுவது அக்டோபரில் முதன்மையான அவசியமாக இருந்தது; ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு அதிகாரம் தான் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்யத் திறனுடைய ஒன்றாகும். அக்டோபரில் பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு முதலாளிய வர்க்கத்தைத் தூக்கியெறியக் கூடிய – பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிறுவக் கூடிய – சக்திவாய்ந்த ஒரு போதுமான அரசியல் இராணுவத்தை அக்டோபருக்காக தயார் செய்வதும், ஒழுங்கமைப்பதும் அவசியமாக இருந்தது; “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்காக முதலாளிய வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஏழைவிவசாயி வர்க்கத்துடன் கூட்டணி அமைத்திடுக” என்ற முழக்கத்தின் கீழ் மட்டும்தான் இப்படிப்பட்டதொரு அரசியல் இராணுவத்தைத் தயார் செய்து ஒழங்கமைக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தேவையில்லை.
      நாம் 1917 ஏப்ரல் முதல் 1917 அக்டோபர் வரை செயல்படுத்திய இத்தகையதொரு போர்த்தந்திர முழக்கம் இல்லாமல், நாம் இத்தகையதொரு அரசியல் இராணுவத்தைப் பெற்றிருக்க முடியாது; எனவே நாம் அக்டோபரில் வெற்றி பெற்றிருக்க முடியாது; முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிந்திருக்க முடியாது; அதன் விளைவாக  முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்திருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
      அதனால்தான் முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தியைப் புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் போர்த்தந்திர முழக்கத்திலிருந்து – இதன் நோக்கம் பாட்டாளிவர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்வதாகும் – வேறுபடுத்தக் கூடாது.
      இந்த “முரண்பாடுகளைத்” தவிர்ப்பதற்கு ஒரேஒரு வழிதான் உள்ளது; அதாவது புரட்சியின் முதல் கட்டத்தின் (முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி) போர்த்தந்திர முழக்கத்துக்கும், புரட்சியின் இரண்டாவது   கட்டத்தின் (பாட்டாளி வர்க்கப் புரட்சி) போர்த்தந்திர முழக்கத்துக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாட்டை அங்கிகரிப்பதும்தான் அது;  புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்காக  விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றிணைந்து நடைபோட்டோம் என்பதையும், புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் மூலதனத்தின் அதிகாரத்துக்கு எதிராக, பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு ஆதரவாக ஏழை விவசாயிகளுடன் ஒன்றிணைந்து நாம் நடைபோட்டோம் என்பதையும் அங்கிகரிப்பதுதான் அது.
      மேலும் இதை நாம் அங்கிகரித்தேயாக வேண்டும்; ஏனெனில் புரட்சியின் முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் வர்க்க சக்திகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம்மை அவ்வாறு செய்யுமாறு பணிக்கிறது. இல்லையெனில், 1917 பிப்ரவரி வரை பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஒரு புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான முழக்கத்தின் கீழ் நாம் பணியாற்றுவோம் என்ற உண்மையை, அதேசமயம் இந்த முழக்கத்தை 1917 பிப்ரவரிக்குப் பின்னர் பாட்டாளிகள் மற்றும் ஏழைவிவசாயிகளின் சோசலிச சர்வாதிகாரத்துக்கான முழக்கம் பின்னுக்குத் தள்ளியது என்ற உண்மையை விளக்குவது என்பது சாத்தியமாகியிருக்காது.
      உங்களுடைய திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் 1917 மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஒரு முழக்கத்திற்குப் பதிலாக இன்னொரு முழக்கம் முன்வைக்கப்பட்டதை விளக்கியிருக்க முடியாது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.
      கட்சியின் இரண்டு போர்த்தந்திர முழக்கங்களுக்கும் இடையிலான இந்த அடிப்படையான வேறுபாட்டை லெனின் வெகுகாலத்துக்கு முன்பே தனது “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற பிரசுரத்தில் சுட்டிக்காட்டினார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது கட்சியின் முழக்கத்தைப் பின்வருமாறு உருவாக்கினார்.
      ”பாட்டாளி வர்க்கமானது எதேச்சாதிகாரத்தின் எதிர்ப்பைப் பலாத்காரமாக ஒடுக்கவும் முதலாளிய வர்க்கத்தின் நிலையற்ற தன்மையை ஸ்தம்பிக்கச் செய்யும் பொருட்டும் விவசாய வர்க்கத்துடன் ஒன்றிணைவதன் மூலம் முதலாளித்துவப்புரட்சியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.” (பார்க்க தொகுப்பு 8 பக்கம் 96)
வேறுவார்த்தைகளில் கூறினால், ஒரு ஜனநாயகப் புரட்சிக்காக – முதலாளிகள் நடுநிலையாக்கப்படும் அதே சமயத்தில் – எதேச்சாதிகாரத்துக்கு எதிராக விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றிணைய வேண்டும் என்பதாகும்.
சோசலிச புரட்சிகான தயாரிப்புக் காலக்கட்டத்தில் கட்சியின் முழக்கத்தை அவர் பின்வருமாறு உருவாக்கினார். 
“பாட்டாளிவர்க்கமானது முதலாளிவர்க்கத்தின் எதிர்ப்பைப் பலாத்காரமாக நசுக்கவும், விவசாயிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரின் நிலையற்ற தன்மையை ஸ்தம்பிக்கச் செய்யும் பொருட்டும், மக்களிடையேயுள்ள அரைப் பாட்டாளி வர்க்கச் சக்திகளுடன் ஒன்றிணைவதன் மூலம் சோசலிசப் புரட்சியை நிறைவேற்ற வேண்டும்” (மேற்கண்ட நூல்)
வேறுவார்த்தைகளில் கூறினால்; சோசலிசப் புரட்சிக்காகப் பொதுவாக முதலாளிய வர்க்கத்துக்கு எதிராக – நகரப்புறத்திலும் கிராமப்புறத்திலும் குட்டி முதலாளிய வர்க்கம் நிலைநிறுத்தப்படுகின்ற அதே சமயத்தில் – ஏழைவிவசாயிகளுடனும் அரைப்பாட்டாளி வர்க்க மக்கள் பிரிவுகளுடனும் ஒன்றிணைய வேண்டும்.
1905-ல் நிலை அதுவாகும்.
1917 ஏப்ரலில், லெனின் பாட்டாளிவர்க்கம், விவசாயிவர்க்கம் ஆகியவற்றின் புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரம் முதலாளிய வர்க்கத்தின் உண்மையான அதிகாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது என அந்த  நேரத்தின் அரசியல் சூழலை விளக்கிக் கீழ்வருமாறு கூறினார்.
“ரக்ஷ்யாவின் தற்போதைய சூழ்நிலையின் தனிச்சிறப்பான அம்சம் என்னவென்றால், இது வர்க்க உணர்வு போதாமையின் காரணமாகவும் பாட்டாளிவர்க்கம் ஸ்தாபனமாக்கப்படாத காரணத்தாலும் அதிகாரத்தை முதலாளிகள் கையில் ஒப்படைத்த புரட்சியின் முதல்* கட்டத்தில் இருந்து பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கத்தின் மிகமிக ஏழைப் பிரிவினர்* ஆகியோரின் கையில் அதிகாரத்தை அது ஒப்படைக்க வேண்டிய இரண்டாவது கட்டத்திற்கான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.” (பார்க்க, “லெனினுடைய ஏப்ரல் ஆய்வுகள்” தொகுப்பு 20, பக்கம்.88) 
அக்டோபர் புரட்சியின் தயாரிப்புக்கள் முழு வீச்சில் இருந்த 1917 ஆகஸ்ட் இறுதியில் லெனின், “விவசாயிகளும் தொழிலாளர்களும்” என்ற ஒரு தனிக்கட்டுரையில் கீழ்வருமாறு எழுதினார்:
“பாட்டாளி வர்க்கமும் விவசாயி வர்க்கமும்* மட்டும்தான் முடியாட்சியைத் தூக்கியெறிய முடியும் – அந்த நாட்களில் (1905-ஸ்டாலின்) நமது வர்க்கக் கொள்கையின் அடிப்படையான வரையறை இதுதான். மேலும் அந்த வரையறை சரியான ஒன்றாக இருந்தது. 1917 பிப்ரவரி- மார்ச் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது ஏழை விவசாயிகளை* (நமது திட்டம் அவர்களை அரைப்பாட்டாளி என அழைக்கிறது.) வழிநடத்திச் செல்லுகின்ற பாட்டாளி வர்க்கம் தான் ஜனநாயக அமைதிவழியின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், போர் உருவாக்கிய காயங்களைக் குணப்படுத்தவும், மிகமிக அதிகமாகவும் அவசரமாகவும் ஆகியுள்ள சோசலிசத்தை நோக்கி நடைபோடத் துவங்கவும் முடியும் – இப்போது நமது வர்க்கக் கொள்கையின் வரையறை இப்படித்தான் உள்ளது. (பார்க்க, தொகுதி 21, பக்கம்,111.)
*அழுத்தம் ஸ்டாலினுடையது
 நாம் இப்போது பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் ஒரு சர்வாதிகாரத்தைப் பெற்றுள்ளோம் என்பதைக் குறிப்பதாக இது புரிந்துகொள்ளப்படக் கூடாது. அது உண்மையிலேயே அவ்வாறு இல்லை. பாட்டாளி வர்க்கம் ஏழைவிவசாயி வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரம் என்ற முழக்கத்தின் கீழ் நாம் அக்டோபரை நோக்கி அணிவகுத்தோம்; இடது சோசலிஸ்ட புரட்சியாளர்களுடன் நாம் உறவு கொண்டிருந்ததற்கேற்ப முறையாக அதை அக்டோபரில் நடைமுறைப்படுத்தினோம்; ஏற்கனவே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் யதார்த்தத்தில் நிலவிய போதிலும் போல்சுவிக்குகளாகிய நாம் பெரும்பான்மையாக இருந்ததால், நாம் அவர்களுடன் தலைமையைப் பகிர்ந்து கொண்டோம். இடது சோசலிஸ்ட் – புரட்சியாளர்களுடைய “புட்ஸ்களுடைய” அதாவது இடது சோசலிஸ்ட் – புரட்சியாளர்களின் முகாமுடனான உறவு முறிந்த பின்னர், ஒரே கட்சியின் கைகளுக்கு அதாவது வேறு எந்தக் கட்சியுடனும் அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாத  - பகிர்ந்து கொள்ளவும் முடியாத நமது கட்சியின் கைகளுக்கு தலைமை மொத்தமாகவும், முழுமையாகவும் மாறிய போது முறைப்படி பாட்டாளி வர்க்கம், ஏழைவிவசாயி வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரம் இல்லாதொழிந்து விட்டது. நாம் இதைத்தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என அழைக்கிறோம்.
இறுதியாக, 1918 நவம்பரில் லெனின் நாம் கடந்து வந்திருந்த புரட்சிப் பாதையைப் பின்னோக்கிப் பார்த்து, பின்வருமாறு எழுதினார்.
“ஆம், விவசாய வர்க்கம் முழுவதுடனும் நாம் அணிவகுத்துச் செல்லுகின்ற வரை நமது புரட்சி முதலாளித்துவ புரட்சிதான். இது நமக்கு எவ்வளவு தெளிவாக விளக்கியிருக்க வேண்டுமோ அவ்வளவு தெளிவாக விளங்கியிக்கின்றது. 1905 ஆம் ஆண்டு முதல் நாம் இதை நூறாயிரம் தடவை கூறியிக்கின்றோம். இந்த வரலாற்றின் நிகழ்வுப் போக்கின் அவசியமான கட்டத்தைத் தாண்டிச் செல்வதற்கோ அல்லது ஆணைகளின் மூலம் அதை ஒழித்து விடுவதற்கோ நாம் ஒரு போதும் முயற்சிக்கவில்லை……. ஆனால் அக்டோபர் புரட்சிக்கு வெகுகாலத்துக்கு முன்பே அதாவது நாம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, 1917 ஏப்ரல் ஆரம்பத்திலேயே* நாம் இதை வெளிப்படையாக அறிவித்து  மக்களுக்கும் பின்வருமாறு விளக்கிச் சொன்னோம்; இந்தக் கட்டத்தில் இப்போது நாம் புரட்சியை நிறுத்தக் கூடாது; ஏனெனில், நாடு முன்னோக்கிச் செல்கிறது; முதலாளித்துவம் முன்னேறியுள்ளது; அழிவு முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது; இது (ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) சோசலிசத்துக்கு முன்னோக்கிச் செல்லக் கோரும்; ஏனெனில் போரினால் களைப்படைந்து இருக்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கு, உழைப்பாளிகள், சுரண்டப்படும் மக்கள் ஆகியோரின் துன்ப துயரங்களைத் தணிப்பதற்கு முன்னேறிச் செல்ல வேறு வழியேதும் கிடையாது. நாம் சொல்லியபடிதான் நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. நமது கருத்து சரியானது என்பதை நாம் மேற்கொண்ட புரட்சிப்பாதை உறுதிப்படுத்தியுள்ளது. முதலில் நாம் மத்திய கால ஆட்சிக்கு எதிராக, நிலப்பிரபுக்களுக்கு எதிராக முடியாட்சிக்கு எதிராக விவசாய வர்க்கம் ‘முழுவதுடனும்’ ஒன்றுபட்டோம். (அதுவரை அது முதலாளித்துவப் புரட்சியாக அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக இருக்கின்றது.) பிறகு நாம் நாட்டுப்புறப் பணக்காரர்கள், குலாக்குகள், லாபநோக்குக் கொண்டோர்கள்* ஆகியோர் உள்ளிட்ட முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஏழைவிவசாயிகளுடன், அரைப் பாட்டாளிகளுடன், சுரண்டப்படும் எல்லா மக்களுடனும் ஒன்றிணைந்தோம்; அப்போது புரட்சி சோசலிசப் புரட்சியாக ஆகிறது.” (பார்க்க, தொகுதி 28, பக்கம், 390-391)
நீங்கள் பார்ப்பதுபோல, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தின் முதல் போர்த்தந்திர முழக்கத்துக்கும், அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தின் இரண்டாவது போர்த்தந்திர முழக்கத்துக்கும் இடையேயுள்ள ஆழமான வேறுபாட்டை லெனின் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். “எதேச்சாதிகாரத்துக்கு எதிராக விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றுபடுக” என்பதே முதல் முழக்கமாக இருந்தது. “முதலாளிய வர்க்கத்துக்கு எதிராக ஏழை விவசாயிகளுடன் ஒன்றுபடுக” என்பதே இரண்டாவது முழக்கமாக இருந்தது.
அக்டோபருக்குப் பிறகு மிகக் கணிசமான காலத்திற்கு முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தி இழுத்தடித்துக் கொண்டு சென்றது என்ற உண்மையும், முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்வதற்காக எந்த அளவு நாம் போராடிக் கொண்டிருந்தோமோ  அந்த அளவுக்கு விவசாய வர்க்கம் ”முழுவதும்” நம்மிடம் அனுதாபத்துடன் இருந்தது என்ற உண்மையும் – நான் மேலே கூறியது போல, அக்டோபரை நோக்கி நாம் அணி வகுத்துச் சென்று ஏழைவிவசாய வர்க்கத்துடன் ஒன்றிணைந்து அக்டோபரில் புரட்சியில் வெற்றி ஈட்டினோம் என்கிற அடிப்படையான கருத்தையும் குலாக்குகள் (அவர்களும் கூட விவசாயிகள்தான்) எதிர்ப்புக்கு எதிராக ஏழை விவசாயிகளுடன் ஒன்றிணைந்து, ஊசலாடுகின்ற நடுத்தர விவசாய வர்க்கத்துடன் ஒன்றிணைந்து முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினோம். (முதலாளித்துவ புரட்சியைப் பூர்த்தி செய்வது அதனுடைய பணிகளில் ஒன்றாக இருந்தது.) என்ற அடிப்படையான கருத்தையும் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.
இது தெளிவாக உள்ளது என நான் கருதுகிறேன்.
3.  நீங்கள் மேலும் உங்கள் கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறீர்கள்;
”நாட்டுப்புற ஏழைகளுடன் ஒன்றிணைக, நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்துக என்ற முழக்கத்தின் கீழ் நாம் அக்டோபரை வந்தடைந்தோம்” என வலியுறுத்திச் சொல்வது உண்மையா? இல்லை, அது உண்மையில்லை. மேலே கூறப்பட்ட காரணங்களாலும், லெனினுடைய மேற்கோள்களிலிருந்தும் ‘விவசாயிகளிடையே வர்க்கப்பிரிவு முதிர்ச்சியடைந்த போதுதான்’ (லெனின்) அதாவது 1918-ம் ஆண்டின் கோடைக் காலத்திலும், இலையுதிர்காலத்திலும் தான் இந்த முழக்கம் எழுந்திருக்க முடியும் என்பது தெரிய வரும்.”
                  மேலே கூறப்பட்ட பகுதியிலிருந்து வெளிவருவது என்னவென்றால் நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்தும் கொள்கையைக் கட்சியானது அக்டோபர் தயாரிப்புக் காலகட்டத்திலும், அக்டோபரிலும் கடைப்பிடிக்கவில்லை; அக்டோபருக்குப் பின்புதான், குறிப்பாக 1918-க்குப் பின்புதான், ஏழைவிவசாயிக் கமிட்டிகள் கலைக்கப்பட்டபோதுதான் கட்சி அந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பது என்பதே ஆகும். இது முற்றிலும் தவறானது ஆகும்.  (*அழுத்தம் ஸ்டாலினுடையது.)

மாறாக, நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்தும் கொள்கையானது 1918- க்குப் பிறகு ஏழை விவசாயக் கமிட்டிகள் கலைக்கப்பட்ட போது ஆரம்பமாகவில்லை. முடிவுதான் அடைந்தது. நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்தும் கொள்கை 1918- க்குப் பிறகு கைவிடப்பட்டது. (அறிமுகப்படுத்தப்படவிலை). 1918-க்குப் பிறகுதான் 1919-மார்ச்சில் லெனின் நமது கட்சியின் எட்டாவது காங்கிரசைத் தொடங்கி வைத்து கீழ் வருமாறு கூறினார்.
 “கடந்த காலத்திய சோசலிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள்-அவர்கள் புரட்சியில் நம்பிக்கை கொண்டு தத்துவ சித்தாந்த ரீதியாக அதற்குச் சேவை செய்து கொண்டிருந்த போது- விவசாய வர்க்கத்தை நடுநிலைப்படுத்துவதைக் குறித்து பேசினார்கள்; அதாவது நடுத்தர விவசாய வர்க்கம் ‘பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு ஊக்கத்துடன் உதவி செய்யாவிட்டாலும்கூட குறைந்த பட்சம் அதைத் தடுக்காமல் நடுநிலை வகிப்பதற்கு, எதிரியின் பக்கம் செல்லாதிருப்பதற்கு அதைச் சமுதாய அடுக்காக மாற்றுவது குறித்துப் பேசினார்கள். இந்தப் பொதுக் கருத்து, பிரச்சனையின் தத்துவ ரீதியான இந்தக் கருத்து எங்களுக்குத் தெளிவாக விளங்குகின்றது. ஆனால் இது போதாது.சோசலிசத்தை கட்டியமைக்கிற கட்டத்தில்* (*அழுத்தம் ஸ்டாலினுடையது.)
நாம் நுழைந்திருக்கின்றோம்; இந்தக் கட்டத்தில் ஸ்தூலமான விரிவான அடிப்படை விதிகளையும் ஆணைகளையும் நாம் வரையறுக்க வேண்டும்;
அந்த விதிகளும் ஆணைகளும் நாட்டுப்புற மாவட்டங்களில் நமது பணியினுடைய அனுபவத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன; நடுத்தர விவசாய வர்க்கத்துடன் ஒரு நிலையான உடன்பாட்டை அடையும் பொருட்டு நாம் அவற்றால் வழிகாட்டப்பட வேண்டும்.” (பார்க்க, தொகுதி, 24 பக்கம், 114)
உங்கள் கடிதத்தில் நீங்கள் கூறியிருப்பதற்கு நேர் எதிராக இது இருப்பதை நீங்கள் காணலாம்; நீங்கள் நடுநிலைப்படுத்தலின் ஆரம்பத்தை அதனுடைய முடிவுடன் போட்டுக் குழப்புவதின் மூலம் உண்மையான நமது கட்சி நடைமுறையைத் தலை கீழாக்குகின்றீர்கள்.
முதலாளிவர்க்கம் தூக்கியெறியப்படுகின்ற வரையிலும் சோவியத் அதிகாரம் உறுதிப்படுத்தப்படுகின்ற வரையில் நடுத்தர விவசாயி, புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையே பாசாங்கு செய்து ஊசலாடினான்; எனவே அவனை நடுநிலைப் படுத்துவது அவசியமாக இருந்தது. நடுத்தர விவசாயி, முதலாளி வர்க்கம் “நிரந்தரமாக” தூக்கியெறியப்பட்டது என்பதையும், சோவியத் அதிகாரம் திடப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது என்பதையும், குலாக்குகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் உள்நாட்டுப் போர் முனைகளில் செஞ்சேனை வெற்றியடையத் தொடங்கியிருந்தது என்பதையும் உணரத் தொடங்கிய போது அவன் நம்மை நோக்கி வரத் தொடங்கினான்.
துல்லியமாகச் சொன்னால் இந்த அலை திரும்பிய பிறகுதான் எட்டாவது கட்சிக் காங்கிரசில் கட்சியின் மூன்றாவது போர்த்தந்திர முழக்கத்தை லெனினால் முன்வைக்க முடிந்தது. அந்த முழக்கம் பின்வருமாறு; ஏழை விவசாயிகளைச் சார்ந்து நிற்கும் அதே சமயத்தில் நடுத்தர விவசாயிகளுடன் ஒரு நீடித்த கூட்டணியை நிறுவி சோசலிசக் கட்டுமானத்தை நோக்கி முன்னேறிச் செல்வோமாக!
இந்த நன்கறிந்த உண்மையை நீங்கள் எவ்வாறு மறந்திருக்க முடியும்?
மேலும் உங்கள் கடிதத்தில் இருந்து வெளிப்படுவது என்னவென்றால், பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு மாறிச் சென்ற காலத்திலும் அந்தப் புரட்சிக்குப் பிந்திய ஆரம்ப நாட்களிலும் நடுத்தர விவசாயியை நடுநிலைப்படுத்தும் கொள்கையானது தவறாக உள்ளது,பொருத்தமற்றதாக உள்ளது, எனவே, ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாகும். அது முழுக்கமுழுக்க தவறாகும். விசயம் நேர் எதிராக உள்ளது. துல்லியமாகச் சொன்னால் முதலாளிவர்க்க அதிகாரம் தூக்கியெறியப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலும், பாட்டாளிவர்க்க அதிகாரம் திடப்படுத்தப்படுவதற்கு முன்பும் நடுத்தர விவசாயி மற்ற எல்லோரையும் விட மிக அதிகமாக ஊசலாடினான், எதிர்த்தான். இந்தக் கட்டத்தில்தான் ஏழை விவசாயியுடன் கூட்டணியும் நடுத்தர விவசாயியை நடுநிலைப்படுத்துவதும் அவசியமானவையாக இருந்தன என்பது தெளிவு.
உங்கள் தவறில் பிடிவாதமாக நின்று கொண்டு, விவசாயப் பிரச்சனை என்பது நமது நாட்டுக்கு மட்டுமின்றி “ஏறக்குறைய அக்டோபருக்கு முந்திய ரக்ஷ்யாவின் பொருளாதார அமைப்பைக் கொண்டிருக்கின்ற” நாடுகளுக்குக் கூட மிக முக்கியமான பிரச்சனையாகும் என்று நீங்கள் வலியுறுத்திக் கூறுகின்றீர்கள். பின்னால் கூறப்பட்டகூற்று உண்மைதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு காமின்டோனின் இரண்டாவது காங்கிரசில் லெனின் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை மேற்கொள்ளும்போது நடுத்தர விவசாயி பற்றி பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் கொள்கை சம்பந்தமாக விவசாயப் பிரச்சனை பற்றிய தமது ஆய்வுரையில் வரையறை செய்துள்ளார். விவசாயக் கூலிகள், அரைப் பாட்டாளிகள், அல்லது பங்கீட்டினைப் பெற்றுள்ளவர்கள், சிறுவிவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தனிக்குழுவாக ஏழைவிவசாய வர்க்கத்தை அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால் “நாட்டுப்புற மாவட்டங்களில் உழைக்கின்ற மற்றும் சுரண்டப்படுகின்ற மக்கள் திரளை “இவ்வாறு வரையறை செய்த பின்னர், நாட்டுப்புற மாவட்டங்களில் ஒரு தனிப்பிரிவாக நடுத்தர விவசாயிப் பிரச்சனையை வரையறை செய்யச் சென்ற லெனின் பின்வருமாறு கூறுகின்றார்.
”நடுத்தர விவசாயிகள், அதன் பொருளாதார ரீதியான அர்த்தத்தில், குத்தகை தாரர்களாகவோ அல்லது உரிமையாளர்களாகவோ சிறிய அளவிலான நிலங்களைக் கொண்டுள்ள சிறுநில விவசாயிகளைக் குறிக்கின்றது. மேலும், முதலாவதாக முதலாளித்துவத்தின் கீழ் பொதுவிதிப்படி அவர்கள் தங்கள் குடும்பத்திற்காகவும், வீட்டுப் பொருள்களுக்காகவும் சிறு அளவிலான வருவாயைச் சேமிப்பதோடன்றி நல்ல பருவ காலங்களிலாவது மூலதனமாக மாற்றப்படக் கூடிய ஒரு குறிப்பிட்ட உபரியை உத்தரவாதம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். இரண்டாவதாக மிக அடிகடி (உதாரணமாக இரண்டு அல்லது மூன்று பண்ணைகளில் ஒன்றை) வெளியாட்களின் உழைப்பைக் கூலிக்கு அமர்த்த முயல்கிறார்கள்………. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கமானது- அடுத்து வரும் உடனடி எதிக்காலத்தில் இல்லாவிட்டாலும் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் ஆரம்பக் கட்டத்தில்- இந்த வர்க்கத் தட்டை தங்கள் பக்கம் வென்றெடுக்கும் பணியை மேற்கொள்ள முடியாது; ஆனால் அது இதை நடுநிலைப்படுத்தும் பணியோடு அதாவது, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தில் அதை நடுநிலைப்படுத்துவதோடு நின்று கொள்ள வேண்டும்.” (பார்க்க, தொகுதி 25, பக்கம் 271-72)
இதற்குப் பிறகு, நடுத்தர விவசாய வர்க்கத்தை நடுநிலைப்படுத்தும் கொள்கையானது 1918 கோடைக்காலம் மற்றும் இலையுதிர் “காலத்தில்தான்” அதாவது சோவியத்துக்களின் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தைத் திடப்படுத்திய தீர்மானகரமான வெற்றிகளைப் பெற்ற பிறகுதான் ”எழுந்தது” என்று எவ்வாறு வலியுறுத்திச் சொல்ல முடியும்?
     சோசலிசப் புரட்சிக்கு மாறும் காலகட்டத்திலும் பாட்டாளி வர்க்க அதிகாரம் திடப்படுத்தும் காலத்திலும் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் போர்த்தந்திர முழக்க பிரச்சனையும் அதைப்போல நடுத்தர விவசாயியை நடுநிலையாக்கும் பிரச்சனையும் நீங்கள் கற்பனை செய்திருப்பது போல் அவ்வளவு எளிமையானது அல்ல என்பதை நீங்கள் பார்க்கலாம்.
4.  மேலே கூப்பட்ட அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்னவென்றால் நீங்கள் லெனினது நூல்களிலிருந்து சுட்டிக் காட்டியுள்ள பகுதிகள், புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் நமது கட்சியின் அடிப்படையான முழக்கத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபடவில்லை என்பது தெளிவு;
(அ) ஏனேனில் இந்த மேற்கோள்கள் அக்டோபருக்கு முந்திய அடிப்படையான முழக்கத்துடன் சம்பந்தப்படவில்லை.; ஆனால் அக்டோபருக்குப் பிந்திய முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது; மேலும்
(ஆ) அதன் முழக்கத்தின் சரியான தன்மையை அது மறுக்கவில்லை. ஆனால் உறுதிப்படுத்துகிறது.
கீழ்வரும் கருத்தை ஏற்கனவே நாம் மேலே கூறியிருக்கிறேன். திரும்பவும் நான் அதைக் கூறியாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுதல் என்ற காலப் பகுதிக்கு முன்பு புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் போர்த்தந்திர முழக்கத்தை-அதிகாரத்தைப் பற்றிய பிரச்சினையை மையக் கருவாகக் கொண்ட முழக்கத்தை- பாட்டாளிவர்க்க அதிகாரத்தை மேற்கொண்ட பின்னர் நடைமுறைப் படுத்தப்படுகின்ற முதலாளிய புரட்சியைப் பூர்த்தி செய்கின்ற பணியுடன் வேறுபடுத்தி பார்க்க முடியாது.
5.  தோழர் மால்ட்டோ பிராவ்தா பத்திரிகையில் (1927, மார்ச் 12) “ நமது நாட்டில் முதலாளித்துவப் புரட்சி” என்ற தலைப்பில் எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்: ஒரு விளக்கத்துக்காக எனக்கு அதைப் பொருத்தும்படி உங்களை அது “தூண்டியதாக” தோன்றுகிறது. கட்டுரைகளை நீங்கள் எப்படி படிக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது. நானும் கூட தோழர் மாலட்டோவின் கட்டுரையைப் படித்திருக்கிறேன்; நமது கட்சியின் பதின்நான்காவது காங்கிரசில் விவசாய வர்க்கம் சம்பந்தமாக நமது கட்சியின் முழக்கங்கள் குறித்த எனது அறிக்கையில் நான் கூறியுள்ளதுடன் அது எந்த விதத்திலும் முரண்படுவதாக நான் நினைக்கவில்லை.
தோழர் மாலட்டோ தனது கட்டுரையில் அக்டோபர் காலத்திய கட்சியின் அடிப்படையான முழக்கத்தைப் பற்றி விவாதிக்கவில்லை; ஆனால் அக்டோபருக்குப் பிறகு கட்சி முதலாளித்துவப் புரட்சியை நிறைவுக்கு இட்டுச் சென்ற போது அது விவசாயிகள் அனைவருடைய ஆதரவைப் பெற்றது என்ற உண்மையைப் பற்றியே அதில் அவர் விவாதித்தார். இந்த உண்மையைப் பற்றிய கூற்றானது நகரப்புறத்திலும், நாட்டுப்புறத்திலும் முதலாளிய வர்க்கத்திற்கு எதிராக ஏழை விவசாய வர்க்கத்துடன் ஒன்றுபட்டு நடுத்தர விவசாய வர்க்கத்தை நடுநிலையாக்கி முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நாம் நிறுவினோம் என்ற உண்மையை அது மறுக்கவில்லை; ஆனால் உறுதிப்படுத்துகிறது. இதைச் செய்யாமல் முதலாளித்துவப் புரட்சியை நம்மால் நிறைவு செய்ய முடிந்திருக்காது என்று ஏற்கனவே நான் மேலே கூறியுள்ளேன். 
போல்க்ஷ்விக் எண் 7-8 1927,ஏப்ரல் 13.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்    செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு  லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 49-66

Thursday 22 September 2011

எழுச்சியும் போரும் குறித்து- லெனின்


பின்னுரை
(எழுச்சியும் போரும் குறித்து)1
முன்னுள்ள வரிகளை ஏற்கனவே எழுதி முடித்த பிறகு அக்டோபர் முதல் தேதி நோவயா ழீஸ்ன் மற்றொரு மணியான முட்டாள்தனத்தைத் தலையங்கக் கட்டுரையில் வெளியிட்டிருந்தது. போல்க்ஷெவிக்குகளிடம் அனுதாபம் காட்டுவது போன்று வேடம் தாங்கியும், ‘உங்களைத் தூண்டுவதற்கு இடங்கொடாதீர்கள்’ (தூண்டுதலைப் பற்றி கூக்குரல் என்ற பொறியில் நாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதன் நோக்கம் போல்க்ஷெவிக்குகளைப் பீதியடையச் செய்து அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாமலிருக்கும்படி செய்வதுதான்) என்ற மதியூகி அற்பவாத எச்சரிப்புரை வழங்கியும் வருவதனால் அது இன்னும் ஆபத்தானதாகும்.
      அந்த மணிவாசகம் பின்வருமாறு;
      ”இயக்கம் அளித்துள்ள பாடங்கள், ஜூலை 3-5 இன் பாடங்களைப் போன்றவை ஒரு புறமும், கர்னீலவ் நாட்களின் அனுபவங்கள் மற்றொரு புறமாக நமக்கு மிகத் தெளிவாக காட்டுவது என்னவெனில் மக்களிடையே மிகுந்த  செல்வாக்குடைய நிறுவனங்களைத் தன் ஆணையின் கீழ் வைத்துக் கொண்டுள்ள சனநாயகம் உள்நாட்டுப்போரில், தற்காப்பு நிலையில் இருக்குமானால், தோற்கடிப்பதற்கு முடியாத வன்மையுடன் விளங்குகிறது. ஆனால், அது தாக்குதலைத் தொடங்கி நடத்த முற்படுமானால், நடுவேயுள்ள ஊசலாடும் பகுதியினரையெல்லாம் இழந்து தோல்வியடைகிறது”
      இந்த வாதத்தில் வெளியிடப்படும் அற்பவாத முட்டாள்தனத்துக்கு மிகச் சிறிதளவேனும், எந்த உருவிலாவது போல்க்ஷெவிக்குகள் இணங்கி விடுவாராயின், அவர்கள் தங்கள் கட்சியையும் புரட்சியையும் அழிவுக்கு ஆளாக்குவார்கள்.
      இந்த வாதத்தைக் கூறும் ஆசிரியர் உள்நாட்டுப் போரைப்பற்றிப் பேசும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டு (எல்லாவிதத்திலும் இனிய சுபாவம் படைத்த சீமாட்டிக்கு லாயக்கான விக்ஷயம் இதுதான்) நம்புவதற்கு முடியாத வேடிக்கையான விதத்தில் இப்பிரச்சனை பற்றி வரலாறு கற்பிக்கும் பாடங்களைத் திரித்துக் கூறியுள்ளார்.
      பாட்டாளிவர்க்கப் புரட்சியினது செயல்தந்திரங்களின் பிரதிநிதியும், நிறுவனருமாகிய கார்ல்மார்க்ஸ், இந்தப் பாடங்கைளை, இந்த வரலாறு கற்பிக்கும் பாடங்களைப் பின்வருமாறு தொகுத்துரைத்தார்.
      ”எழுச்சியும் போரும் மற்றக் கலைகளைப் போலவே ஒரு கலையாகும். அது சிற்சில செயல்முறை விதிகளுக்கு உட்பட்டதாகும்.அவ்விதிகளைப் புறக்கணித்தால் அப்படிப் புறக்கணிக்கும் கட்சிக்குச் சீரழிவுதான் ஏற்படும். கட்சிகளின் இயல்பையும், இத்தகைய விடயத்தில் எதிர்ப்படுகிற நிலைமைகளையும் ஒட்டி எழுகின்ற தர்க்கரீதியான அனுமானங்களாகிய இந்த விதிகள் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் இருப்பதனால் 1848 இல் கிடைத்த குறுகிய அனுபவத்தைக் கொண்டு ஜெர்மானியர்கள் அவற்றை நன்கறிந்து கொண்டார்கள். முதலாவது, முடிவு வரை செல்வதற்கு (நேர்பொருள்: உங்களது விளையாட்டின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு)* திடசித்தம் இல்லாத நிலையில், எழுச்சி விசயத்தோடு ஒரு பொழுதும் விளையாடாதீர்கள். எழுச்சியானது நிச்சயமற்ற பரிமாணங்களைக் கொண்ட சமன்பாடாகும்; அந்தப் பரிமாணங்களின் மதிப்பு ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கக் கூடும். உங்களை எதிர்த்து நிற்கும் சக்திகளிடம் நிறுவனம் கட்டுப்பாடு, வழக்கமாகச் செலுத்தும் செல்வாக்கு முதலிய சகல அனுகூலங்களும் இருக்கின்றன” (எழுச்சியின் மிகக் கடினமான உதாரணத்தை மனதில் கொண்டு மார்க்ஸ் கூறுகிறார்; அதாவது, “உறுதியாக நிலைத்துள்ள” பழைய அதிகாரத்தை எதிர்த்து, புரட்சியின் செல்வாக்காலும், அரசாங்கத்தின்* ஊசலாட்டத்தாலும் இன்னும் உடைந்து சரிந்து போகாமலிருக்கிற படையை எதிர்த்துச் செயல்படும் எழுச்சி பற்றிக் கூறுகிறார்;) “பகைவர்களுக்கு எதிராக மிகுந்த படைப்பலம் திரட்டாவிட்டால் எழுச்சியாளர்களுக்குத் தோல்வியும் சீரழிவும் நிச்சயமே. இரண்டாவது, எழுச்சியைத் தொடங்கிவிட்ட பிறகு மிகுந்த மனத் திண்மையுடன் செயல் புரிய வேண்டும். தற்காப்பில் இருந்து கொள்வது ஒவ்வொரு ஆயுதந்தாங்கிய எழுச்சிக்குச் சாவாகத்தான் முடியும்;
பிறைக் கோட்டுக்குள் உள்ளவை லெனின் எழுதியவை.
எதிரிகளுடன் பலப் பரீட்சை சிதறுண்டு வருகையில், எதிர்பாராத விதத்தில் பகைவரைத் தாக்க வேண்டும். தினந்தோறும் புதிய புதிய வெற்றிகளை, அவை சிறியனவையாயிருந்தாலும் பரவாயில்லை ஈட்டிக் கொண்டிருக்க வேண்டும். எழுச்சியில் ஏற்பட்ட முதல் வெற்றியால்  கிடைத்த ஊக்கத்தின் ஏற்றத்தை இடைவிடாது காப்பாற்ற வேண்டும். அதிகம் பலம் வாய்ந்தவர்களை எப்பொழுதும் பின்பற்றுகிற, மிகப் பத்திரமான தரப்பு எது என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற, ஊசலாட்டமுள்ள பகுதியினரை  இவ்வாறு உங்கள் பக்கம் இழுத்துத் திரட்டிக் கொள்ள வேண்டும்; பகைவர்கள் உங்களுக்கு எதிராகத் தங்களுடைய படை பலத்தைச் சேகரித்துத் திரட்டிக் கொள்வதற்கு முன், அவர்களை பின்வாங்கும்படிச் செய்ய வேண்டும். புரட்சி உத்திகளில் இதுவரை நாமறிந்தவர்களில் தலைசிறந்த நிபுணரான தந்தோன் கூறுவதாவது; துணிச்சல், துணிச்சல், மேலும், மேலும் துணிச்சல்! (ஜெர்மனியில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும், ஜெர்மன் பதிப்பு, 1907, பக்கம் 118).
      நோவ்யா ழீஸ்னைச் சேர்ந்த “மார்க்சீயர்கள் ஆகப் போகிறவர்கள்” என்போர்  தங்களைப் பற்றி இவ்வாறு சொல்லலாம்; நாங்கள் அதையெல்லாம் மாற்றிவிட்டோம்; மும்மடங்கு துணிச்சலுக்குப் பதில் எங்களிடம் இரண்டு பண்புகள் உள்ளன; ‘ இரண்டு பண்புகள் ஐயா! நிதானம், ஒழுங்கு-கறார், உலக வரலாற்றின் அனுபவமும் மகத்தான பிரஞ்சுப் புரட்சியின் அனுபவமும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. ‘எங்களுக்கு’ முக்கியமாயிருக்கும் விக்ஷயம் மொல்க்ஷாலின் மூக்குக் கண்ணாடியின் மூலம் திரிபுற்றுத் தெரியும் 1917 ஆம் வருடத்து இரண்டு இயக்கங்களின் அனுபவம்தான்.”
      இந்த அழகிய மூக்குக் கண்ணாடி இல்லாமல் இவ்வனுபவத்தை நாம் பரிசீலனை செய்து பார்ப்போம்.
ஜூலை 3-4 நாளைய நிகழ்ச்சிகளை “உள்நாட்டுப் போருடன்” நீங்கள் ஒப்பிடுகின்றீர்கள்; ஏனென்றால் அசேக்ஸின்ஸ்கி, பெரிவேர்செவ் ஆகியோரையும் அவர்கள் கூட்டத்தாரையும் நீங்கள் நம்பினீர்கள். இத்தகைய மக்களை நம்புவதும் (ஒரு பெரிய நாளிதழ் சாதனம் அனைத்தும் தங்களுக்கிருந்த போதிலும். ஜூலை 3-5 தேசிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல் சேகரிக்க தாங்களாக ஏதும் செய்யாதிருப்பதும்) நோவயா ழீஸ்ன் கனவான்களுக்குரிய தனிப்பண்பாகும்.
ஜூலை  3-5 தேசிய நிகழ்ச்சிகள் உள்நாட்டுப் போரின் தொடக்க நிலை அல்லவென்றும், போல்க்ஷெவிக்குகள்தான் அதைத் தொடக்க நிலைக்குள் அடக்கி வந்திருந்தார்கள் என்றும், உண்மையில் அது உள்நாட்டுப்போரே என்றும் ஒரு நொடிக்கு வைத்துக் கொள்வோம். அப்படியே வைத்துக் கொண்டு பார்ப்போம்.
அவ்வாறாயின், இந்தப் பாடம் எதை மெய்ப்பித்துக் காட்டுகிறது?
முதலாவது, போல்க்ஷெவிக்குகள் தாக்குதலில் இறங்கவில்லை, ஏனெனில், ஜூலை (3ம் தேதி இரவிலும், ஜூலை 4ம் தேதியிலும் அவர்கள் தாக்குதலில் இறங்கியிருந்தால் பெருமளவிற்கு வெற்றி கண்டிருப்பார்கள் என்பது வாதத்திற்கிடமற்ற விசயமாகும். உள்நாட்டுப் போர் பற்றி (உண்மைவிபரங்கள் காட்டுவது போல் தானாகத் தோன்றிய வெடிப்பை ஏப்ரல் 20-21 ஆம் தேதியது போன்றே ஆர்ப்பாட்டமாக மாற்றுவதைக் குறித்துப் பேசாமல், நோவயா ழீஸ்ன் பேசுவது போல) நாம் பேசுவதானால் போல்க்ஷெவிக்குகள் மேற்கொண்ட தற்காப்பு நிலைதான் அவர்களின் பலவீனமாயிருந்தது.
ஆகவே, நோவயா ழீஸ்ன் மதியூகிகள் கூறுவது தவறு என்று இந்தப் பாடம் நிரூபிக்கிறது.
இரண்டாவதாக, ஜூலை 3-4 இல் போல்க்ஷெவிக்குகள் எழுச்சி தொடங்குவதை நோக்கமாகவே கொள்ளவில்லை என்றால், போல்க்ஷெவிக்குகளின் ஒரு பிரிவுகூட  அப்படிப்பட்ட பிரச்சனைகளைக் கிளப்பவேயில்லையென்றால், அதற்குரிய காரணம், நோவயா ழீஸ்னுக்கும் நமக்குமுள்ள வாதத்திற்கு அப்பாற்பட்டது. ஏனெனில் நாம் இப்போது “உள்நாட்டுப் போரின்” அதாவது எழுச்சியின் பாடங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, எழுச்சிக்குப் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இல்லையென்பது வெளிப்படையாக இருந்தமையால், புரட்சி கட்சி எழுச்சி பற்றிய சிந்தனையில் இறங்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதைப் பற்றியல்ல.
தலைநகரத்திலுள்ள சோவியத்துக்களிலும், நாட்டுப்புறத்திலுள்ள சோவியத்துக்களிலும் (மாஸ்கோவில் 49 விழுக்காடு வாக்குகளுக்கு அதிகமாகவே) 1917 ஜூலைக்கு மிகவும் பின்னாலேதான் போல்க்ஷெவிக்குகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர். ஆகவே “பாடங்கள்” எல்லா விதத்திலும் இனிய சுபாவம் படைத்த சீமாட்டி நோவயா ழீஸ்ன் விருப்பத்திற்கு மிகமிக மாறுபட்டவையாகவே இருக்கின்றன என்பது இதிலிருந்து தெரிகிறது.
வேண்டாம், வேண்டாம், நோவயா ழீஸ்ன் கனவான்களே! நீங்கள் அரசியல் விசயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.
புரட்சிகரமான வர்க்கங்களின் முன்னணிப் படைகளிலும் நாட்டிலும் புரட்சிக் கட்சிக்குப் பெரும்பான்மையோரின் ஆதரவு இல்லையென்றால் எழுச்சியைப் பற்றிய பேச்சுக்கிடமில்லை. தவிரவும் எழுச்சிக்குத் தேவையாயிருப்பன. 1. நாடெங்கும் பரவிய அளவில் புரட்சியின் வளர்ச்சி; 2. தார்மீக மற்றும் அரசியல் விக்ஷயத்தில் பழைய அரசாங்கத்தின், உதாரணமாக “கூட்டணி” அரசாங்கத்தின், பூரணமான சீரழிவு; 3. நடுத்தரப் பகுதியினரின் – அதாவது நேற்றைய தினம் அரசாங்கத்தைப் பூரணமாக ஆதரித்து வந்து  இன்று முழு ஆதரவு காட்டாமல் இருப்பவர்களின் – முகாமிலே கடுமையான ஊசலாட்டம்.
ஜூலை 3-5 தேதிய நிகழ்ச்சிகளின் “பாடங்கள்” பற்றிப் பேசுகையில் நோவயா ழீஸ்ன்  இந்த மிக முக்கியமான பாடத்தைக் கவனிக்கக் கூடத் தவறிவிட்டது. ஏன்? ஏனெனில் ஓர் அரசியல் பிரச்சனையை அரசியல் வாதிகள், அல்ல, முதலாளி வர்க்கத்தைக் கண்டு பீதியடைந்து நிற்கும் படித்தவர்களின் குழு எடுத்துக் கொண்டது.
மேலே செல்வோம், மூன்றாவதாக, தெஸெரெத்தேலி போன்ற கனவான்கள் தங்களுடைய ஜூலைக் கொள்கையின் மூலமாகத் தங்களை அம்பலப்படுத்திக் கொண்ட காரணத்தால்தான், போல்க்ஷெவிக்குகளே தங்களுடைய சொந்த முன்னணி வீரர்கள் என்றும், ‘சமூக- கூட்டணிவாதிகள்’ துரோகிகள் என்றும் மக்கள் திரள் கண்டறிந்ததின் காரணத்தால்தான், ஜூலை 3-4 தேதிக்குப் பிறகே சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்க்ஷெவிக்குகள் ஆகியோரின் சீர்குலைவு தொடங்கியது என்று உண்மை விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கர்னீலவ் கலகத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20 இல் நடந்த பெத்ரோகிராத் தேர்தலில் இச்சீர்குலைவு பூரணமாக மெய்ப்பிக்கப்பட்டது. அதில் போல்க்ஷெவிக்குகள் வெற்றி கண்டனர். “சமூகக் கூட்டணிவாதிகள்” தோற்றனர். (அண்மையில் தியேலொநரோதா எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்த வாக்கு விவரங்களை மறைத்து விட்டு இதனை மறுக்க முயன்றது. ஆனால், இது தன்னையே ஏமாற்றிக் கொள்வதும், தன்னுடைய  வாசகர்களை ஏமாற்றுவதுமாகும். ஆகஸ்ட் 24 தேதியிட்ட டேன் என்னும் பத்திரிகையில் கண்ட கணக்கு விபரப்படி நகரில் மட்டும் போட்ட மொத்த வாக்குகளில் காடேட்டுக்களுக்குக் கிடைத்த பங்கு 22 விழுக்காடாக இருந்தது-23 விழுக்காடாக உயர்ந்தது; ஆனால், அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்து விட்டது.  மொத்த வாக்குகளில் போல்க்ஷெவிக்குகளுக்குக் கிடைத்த பங்கு 20 விழுக்காடாக யிருந்தது-33 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் குறைவு 10 விழுக்காடே. எல்லா “நடுத்தரக்காரர்களுக்கும்” கிடைத்த பங்கு 58 விழுக்காடாயிருந்தது- 44 விழுக்காடாகக் குறைந்து விட்டது. ஆனால், அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 60 விழுக்காடாகக் குறைந்தது.)
ஜூலை நாட்களுக்குப் பிறகும், கர்னீல்வ் கலகத்துக்கு முன்பும் ஏற்பட்ட சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்க்ஷெவிக்குகள் ஆகியோரின் சீர்குலைவு, அவ்விரு கட்சிகளிலும் “இடதுசாரி”ப் பிரிவின் வளர்ச்சியினாலும் மெய்ப்பிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு கிட்டத்தட்ட 40 விழுக்காட்டை எட்டியிருக்கிறது. கெரென்ஸ்கி போன்ற கனவான்கள் போல்க்ஷெவிக்குகளை அடக்குமுறை வேட்டையாடியதற்கு இது “பழிக்குப்பழி” யாகும்.
ஒரு சில நூறு உறுப்பினர்களை “இழந்துவிட்ட” போதிலும் ஜூலை 3-4 தேதிய நிகழ்வுகளிலிருந்து பாட்டாளிவர்க்கக் கட்சி பிரமாண்டமான அளவுக்கு ஆதாயமடைந்தது. ஏனெனில் இந்தக் கடுமையான நாட்களில் தான் இக்கட்சியின் விசுவாசத்தையும், சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்க்ஷெவிக்குகள் ஆகியோரின் துரோகத்தையும் மக்கள் திரள் பார்த்தறிந்து கொண்டது. ஆகவே “பாடம்” ஒரு சிறிதளவுகூட நோவ்யா ழீஸ்ன் கூறிய “பாடம்” அல்ல, அடியோடு மாறுபட்ட பாடம் அது. அதாவது: மேலும், எழுச்சியைத் தொடங்கிவிட்டால், எதிர்ப்படைகள் சிதறிக் கிடக்கையில் ஏறித்தாக்குங்கள்,எதிர்பாராதிருக்கையில் எதிரியைத் தாக்குங்கள், என்பதே.
”மார்க்சியர்கள் ஆகப் போகிறவர்கள்” என்று சொல்லிக் கொள்ளும் நோவ்யா ழீஸ்ன் கனவான்களே, விக்ஷயம் அப்படித்தானே?
அல்லது “மார்க்சியம்” என்பதின் அர்த்தம், எதார்த்த நிலைமைகளைச் சரியாக சீர்தூக்கிறிந்து அதன் அடிப்படையில் செயல்தந்திரங்களை வகுப்பது அன்று, ஆனால் மதிகெட்ட ரீதியிலே ஆய்ந்து பாராமல் “அரசியல் நிர்ணய சபையைக் கூட்டும் அதே காலத்தில் சோவியத்துக்களின் மாநாடு” என்பதோடு “உள்நாட்டுப்போர்” என்பதையும் போட்டுக் குழப்புவதுதானா?
     கனவான்களே! இது வெறும் கேலிக்கூத்தாகும். இது மார்க்சியத்தையும் பொதுவாக தர்க்கவியலையும் நையாண்டி செய்வதாக இருக்கிறது!   
 “உள்நாட்டுப்போர் என்ற அளவிற்கு வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்குப் புறவய நிலைமையிலே காரணம் எதுவும் கிடையாது என்றால், “சோவியத்துக்களின் மாநாடு, அரசியல் நிர்ணய சபை ஆகியவை” சம்பந்தமாக நீங்கள் ஏன் “உள்நாட்டுப்போரைப்” பற்றிப் பேச வேண்டும்? (நாம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கும் நோவ்யா ழீஸ்ன் தலையங்கக் கட்டுரையின் தலைப்பு இதுதான்.) அப்படிப் பேசுவதானால், புறவய நிலைமைகளிலே உள்நாட்டுப்போருக்குரிய அடிப்படை ஒன்றும் இல்லை. ஆகவே, சோவியத்துக்களின் மாநாடு அரசியல் நிர்ணய சபை போன்ற அமைதியான, அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட, சட்டம், நாடாளுமன்ற நடவடிக்கை ஆகியவற்றின் கோணத்திலிருந்து பார்க்கும் போது ”சாதாரணமாகத்” தோன்றுகின்ற விசயங்களையே செயல்தந்திரங்களுக்கு அச்சாணியாக வைத்துக் கொள்ள முடியும். வைத்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் தெளிவாக வாசகர்களுக்குத் தெரிவித்து அதை நிரூபித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சபையும் உண்மையில் தீர்மானித்து முடிவு கட்டுவதற்குச் சக்தியுள்ளவை தான் என்று அபிப்பிராயம் கொள்வது சாத்தியமே.
     ஆனால், இப்பொழுதுள்ள புறவய நிலைமைகளில் உள்நாட்டுப்போர் தவிர்க்க முடியாதது, அல்லது ஏற்படலாம் என்றிருக்குமாயின், நீங்கள் அதைப் பற்றி “வீணாய்ப்” பேசவில்லையென்றால், உள்நாட்டுப்போருக்கான ஒரு நிலைமை இருப்பதைத் தெளிவாகப் பார்த்து, உணர்ந்து, அறிந்துதான் பேசியிருக்கிறீர்கள் என்றால், சோவியத்துக்களின் மாநாட்டையோ, அரசியல் நிர்ணய சபையையோ எவ்வாறு நீங்கள் அச்சாணியாக வைத்துக் கொள்ள முடிந்தது? பசியால் வாடிக்கொண்டிருக்கும், வதைபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் திரளை ஏளனம் செய்வதாகும் இது! இரண்டுமாத காலம் ”காத்திருக்கப்” பட்டினியால் தவிக்கும் மக்கள் சம்மதிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது எந்தப் பொருளாதாரச் சீரழிவு அதிகரித்து வருவதாக நீங்களேதான் தவறாமல் எழுதியவாறு இருக்கிறீர்களோ, அந்தப் பொருளாதாரச் சீரழிவு சோவியத்துக்களின் மாநாட்டுக்காக அல்லது அரசியல் நிர்ணய சபைக்காகக் “காத்திருக்கச்” சம்மதிக்குமா? அல்லது சமாதானத்துக்காகக் காரியப் பற்றுள்ள  நடவடிக்கைகளை நாம் எடுக்காமல் விட்டநிலையிலே (போரிலே ஈடுபட்டுள்ள எல்லா நாடுகளுக்கும் நியாயமான  சமாதானம் பற்றிய அதிகாரபூர்வமான பிரேரணை வழங்காத நிலையிலே) ஜெர்மானியத் தாக்குதல் சோவியத்துக்களின் மாநாட்டுக்கும், அரசியல் நிர்ணய சபைக்கும் “காத்திருக்கச்” சம்மதிக்குமா? அல்லது, பெப்ரவரி 28 இலிருந்து செப்டம்பர் 30 வரை மிகுந்த கொந்தளிப்போடும் என்றும் காணாத வேகத்தோடும் நடந்து முன்னேறிய ருக்ஷ்யப் புரட்சியின் வரலாறு அக்டோபர் முதல் தேதியிலிருந்து நவம்பர் 29 வரை அதி நிம்மதியான, அமைதியான, சட்டபூர்வமான நடைபோட்டுச் செல்லும் என்றும், வெடிப்புக்கள், திடீர்பாய்ச்சல்கள், ராணுவத் தோல்விகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் அது தவிர்க்கும் என்றும் நீங்கள் முடிவுகட்டுவதற்கு இடந்தரக்கூடிய உண்மை விரவங்கள் உங்களிடம் இருக்கின்றனவா? அல்லது, போல்க்ஷெவிக் கட்சியைச் சேராத துபாஸவ் என்ற அதிகாரி போர்முனையிலுள்ள இராணுவத்தின் சார்பாக அது “சண்டை செய்யாது” என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிற போர் முனையிலுள்ள அந்தச் சேவை, ”குறித்த” நாள்வரைப் பட்டினியாக, குளிரில் உறைந்தபடி பொறுமையுடன் கிடக்குமா? அல்லது நீங்கள் விவசாயிகளின் எழுச்சியை “அராஜகம்” என்றும், “இனக்கொலை” என்றும் சொல்லிவிட்டபடியாலோ, உழவர்களுக்கு எதிராக கேரென்ஸ்கி ராணுவப் படைகளை அனுப்பிவைப்பார் என்பதனாலோ அது உள்நாட்டுப் போரின் ஒரு அம்சமாக இருந்துவருவது நிற்குமா? அல்லது உழவர்கள் மிகுந்துள்ள ஒரு நாட்டில் விவசாயிகளின் எழுச்சியை நசுக்கிவரும் அதே அரசாங்கம் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு அமைதியாக, நேர்மையாக, பாசாங்கு இல்லாமல் வேலை செய்ய முடியும் என்பது சாத்தியமா? நினைக்கத்தான் முடியுமா?
     கனவான்களே, “ஸ்மோல்னி கல்லூரியில் நேர்ந்த குழப்பத்தைக்” கண்டு சிரிக்க வேண்டாம்! உங்கள் அணிகளிலும்,  குழப்பத்திற்குக் குறைவில்லை, உள்நாட்டுப்போர் கிளப்புகிற  பயமுறுத்தும் கேள்விகளுக்கு நீங்கள் குழப்பம் மிகுந்த சொற்களைக் கொண்டும், இரங்கத்தக்க அரசியல் சட்டப் பிரமைகளைக் கொண்டும் விடையளிக்கின்றீர்கள். அதனால்தான், போல்க்ஷெவிக்குகள், இவ்வித மனேநிலைகளுக்கு இடங்கொடுப்பார்களானால் அவர்கள் தங்கள் கட்சியையும் தங்கள் புரட்சியையும் அழிப்பார்கள் என்று சொல்கிறேன்.
நி.லெனின்.
 நூல்திரட்டு, தொகுதி 34.
பக்கங்கள் 287-339.   
 அக்டோபர் 1, 1917
1917 செப்டம்பரில் முடிவு –
அக்டோபர் 1 (4) ல் எழுதப்பட்டது
1917, அக்டோபரில் புரோஸ்வெக்ஷேன்யே
இதழில் 1-2-ல் வெளியிடப்பட்டது.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்    செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு  லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 82-90
(1- ``எழுச்சியும் போரும் குறித்து`` என உபதலைப்பிட்டது நாம்)

அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள்.-ஜே. வி .ஸ்டாலின்

அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது
போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள்.-ஜே. வி .ஸ்டாலின்
எதிர்த்தரப்புப் பற்றி
          ஒரு கட்சியின் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிக்கப்படாத தலைமை அக்டோபர் (புரட்சிக்கான) தயாரிப்பில் ஒரு முதன்மையான காரணியாகும். இதுதான் அக்டோபர் புரட்சியின் சிறப்பு அம்சமாகும்; இதுதான் அக்டோபர் (புரட்சிக்கான) தயாரிப்புக் காலகட்டத்தின் போது போல்க்ஷ்விக்குகளுடைய செயல் தந்திரங்களின் முதலாவது தனிச்சிறப்பு அம்சமாகும்.
         போல்க்ஷ்விக் செயல் தந்திரங்களின் இந்த அம்சம் இல்லாமல், ஏகாதிபத்திய நிலைமைகளில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் வெற்றியைப் பெற்றிருப்பது என்பது சாத்தியம் இல்லை என்பதற்கு நிரூபணம் தேவைப்படாது.
         இந்த அம்சத்தில் அக்டோபர் புரட்சியானது 1871-ல் பிரான்சில் நடந்த புரட்சியில் இருந்து சாதகமாக வேறுபடுகிறது; அங்கே தலைமை இரு கட்சிகளுக்கிடையே பிளவுபட்டிருந்தது; அவற்றில் எதுவுமே கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்பட்ட முடியாமல் இருந்தது.
     இரண்டாவது தனிச்சிறப்பான அம்சம் ; அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்பு இவ்வாறு ஒரு கட்சித் தலைமையின் கீழ் அதாவது போல்க்ஷ்விக் கட்சித் தலைமையின் கீழ் தொடர்ந்து முன்னேறியது; ஆனால் இந்தத் தலைமையைக் கட்சி எவ்வாறு நிறைவேற்றியது? எந்த வழியினூடே இந்தத் தலைமை முன்னேறிச் சென்றது? புரட்சி வெடிக்கும் சமயத்தில் மிக அபாயகரமான குழுக்களாக சமரசக் கட்சிகளைத் தனிமைப்படுத்தும் வழியில் – சோசலிக்ஷ புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளையும் தனிமைப்படுத்தும் வழியில் – இந்தத் தலைமை முன்னேறியது.
    லெனினியத்தின் அடிப்படையான போர்த்தந்திரத்தின் (Strategic) விதி  என்ன?
 அது கீழ்க்கண்டவற்றை அங்கிகரிப்பதில் அடங்கியுள்ளது.
1.  புரட்சி வெடிக்கக் கூடிய காலகட்டத்தை எதிர்நேக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், சமரசவாதக் கட்சிகள் புரட்சியின் எதிரிகளின் மிக அபாயமான சமூக ஆதரவாகும்.
2.  இத்தகைய கட்சிகள் தனிமைப்படுத்தப்படாமல் எதிரியை (ஜாரிசம் அல்லது முதலாளித்துவ வர்க்கம்) தூக்கியெறிவது என்பது சாத்தியம் இல்லை.
3.  எனவே, புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் இத்தகைய கட்சிகளைத் தனிமைப்படுத்துவதை நோக்கியும் அவற்றிடமிருந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களை வென்றெடுப்பதை நோக்கியும் முக்கிய ஆயுதங்கள் செலுத்தப்பட வேண்டும்.

ஜாரிசத்துக்கு எதிரான போராட்டக் காலத்தில்-முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் (1905-1916) ஜாரிசத்துக்கு மிக அபாயகரமான சமூக ஆதரவாக தாராளவாத – முடியரசுவாதக் கட்சியான கேடட் கட்சி இருந்தது. ஏன்? ஏனென்றால் இது ஒரு சமரசவாதக் கட்சியாக, ஜாரிசத்துக்கும் பெரும்பான்மையான மக்களுக்கும் அதாவது மொத்த விவசாய வர்க்கத்திற்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் கட்சியாக இருந்தது. இயல்பாகவே கட்சியானது அந்த சமயத்தில், தனது பிரதான அடிகளை காடெட்டுக்களின் மீது தொடுத்தது. ஏனெனில் காடெட்டுக்கள் தனிமைப்படுத்தப்படாமல் ஜாரிசத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான  முறிவுக்குச் சாத்தியமில்லை. மேலும் இந்த முறிவானது உறுதிபடுத்தப்படாமல் இருந்தால் புரட்சியின் `வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் பலர், போல்க்ஷ்விக் போர்த்தந்திரத்தின் இந்தத் தனிச் சிறப்பான அம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை. போல்க்ஷ்விக் குகள் “காடேட்டுக்களைப் பார்த்து அதீதமாக அஞ்சுகின்றனர்.” என்று குற்றம் சாட்டினார்கள். காடேட்டுக்களுக்கு எதிரான போல்க்ஷ்விக்குகளின் போராட்டமானது, பிரதான எதிரியான ஜாரிசத்துக்கு எதிரான போராட்டத்தைப் ”பின் தள்ளிவிட்டது” என்று கருதினார்கள். ஆனால் நிரூபிப்பதற்கு போதிய ஆதாரமில்லாத  இந்தக் குற்றச்சாட்டுக்கள், பிரதான எதிரியின் மீதான வெற்றியை எளிமைப்படுத்தவும், துரிதப்படுத்தவும் சமரசவாதக் கட்சிகளைத் தனிமைப்படுத்தக் கோரிய போல்க்ஷ்விக்குகளின் போர்த்தந்திரத்தைப் புரிந்து கொள்ள அறவே தவறி விட்டன என்பதையே வெளிப்படுத்தின.
   
இந்தப் போர்த்தந்திரம் இல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளிவர்க்க மேலாதிக்கத்தைப் பெற்றிருக்க முடியாது என்பதற்கு நிரூபணம் தேவையில்லை.

அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் போராடும் சக்திகளின் ஈர்ப்பு மையம் வேறுதளத்திற்கு மாறியது. ஜார் மன்னன் ஒழிந்தான்; காடேட்டுக் கட்சியானது சமரசவாதக் கட்சி என்ற நிலையிலிருந்து ஆளும் சக்தியாக, ஏகாதிபத்திய ஆளும் சக்தியாக மாற்றப்பட்டிருந்தது. இப்போது யுத்தமானது, ஜாரிசத்துக்கும் மக்களுக்கும் இடையில் இல்லை; ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் பாட்டாளிகளுக்கும் இடையிலானதாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளான, சோசலிஸ்ட் புரட்சியாளர்களின் கட்சியும், மென்க்ஷ்விக்குகளின் கட்சியும் ஏகாதிபத்தியத்துக்கு மிகவும் அபாயகரமான  சமூக ஆதரவாக இருந்தன. ஏன்? ஏனெனில் அப்பொழுது இந்தக் கட்சியின் ஏகாதிபத்தியத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் சமரசம் செய்கின்ற சமரசக் கட்சிகளாக இருந்தன. இயல்பாகவே, போல்க்ஷ்விக்குகள் அந்த சமயத்தில், தங்களது பிரதான தாக்குதல்களை இந்தக் கட்சியின் மீது தொடுத்தனர். ஏனெனில் இந்தக் கட்சிகள் தனிமைப்படுத்தப்படாமல் இருந்தால், உழைக்கும் மக்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்க முடியாது; இந்த முறிவு உறுதிப்படுத்தப்படாதிருந்திருந்தால் சோவியத்  புரட்சி யின் வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் பலர், போல்க்ஷ்விக் செயல் தந்திரங்களின் இந்தத் தனிச் சிறப்பான அம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் மீதும், மென்க்ஷ்விக்குள் மீதும் போல்க்ஷ்விக்குகள் “அதீத வெறுப்பை” வெளிப்படுத்துகின்றனர்.- என்றும், பிரதான லட்சியத்தை “மறந்து விட்டனர்” என்றும் குற்றம் சாட்டினார்கள். ஆனால், இந்த செயல் தந்திரங்களைக் கையாண்டதால்தான், போல்க்ஷ்விக்குகள், அக்டோபர் புரட்சிக் கான வெற்றியை உறுதிப்படுத்த முடிந்தது என்பதை மிகத் தெளிவாக அக்டோபர் தயாரிப்புக் காலகட்டம் முழுவதும் மெய்ப்பிக்கிறது.
   
இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்தது என்ன வென்றால் அது விவசாய வர்க்கத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை மேலும் புரட்சிகரமாக்கியது; சோசலிக்ஷ்ட் புரட்சியளர்கள் மீதும் மென்க்ஷ்விக்குகள் மீதும் இருந்த அவர்களது பிரமை நீங்கியது; இந்தக் கட்சிகளிடமிருந்து அவர்கள் தங்களைத் துண்டித்துக் கொண்டனர்; நாட்டைச் சமாதானத்துக்கு இட்டுச் செல்லும் சக்திபடைத்த முரணில்லாத ஒரு சக்தியாக பாட்டாளிவர்க்கத்தை சுற்றி அவர்கள் திரண்டனர். இந்தக் காலப்பகுதியின் வரலாறானது, உழவர் வர்க்கத்தின் உழைக்கும் மக்களுக்காக அவர்களைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதற்காக சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் மென்க்ஷ்விக்குகள் ஆகியோருக்கும், போல்க்ஷ்விக்குகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் வரலாறாகும்.
   
இந்தப் போராட்டத்தின் இறுதி விளைவானது கெரன்ஸ்கியின் காலப்பகுதியான கூட்டரசாங்கக் காலப்பகுதிகளும் நிலப்பிரபுக்களின் நிலங்களை பறிமுதல் செய்ய மென்க்ஷ்விக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மறுத்த செயல், யுத்தத்தைத் தொடர்வதற்கு மென்க்ஷ்விக்குகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் நடத்திய சண்டை, போர்முனையில் சூன்தாக்குதல், இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனையைக் கொண்டுவந்தது. கோர்னிலோவ் கலகம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டது. அதோடு இவை இப் போராட்டப் பிரச்சனையை முழுமையாக போல்க்ஷ்விக் போர்த்தந்திரத்துக்கு சாதகமாகவே தீர்மானித்தன. ஏனெனில் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மென்க்ஷ்விக்குகளும் தனிமைப்படுத்தப்படாமல் இருந்தால் ஏகாதிபத்தியவாதிகளின் அரசாங்கத்தைத் தூக்கியெறிவது சாத்தியமாகியிருக்காது. இந்த அரசாங்கம் தூக்கியெறியப்படாமலிருந்தால் போரிலிருந்து விடுபட்டுவருவது சாத்தியமில்லாது போயிருக்கும்; சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளையும் தனிமைப்படுத்தும் கொள்கைதான் சரியான கொள்கை என்பது நிரூபிக்கப்பட்டது.
   
இவ்வாறு, அக்டோபருக்கான தயாரிப்புக்களைச் செய்வதில் மென்க்ஷ்விக்குகளையும் சோசலிஸ்ட்- புரட்சியாளர்களையும் தனிமைப்படுத்துவது    பிரதான வழியாக இருந்தது. இதுதான் போல்க்ஷ்விக் செயல்தந்திரங்களின் இரண்டாவது தனிச்சிறப்பான அம்சமாக இருந்தது.
   
போல்க்ஷ்விக் செயல் தந்திரங்களுடைய இந்தத் தனிச்சிறப்பான அம்சம் இல்லாமல், பாடாளிவர்க்கத்திற்கும் உழவர் வர்க்கத்தின் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான கூட்டு அந்தரத்தில் விடப்பட்டிருக்கும் என்பதற்கும் நிரூபணம் தேவையில்லை.
   
ட்ராட்ஸ்கி, ”அக்டோபர் படிப்பினைகள்” என்ற தமது நூலில் போல்க்ஷ்விக்குகளுடைய செயல் தந்திரங்களின் இந்தத் தனிச் சிறப்பான அம்சம் பற்றி எதையும் சொல்லாமல் விட்டு விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
   
மூன்றாவது தனிச்சிறப்பான அம்சம்; இவ்வாறு கட்சியானது அக்டோபருக்கான தயாரிப்புக்களைச் செய்கையில் சோசலிஸ்ட்- புரட்சியாளர்கள் கட்சியையும், மென்க்ஷ்விக்குக் கட்சியையும் தனிமைப்படுத்தும் வழியையும் அவர்களிடமிருந்து தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் பக்கம் வென்றெடுக்கும் வழியையும் பின்பற்றியது. ஆனால், கட்சி இந்தத் தனிமைப்படுத்தலை எந்த வடிவத்தில், எந்த முழக்கத்தின் கீழ் பருண்மையாக நிறைவேற்றியது? “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கத்தின் கீழ் சோவியத்துக் களை மக்களைத் திரட்டும் அமைப்புக்கள் என்பதிலிருந்து எழுச்சிக்கான அமைப்புக்களாகவும், அதிகாரத்துக்கான அமைப்புக் களாகவும், ஒரு புதிய பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கான கருவியாகவும் மாற்றுவதற்கான போராட்டத்தின் மூலம் சோவியத்துக்களின் அதிகாரத்துக்கான புரட்சிகர மக்கள் இயக்கத்தின் வடிவில் இது நிறைவேற்றப்பட்டது.
   
சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளை யும் தனிமைப்படுத்தும் கடமையினை நிறைவு செய்யக்கூடிய, பாட்டாளிவர்க்க புரட்சி லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் படைத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வெற்றிக்கு லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளை வழிநடத்திச் செல்லும் கடமைக்கு உதவிய முதன்மையான ஸ்தாபன நெம்புகோலான சோவியத்துக்களை போல்க்ஷ்விக்குகள் பற்றிக் கொண்டது ஏன்?
        
சோவியத்துக்கள் என்றால் என்ன?
    1917 செப்டம்பர் ஆரம்பத்திலேயே லெனின் கூறினார் .”சோவியத்துக்கள் ஒரு புதிய அரசு உறுப்புகளாக உள்ளன. முதலாவதாக அது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட ஆயுதந் தாங்கிய படையாக உள்ளது. பழைய நிரந்தர இராணுவத்தைப் போல மக்களுடன் தொடர்பில்லாத ஒரு படையல்ல இது; மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டதாகும். ராணுவக் கண்ணோட்டத்தில் நோக்கினால் இந்தப் படை முந்திய படைகளைவிட ஒப்பிட முடியாத அளவு அதிக சக்தி படைத்ததாகும். புரட்சிக் கண்ணோட்டத்தில் நோக்கினால் இதற்கு மாற்றாக வேறு எதையுமே வைக்க முடியாது. இரண்டாவதாக, இந்த அரச உறுப்பு பெரும்பான்மை யான பொது மக்களுடன் இணைப்பைக் கொண்டுள்ளது. இவ்வளவு நெருங்கிய பிரிக்க முடியாத, எப்போதும் கட்டுப்படுத்தக் கூடிய, புதுப்பித்துக் கொள்ளக் கூடிய ஓர் அரச உறுப்பு இதற்கு முன்னால் – இச்சாயலைக் கொண்டதாகக் கூட – இருந்தது கிடையாது. மூன்றாவதாக, அந்த அரச உறுப்பிலுள்ள நபர்கள் எந்தவிதமான அதிகாரவர்க்க சம்பிரதாயங்களுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் மக்கள் விருப்பப்படி திரும்பி அழைக்கப்படும் (வாபஸ் பெறப்படும்) நிலையில் உள்ளவர்கள். ஆதலால் அது இதற்கு முன் இருந்தவற்றை விட அதிக ஜனநாயகத் தன்மை உடையதாகும். நான்காவதாக, இது அதிகாரவர்க்க சம்பிரதாயங்கள் எதுவுமின்றி பலவகையான ஆழமான சீர்திருத்தங்களைச் செய்ய இயலும் வகையில் பல வகைத் தொழிலில் ஈடுபட்டவர்களோடும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தித் தருகிறது. ஐந்தாவதாக, அது ஒடுக்கப்படும் வர்க்கங்களாகிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மிகவும் அரசியல் உணர்வுடைய செயலாற்றல் மிக்க, மிகவும் முற்போக்கான பகுதிகளைக் கொண்ட முன்னணிப்படையின் ஒரு அமைப்பு வடிவமாக அமைகிறது. இவ்வாறு, இதுவரை வரலாற்றில் இருந்து, அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்த இந்த வர்க்கங்களின் பெரும் மக்கள் திரள் முழுவதையும் உயர்த்தி, பயிற்சியளித்து, கல்வியளித்து, தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கிற அரசு உறுப்பாக இது அமைகின்றது. ஆறாவதாக, இது நாடாளுமன்ற முறையின் அனுகூலங்களையும், உடனடியான, நேர்முகமான ஜனநாயக முறையின் அனுகூலங்களையும் இணைப்பதைச் சாத்தியமாக்கு கிறது; அதாவது மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சட்டம் இயற்றும் வேலை, அதை அமுல்படுத்தும் வேலை ஆகிய இரண்டையும் செய்யும் வகையில் ஒன்றிணைக்கும் சாத்தியத்தை உண்டாக்குகிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது, உலகலாவிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனநாயகத்தை வார்த்தெடுப்பதில் ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது…..

“புரட்சிகர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆக்க ரீதியான ஊக்கம் சோவியத்துக்களைத் தோற்றுவிக்காமலிருந்தால் ரக்ஷ்யாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பது கவைக்குதவாத ஒரு விவகாரமாய் இருந்திருக்கும். ஏனெனில் பழைய அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பாட்டாளிவர்க்கம் நிச்சயமாக அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளமுடியாது போயிருக்கும்; உடனடியாக ஒரு புதிய அரசு இயந்திரத்தை அமைப்பது என்பது முடியாது.”- (லெனின் ’போல்க்ஷ்விக்குகளால் நீடித்து அரசாள முடியுமா?’ தேர்வுநூல், தொகுதி-21,பக்கம் 258-259).
   
இதனால்தான், அக்டோபர் புரட்சியை அமைப்பாக்கும் பணிக்கும், பாட்டாளிவர்க்க அரசு அதிகாரத்தின் ஒரு புதிய சக்தி வாய்ந்த அரசு இயந்திரத்தை உருவாக்கும் பணிக்கும் உதவிய சோவியத்துக்களை முதன்மையான அமைப்பு இணைப்பாக போல்க்ஷ்விக்குகள் பற்றிக் கொண்டார்கள்.
   
”அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கமானது, அதன் உள்ளார்ந்த வளர்ச்சி நிலையிலிருந்து நோக்கினால், அது இரு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. முதலாவது (இரட்டை ஆட்சி நிலவிய போது போல்க்ஷ்விக்கு களின் ஜூலைத் தோல்வி வரை), இரண்டாவது (கோர்னிலோவ் கலகம் தோல்வியுற்ற பின்னர்).

முதல் கட்டத்தின்போது இந்த முழக்கம், மென்க்ஷ்விக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் காடேட்டுகளுடன் கொண்டிருந்த கூட்டை உடைப்பது; மென்க்ஷ்விக்குகளையும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது (ஏனெனில் அந்த நேரத்தில், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மென்க்ஷ்விக்குகளும் தான் சோவியத்துக்களாக இருந்தனர்; எதிர்த்தரப்பினருக்குச் (அதாவது, போல்க்ஷ்விக்குகளுக்கு) சுதந்திரமாக போரடும் உரிமையை அளிப்பது; இத்தகைய போராட்ட வழிமுறையின் மூலமாக சோவியத்துக்களைக் கைப்பற்றுவதில் வெற்றி பெறுவார்கள் என்றும், அமைதி வழியிலான புரட்சி வளர்ச்சியின் மூலமாகவே சோவியத் அரசாங்கத்தின் உட்கூறுகளை மாற்றியமைக்க முடியும் என்றும் எதிர்பார்த்ததின் காரணமாகச் சோவியத்தினுள் கட்சிகளின் சுதந்திரமான போராட்டத்துக்கு உரிமை தருவது ஆகியவற்றைக் குறிக்கிறது. இத் திட்டமானது, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகார த்தைக் குறிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் மென்க்ஷ்விக்குகளையும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் அதிகாரத்தை வைத்து, அவர்களது எதிர்ப்புரட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்தித்ததன் மூலம் (பாட்டாளிவர்க்க –மொ.பெ-ர்) சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நிலைமைகளைத் தயாரிப்பதற்கு இது உதவியது என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில்,இது அந்தக் கட்சிகளின் உண்மையான இயல்பு அம்பலப்பட்டுப் போவதைத் துரிதப்படுத்தியது.ஆயினும் போல்க்ஷ்விக்குகளின் ஜூலைத் தோல்வி இந்த வளர்ச்சிப் போக்கைத் தடுத்தது; ஏனெனில் இந்தத் தோல்வி ஜெனரல்கள் மற்றும் காடேட்டுக்களின் எதிர்ப்புரட்சிக்கு முன்னுரிமை அளித்தது; சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளையும் எதிர்ப்புரட்சிகர அணிக்குத் தள்ளியது. மேலும் இது, “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றது. மீண்டும் அதை ஒரு புரட்சிகர எழுச்சியின் நிலைமைகளில் முன் வைக்கவும் கட்சியை நிர்ப்பந்தித்தது.
   
கோர்னிலோவ் கலகத்தின் தோல்வி இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தது. மீண்டும் “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கம் உடனடி முழக்கமாக மாறியது. ஆயினும் இந்த முழக்கம் இப்போது முதல் கட்டத்திலிருந்து மாறுபட்டதொரு பொருளைக் கொண்டிருந்தது. இப்போது இந்த முழக்கம், ஏகாதிபத்தியத்துடன் ஒரு முழுமையான முறிவையும் ஏற்கனவே போல்க்ஷ்விக்குகள் பெரும்பான்மையாக இருந்ததால் அவர்களுக்கு அதிகாரத்தை மாற்றித்தருவதையும் குறித்தது. இப்போது இந்த முழக்கம் ஒரு எழுச்சியின் மூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிப் புரட்சி நேரடியாக நெருங்கி வருவதைக் குறித்தது. இவை அனைத்துக்கும் மேலாக, இந்த முழக்கம், இப்போது பாட்டாளிவக்கச் சர்வாதிகார அமைப்பைக் குறிப்பதாகவும், அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது.
   
சோவியத்துக்களை அரசு அதிகார உறுப்புக்களாக மாறியமைத்த செயல் தந்திரங்களின் அளவிடற்கரிய  முக்கியத்துவம் லட்சக்கணக்கான மக்களை ஏகாதிபத்தியத்திட மிருந்து முறித்துக் கொள்ளச் செய்தது என்ற உண்மையிலும், மென்க்ஷ்விக் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களின் கட்சிகள் ஏகாதிபத்தியத்தின் கைத்தடிகள் என்பதை அம்பலப்படுத்தியதிலும் மக்கள் திரளை ஒரு நேரடிப் பாதையான பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்துக்குக்- இதுதான் அந்த வழியாக இருந்ததால்- கொண்டு வந்ததிலும் அடங்கியிருந்தது.

இவ்வாறு சமரசவாதக் கட்சிகளைத் தனிமைப்படுத்துவதற்கும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வெற்றிக்கும் மிகமிக முக்கிய நிபந்தனையாகச் சோவியத்துக்களை அரசு அதிகாரத்தின் உறுப்புகளாக மாற்றுக் கொள்கை-அக்டோபருக்கான தயாரிப்புக் காலத்தில் போல்க்ஷ்விக்குகளிடைய செயல்தந்திரங்களின் மூன்றவது குறிப்பான அம்சமாகும்.
   
நான்காவது குறிப்பான அம்சம்; போல்க்ஷ்விக்குகள் தங்களின் கட்சி முழக்கங்களைப் பெரும் மக்கள் திரளுக்கான முழக்கங்களாக, புரட்சியை முன்னுக்கு உந்தித் தள்ளிய முழக்கங்களாக எப்படி. ஏன் மாற்றினார்கள் என்பதையும், முன்னணிப்படையை மட்டுமன்றி, உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையினரை மட்டுமன்றி, மக்களின் பெரும்பான்மை யோரையும் கூடத் தங்கள் கொள்கை சரியானது என்பதை நம்ப வைப்பதில் எப்படி ஏன் வெற்றி பெற்றார்கள் என்பதையும் நாம் விவாதிக்கவில்லையென்றால் இந்தப் பகுதி முழுமையடையாது.
   
விசயம் என்னவென்றால் லட்சக் கணக்கான மக்களைக் கொண்டுள்ள உண்மையானதொரு மக்கள் புரட்சியாகப் புரட்சி இருக்கிறது என்றால்,அப்புரட்சியின் வெற்றிக்குச் சரியான கட்சி முழக்கங்கள் மட்டும் போதாது. ஏனெனில் புரட்சியின் வெற்றிக்கு மேலும் ஒரு அவசியமான நிபந்தனை தேவைப்படுகிறது; அதாவது மக்கள் தாங்களே தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இந்த முழக்கங்களின் சரியான தன்மையை உணர்ந்தறிய வேண்டும். அதன் பிறகுதான் கட்சி முழக்கங்கள் மக்கள் திரளின் முழக்கங்களாக மாறுகின்றன. அதன் பிறகுதான் புரட்சி மக்கள் புரட்சியாக ஆகின்றது. அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புக் காலத்தில் போல்க்ஷ்விக்குகளுடைய செயல் தந்திரங்களின் குறிப்பான அம்சங்களில் ஒன்று யாதெனில், இயல்பாகவே கட்சிமுழக்கங்களிடம், இன்னும் சரியாகச் சொன்னால் புரட்சியின் வாயிற்படிக்கே மக்கள் திரளைக் கொண்டுவந்த  பாதைகளையும் திருப்பங்களையும் அவர்கள் சரியாக தீர்மானித்தனர் என்பதாகும். இவ்வாறு இம் முழக்கங்களின் சரியான தன்மையை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணரவும், சோதிக்கவும், உண்மையுணரவும் அவர்களுக்கு உதவியது என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் போல்க்ஷ்விக்குகளது செயல் தந்திரங்களின் குறிப்பான அம்சங்களில் ஒன்று யாதெனில் போல்க்ஷ்விக்குகள் கட்சித்தலைமையை மக்கள் திரள் தலைமையுடன் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; அவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் தெளிவாக உணர்கின்றனர்; எனவே அவர்கள் கட்சித்தலைமைக்கு மட்டுமல்ல உழைக்கும் மக்களின் பெரும் மக்கள்திரள் தலைமைக்கும் விஞ்ஞானத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள்.
   
அரசியல் நிர்ணய சபையைக் கூட்டியதும் அதனைக் கலைத்ததுமான அனுபவம்  போல்க்ஷ்விக் செயல்தந்திரங்களின் மேலே குறிப்பிட்ட அம்சத்துக்கு ஒரு தெளிவான உதாரணத்தை அளித்தது.
   
போல்க்ஷ்விக்குகள், “சோவியத் குடியரசு” என்ற முழக்கத்தை 1917, ஏப்ரல் ஆரம்பத்திலேயே முன்வைத்தனர் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அரசியல் நிர்ணய சபை ஒரு முதலாளித்துவப் பாராளுமன்றமாக இருந்தது என்பதும் “சோவியத் குடியரசின்” கோட்பாடுகளுக்கு அடிப்படையிலேயே எதிராக இருந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். சோவியத் குடியரசை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போல்க்ஷ்விக்குகள், அதே நேரத்தில், தற்காலிக அரசாங்கம் அரசியல் நிர்ணய சபையை உடனே கூட்ட வேண்டும் என்று கோரியது ஏன்? போல்க்ஷ்விக்குகள் தேர்தலில் பங்கொடுத்துக் கொண்டது மட்டுமின்றி அவர்களே அரசியல் நிர்ணய சபையைக் கூட்டியது ஏன்? எழுச்சிக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகப் பழையதிலிருந்து புதியதற்கு மாறியதில், போல்க்ஷ்விக்குகள் சோவியத் குடியரசை அரசியல் நிர்ணய சபையுடன் தற்காலிகமாக இணைப்பது சாத்தியம் என்று கருதியது ஏன்?
இது ”நிகழ்ந்தது” ஏனெனில்;
(1)  அரசியல் நிர்ணய சபைக்கான கருத்து பெரும்பான்மையான மக்களிடையே நிலவிய மிகமிக பிரபலமான கருத்துக்களில் ஒன்றாக இருந்தது.
(2)  அரசியல் நிர்ணய சபையை உடனே கூட்ட வேண்டும் என்ற முழக்கம், இடைக்கால அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சிகர இயல்பை அம்பலப்படுத்த உதவியது.
(3)  மக்களீடம் இருந்த அரசியல் நிர்ணய சபையைப் பற்றிய கருத்தை மதிப்பிழக்கச் செய்ய அவர்களது கோரிக்கைகளான “நிலம், சமாதானம், சோவியத் அதிகாரம்” ஆகியவற்றுடன் அவர்களை அரசியல் நிர்ணய சபைக்குக் கொண்டு செல்வதும், அரசியல் நிர்ணய சபையின் உண்மை நிலையை நேருக்கு நேர் சந்திக்கச் செய்வதும் அவசியமானதாக இருந்தது.
(4)  மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அரசியல் நிர்ணய சபையின் எதிர்ப்புரட்சிகர இயல்பைப் புரிந்து கொள்ளவும், அதைக் கலைக்க வேண்டிய அவசியத்தை உணரவும் இதுதான் உதவி செய்தது.
(5)  இவை அனைத்தும் இயல்பாக, அரசியல் நிர்ணய சபையை ஒழித்துக் கட்டுவதற்கான வழிகளில் ஒன்று என்ற விதத்தில் சோவியத் குடியரசை அரசியல் நிர்ணய சபையுடன் தற்காலிகமாக இணைக்கும் சாத்தியப்பாட்டை முன்கூட்டியே அனுமானித்தது.
(6)  இத்தகைய சேர்க்கை, அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் ஏற்படுத்தப்பட்டதால் சோவியத்துக்களுக்கு அரசியல் நிர்ணய சபையைக் கீழ்படியச் செய்வதையும், சோவியத்துக்களுக்கு கீழ்ப்பட்டதாக அது மாற்றப்படுவதையும், அது வழியின்றி மறைந்து ஒழிந்து போவதையும் தான் குறிக்க முடிந்தது.
இத்தகையதொரு கொள்கையை போல்க்ஷ்விக்குகள் கடைப்பிடிக்காதிருந்தால் அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தது என்பது அவ்வளவு சுலபமாக நடந்தேறியிருக்காது. அதைத் தொடர்ந்து “அனைத்து அதிகாரமும் அரசியல் நிர்ணய சபைக்கே!” என்ற முழக்கத்தின் கீழ் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் மற்றும் மென்க்ஷ்விக்குகளின் நடவடிக்கைகள் அவ்வளவு எடுப்பான விதத்தில் தோல்வியடைந்திருக்காது என்பதற்கு நிரூபணம் தேவையில்லை.
    லெனின் கூறுகிறார்;
“1917, செப்டம்பர்-நவம்பரில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான- ரக்ஷ்ய முதலாளித்துவ நாடாளு மன்றத்துக்கான-தேர்தல்களில் நாங்கள் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களது செயல்தந்திரம் சரியா? தவறா?-1917, செப்டம்பர் நவம்பரில் நாடாளுமன்ற முறை ரக்ஷ்யாவில் அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதாகக் கருத ரக்ஷ்ய கம்யூனிஸ்ட்டு களாகிய எங்களுக்கு மேல் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் யாரையும் விட அதிகளவு உரிமை இருக்கவில்லையா? இருந்தது என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. இங்கு எழும் கேள்வி என்னவெனில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் அதிக காலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலம் இருந்துள்ளனவா என்பதல்ல; பெரும் திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக் கொள்ளவும், முதலாளித்துவ சனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவு (சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும்) தயாராக இருக்கிறார்கள் என்பதே ஆகும். பல விசேச நிலைமைகளின் காரணமாக 1917, செப்டம்பர் நவம்பரில் ரக்ஷ்யாவில் நகரத் தொழிலாளிவர்க்கமும், படைவீரர்களும், விவசாயிகளும்,சோவியத் அமைப்பை ஏற்றுக் கொள்வதற்கும், அதிக சனநாயக தன்மை வாய்ந்த  முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைத்து விடவும் நன்கு தயார் நிலையில் இருந்தனர் என்பது கொஞ்சம் கூட மறுக்க முடியாத நூற்றுக்கு நூறு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மையாகும். ஆயினும் போல்க்ஷ்விக்குகள் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணிப்புச் செய்யவில்லை; பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கு முன்பும் வென்ற பின்பும் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டனர்.” (லெ.நூ.தி. தொகுதி 25, பக்- 201-202)
 அப்படியானால் அவர்கள் ஏன் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணிப்புச் செய்யவில்லை? ஏனெனில் லெனின் கூறுகிறார்;
”சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்கள் முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பின்னரும் கூட முதலாளித்துவ சனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகர பாட்டாளிவர்க்கத்து க்குத் தீங்கிழைப்பதற்குப் பதிலாக இது போன்ற  நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியம் என்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள  பரந்துபட்ட மக்களுக்கு  நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்த நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாகக் கலைக்கப்படுவதற்கும் வகை செய்கிறது என்பதும்,  முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல் ரீதியில் காலாவதியாக்குவதற்குத்” துணைபுரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.” (லெ.நூ.தி. தொகுதி. 25. பக். 201-202).
ட்ராட்ஸ்கி போல்க்ஷ்விக்குகளுடைய  செயல்தந்திரங்க ளின் இந்தக் குறிப்பான அம்சத்தைப் புரிந்து கொளவில்லை என்பதும், அரசியல் நிர்ணய சபையைச் சோவியத்துகளுடன் இணைக்கும் ”தத்துவத்தை” ஹில்பர்டிங்கிசமாகும் (Hilferdingism) என ஆவேசமாக குற்றம் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
    அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதுடன் தொடர்பு கொண்டுள்ள எழுச்சிக்கான  முழக்கத்துடன் சோவியத்துகளின் சாத்தியப்பாடான வெற்றியுடனும் சேர்ந்துள்ள இத்தகைய தொரு இணைப்பை அனுமதிப்பதுதான் ஒரே புரட்சிகர செயல்தந்திரமாக இருந்தது என்பதையும், சோவியத்துக்களை அரசியல் நிர்ணய சபையின் தொங்கு சதையாக  மாற்றுகின்ற ஹில்ப்ச்ர்ட்டிங்கின் செயல்தந்திரங்களுடன் பொதுவாக  இதற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும் அவர் (ட்ராட்ஸ்கி) புரிந்து கொள்ளவில்லை. சில தோழர்கள் இந்தப் பிரச்சனையில் செய்துள்ள தவறுகள், குறிப்பான சில நிலைமைகளின் கீழ் “ஒன்றிணைக்கப்பட்ட அரசு அதிகார வகை” பற்றி லெனினும் கட்சியும் எடுத்த முற்றிலும் சரியான நிலையைக் குறை சொல்ல அவருக்கு எவ்விதக் காரணமும் அளிக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. (பார்க்க, லெ.நூ.தி.தொ-21, பக். 338)
போல்க்ஷ்விக்குகள் அரசியல் நிர்ணய சபை பற்றி இந்தத் தனிச் சிறப்பான கொள்கையை மேற்கொண்டிருக்காவிட்டால், அவர்கள் பெரும் மக்கள் திரளைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதையும், அப்படி அவர்கள் மக்கள் திரளைத் தங்கள் பக்கம் வென்றெடுக்காது போயிருந்தால் அக்டோபர் புரட்சியைப் பிரபலமான மக்கள் புரட்சியாக மாற்றியிருக்க முடியாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை.
    போல்க்ஷ்விக்குகள் தங்கள் கட்டுரைகளில் பயன்படுத்தும் “மக்கள்”, “புரட்சிகர சனநாயகம்” போன்ற வார்த்தைகளை ட்ராட்ஸ்கி ஆவேசமாக குறைகூறுவதும், மேலும் அவ்வார்த்தைகளை மார்க்சியவாதிகள் உபயோகிப்பது முறையல்ல எனக் கருதுவதும் சுவாரசியமான விடயங்களாகும்.
பாட்டாளிவர்க்கச் சார்வாதிகாரத்தின் வெற்றிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 1917 செப்டம்பரில் கூடச் சந்தேகத்திற்கிட மற்ற மார்க்சியவாதியான லெனின் “புரட்சிகர பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர சனநாயகத்துக்கு அதிகாரம் முழுவதும் உடனடியாக மாற்றித்தரப்பட வேண்டியது அவசியம்” குறித்து எழுதினார் என்பதை  ட்ராட்ஸ்கி மறந்து விட்டார் என்பது தெளிவு. (காண்க. லெ.நூ.தி. தொ-212, பக்-198)
கண்டத்தில் நடைபெறும் ஒவ்வொரு உண்மையான மக்கள் புரட்சிக்கும், அதிகாரத்துவ-இராணுவ அரசு இயந்திரத்தை  நொறுக்குவது முதல் நிபந்தனையாகும் என்று மார்க்ஸ் இகல்மேனுக்கு எழுதிய பிரபலமான கடிதத்தைச் (1871, ஏப்ரல்) சந்தேகத்திற்கிடமற்ற மார்க்சியவாதியான லெனின் மேற்கோள் காட்டி எழுதியுள்ள  பின்வரும் கூற்றை ட்ராட்ஸ்கி மறந்து விட்டார் என்பது தெளிவு:
“ஒவ்வொரு உண்மையான மக்கள் புரட்சிக்கும் அதிகாரத்துவ-இராணூவ அரசு இயந்திரத்தை அழிப்பது முன் நிபந்தனையாகும்”  என்ற மார்க்சின் மிக ஆழமான கூற்றுக்குக் குறிப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும். தாங்கள் மார்க்சியவாதிகளாக கருதப்பட வேண்டுமென விருப்புகிறவர் களும் ஸ்துருவேயின் சீடர்களுமான ரக்ஷிய பிளக்கானவ் வாதிகள் மற்றும் மென்க்ஷ்விக்குகளுக்கு ‘மக்களது’ புரட்சி என்ற கருத்தோட்டம் மார்க்சியத்தில் இருந்து வருவதே விநோதமாகத் தோன்றுகிறது; மேலும் அவர்கள் மார்க்ஸ் ‘கை தவறி’ இந்த வார்த்தையை எழுதியிருப்பார் என அறிவிக்கவும் செய்வார்கள். மிக மோசமான தாராளவாத திரிபுக்கு மார்க்சியத்தை உட்படுத்தி அது, முதலாளிவர்க்கப் புரட்சிக்கும் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கும் இடையில் நிலவும் எதிரெதிரான கருத்தே தவிர வேறொன்றுமில்லை என்ற நிலைக்கு மார்க்சியத்தைக் குறைத்து விட்டனர் – இந்த எதிரெதிரான கருத்துக்குக் கூட மிகவும் உயிரோட்டமில்லாத வழியில் பொருள் விளக்கமும் தருகிறார்கள்……
      ஐரோப்பாக் கண்டத்தில்,1871 இல் எந்தவொரு நாட்டிலும் பாட்டாளிவர்க்கம் மக்களின் பெரும்பான்மையாக இருக்கவில்லை. உண்மையில் இயக்கத்துக்குள் பெரும் பானமையான மக்களைக் கொண்டு வந்த ஒரு மக்கள் புரட்சியானது பாட்டாளிகள், விவசாயிகள் ஆகிய இருசாராரை யும் தழுவியதாகத் தான் இருந்திருக்க முடியும். அன்று ’மக்கள்’ எனப்படுவோர் இவ்விரு வர்க்கங்களும் தான். இவ்விரு வர்க்கங்களையும் ‘அதிகாரத்துவ – இராணுவ அரசு இயந்திரம்’ அடக்கி, நசுக்கி, சுரண்டுகிறது என்ற உண்மையே  இவை இரண்டையும் ஒன்றிணைக்கின்றன. இந்த இயந்திரத்தை உடைத்து நொறுக்குவது என்பது உண்மையிலேயே ‘மக்களின்’ பெரும்பான்மையோரான தொழிலாளர்களுக்கும், பெரும்பாலான விவசாயிகளுக்கும் நன்மை பயப்பதாகும்; ஏழை விவசாயிகளுக்கும் பாட்டாளி களுக்கும் இடையிலான ஒரு சுதந்திரமான கூட்டுக்கு இது ’முன்நிபந்தனை’ ஆகும். இத்தகையதொரு கூட்டு இல்லா விட்டால் சனநாயகம் நிலையற்றதாகும். சோசலிச மாற்றம் சாத்தியமில்லை.” (தொகுதி-23, பக். 354)
லெனினது இந்த வார்த்தைகளை மறந்து போய்விடக்கூடாது.
    கட்சியின் பக்கம் லட்சக் கணக்கான உழைக்கும் மக்களை வென்றெடுப்பதற்கான மிகமிக முக்கியமான  நிபந்தனை என்ற விதத்தில், புரட்சிகர நிலைக்கு அவர்களைக் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் வாயிலாகக் கட்சி முழக்கங்களின் சரியான தன்மையை உணரும்படி செய்யும் திறமைதான் அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் போல்க்ஷ்விக்குகளுடைய செயல்தந்திரங்களின் நான்காவது குறிப்பான அம்சமாகும்.
இந்தச் செயல்தந்திரங்களின் தனிச் சிறப்பான அம்சங்களைப் பற்றிஒரு தெளிவான கருத்தைப் பெறுவதற்கு நான் சொல்லியிருப்பவை முற்றிலும் போதுமானவையாகும் என நினைக்கிறேன்.
 ஜே.வி.ஸ்டாலின் போல்க்ஷ்விக் 1927,ஏப்ரல் 13.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்    செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு  லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 66-81