Friday 23 September 2011

விவசாயப் பிரச்சினை பற்றிய கட்சியின் மூன்று அடிப்படையான முழக்கங்கள் ஜே.வி.ஸ்டாலின்

விவசாயப் பிரச்சினை பற்றிய
கட்சியின் மூன்று
அடிப்படை முழக்கங்கள்
 யான் – ஸ்கியிக்கு பதிலுரை
ஜே.வி.ஸ்டாலின்
(லெனினியத்தின் பிரச்சினைகள்)
உண்மையிலேயே, சரியான நேரத்தில் தங்களது கடிதம் எனக்குக் கிடைத்தது. சிறிது தாமதமாக நான் பதில் எழுதுகிறேன்; அதற்காக தயவு செய்து மன்னிக்கவும்,
1. லெனின் கூறுகிறார்: “ஒவ்வொரு புரட்சியினுடைய தலையாய பிரச்சினை அரசு அதிகாரத்தைப் பற்றிய பிரச்சினைதான்” (தொகுப்பு. 12. பக். 142-ஐப் பார்க்கவும்).எந்த வர்க்கத்தின் அல்லது வர்க்கங்களின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ளது; எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் தூக்கியெறியப்பட வேண்டும்; எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் – “ஒவ்வொரு புரட்சியினதும் முக்கியமான பிரச்சினை” இத்தகையதாகத்தான் உள்ளது.
புரட்சியின் எந்தவொரு குறிப்பான கட்டத்தின் காலப்பகுதி முழுமைக்கும் செல்லுபடியாகும் தன்மையை கொண்டிருக்கின்ற கட்சியின் அடிப்படையான போர்த்தந்திர முழக்கங்கள் லெனினது இந்த முக்கியமான கோட்பாட்டை முழுமையான அடிப்படையாக கொண்டிருக்காவிட்டால் அவை அடிப்படையான முழக்கங்கள் என்று அழைக்கப்பட முடியாது.
வர்க்கச் சக்திகளைப் பற்றிய மார்க்சியப் பகுப்பாய்வைக் கொண்டிருந்தால் மட்டுமே, வர்க்கப் போராட்ட முனையில் புரட்சிகர சக்திகளை முன்னிறுத்துவதற்கான சரியான திட்டத்தை  வரையறுத்திருந்தால் மட்டுமே,  புரட்சியின் வெற்றிக்கான போராட்ட முனைக்கு, புதிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்ட முனைக்கு மக்கள் திரளைக் கொண்டு வருவதற்கு உதவினால் மட்டுமே,  இந்த பணியை நிறைவு செய்வதற்கு அவசியமாக உள்ள ஒரு பெரிய, சக்திவாய்ந்த ஒரு அரசியல் இராணுவத்தை  பரந்துபட்ட மக்கள் திரளிலிருந்து அமைக்கக் கட்சிக்கு உதவினால் மட்டுமே, அடிப்படையான முழக்கங்கள் சரியான முழக்கங்களாகும்.
புரட்சியின் எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்தின் போதும் தோல்விகளும் பின்வாங்குதல்களும், தோல்விகளும் செயல்தந்திரத் தவறுகளும் ஏற்படலாம்; ஆனால் அதற்காக அடிப்படையான போர்த் தந்திர முழக்கம் தவறு என்று பொருளாகாது. இவ்வாறு எடுத்துக் காட்டாக, நமது புரட்சியின் முதல் கட்டத்தில், “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் வெற்றியாக ஜாருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக விவசாய வர்க்கம் முழுவதுடனும், நடுநிலையாக்கப்பட்ட முதலாளிகளுடனும் ஒன்றுபடுக” – என்ற அடிப்படை முழக்கமானது, 1905-ம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தது என்றாலும் கூட முழுக்க முழுக்க சரியானதொரு முழக்கமாக இருந்தது.
எனவே, கட்சியின் அடிப்படை முழக்கப் பிரச்சினையை புரட்சியின் வளர்ச்சிகளின் எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்தின் வெற்றிகள் அல்லது பின்னடைவுகளின் பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
அடிப்படை முழக்கத்திலிருந்து எழுகின்ற புரட்சியின் பல முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் போதோ அல்லது அவை நிறைவேற்றப்படுவது ஒரு நீண்ட காலத்துக்கு தாமதப்படுத்தப்பட்டிருக்கும் போதோ அல்லது அவை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு புதிய புரட்சி தேவைப்படலாம் என்ற நிலை இருக்கும் போதோ கட்சியின் அடிப்படை முழக்கம் புரட்சியின் போக்கில்  பழைய வர்க்கங்களின் அல்லது வர்க்கத்தின் அதிகாரம் தூக்கியெறியப் படுவதற்கு ஏற்கனவே இட்டுச் சென்றிருப்பதும் நடக்கலாம். ஆனால் இதற்காக அடிப்படைமுழக்கம் தவறாக இருந்தது என்று பொருளாகாது. இவ்வாறு எடுத்துக்காட்டாக, 1917-ம் ஆண்டு பிப்ரவரி புரட்சி ஜாராட்சியையும் நிலப்பிரபுக்களையும் தூக்கியெறிந்தது! ஆனால் நிலப்பிரபுக்களின் எஸ்டேட்டுக்களை பறிமுதல் செய்தல் போன்றவற்றிற்கு அது இட்டுச் செல்ல வில்லை. ஆனால், அதற்காக, புரட்சியின் முதல் கட்டத்தில் நமது அடிப்படை முழக்கம் தவறு என்று பொருளாகாது.
அல்லது வேறு உதாரணங்கள்; அக்டோபர் புரட்சி முதலாளிய வர்க்கத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்திடம் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தது; ஆனால் அது
(அ) பொதுவாக முதலாளித்துவப் புரட்சி நிறைவு செய்யப்படுவதற்கும்
(ஆ) குறிப்பாக, கிராமப்புற மாவட்டங்களில் குலாக்குகள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் உடனடியாக இட்டுச் சென்று விடவில்லை.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவை தாமதமாயின. ஆனால், அதற்காகப் புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் நமது அடிப்படை முழக்கம் – “பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்திற்காக, நடுத்தர விவசாயிகளை நடுநிலையாக்கி, நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஏழைவிவசாயிகளுடன் ஒன்றிணைக” – என்பது தப்பு என்று பொருளாகாது.
எனவே, கட்சியின் அடிப்படை முழக்கத்தின் பிரச்சினையை, அந்த முழக்கத்திலிருந்து எழுகிற எந்தவொரு குறிப்பான கோரிக்கையையும் நிறைவேற்றுகின்ற காலம், வடிவங்கள் ஆகியவற்றின் பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
எனவேதான், எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும் புரட்சிகர இயக்கத்தின் பகுதியான வெற்றிகள் அல்லது தோல்விகளைக் கணக்கில் கொண்டு நமது கட்சியின் போர்த்தந்திர முழக்கங்களை மதிப்பிட முடியாது; மேலும் அந்த முழக்கங்களிலிருந்து எந்தவொரு குறிப்பான கோரிக்கையை அடைகின்ற காலம், வடிவங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் அவை மதிப்பிடப்பட முடியாது. புரட்சியின் வெற்றிக்காக, புதிய வர்க்கத்தின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதற்காக, வர்க்கச் சக்திகள் பற்றியும் ஒரு மார்க்சியப் பகுப்பாய்வின் கண்ணோட்டத்தின் மூலம் மட்டுமே கட்சியின் போர்த்தந்திர முழக்கங்கள் மதிப்பிடப்பட முடியும்.
இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுமுறை பற்றிய பிரச்சினையை நீங்கள் பார்க்காமல் விடுவதில் அல்லது அதனைப் புரிந்து கொள்ளாததில் உங்களது தவறு அடங்கியிருக்கிறது.
2.  நீங்கள் உங்கள் கடிதத்தில் எழுதுகிறீர்கள்:
”அக்டோபர் வரை மட்டுமே நாம் விவசாய வர்க்கம் முழுவதுடனும் இணைந்திருப்போம் எனக் கருதுவது சரியா? இல்லை; அது சரியில்லை. ‘விவசாய வர்க்கம் முழுவதுடனும் கூட்டணி’ என்ற முழக்கமானது- முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதில்        விவசாய வர்க்கம் முழு அக்கறை காட்டியது என்ற அளவில்- அக்டோபருக்கு முன்பும், அக்டோபரின் போதும், அக்டோபருக்குப் பிந்திய முதல் காலகட்டத்திலும் செல்லுபடியானதாக இருந்தது.”

ஜார், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் அதிகாரத்தைத் தூக்கியெறிவதும், பாட்டாளி வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரத்தை நிறுவுவதும் பணியாக இருந்த புரட்சியின் முதல் கட்டத்தின் போது (1905 முதல் 1917 பிப்ரவரி வரை) கட்சியின் போர்த்தந்திர முழக்கமானது, முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிவதும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவதும் பணியாக இருந்த  புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் போதான (பிப்ரவரி 1917-லிருந்து அக்டோபர் 1917 வரை) போர்த்தந்திர முழக்கத்திலிருந்து வேறுபடவில்லை என்பதையே மேற்கண்ட மேற்கோள் தெரிவிக்கிறது..
      இதன் விளைவாக, நீங்கள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் பாட்டாளிவர்க்க-சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாட்டை மறுக்கிறீர்கள். புரட்சியின் குறிப்பிட்ட கட்டத்தில் அதிகாரத்தைப்பற்றிய பிரச்சினைதான், எந்த வர்க்கம் தூக்கியெறியப்படுகிறது. எந்த வர்க்கத்துக்கு அதிகாரம் மாற்றித் தரப்படுகிறது என்ற பிரச்சினைதான் ஒரு போர்த்தந்திர முழக்கத்தின் அடிப்படையான  கருத்துரு என்ற மிக எளிமையான ஒரு பொருளைப் புரிந்து கொள்ள நீங்கள் மறுப்பதால்தான், இந்தத் தவறைச் செய்கிறீர்கள் என்பது தெளிவு. இந்த விக்ஷயத்தில் நீங்கள் அடிப்படையிலேயே தவறிழைத்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையில்லை.
      அக்டோபரின் போதும் அக்டோபருக்குப் பிந்திய முதல் கால கட்டத்திலும்,முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதில் விவசாய வர்க்கம் முழுவதும் ஆர்வம் காட்டிய வரை “விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றிணைக” என்ற முழக்கத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அக்டோபர் கிளர்ச்சியும் அக்டோபர் புரட்சியும் இத்தோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டன என்று அல்லது அவற்றின் பிரதானப் பணி முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வது தான் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்கள் இதை எங்கிருந்து பெற்றீர்கள்? முதலாளிய வர்க்க அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது என்பது முதலாளித்துவப் புரட்சியின் கட்டமைப்புக்குள்ளேயே நடைபெறும் என நீங்கள் கருதுகின்றீர்களா? பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை அடைவது என்பது முதலாளித்துவப் புரட்சியின் கட்டமைப்புக்கு அப்பால் செல்வது எனப் பொருள்பட வில்லையா?
      குலாக்குகள் (உண்மையிலேயே அவர்களும் விவசாயிகள்தான்) முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்திடம் அதிகாரத்தை மாற்றித்தருவதை ஆதரித்தார்கள் என்று எவ்வாறு நீங்கள் உறுதியாக கருத முடியும்?
      நிலத்தை தேசிய மயமாக்குதல், நிலத்தின் தனியுடைமையை ஒழித்தல், நிலத்தை வாங்குவதற்கும், விற்பதற்கும் தடைவிதித்தல் போன்றவற்றின் மீதான சட்டத்தை – அது ஒரு சோசலிச சட்டமாகக் கருதப்பட முடியாது என்ற போதிலும் – நாம் குலாக்குகளுடன் கூட்டணியாக இல்லாமல், அவர்களை எதிர்த்த ஒரு போராட்டத்தின் மத்தியில் அமுலாக்கினோம் என்பதை எவ்வாறு உங்களால் மறுக்கமுடியும்?
      குலாக்குகள் (அவர்களும் கூட விவசாயிகள்தான்) மில்கள், தொழிற்சாலைகள், ரயில் பாதைகள், வங்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்வதற்கான சோவியத் அரசாங்கத்தின் ஆணைகளை அல்லது ஏகாதிபத்தியப் போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுதல் பற்றிய பாட்டாளிவர்க்க முழக்கத்தை ஆதரித்தார்கள் என்று நீங்கள் எப்படி வலியுறுத்திச் சொல்லமுடியும்.
      அக்டோபரில் அடிப்படையான விக்ஷயம் இதைப் போன்ற செயல்கள் அல்ல, முதலாத்துவத்தைத் தூக்கியெறிவது அல்ல, ஆனால் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதே ஆகும் என்று நீங்கள் எப்படி வலியுறுத்திச் சொல்ல முடியும்?
      அக்டோபர் புரட்சியின் பிரதான பணிகளில் ஒன்றாக முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்வது இருந்தது என்பதையும், அக்டோபர் புரட்சி இல்லாமல் அது பூர்த்தி செய்யப்பட்டிருக்க முடியாது என்பதையும், முதலாளித்துவப் புரட்சி பூர்த்தி செய்யப்படாமல் அக்டோபர் புரட்சியை உறுதி செய்திருக்க முடியாது என்பதையும், அக்டோபர் புரட்சி முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்தது என்ற அளவில் அது எல்லா விவசாயிகளின் ஆதரவையும் பொறுவதற்கு உரியதாக இருந்தது என்பதையும் யாரும் மறுக்கவில்லை. இவையனைத்தும் மறுக்கப்பட முடியாதவை. ஆனால் இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்வது என்பது அக்டோபர் புரட்சியின் துணை நிகழ்வு அல்ல  மாறாக அதனுடைய சாரம்சமாக, அதனுடைய பிரதான குறிக்கோளாக இருந்தது என்று கருதப்படமுடியுமா? அப்படியானால் முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிதல், பாட்டாளிவர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதாவது புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் போர்த்தந்திர முழக்கத்தின் முக்கிய கருத்துருவாக உள்ள பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாக வெளிப்படவில்லையா?
      பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று என்னவென்றால், அது முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்து மத்தியகால அசிங்கங்களைத் துடைத்தெறி்ந்துவிட்டது என்பதாகும் நாட்டுப்புற மாவட்டங்களில் இது அனைத்துக்கும் மேலானதாகவும், உண்மையிலேயே தீர்மானகரமான முக்கியத்துவம் உடையதாகவும் இருந்தது. இதில் தவறியிருந்தால் கடந்த நூற்றாண்டின் பின்பாதியில் மார்க்ஸ் கூறிய பாட்டாளி வர்க்கப் புரட்சியை விவசாயப் போர்களுடன் ஒன்றிணைத்தல் என்ற ஒன்றைக் கொண்டுவந்திருக்க முடியாது; இதில் தவறியிருந்தால், பாட்டாளிவர்க்கப் புரட்சியே கூட நிலைநிறுத்தப்பட்டிருக்க முடியாது.
      மேலும் கூடுதலாக, கீழ்வருகின்ற முக்கியமான சூழ்நிலைகள் மனதில் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தி ஒரே வீச்சில் அடையப்பட்டிருக்க முடியாது. உண்மையிலேயே அது நீங்கள் உங்கள் க்டிதத்தில் கூறியிருப்பது போல் 1918 ம் ஆண்டின் ஒரு பகுதியை மட்டும் தழுவியில்லாமல் 1919 ம் ஆண்டின் ஒரு பகுதியையும் (வோல்கா மாகாணங்களும் யூரல்களும்) 1919-1920 ம் ஆண்டுகளின் பகுதியையும் (உக்ரைன்)இது தழுவிப் பரவியிருந்தது. நிலப் பிரபுக்களின் ஆட்சி அதிகாரம் மீண்டும் கொண்டுவரப்படும் அபாயத்தை விவசாய வர்க்கம் முழுமையும் எதிர் நோக்கிய போது, முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்யும் பொருட்டும், அந்த புரட்சியின் பலன்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும் சோவியத் அதிகாரத்தைச் சுற்றி அணிதிரள விவசாய வர்க்கம் முழுவதுமே நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் இருந்த சூழ்நிலையை அதாவது கோல்சாக், டெனிகின் ஆகிய  தளபதிகளின் முன்னேற்றத்தைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். லெனினது படைப்புக்களில் இருந்து நீங்கள் மேற்கோள் காட்டுகின்ற பகுதிகளையும் கட்சியின் முழக்கங்களைச் செயலுக்குக் கொண்டுவரும் நுட்பங்களையும் நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமா னால், நிலவும் யதார்த்தத்தின் இந்தச் சிக்கலான வேறுபட்ட நிகழ்ச்சிப் போக்குகள் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்யும் பணியுடன் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் நேரடியான சோசலிசப் பணிகள் இணைந்திருக்கின்ற இந்த “விநோதமான” பின்னிப் பிணைந்த நிலைமைகள் ஆகியவற்றை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
      புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் போது கட்சி முழக்கம் தவறாக இருந்தது என்றும் அந்த முழக்கம் புரட்சியின் முதற் கட்டத்தின் போதிருந்த முழக்கத்திலிருந்து மாறுபட்டது என்றும் இந்தப் பின்னிப் பிணைந்த நிலை நிரூப்பிக்கிறது என்று சொல்ல முடியுமா?  இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. இதற்கு மாறாக, பாட்டாளிவர்க்க அதிகாரம் போன்றவற்றுக்காக நகர்ப்புறத்திலும், நாட்டுப்புறத்திலும் ‘தொழில் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக ஏழை விவசாயிகளுடன் ஒன்றிணைக’ என்கிற புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் கட்சியின் முழக்கமானது சரியானது என்பதையே இந்தப் பின்னிப் பிணைந்த நிலை உறுதிப்படுத்துகின்றது. ஏன்? ஏனெனில் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்வதற்கு முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிலை நாட்டுவது அக்டோபரில் முதன்மையான அவசியமாக இருந்தது; ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு அதிகாரம் தான் முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்யத் திறனுடைய ஒன்றாகும். அக்டோபரில் பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு முதலாளிய வர்க்கத்தைத் தூக்கியெறியக் கூடிய – பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிறுவக் கூடிய – சக்திவாய்ந்த ஒரு போதுமான அரசியல் இராணுவத்தை அக்டோபருக்காக தயார் செய்வதும், ஒழுங்கமைப்பதும் அவசியமாக இருந்தது; “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்காக முதலாளிய வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஏழைவிவசாயி வர்க்கத்துடன் கூட்டணி அமைத்திடுக” என்ற முழக்கத்தின் கீழ் மட்டும்தான் இப்படிப்பட்டதொரு அரசியல் இராணுவத்தைத் தயார் செய்து ஒழங்கமைக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தேவையில்லை.
      நாம் 1917 ஏப்ரல் முதல் 1917 அக்டோபர் வரை செயல்படுத்திய இத்தகையதொரு போர்த்தந்திர முழக்கம் இல்லாமல், நாம் இத்தகையதொரு அரசியல் இராணுவத்தைப் பெற்றிருக்க முடியாது; எனவே நாம் அக்டோபரில் வெற்றி பெற்றிருக்க முடியாது; முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிந்திருக்க முடியாது; அதன் விளைவாக  முதலாளித்துவப் புரட்சியைப் பூர்த்தி செய்திருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
      அதனால்தான் முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தியைப் புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் போர்த்தந்திர முழக்கத்திலிருந்து – இதன் நோக்கம் பாட்டாளிவர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்வதாகும் – வேறுபடுத்தக் கூடாது.
      இந்த “முரண்பாடுகளைத்” தவிர்ப்பதற்கு ஒரேஒரு வழிதான் உள்ளது; அதாவது புரட்சியின் முதல் கட்டத்தின் (முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி) போர்த்தந்திர முழக்கத்துக்கும், புரட்சியின் இரண்டாவது   கட்டத்தின் (பாட்டாளி வர்க்கப் புரட்சி) போர்த்தந்திர முழக்கத்துக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாட்டை அங்கிகரிப்பதும்தான் அது;  புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்காக  விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றிணைந்து நடைபோட்டோம் என்பதையும், புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் மூலதனத்தின் அதிகாரத்துக்கு எதிராக, பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு ஆதரவாக ஏழை விவசாயிகளுடன் ஒன்றிணைந்து நாம் நடைபோட்டோம் என்பதையும் அங்கிகரிப்பதுதான் அது.
      மேலும் இதை நாம் அங்கிகரித்தேயாக வேண்டும்; ஏனெனில் புரட்சியின் முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் வர்க்க சக்திகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம்மை அவ்வாறு செய்யுமாறு பணிக்கிறது. இல்லையெனில், 1917 பிப்ரவரி வரை பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஒரு புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான முழக்கத்தின் கீழ் நாம் பணியாற்றுவோம் என்ற உண்மையை, அதேசமயம் இந்த முழக்கத்தை 1917 பிப்ரவரிக்குப் பின்னர் பாட்டாளிகள் மற்றும் ஏழைவிவசாயிகளின் சோசலிச சர்வாதிகாரத்துக்கான முழக்கம் பின்னுக்குத் தள்ளியது என்ற உண்மையை விளக்குவது என்பது சாத்தியமாகியிருக்காது.
      உங்களுடைய திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் 1917 மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஒரு முழக்கத்திற்குப் பதிலாக இன்னொரு முழக்கம் முன்வைக்கப்பட்டதை விளக்கியிருக்க முடியாது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.
      கட்சியின் இரண்டு போர்த்தந்திர முழக்கங்களுக்கும் இடையிலான இந்த அடிப்படையான வேறுபாட்டை லெனின் வெகுகாலத்துக்கு முன்பே தனது “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற பிரசுரத்தில் சுட்டிக்காட்டினார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது கட்சியின் முழக்கத்தைப் பின்வருமாறு உருவாக்கினார்.
      ”பாட்டாளி வர்க்கமானது எதேச்சாதிகாரத்தின் எதிர்ப்பைப் பலாத்காரமாக ஒடுக்கவும் முதலாளிய வர்க்கத்தின் நிலையற்ற தன்மையை ஸ்தம்பிக்கச் செய்யும் பொருட்டும் விவசாய வர்க்கத்துடன் ஒன்றிணைவதன் மூலம் முதலாளித்துவப்புரட்சியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.” (பார்க்க தொகுப்பு 8 பக்கம் 96)
வேறுவார்த்தைகளில் கூறினால், ஒரு ஜனநாயகப் புரட்சிக்காக – முதலாளிகள் நடுநிலையாக்கப்படும் அதே சமயத்தில் – எதேச்சாதிகாரத்துக்கு எதிராக விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றிணைய வேண்டும் என்பதாகும்.
சோசலிச புரட்சிகான தயாரிப்புக் காலக்கட்டத்தில் கட்சியின் முழக்கத்தை அவர் பின்வருமாறு உருவாக்கினார். 
“பாட்டாளிவர்க்கமானது முதலாளிவர்க்கத்தின் எதிர்ப்பைப் பலாத்காரமாக நசுக்கவும், விவசாயிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரின் நிலையற்ற தன்மையை ஸ்தம்பிக்கச் செய்யும் பொருட்டும், மக்களிடையேயுள்ள அரைப் பாட்டாளி வர்க்கச் சக்திகளுடன் ஒன்றிணைவதன் மூலம் சோசலிசப் புரட்சியை நிறைவேற்ற வேண்டும்” (மேற்கண்ட நூல்)
வேறுவார்த்தைகளில் கூறினால்; சோசலிசப் புரட்சிக்காகப் பொதுவாக முதலாளிய வர்க்கத்துக்கு எதிராக – நகரப்புறத்திலும் கிராமப்புறத்திலும் குட்டி முதலாளிய வர்க்கம் நிலைநிறுத்தப்படுகின்ற அதே சமயத்தில் – ஏழைவிவசாயிகளுடனும் அரைப்பாட்டாளி வர்க்க மக்கள் பிரிவுகளுடனும் ஒன்றிணைய வேண்டும்.
1905-ல் நிலை அதுவாகும்.
1917 ஏப்ரலில், லெனின் பாட்டாளிவர்க்கம், விவசாயிவர்க்கம் ஆகியவற்றின் புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரம் முதலாளிய வர்க்கத்தின் உண்மையான அதிகாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது என அந்த  நேரத்தின் அரசியல் சூழலை விளக்கிக் கீழ்வருமாறு கூறினார்.
“ரக்ஷ்யாவின் தற்போதைய சூழ்நிலையின் தனிச்சிறப்பான அம்சம் என்னவென்றால், இது வர்க்க உணர்வு போதாமையின் காரணமாகவும் பாட்டாளிவர்க்கம் ஸ்தாபனமாக்கப்படாத காரணத்தாலும் அதிகாரத்தை முதலாளிகள் கையில் ஒப்படைத்த புரட்சியின் முதல்* கட்டத்தில் இருந்து பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கத்தின் மிகமிக ஏழைப் பிரிவினர்* ஆகியோரின் கையில் அதிகாரத்தை அது ஒப்படைக்க வேண்டிய இரண்டாவது கட்டத்திற்கான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.” (பார்க்க, “லெனினுடைய ஏப்ரல் ஆய்வுகள்” தொகுப்பு 20, பக்கம்.88) 
அக்டோபர் புரட்சியின் தயாரிப்புக்கள் முழு வீச்சில் இருந்த 1917 ஆகஸ்ட் இறுதியில் லெனின், “விவசாயிகளும் தொழிலாளர்களும்” என்ற ஒரு தனிக்கட்டுரையில் கீழ்வருமாறு எழுதினார்:
“பாட்டாளி வர்க்கமும் விவசாயி வர்க்கமும்* மட்டும்தான் முடியாட்சியைத் தூக்கியெறிய முடியும் – அந்த நாட்களில் (1905-ஸ்டாலின்) நமது வர்க்கக் கொள்கையின் அடிப்படையான வரையறை இதுதான். மேலும் அந்த வரையறை சரியான ஒன்றாக இருந்தது. 1917 பிப்ரவரி- மார்ச் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது ஏழை விவசாயிகளை* (நமது திட்டம் அவர்களை அரைப்பாட்டாளி என அழைக்கிறது.) வழிநடத்திச் செல்லுகின்ற பாட்டாளி வர்க்கம் தான் ஜனநாயக அமைதிவழியின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், போர் உருவாக்கிய காயங்களைக் குணப்படுத்தவும், மிகமிக அதிகமாகவும் அவசரமாகவும் ஆகியுள்ள சோசலிசத்தை நோக்கி நடைபோடத் துவங்கவும் முடியும் – இப்போது நமது வர்க்கக் கொள்கையின் வரையறை இப்படித்தான் உள்ளது. (பார்க்க, தொகுதி 21, பக்கம்,111.)
*அழுத்தம் ஸ்டாலினுடையது
 நாம் இப்போது பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் ஒரு சர்வாதிகாரத்தைப் பெற்றுள்ளோம் என்பதைக் குறிப்பதாக இது புரிந்துகொள்ளப்படக் கூடாது. அது உண்மையிலேயே அவ்வாறு இல்லை. பாட்டாளி வர்க்கம் ஏழைவிவசாயி வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரம் என்ற முழக்கத்தின் கீழ் நாம் அக்டோபரை நோக்கி அணிவகுத்தோம்; இடது சோசலிஸ்ட புரட்சியாளர்களுடன் நாம் உறவு கொண்டிருந்ததற்கேற்ப முறையாக அதை அக்டோபரில் நடைமுறைப்படுத்தினோம்; ஏற்கனவே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் யதார்த்தத்தில் நிலவிய போதிலும் போல்சுவிக்குகளாகிய நாம் பெரும்பான்மையாக இருந்ததால், நாம் அவர்களுடன் தலைமையைப் பகிர்ந்து கொண்டோம். இடது சோசலிஸ்ட் – புரட்சியாளர்களுடைய “புட்ஸ்களுடைய” அதாவது இடது சோசலிஸ்ட் – புரட்சியாளர்களின் முகாமுடனான உறவு முறிந்த பின்னர், ஒரே கட்சியின் கைகளுக்கு அதாவது வேறு எந்தக் கட்சியுடனும் அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாத  - பகிர்ந்து கொள்ளவும் முடியாத நமது கட்சியின் கைகளுக்கு தலைமை மொத்தமாகவும், முழுமையாகவும் மாறிய போது முறைப்படி பாட்டாளி வர்க்கம், ஏழைவிவசாயி வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரம் இல்லாதொழிந்து விட்டது. நாம் இதைத்தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என அழைக்கிறோம்.
இறுதியாக, 1918 நவம்பரில் லெனின் நாம் கடந்து வந்திருந்த புரட்சிப் பாதையைப் பின்னோக்கிப் பார்த்து, பின்வருமாறு எழுதினார்.
“ஆம், விவசாய வர்க்கம் முழுவதுடனும் நாம் அணிவகுத்துச் செல்லுகின்ற வரை நமது புரட்சி முதலாளித்துவ புரட்சிதான். இது நமக்கு எவ்வளவு தெளிவாக விளக்கியிருக்க வேண்டுமோ அவ்வளவு தெளிவாக விளங்கியிக்கின்றது. 1905 ஆம் ஆண்டு முதல் நாம் இதை நூறாயிரம் தடவை கூறியிக்கின்றோம். இந்த வரலாற்றின் நிகழ்வுப் போக்கின் அவசியமான கட்டத்தைத் தாண்டிச் செல்வதற்கோ அல்லது ஆணைகளின் மூலம் அதை ஒழித்து விடுவதற்கோ நாம் ஒரு போதும் முயற்சிக்கவில்லை……. ஆனால் அக்டோபர் புரட்சிக்கு வெகுகாலத்துக்கு முன்பே அதாவது நாம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, 1917 ஏப்ரல் ஆரம்பத்திலேயே* நாம் இதை வெளிப்படையாக அறிவித்து  மக்களுக்கும் பின்வருமாறு விளக்கிச் சொன்னோம்; இந்தக் கட்டத்தில் இப்போது நாம் புரட்சியை நிறுத்தக் கூடாது; ஏனெனில், நாடு முன்னோக்கிச் செல்கிறது; முதலாளித்துவம் முன்னேறியுள்ளது; அழிவு முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது; இது (ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) சோசலிசத்துக்கு முன்னோக்கிச் செல்லக் கோரும்; ஏனெனில் போரினால் களைப்படைந்து இருக்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கு, உழைப்பாளிகள், சுரண்டப்படும் மக்கள் ஆகியோரின் துன்ப துயரங்களைத் தணிப்பதற்கு முன்னேறிச் செல்ல வேறு வழியேதும் கிடையாது. நாம் சொல்லியபடிதான் நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. நமது கருத்து சரியானது என்பதை நாம் மேற்கொண்ட புரட்சிப்பாதை உறுதிப்படுத்தியுள்ளது. முதலில் நாம் மத்திய கால ஆட்சிக்கு எதிராக, நிலப்பிரபுக்களுக்கு எதிராக முடியாட்சிக்கு எதிராக விவசாய வர்க்கம் ‘முழுவதுடனும்’ ஒன்றுபட்டோம். (அதுவரை அது முதலாளித்துவப் புரட்சியாக அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக இருக்கின்றது.) பிறகு நாம் நாட்டுப்புறப் பணக்காரர்கள், குலாக்குகள், லாபநோக்குக் கொண்டோர்கள்* ஆகியோர் உள்ளிட்ட முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஏழைவிவசாயிகளுடன், அரைப் பாட்டாளிகளுடன், சுரண்டப்படும் எல்லா மக்களுடனும் ஒன்றிணைந்தோம்; அப்போது புரட்சி சோசலிசப் புரட்சியாக ஆகிறது.” (பார்க்க, தொகுதி 28, பக்கம், 390-391)
நீங்கள் பார்ப்பதுபோல, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தின் முதல் போர்த்தந்திர முழக்கத்துக்கும், அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தின் இரண்டாவது போர்த்தந்திர முழக்கத்துக்கும் இடையேயுள்ள ஆழமான வேறுபாட்டை லெனின் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். “எதேச்சாதிகாரத்துக்கு எதிராக விவசாய வர்க்கம் முழுவதுடனும் ஒன்றுபடுக” என்பதே முதல் முழக்கமாக இருந்தது. “முதலாளிய வர்க்கத்துக்கு எதிராக ஏழை விவசாயிகளுடன் ஒன்றுபடுக” என்பதே இரண்டாவது முழக்கமாக இருந்தது.
அக்டோபருக்குப் பிறகு மிகக் கணிசமான காலத்திற்கு முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தி இழுத்தடித்துக் கொண்டு சென்றது என்ற உண்மையும், முதலாளித்துவப் புரட்சியை பூர்த்தி செய்வதற்காக எந்த அளவு நாம் போராடிக் கொண்டிருந்தோமோ  அந்த அளவுக்கு விவசாய வர்க்கம் ”முழுவதும்” நம்மிடம் அனுதாபத்துடன் இருந்தது என்ற உண்மையும் – நான் மேலே கூறியது போல, அக்டோபரை நோக்கி நாம் அணி வகுத்துச் சென்று ஏழைவிவசாய வர்க்கத்துடன் ஒன்றிணைந்து அக்டோபரில் புரட்சியில் வெற்றி ஈட்டினோம் என்கிற அடிப்படையான கருத்தையும் குலாக்குகள் (அவர்களும் கூட விவசாயிகள்தான்) எதிர்ப்புக்கு எதிராக ஏழை விவசாயிகளுடன் ஒன்றிணைந்து, ஊசலாடுகின்ற நடுத்தர விவசாய வர்க்கத்துடன் ஒன்றிணைந்து முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினோம். (முதலாளித்துவ புரட்சியைப் பூர்த்தி செய்வது அதனுடைய பணிகளில் ஒன்றாக இருந்தது.) என்ற அடிப்படையான கருத்தையும் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.
இது தெளிவாக உள்ளது என நான் கருதுகிறேன்.
3.  நீங்கள் மேலும் உங்கள் கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறீர்கள்;
”நாட்டுப்புற ஏழைகளுடன் ஒன்றிணைக, நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்துக என்ற முழக்கத்தின் கீழ் நாம் அக்டோபரை வந்தடைந்தோம்” என வலியுறுத்திச் சொல்வது உண்மையா? இல்லை, அது உண்மையில்லை. மேலே கூறப்பட்ட காரணங்களாலும், லெனினுடைய மேற்கோள்களிலிருந்தும் ‘விவசாயிகளிடையே வர்க்கப்பிரிவு முதிர்ச்சியடைந்த போதுதான்’ (லெனின்) அதாவது 1918-ம் ஆண்டின் கோடைக் காலத்திலும், இலையுதிர்காலத்திலும் தான் இந்த முழக்கம் எழுந்திருக்க முடியும் என்பது தெரிய வரும்.”
                  மேலே கூறப்பட்ட பகுதியிலிருந்து வெளிவருவது என்னவென்றால் நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்தும் கொள்கையைக் கட்சியானது அக்டோபர் தயாரிப்புக் காலகட்டத்திலும், அக்டோபரிலும் கடைப்பிடிக்கவில்லை; அக்டோபருக்குப் பின்புதான், குறிப்பாக 1918-க்குப் பின்புதான், ஏழைவிவசாயிக் கமிட்டிகள் கலைக்கப்பட்டபோதுதான் கட்சி அந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பது என்பதே ஆகும். இது முற்றிலும் தவறானது ஆகும்.  (*அழுத்தம் ஸ்டாலினுடையது.)

மாறாக, நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்தும் கொள்கையானது 1918- க்குப் பிறகு ஏழை விவசாயக் கமிட்டிகள் கலைக்கப்பட்ட போது ஆரம்பமாகவில்லை. முடிவுதான் அடைந்தது. நடுத்தர விவசாயிகளை நடுநிலைப்படுத்தும் கொள்கை 1918- க்குப் பிறகு கைவிடப்பட்டது. (அறிமுகப்படுத்தப்படவிலை). 1918-க்குப் பிறகுதான் 1919-மார்ச்சில் லெனின் நமது கட்சியின் எட்டாவது காங்கிரசைத் தொடங்கி வைத்து கீழ் வருமாறு கூறினார்.
 “கடந்த காலத்திய சோசலிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள்-அவர்கள் புரட்சியில் நம்பிக்கை கொண்டு தத்துவ சித்தாந்த ரீதியாக அதற்குச் சேவை செய்து கொண்டிருந்த போது- விவசாய வர்க்கத்தை நடுநிலைப்படுத்துவதைக் குறித்து பேசினார்கள்; அதாவது நடுத்தர விவசாய வர்க்கம் ‘பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு ஊக்கத்துடன் உதவி செய்யாவிட்டாலும்கூட குறைந்த பட்சம் அதைத் தடுக்காமல் நடுநிலை வகிப்பதற்கு, எதிரியின் பக்கம் செல்லாதிருப்பதற்கு அதைச் சமுதாய அடுக்காக மாற்றுவது குறித்துப் பேசினார்கள். இந்தப் பொதுக் கருத்து, பிரச்சனையின் தத்துவ ரீதியான இந்தக் கருத்து எங்களுக்குத் தெளிவாக விளங்குகின்றது. ஆனால் இது போதாது.சோசலிசத்தை கட்டியமைக்கிற கட்டத்தில்* (*அழுத்தம் ஸ்டாலினுடையது.)
நாம் நுழைந்திருக்கின்றோம்; இந்தக் கட்டத்தில் ஸ்தூலமான விரிவான அடிப்படை விதிகளையும் ஆணைகளையும் நாம் வரையறுக்க வேண்டும்;
அந்த விதிகளும் ஆணைகளும் நாட்டுப்புற மாவட்டங்களில் நமது பணியினுடைய அனுபவத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன; நடுத்தர விவசாய வர்க்கத்துடன் ஒரு நிலையான உடன்பாட்டை அடையும் பொருட்டு நாம் அவற்றால் வழிகாட்டப்பட வேண்டும்.” (பார்க்க, தொகுதி, 24 பக்கம், 114)
உங்கள் கடிதத்தில் நீங்கள் கூறியிருப்பதற்கு நேர் எதிராக இது இருப்பதை நீங்கள் காணலாம்; நீங்கள் நடுநிலைப்படுத்தலின் ஆரம்பத்தை அதனுடைய முடிவுடன் போட்டுக் குழப்புவதின் மூலம் உண்மையான நமது கட்சி நடைமுறையைத் தலை கீழாக்குகின்றீர்கள்.
முதலாளிவர்க்கம் தூக்கியெறியப்படுகின்ற வரையிலும் சோவியத் அதிகாரம் உறுதிப்படுத்தப்படுகின்ற வரையில் நடுத்தர விவசாயி, புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையே பாசாங்கு செய்து ஊசலாடினான்; எனவே அவனை நடுநிலைப் படுத்துவது அவசியமாக இருந்தது. நடுத்தர விவசாயி, முதலாளி வர்க்கம் “நிரந்தரமாக” தூக்கியெறியப்பட்டது என்பதையும், சோவியத் அதிகாரம் திடப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது என்பதையும், குலாக்குகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் உள்நாட்டுப் போர் முனைகளில் செஞ்சேனை வெற்றியடையத் தொடங்கியிருந்தது என்பதையும் உணரத் தொடங்கிய போது அவன் நம்மை நோக்கி வரத் தொடங்கினான்.
துல்லியமாகச் சொன்னால் இந்த அலை திரும்பிய பிறகுதான் எட்டாவது கட்சிக் காங்கிரசில் கட்சியின் மூன்றாவது போர்த்தந்திர முழக்கத்தை லெனினால் முன்வைக்க முடிந்தது. அந்த முழக்கம் பின்வருமாறு; ஏழை விவசாயிகளைச் சார்ந்து நிற்கும் அதே சமயத்தில் நடுத்தர விவசாயிகளுடன் ஒரு நீடித்த கூட்டணியை நிறுவி சோசலிசக் கட்டுமானத்தை நோக்கி முன்னேறிச் செல்வோமாக!
இந்த நன்கறிந்த உண்மையை நீங்கள் எவ்வாறு மறந்திருக்க முடியும்?
மேலும் உங்கள் கடிதத்தில் இருந்து வெளிப்படுவது என்னவென்றால், பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு மாறிச் சென்ற காலத்திலும் அந்தப் புரட்சிக்குப் பிந்திய ஆரம்ப நாட்களிலும் நடுத்தர விவசாயியை நடுநிலைப்படுத்தும் கொள்கையானது தவறாக உள்ளது,பொருத்தமற்றதாக உள்ளது, எனவே, ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாகும். அது முழுக்கமுழுக்க தவறாகும். விசயம் நேர் எதிராக உள்ளது. துல்லியமாகச் சொன்னால் முதலாளிவர்க்க அதிகாரம் தூக்கியெறியப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலும், பாட்டாளிவர்க்க அதிகாரம் திடப்படுத்தப்படுவதற்கு முன்பும் நடுத்தர விவசாயி மற்ற எல்லோரையும் விட மிக அதிகமாக ஊசலாடினான், எதிர்த்தான். இந்தக் கட்டத்தில்தான் ஏழை விவசாயியுடன் கூட்டணியும் நடுத்தர விவசாயியை நடுநிலைப்படுத்துவதும் அவசியமானவையாக இருந்தன என்பது தெளிவு.
உங்கள் தவறில் பிடிவாதமாக நின்று கொண்டு, விவசாயப் பிரச்சனை என்பது நமது நாட்டுக்கு மட்டுமின்றி “ஏறக்குறைய அக்டோபருக்கு முந்திய ரக்ஷ்யாவின் பொருளாதார அமைப்பைக் கொண்டிருக்கின்ற” நாடுகளுக்குக் கூட மிக முக்கியமான பிரச்சனையாகும் என்று நீங்கள் வலியுறுத்திக் கூறுகின்றீர்கள். பின்னால் கூறப்பட்டகூற்று உண்மைதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு காமின்டோனின் இரண்டாவது காங்கிரசில் லெனின் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை மேற்கொள்ளும்போது நடுத்தர விவசாயி பற்றி பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் கொள்கை சம்பந்தமாக விவசாயப் பிரச்சனை பற்றிய தமது ஆய்வுரையில் வரையறை செய்துள்ளார். விவசாயக் கூலிகள், அரைப் பாட்டாளிகள், அல்லது பங்கீட்டினைப் பெற்றுள்ளவர்கள், சிறுவிவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தனிக்குழுவாக ஏழைவிவசாய வர்க்கத்தை அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால் “நாட்டுப்புற மாவட்டங்களில் உழைக்கின்ற மற்றும் சுரண்டப்படுகின்ற மக்கள் திரளை “இவ்வாறு வரையறை செய்த பின்னர், நாட்டுப்புற மாவட்டங்களில் ஒரு தனிப்பிரிவாக நடுத்தர விவசாயிப் பிரச்சனையை வரையறை செய்யச் சென்ற லெனின் பின்வருமாறு கூறுகின்றார்.
”நடுத்தர விவசாயிகள், அதன் பொருளாதார ரீதியான அர்த்தத்தில், குத்தகை தாரர்களாகவோ அல்லது உரிமையாளர்களாகவோ சிறிய அளவிலான நிலங்களைக் கொண்டுள்ள சிறுநில விவசாயிகளைக் குறிக்கின்றது. மேலும், முதலாவதாக முதலாளித்துவத்தின் கீழ் பொதுவிதிப்படி அவர்கள் தங்கள் குடும்பத்திற்காகவும், வீட்டுப் பொருள்களுக்காகவும் சிறு அளவிலான வருவாயைச் சேமிப்பதோடன்றி நல்ல பருவ காலங்களிலாவது மூலதனமாக மாற்றப்படக் கூடிய ஒரு குறிப்பிட்ட உபரியை உத்தரவாதம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். இரண்டாவதாக மிக அடிகடி (உதாரணமாக இரண்டு அல்லது மூன்று பண்ணைகளில் ஒன்றை) வெளியாட்களின் உழைப்பைக் கூலிக்கு அமர்த்த முயல்கிறார்கள்………. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கமானது- அடுத்து வரும் உடனடி எதிக்காலத்தில் இல்லாவிட்டாலும் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் ஆரம்பக் கட்டத்தில்- இந்த வர்க்கத் தட்டை தங்கள் பக்கம் வென்றெடுக்கும் பணியை மேற்கொள்ள முடியாது; ஆனால் அது இதை நடுநிலைப்படுத்தும் பணியோடு அதாவது, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தில் அதை நடுநிலைப்படுத்துவதோடு நின்று கொள்ள வேண்டும்.” (பார்க்க, தொகுதி 25, பக்கம் 271-72)
இதற்குப் பிறகு, நடுத்தர விவசாய வர்க்கத்தை நடுநிலைப்படுத்தும் கொள்கையானது 1918 கோடைக்காலம் மற்றும் இலையுதிர் “காலத்தில்தான்” அதாவது சோவியத்துக்களின் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தைத் திடப்படுத்திய தீர்மானகரமான வெற்றிகளைப் பெற்ற பிறகுதான் ”எழுந்தது” என்று எவ்வாறு வலியுறுத்திச் சொல்ல முடியும்?
     சோசலிசப் புரட்சிக்கு மாறும் காலகட்டத்திலும் பாட்டாளி வர்க்க அதிகாரம் திடப்படுத்தும் காலத்திலும் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் போர்த்தந்திர முழக்க பிரச்சனையும் அதைப்போல நடுத்தர விவசாயியை நடுநிலையாக்கும் பிரச்சனையும் நீங்கள் கற்பனை செய்திருப்பது போல் அவ்வளவு எளிமையானது அல்ல என்பதை நீங்கள் பார்க்கலாம்.
4.  மேலே கூப்பட்ட அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்னவென்றால் நீங்கள் லெனினது நூல்களிலிருந்து சுட்டிக் காட்டியுள்ள பகுதிகள், புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் நமது கட்சியின் அடிப்படையான முழக்கத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபடவில்லை என்பது தெளிவு;
(அ) ஏனேனில் இந்த மேற்கோள்கள் அக்டோபருக்கு முந்திய அடிப்படையான முழக்கத்துடன் சம்பந்தப்படவில்லை.; ஆனால் அக்டோபருக்குப் பிந்திய முதலாளித்துவப் புரட்சியின் பூர்த்தியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது; மேலும்
(ஆ) அதன் முழக்கத்தின் சரியான தன்மையை அது மறுக்கவில்லை. ஆனால் உறுதிப்படுத்துகிறது.
கீழ்வரும் கருத்தை ஏற்கனவே நாம் மேலே கூறியிருக்கிறேன். திரும்பவும் நான் அதைக் கூறியாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுதல் என்ற காலப் பகுதிக்கு முன்பு புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் போர்த்தந்திர முழக்கத்தை-அதிகாரத்தைப் பற்றிய பிரச்சினையை மையக் கருவாகக் கொண்ட முழக்கத்தை- பாட்டாளிவர்க்க அதிகாரத்தை மேற்கொண்ட பின்னர் நடைமுறைப் படுத்தப்படுகின்ற முதலாளிய புரட்சியைப் பூர்த்தி செய்கின்ற பணியுடன் வேறுபடுத்தி பார்க்க முடியாது.
5.  தோழர் மால்ட்டோ பிராவ்தா பத்திரிகையில் (1927, மார்ச் 12) “ நமது நாட்டில் முதலாளித்துவப் புரட்சி” என்ற தலைப்பில் எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்: ஒரு விளக்கத்துக்காக எனக்கு அதைப் பொருத்தும்படி உங்களை அது “தூண்டியதாக” தோன்றுகிறது. கட்டுரைகளை நீங்கள் எப்படி படிக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது. நானும் கூட தோழர் மாலட்டோவின் கட்டுரையைப் படித்திருக்கிறேன்; நமது கட்சியின் பதின்நான்காவது காங்கிரசில் விவசாய வர்க்கம் சம்பந்தமாக நமது கட்சியின் முழக்கங்கள் குறித்த எனது அறிக்கையில் நான் கூறியுள்ளதுடன் அது எந்த விதத்திலும் முரண்படுவதாக நான் நினைக்கவில்லை.
தோழர் மாலட்டோ தனது கட்டுரையில் அக்டோபர் காலத்திய கட்சியின் அடிப்படையான முழக்கத்தைப் பற்றி விவாதிக்கவில்லை; ஆனால் அக்டோபருக்குப் பிறகு கட்சி முதலாளித்துவப் புரட்சியை நிறைவுக்கு இட்டுச் சென்ற போது அது விவசாயிகள் அனைவருடைய ஆதரவைப் பெற்றது என்ற உண்மையைப் பற்றியே அதில் அவர் விவாதித்தார். இந்த உண்மையைப் பற்றிய கூற்றானது நகரப்புறத்திலும், நாட்டுப்புறத்திலும் முதலாளிய வர்க்கத்திற்கு எதிராக ஏழை விவசாய வர்க்கத்துடன் ஒன்றுபட்டு நடுத்தர விவசாய வர்க்கத்தை நடுநிலையாக்கி முதலாளித்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நாம் நிறுவினோம் என்ற உண்மையை அது மறுக்கவில்லை; ஆனால் உறுதிப்படுத்துகிறது. இதைச் செய்யாமல் முதலாளித்துவப் புரட்சியை நம்மால் நிறைவு செய்ய முடிந்திருக்காது என்று ஏற்கனவே நான் மேலே கூறியுள்ளேன். 
போல்க்ஷ்விக் எண் 7-8 1927,ஏப்ரல் 13.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்    செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு  லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 49-66

No comments:

Post a Comment