பின்னுரை
(எழுச்சியும் போரும் குறித்து)1
முன்னுள்ள வரிகளை ஏற்கனவே எழுதி முடித்த பிறகு அக்டோபர் முதல் தேதி நோவயா ழீஸ்ன் மற்றொரு மணியான முட்டாள்தனத்தைத் தலையங்கக் கட்டுரையில் வெளியிட்டிருந்தது. போல்க்ஷெவிக்குகளிடம் அனுதாபம் காட்டுவது போன்று வேடம் தாங்கியும், ‘உங்களைத் தூண்டுவதற்கு இடங்கொடாதீர்கள்’ (தூண்டுதலைப் பற்றி கூக்குரல் என்ற பொறியில் நாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதன் நோக்கம் போல்க்ஷெவிக்குகளைப் பீதியடையச் செய்து அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாமலிருக்கும்படி செய்வதுதான்) என்ற மதியூகி அற்பவாத எச்சரிப்புரை வழங்கியும் வருவதனால் அது இன்னும் ஆபத்தானதாகும்.
அந்த மணிவாசகம் பின்வருமாறு;
”இயக்கம் அளித்துள்ள பாடங்கள், ஜூலை 3-5 இன் பாடங்களைப் போன்றவை ஒரு புறமும், கர்னீலவ் நாட்களின் அனுபவங்கள் மற்றொரு புறமாக நமக்கு மிகத் தெளிவாக காட்டுவது என்னவெனில் மக்களிடையே மிகுந்த செல்வாக்குடைய நிறுவனங்களைத் தன் ஆணையின் கீழ் வைத்துக் கொண்டுள்ள சனநாயகம் உள்நாட்டுப்போரில், தற்காப்பு நிலையில் இருக்குமானால், தோற்கடிப்பதற்கு முடியாத வன்மையுடன் விளங்குகிறது. ஆனால், அது தாக்குதலைத் தொடங்கி நடத்த முற்படுமானால், நடுவேயுள்ள ஊசலாடும் பகுதியினரையெல்லாம் இழந்து தோல்வியடைகிறது”
இந்த வாதத்தில் வெளியிடப்படும் அற்பவாத முட்டாள்தனத்துக்கு மிகச் சிறிதளவேனும், எந்த உருவிலாவது போல்க்ஷெவிக்குகள் இணங்கி விடுவாராயின், அவர்கள் தங்கள் கட்சியையும் புரட்சியையும் அழிவுக்கு ஆளாக்குவார்கள்.
இந்த வாதத்தைக் கூறும் ஆசிரியர் உள்நாட்டுப் போரைப்பற்றிப் பேசும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டு (எல்லாவிதத்திலும் இனிய சுபாவம் படைத்த சீமாட்டிக்கு லாயக்கான விக்ஷயம் இதுதான்) நம்புவதற்கு முடியாத வேடிக்கையான விதத்தில் இப்பிரச்சனை பற்றி வரலாறு கற்பிக்கும் பாடங்களைத் திரித்துக் கூறியுள்ளார்.
பாட்டாளிவர்க்கப் புரட்சியினது செயல்தந்திரங்களின் பிரதிநிதியும், நிறுவனருமாகிய கார்ல்மார்க்ஸ், இந்தப் பாடங்கைளை, இந்த வரலாறு கற்பிக்கும் பாடங்களைப் பின்வருமாறு தொகுத்துரைத்தார்.
”எழுச்சியும் போரும் மற்றக் கலைகளைப் போலவே ஒரு கலையாகும். அது சிற்சில செயல்முறை விதிகளுக்கு உட்பட்டதாகும்.அவ்விதிகளைப் புறக்கணித்தால் அப்படிப் புறக்கணிக்கும் கட்சிக்குச் சீரழிவுதான் ஏற்படும். கட்சிகளின் இயல்பையும், இத்தகைய விடயத்தில் எதிர்ப்படுகிற நிலைமைகளையும் ஒட்டி எழுகின்ற தர்க்கரீதியான அனுமானங்களாகிய இந்த விதிகள் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் இருப்பதனால் 1848 இல் கிடைத்த குறுகிய அனுபவத்தைக் கொண்டு ஜெர்மானியர்கள் அவற்றை நன்கறிந்து கொண்டார்கள். முதலாவது, முடிவு வரை செல்வதற்கு (நேர்பொருள்: உங்களது விளையாட்டின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு)* திடசித்தம் இல்லாத நிலையில், எழுச்சி விசயத்தோடு ஒரு பொழுதும் விளையாடாதீர்கள். எழுச்சியானது நிச்சயமற்ற பரிமாணங்களைக் கொண்ட சமன்பாடாகும்; அந்தப் பரிமாணங்களின் மதிப்பு ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கக் கூடும். உங்களை எதிர்த்து நிற்கும் சக்திகளிடம் நிறுவனம் கட்டுப்பாடு, வழக்கமாகச் செலுத்தும் செல்வாக்கு முதலிய சகல அனுகூலங்களும் இருக்கின்றன” (எழுச்சியின் மிகக் கடினமான உதாரணத்தை மனதில் கொண்டு மார்க்ஸ் கூறுகிறார்; அதாவது, “உறுதியாக நிலைத்துள்ள” பழைய அதிகாரத்தை எதிர்த்து, புரட்சியின் செல்வாக்காலும், அரசாங்கத்தின்* ஊசலாட்டத்தாலும் இன்னும் உடைந்து சரிந்து போகாமலிருக்கிற படையை எதிர்த்துச் செயல்படும் எழுச்சி பற்றிக் கூறுகிறார்;) “பகைவர்களுக்கு எதிராக மிகுந்த படைப்பலம் திரட்டாவிட்டால் எழுச்சியாளர்களுக்குத் தோல்வியும் சீரழிவும் நிச்சயமே. இரண்டாவது, எழுச்சியைத் தொடங்கிவிட்ட பிறகு மிகுந்த மனத் திண்மையுடன் செயல் புரிய வேண்டும். தற்காப்பில் இருந்து கொள்வது ஒவ்வொரு ஆயுதந்தாங்கிய எழுச்சிக்குச் சாவாகத்தான் முடியும்;
பிறைக் கோட்டுக்குள் உள்ளவை லெனின் எழுதியவை.
எதிரிகளுடன் பலப் பரீட்சை சிதறுண்டு வருகையில், எதிர்பாராத விதத்தில் பகைவரைத் தாக்க வேண்டும். தினந்தோறும் புதிய புதிய வெற்றிகளை, அவை சிறியனவையாயிருந்தாலும் பரவாயில்லை ஈட்டிக் கொண்டிருக்க வேண்டும். எழுச்சியில் ஏற்பட்ட முதல் வெற்றியால் கிடைத்த ஊக்கத்தின் ஏற்றத்தை இடைவிடாது காப்பாற்ற வேண்டும். அதிகம் பலம் வாய்ந்தவர்களை எப்பொழுதும் பின்பற்றுகிற, மிகப் பத்திரமான தரப்பு எது என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற, ஊசலாட்டமுள்ள பகுதியினரை இவ்வாறு உங்கள் பக்கம் இழுத்துத் திரட்டிக் கொள்ள வேண்டும்; பகைவர்கள் உங்களுக்கு எதிராகத் தங்களுடைய படை பலத்தைச் சேகரித்துத் திரட்டிக் கொள்வதற்கு முன், அவர்களை பின்வாங்கும்படிச் செய்ய வேண்டும். புரட்சி உத்திகளில் இதுவரை நாமறிந்தவர்களில் தலைசிறந்த நிபுணரான தந்தோன் கூறுவதாவது; துணிச்சல், துணிச்சல், மேலும், மேலும் துணிச்சல்! (ஜெர்மனியில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும், ஜெர்மன் பதிப்பு, 1907, பக்கம் 118).
நோவ்யா ழீஸ்னைச் சேர்ந்த “மார்க்சீயர்கள் ஆகப் போகிறவர்கள்” என்போர் தங்களைப் பற்றி இவ்வாறு சொல்லலாம்; நாங்கள் அதையெல்லாம் மாற்றிவிட்டோம்; மும்மடங்கு துணிச்சலுக்குப் பதில் எங்களிடம் இரண்டு பண்புகள் உள்ளன; ‘ இரண்டு பண்புகள் ஐயா! நிதானம், ஒழுங்கு-கறார், உலக வரலாற்றின் அனுபவமும் மகத்தான பிரஞ்சுப் புரட்சியின் அனுபவமும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. ‘எங்களுக்கு’ முக்கியமாயிருக்கும் விக்ஷயம் மொல்க்ஷாலின் மூக்குக் கண்ணாடியின் மூலம் திரிபுற்றுத் தெரியும் 1917 ஆம் வருடத்து இரண்டு இயக்கங்களின் அனுபவம்தான்.”
இந்த அழகிய மூக்குக் கண்ணாடி இல்லாமல் இவ்வனுபவத்தை நாம் பரிசீலனை செய்து பார்ப்போம்.
ஜூலை 3-4 நாளைய நிகழ்ச்சிகளை “உள்நாட்டுப் போருடன்” நீங்கள் ஒப்பிடுகின்றீர்கள்; ஏனென்றால் அசேக்ஸின்ஸ்கி, பெரிவேர்செவ் ஆகியோரையும் அவர்கள் கூட்டத்தாரையும் நீங்கள் நம்பினீர்கள். இத்தகைய மக்களை நம்புவதும் (ஒரு பெரிய நாளிதழ் சாதனம் அனைத்தும் தங்களுக்கிருந்த போதிலும். ஜூலை 3-5 தேசிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல் சேகரிக்க தாங்களாக ஏதும் செய்யாதிருப்பதும்) நோவயா ழீஸ்ன் கனவான்களுக்குரிய தனிப்பண்பாகும்.
ஜூலை 3-5 தேசிய நிகழ்ச்சிகள் உள்நாட்டுப் போரின் தொடக்க நிலை அல்லவென்றும், போல்க்ஷெவிக்குகள்தான் அதைத் தொடக்க நிலைக்குள் அடக்கி வந்திருந்தார்கள் என்றும், உண்மையில் அது உள்நாட்டுப்போரே என்றும் ஒரு நொடிக்கு வைத்துக் கொள்வோம். அப்படியே வைத்துக் கொண்டு பார்ப்போம்.
அவ்வாறாயின், இந்தப் பாடம் எதை மெய்ப்பித்துக் காட்டுகிறது?
முதலாவது, போல்க்ஷெவிக்குகள் தாக்குதலில் இறங்கவில்லை, ஏனெனில், ஜூலை (3ம் தேதி இரவிலும், ஜூலை 4ம் தேதியிலும் அவர்கள் தாக்குதலில் இறங்கியிருந்தால் பெருமளவிற்கு வெற்றி கண்டிருப்பார்கள் என்பது வாதத்திற்கிடமற்ற விசயமாகும். உள்நாட்டுப் போர் பற்றி (உண்மைவிபரங்கள் காட்டுவது போல் தானாகத் தோன்றிய வெடிப்பை ஏப்ரல் 20-21 ஆம் தேதியது போன்றே ஆர்ப்பாட்டமாக மாற்றுவதைக் குறித்துப் பேசாமல், நோவயா ழீஸ்ன் பேசுவது போல) நாம் பேசுவதானால் போல்க்ஷெவிக்குகள் மேற்கொண்ட தற்காப்பு நிலைதான் அவர்களின் பலவீனமாயிருந்தது.
ஆகவே, நோவயா ழீஸ்ன் மதியூகிகள் கூறுவது தவறு என்று இந்தப் பாடம் நிரூபிக்கிறது.
இரண்டாவதாக, ஜூலை 3-4 இல் போல்க்ஷெவிக்குகள் எழுச்சி தொடங்குவதை நோக்கமாகவே கொள்ளவில்லை என்றால், போல்க்ஷெவிக்குகளின் ஒரு பிரிவுகூட அப்படிப்பட்ட பிரச்சனைகளைக் கிளப்பவேயில்லையென்றால், அதற்குரிய காரணம், நோவயா ழீஸ்னுக்கும் நமக்குமுள்ள வாதத்திற்கு அப்பாற்பட்டது. ஏனெனில் நாம் இப்போது “உள்நாட்டுப் போரின்” அதாவது எழுச்சியின் பாடங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, எழுச்சிக்குப் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இல்லையென்பது வெளிப்படையாக இருந்தமையால், புரட்சி கட்சி எழுச்சி பற்றிய சிந்தனையில் இறங்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதைப் பற்றியல்ல.
தலைநகரத்திலுள்ள சோவியத்துக்களிலும், நாட்டுப்புறத்திலுள்ள சோவியத்துக்களிலும் (மாஸ்கோவில் 49 விழுக்காடு வாக்குகளுக்கு அதிகமாகவே) 1917 ஜூலைக்கு மிகவும் பின்னாலேதான் போல்க்ஷெவிக்குகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர். ஆகவே “பாடங்கள்” எல்லா விதத்திலும் இனிய சுபாவம் படைத்த சீமாட்டி நோவயா ழீஸ்ன் விருப்பத்திற்கு மிகமிக மாறுபட்டவையாகவே இருக்கின்றன என்பது இதிலிருந்து தெரிகிறது.
வேண்டாம், வேண்டாம், நோவயா ழீஸ்ன் கனவான்களே! நீங்கள் அரசியல் விசயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.
புரட்சிகரமான வர்க்கங்களின் முன்னணிப் படைகளிலும் நாட்டிலும் புரட்சிக் கட்சிக்குப் பெரும்பான்மையோரின் ஆதரவு இல்லையென்றால் எழுச்சியைப் பற்றிய பேச்சுக்கிடமில்லை. தவிரவும் எழுச்சிக்குத் தேவையாயிருப்பன. 1. நாடெங்கும் பரவிய அளவில் புரட்சியின் வளர்ச்சி; 2. தார்மீக மற்றும் அரசியல் விக்ஷயத்தில் பழைய அரசாங்கத்தின், உதாரணமாக “கூட்டணி” அரசாங்கத்தின், பூரணமான சீரழிவு; 3. நடுத்தரப் பகுதியினரின் – அதாவது நேற்றைய தினம் அரசாங்கத்தைப் பூரணமாக ஆதரித்து வந்து இன்று முழு ஆதரவு காட்டாமல் இருப்பவர்களின் – முகாமிலே கடுமையான ஊசலாட்டம்.
ஜூலை 3-5 தேதிய நிகழ்ச்சிகளின் “பாடங்கள்” பற்றிப் பேசுகையில் நோவயா ழீஸ்ன் இந்த மிக முக்கியமான பாடத்தைக் கவனிக்கக் கூடத் தவறிவிட்டது. ஏன்? ஏனெனில் ஓர் அரசியல் பிரச்சனையை அரசியல் வாதிகள், அல்ல, முதலாளி வர்க்கத்தைக் கண்டு பீதியடைந்து நிற்கும் படித்தவர்களின் குழு எடுத்துக் கொண்டது.
மேலே செல்வோம், மூன்றாவதாக, தெஸெரெத்தேலி போன்ற கனவான்கள் தங்களுடைய ஜூலைக் கொள்கையின் மூலமாகத் தங்களை அம்பலப்படுத்திக் கொண்ட காரணத்தால்தான், போல்க்ஷெவிக்குகளே தங்களுடைய சொந்த முன்னணி வீரர்கள் என்றும், ‘சமூக- கூட்டணிவாதிகள்’ துரோகிகள் என்றும் மக்கள் திரள் கண்டறிந்ததின் காரணத்தால்தான், ஜூலை 3-4 தேதிக்குப் பிறகே சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்க்ஷெவிக்குகள் ஆகியோரின் சீர்குலைவு தொடங்கியது என்று உண்மை விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கர்னீலவ் கலகத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20 இல் நடந்த பெத்ரோகிராத் தேர்தலில் இச்சீர்குலைவு பூரணமாக மெய்ப்பிக்கப்பட்டது. அதில் போல்க்ஷெவிக்குகள் வெற்றி கண்டனர். “சமூகக் கூட்டணிவாதிகள்” தோற்றனர். (அண்மையில் தியேலொநரோதா எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்த வாக்கு விவரங்களை மறைத்து விட்டு இதனை மறுக்க முயன்றது. ஆனால், இது தன்னையே ஏமாற்றிக் கொள்வதும், தன்னுடைய வாசகர்களை ஏமாற்றுவதுமாகும். ஆகஸ்ட் 24 தேதியிட்ட டேன் என்னும் பத்திரிகையில் கண்ட கணக்கு விபரப்படி நகரில் மட்டும் போட்ட மொத்த வாக்குகளில் காடேட்டுக்களுக்குக் கிடைத்த பங்கு 22 விழுக்காடாக இருந்தது-23 விழுக்காடாக உயர்ந்தது; ஆனால், அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்து விட்டது. மொத்த வாக்குகளில் போல்க்ஷெவிக்குகளுக்குக் கிடைத்த பங்கு 20 விழுக்காடாக யிருந்தது-33 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் குறைவு 10 விழுக்காடே. எல்லா “நடுத்தரக்காரர்களுக்கும்” கிடைத்த பங்கு 58 விழுக்காடாயிருந்தது- 44 விழுக்காடாகக் குறைந்து விட்டது. ஆனால், அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 60 விழுக்காடாகக் குறைந்தது.)
ஜூலை நாட்களுக்குப் பிறகும், கர்னீல்வ் கலகத்துக்கு முன்பும் ஏற்பட்ட சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்க்ஷெவிக்குகள் ஆகியோரின் சீர்குலைவு, அவ்விரு கட்சிகளிலும் “இடதுசாரி”ப் பிரிவின் வளர்ச்சியினாலும் மெய்ப்பிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு கிட்டத்தட்ட 40 விழுக்காட்டை எட்டியிருக்கிறது. கெரென்ஸ்கி போன்ற கனவான்கள் போல்க்ஷெவிக்குகளை அடக்குமுறை வேட்டையாடியதற்கு இது “பழிக்குப்பழி” யாகும்.
ஒரு சில நூறு உறுப்பினர்களை “இழந்துவிட்ட” போதிலும் ஜூலை 3-4 தேதிய நிகழ்வுகளிலிருந்து பாட்டாளிவர்க்கக் கட்சி பிரமாண்டமான அளவுக்கு ஆதாயமடைந்தது. ஏனெனில் இந்தக் கடுமையான நாட்களில் தான் இக்கட்சியின் விசுவாசத்தையும், சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்க்ஷெவிக்குகள் ஆகியோரின் துரோகத்தையும் மக்கள் திரள் பார்த்தறிந்து கொண்டது. ஆகவே “பாடம்” ஒரு சிறிதளவுகூட நோவ்யா ழீஸ்ன் கூறிய “பாடம்” அல்ல, அடியோடு மாறுபட்ட பாடம் அது. அதாவது: மேலும், எழுச்சியைத் தொடங்கிவிட்டால், எதிர்ப்படைகள் சிதறிக் கிடக்கையில் ஏறித்தாக்குங்கள்,எதிர்பாராதிருக்கையில் எதிரியைத் தாக்குங்கள், என்பதே.
”மார்க்சியர்கள் ஆகப் போகிறவர்கள்” என்று சொல்லிக் கொள்ளும் நோவ்யா ழீஸ்ன் கனவான்களே, விக்ஷயம் அப்படித்தானே?
அல்லது “மார்க்சியம்” என்பதின் அர்த்தம், எதார்த்த நிலைமைகளைச் சரியாக சீர்தூக்கியறிந்து அதன் அடிப்படையில் செயல்தந்திரங்களை வகுப்பது அன்று, ஆனால் மதிகெட்ட ரீதியிலே ஆய்ந்து பாராமல் “அரசியல் நிர்ணய சபையைக் கூட்டும் அதே காலத்தில் சோவியத்துக்களின் மாநாடு” என்பதோடு “உள்நாட்டுப்போர்” என்பதையும் போட்டுக் குழப்புவதுதானா?
கனவான்களே! இது வெறும் கேலிக்கூத்தாகும். இது மார்க்சியத்தையும் பொதுவாக தர்க்கவியலையும் நையாண்டி செய்வதாக இருக்கிறது!
“உள்நாட்டுப்போர் என்ற அளவிற்கு வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்குப் புறவய நிலைமையிலே காரணம் எதுவும் கிடையாது என்றால், “சோவியத்துக்களின் மாநாடு, அரசியல் நிர்ணய சபை ஆகியவை” சம்பந்தமாக நீங்கள் ஏன் “உள்நாட்டுப்போரைப்” பற்றிப் பேச வேண்டும்? (நாம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கும் நோவ்யா ழீஸ்ன் தலையங்கக் கட்டுரையின் தலைப்பு இதுதான்.) அப்படிப் பேசுவதானால், புறவய நிலைமைகளிலே உள்நாட்டுப்போருக்குரிய அடிப்படை ஒன்றும் இல்லை. ஆகவே, சோவியத்துக்களின் மாநாடு அரசியல் நிர்ணய சபை போன்ற அமைதியான, அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட, சட்டம், நாடாளுமன்ற நடவடிக்கை ஆகியவற்றின் கோணத்திலிருந்து பார்க்கும் போது ”சாதாரணமாகத்” தோன்றுகின்ற விசயங்களையே செயல்தந்திரங்களுக்கு அச்சாணியாக வைத்துக் கொள்ள முடியும். வைத்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் தெளிவாக வாசகர்களுக்குத் தெரிவித்து அதை நிரூபித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சபையும் உண்மையில் தீர்மானித்து முடிவு கட்டுவதற்குச் சக்தியுள்ளவை தான் என்று அபிப்பிராயம் கொள்வது சாத்தியமே.
ஆனால், இப்பொழுதுள்ள புறவய நிலைமைகளில் உள்நாட்டுப்போர் தவிர்க்க முடியாதது, அல்லது ஏற்படலாம் என்றிருக்குமாயின், நீங்கள் அதைப் பற்றி “வீணாய்ப்” பேசவில்லையென்றால், உள்நாட்டுப்போருக்கான ஒரு நிலைமை இருப்பதைத் தெளிவாகப் பார்த்து, உணர்ந்து, அறிந்துதான் பேசியிருக்கிறீர்கள் என்றால், சோவியத்துக்களின் மாநாட்டையோ, அரசியல் நிர்ணய சபையையோ எவ்வாறு நீங்கள் அச்சாணியாக வைத்துக் கொள்ள முடிந்தது? பசியால் வாடிக்கொண்டிருக்கும், வதைபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் திரளை ஏளனம் செய்வதாகும் இது! இரண்டுமாத காலம் ”காத்திருக்கப்” பட்டினியால் தவிக்கும் மக்கள் சம்மதிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது எந்தப் பொருளாதாரச் சீரழிவு அதிகரித்து வருவதாக நீங்களேதான் தவறாமல் எழுதியவாறு இருக்கிறீர்களோ, அந்தப் பொருளாதாரச் சீரழிவு சோவியத்துக்களின் மாநாட்டுக்காக அல்லது அரசியல் நிர்ணய சபைக்காகக் “காத்திருக்கச்” சம்மதிக்குமா? அல்லது சமாதானத்துக்காகக் காரியப் பற்றுள்ள நடவடிக்கைகளை நாம் எடுக்காமல் விட்டநிலையிலே (போரிலே ஈடுபட்டுள்ள எல்லா நாடுகளுக்கும் நியாயமான சமாதானம் பற்றிய அதிகாரபூர்வமான பிரேரணை வழங்காத நிலையிலே) ஜெர்மானியத் தாக்குதல் சோவியத்துக்களின் மாநாட்டுக்கும், அரசியல் நிர்ணய சபைக்கும் “காத்திருக்கச்” சம்மதிக்குமா? அல்லது, பெப்ரவரி 28 இலிருந்து செப்டம்பர் 30 வரை மிகுந்த கொந்தளிப்போடும் என்றும் காணாத வேகத்தோடும் நடந்து முன்னேறிய ருக்ஷ்யப் புரட்சியின் வரலாறு அக்டோபர் முதல் தேதியிலிருந்து நவம்பர் 29 வரை அதி நிம்மதியான, அமைதியான, சட்டபூர்வமான நடைபோட்டுச் செல்லும் என்றும், வெடிப்புக்கள், திடீர்பாய்ச்சல்கள், ராணுவத் தோல்விகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் அது தவிர்க்கும் என்றும் நீங்கள் முடிவுகட்டுவதற்கு இடந்தரக்கூடிய உண்மை விரவங்கள் உங்களிடம் இருக்கின்றனவா? அல்லது, போல்க்ஷெவிக் கட்சியைச் சேராத துபாஸவ் என்ற அதிகாரி போர்முனையிலுள்ள இராணுவத்தின் சார்பாக அது “சண்டை செய்யாது” என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிற போர் முனையிலுள்ள அந்தச் சேவை, ”குறித்த” நாள்வரைப் பட்டினியாக, குளிரில் உறைந்தபடி பொறுமையுடன் கிடக்குமா? அல்லது நீங்கள் விவசாயிகளின் எழுச்சியை “அராஜகம்” என்றும், “இனக்கொலை” என்றும் சொல்லிவிட்டபடியாலோ, உழவர்களுக்கு எதிராக கேரென்ஸ்கி ராணுவப் படைகளை அனுப்பிவைப்பார் என்பதனாலோ அது உள்நாட்டுப் போரின் ஒரு அம்சமாக இருந்துவருவது நிற்குமா? அல்லது உழவர்கள் மிகுந்துள்ள ஒரு நாட்டில் விவசாயிகளின் எழுச்சியை நசுக்கிவரும் அதே அரசாங்கம் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு அமைதியாக, நேர்மையாக, பாசாங்கு இல்லாமல் வேலை செய்ய முடியும் என்பது சாத்தியமா? நினைக்கத்தான் முடியுமா?
கனவான்களே, “ஸ்மோல்னி கல்லூரியில் நேர்ந்த குழப்பத்தைக்” கண்டு சிரிக்க வேண்டாம்! உங்கள் அணிகளிலும், குழப்பத்திற்குக் குறைவில்லை, உள்நாட்டுப்போர் கிளப்புகிற பயமுறுத்தும் கேள்விகளுக்கு நீங்கள் குழப்பம் மிகுந்த சொற்களைக் கொண்டும், இரங்கத்தக்க அரசியல் சட்டப் பிரமைகளைக் கொண்டும் விடையளிக்கின்றீர்கள். அதனால்தான், போல்க்ஷெவிக்குகள், இவ்வித மனேநிலைகளுக்கு இடங்கொடுப்பார்களானால் அவர்கள் தங்கள் கட்சியையும் தங்கள் புரட்சியையும் அழிப்பார்கள் என்று சொல்கிறேன்.
நி.லெனின்.
நூல்திரட்டு, தொகுதி 34.
பக்கங்கள் 287-339.
அக்டோபர் 1, 1917
1917 செப்டம்பரில் முடிவு –
அக்டோபர் 1 (4) ல் எழுதப்பட்டது
1917, அக்டோபரில் புரோஸ்வெக்ஷேன்யே
இதழில் 1-2-ல் வெளியிடப்பட்டது.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும் செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 82-90
(1- ``எழுச்சியும் போரும் குறித்து`` என உபதலைப்பிட்டது நாம்)
No comments:
Post a Comment