Tuesday, 18 October 2011

மார்க்சியப் பார்வை நிலையில் புரட்சி என்பது என்ன? லெனின்




சனநாயகப் புரட்சியில்
மூக-சனநாயகத்தின் இரண்டு
செயல்தந்திரங்கள்

லெனின்
         
உண்மையில், மார்க்சியப் பார்வை நிலையில் புரட்சி என்பது என்ன? 
காலாவதியாகிவிட்ட அரசியல் மேற்கட்டுமானத்தை வலிமையைக் கொண்டு இடித்துத் தள்ளுவது; 

அதற்கும் புதிய உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அதை இற்றுவிழும்படிச் செய்தது. எதேச்சாதிகார முறைக்கும், முதலாளிய ருக்ஷ்யாவின் கட்டுமானம் முழுவதற்கும் அதன் மற்றும் முதலாளிய-சனநாயக வளர்ச்சிக்குரிய எல்லாத் தேவைகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு நொறுங்கி அதை விழச் செய்திருக்கிறது. 

இந்த முரண்பாடு நீண்ட காலத்துக்குச் செயற்கையாக நிலைநிறுத்தப்பட்டு வந்ததால் அதன் வீழ்ச்சியும் மிகக் கடுமையானதாகும். மேற்கட்டுமானம் ஒவ்வொரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது. அழுத்தம் தாங்கமுடியாமல் வலிமையிழந்து வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின் குழுக்களின் சார்பாளர்கள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லாருக்கும் தெரிந்து விடுகிறது. எல்லாரும் புரட்சியை அறிந்தேற்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்த புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும். எப்படிக் கட்டவேண்டும் என்பதை வரையறுப்பதே இன்றுள்ள பணி, இதை வரையறுக்கா விட்டால் புரட்சிமுழக்கம் இப்போது பொருளற்ற வெற்றுச் செயலாகும். ஏனெனில் எதேச்சாதிகார முறையின் பலவீனமானது மன்னர் குடும்பத்தினரையும், ‘மாஸ்கோவ்ஸ்கியே வேதமஸ்தியையும்’ “புரட்சியாளர்களாகச்” செய்கிறது! இதை வரையறுக்காவிட்டால் முன்னணி வர்க்கத்தின் முன்னனி ஜனநாயகப் பணிகள் பற்றிய பேச்சே இருக்க முடியாது.

 “பாட்டாளி வர்க்கத்தின், விவசாயி மக்களின் சனநாயகச் சர்வாதிகாரம்” எனும் முழக்கம் இந்த வரையறையைக் கொடுக்கிறது. புதிய மேற்கட்டுமானத்தின் ”புதிய “நிர்மாணிகள்” எந்த வர்க்கங்களை நம்பி நிற்க முடியும். நம்பி நிற்க வேண்டுமென்று இம்முழக்கம் வரையறுக்கிறது. புதிய மேற்கட்டுமானத்தின் தன்மையை (சோசலிசச் சர்வாதிகாரத்திலிருந்து வேறுபட்ட “சனநாயகச்” சர்வாதிகாரம்)வரையறுக்கிறது. இக்கட்டுமானத்துக்கான வழிமுறைகளை (சர்வாதிகாரம், அதாவது, வன்முறை எதிர்ப்பை வன்முறை நசுக்குவது மக்களின் புரட்சிகரமான வர்க்கங்களை ஆயுதபாணியாக்குவது) வரையறுக்கிறது. புரட்சிகரமான சனநாயகச் சர்வாதிகாரம் எனும் இம்முழக்கத்தையும், புரட்சிகரமான இராணுவம் எனும் முழக்கத்தையும் இன்று அறிந்தேற்க மறுக்கிறவர்கள் புரட்சியின் பணிகளைப் புரிந்து கொள்வதில் முற்றிலும் தவறிழைக்கிறார்கள். இன்றைய புதிய நிலைமை தோற்றுவித்துள்ள புதிய, மேலும் உயர்வான பணிகளை வரையறுக்க முடியாமல் இருக்கிறார்கள், அல்லது மக்களை ஏமாற்றுகிறார்கள், புரட்சியைக் காட்டிக் கொடுக்கிறார்கள், புரட்சி எனும் முழக்கத்தைக் கேடாகப் பயன்படுத்துகிறார்கள்.
                                

             பொதுவான பாதை மற்றும் போர்த்தந்திரத் திட்டம்
                                                                 --லெனின்

(சனநாயகப் புரட்சியில் சமூக சனநாயகத்தின் இரண்டு செயல் தந்திரங்கள் என்பதிலிருந்து)
         
கனவான்களே, “புரட்சியின் வீச்சை” நிர்ணயிக்கிற உண்மையான சமுதாயச் சக்திகளைப் பற்றி என்றைக்காயினும் நீங்கள் சிந்தித்ததுண்டா? தற்சமயம் நமக்கு வெகு சாதகமாக வளர்ந்துள்ள வெளிநாட்டு அரசியல் சக்திகளைப் பன்னாட்டுக் கூட்டுக்களை விட்டுவிடுவோம்.ஆனால் ருக்ஷ்யாவின் உள்நாட்டுச் சக்திகள் பிரச்சனையை நாம் பார்த்து வருவதால் அவற்றை நாம் அனைவருமே விவாதத்திலிருந்து விலக்கி வைக்கிறோம். அப்படிச் செய்வது சரியுங்கூட. இந்த உள்நாட்டுச் சமுதாயச் சக்திகளை ஆராயுங்கள். புரட்சிக்கு எதிராக ஏதேச்சாதிகார முறை, மன்னரின் வழக்காடு மன்றம், போலிஸ், அதிகாரவர்க்கம், இராணுவம், பிரபுவம்சத்தைச் சேர்ந்த சிறு கூட்டத்தினர் அணிவகுத்து நிற்கின்றனர். மக்களின் வெஞ்சினம் ஆழமாக வளர, வளர, துருப்புக்கள் மேன்மேலும் நம்பிக்கைவைக்க தகாதவையாகி விடுகின்றன. மேன்மேலும் அதிகார வர்க்கம் ஊஞ்சலாடுகிறது. மேலும் மொத்தத்தில் முதலாளி வர்க்கம் இப்போது புரட்சியை ஆதரிக்கிறது. சுதந்திரத்தைப் பற்றி ஆர்வமாக  வாய்ப்பறை அடிக்கிறது. மேன்மேலும் அடிக்கடி மக்கள் பெயரால், புரட்சியின் பெயராலுங்கூட பொழிந்து தள்ளுகிறது. எனினும் மார்க்சியவாதிகளான நாமனைவரும் தத்துவத்திலிருந்தும் நாள்தோறும் மணிதோறும் நம்முடைய மிதவாதிகளையும் ஸெம்ஸ்த்வோ உறுப்பினர்களையும் ஒஸ்வபக்ஷ்தேனியே ஆதரவாளர்களையும் உற்றுக் கவனிக்கிறதிலிருந்தும் புரட்சியை ஆதரிப்பதில் முதலாளிவர்க்கம் முரணுள்ளதாய், தன்னலம் பேணுவதாய், பேடித்தனமுள்ளதாய் இருப்பதை அறிவோம். மொத்தத்தில் முதலாளி வர்க்கம் தவிர்க்க முடியாதவாறு எதிர்ப்புரட்சியை நோக்கித் திரும்பும். ஏதேச்சாதிகார முறையை நோக்கித் திரும்பும் புரட்சிக்கும் மக்களுக்கும் எதிராகத் திரும்பும். அதன் குறுகிய தன்னலங்கள் கைகூடியவுடன் முரணற்ற சனநாயகத்திடமிருந்து அது “பின்வாங்கிய”வுடன் ( அது ஏற்கனவே பின்வாங்கி வருகிறது) பாக்கி இருப்பது “மக்கள்” அதாவது பாட்டாளிவர்க்கமும் விவசாயி மக்களும்! பாட்டாளிவர்க்கம் ஒன்றுதான் நம்பிக்கையுடன் முடிவுவரை செல்லத் திறமை வாய்ந்தது. ஏனெனில் அது சனநாயகப் புரட்சிக்கு அப்பால் வெகுதொலைவில் செல்கிறது. எனவேதான் பாட்டாளி வர்க்கம் குடியரசுக்காகப் போராடுவதில் முன்னணியில் நிற்கிறது. முதலாளிவர்க்கம் பின்வாங்கக் கூடிய சாத்தியப்பாட்டைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லும் முட்டாள்தனமான தகாத அறிவுரையைத் துச்சமென்று தள்ளிவிடுகிறது. விவசாயி மக்களில் குட்டி முதலாளி வர்க்கப் பகுதியினருடன் கூடவே பெரும் எண்ணிக்கையில் அரைப் பாட்டாளிவர்க்கப் பகுதியினரும் அடங்கியுள்ளனர். அதனால் அதுவும் நிலைப்பாடு இன்றி உள்ளது. அது பாட்டாளிவர்க்கத்தைக் கறாரான ஒரு வர்க்கக் கட்சியில் திரளுமாறு கட்டாயப்படுத்துகிறது, என்ற போதிலும், விவசாயி மக்களின் நிலைப்பாடற்ற நிலைக்கும் முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடற்ற நிலைக்கும் அடிப்படை வேற்றுமை உண்டு. ஏனெனில் தற்சமயம் விவசாயி மக்கள் முற்றாகத் தனிச் சொத்துடமையைப் பேணிக்காப்பதைவிட தனிச் சொத்துடமையின் முதன்மையான வடிவங்களில் ஒன்றாகிய நிலப்ப்பிரபுத்துவப் பண்ணைகளைப் பறிமுதல் செய்வதில் அதிகமாக அக்கறை கொண்டுள்ளனர். அதன் வழியாக சோசலிஸ்டு ஆகிவிடாமலும் குட்டிமுதலாளி வர்க்கத் தன்மையை இழக்காமலும் இருந்த போதிலும் விவசாயி மக்களிடம் சனநாயகப் புரட்சியின் ஒரு முழுமனதான தீவிரமான ஆதரவாளனாக ஆகும் திறமுண்டு. அதற்கு அறிவுத் தெளிவு ஊட்டும் புரட்சிகரமான நிகழ்ச்சிகளின் போக்கு முதலாளி வர்க்கத்தின் துரோகத்தாலோ பாட்டாளிவர்க்கத்தின் தோல்வியாலோ அகாலமாகத் துண்டிக்கப்படாமல் மட்டும் இருக்குமேயானால், விவசாயி மக்கள் புரட்சிக்கும் குடியரசுக்கும் அரணாகி விடுவார்கள். ஏனெனில் முற்றாக வெற்றி பெறும் புரட்சி ஒன்றுதான் நிலச்சீர்திருத்தத் துறையில் விவசாயி மக்களுக்கு அனைத்தையும் கொடுக்கமுடியும். (அவர்களுக்கு அவை தேவைப்படுவது “சோசலிஸ்டுப் புரட்சியாளர்கள்” நினைப்பதுபோல் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்காக அல்ல). அரைப் பண்ணையடிமை முறை எனும் சேற்றுக் குழியிலிருந்து வெளியேறுவதற்காக, ஒடுக்குமுறை அடிமை நிலையிலிருந்து வெளியேறுவதற்காக, பண்ட உற்பத்தி அமைப்பு முறையின் கீழ் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக.
      
மேலும் தீவிரமான நிலச் சீர்திருத்தம் கிடைக்கும் வாய்ப்பை நோக்கிமட்டும் விவசாயி மக்கள் புரட்சியிடம் பற்றுக் கொண்டிருக்கவில்லை. தங்களுடைய பொதுவான நிரந்தரமான நலன்களுக்காகவும் தான், பாட்டாளி வர்க்கத்தோடு சேர்ந்து போராடிக்கொண்டிருக்கும் போதுங்கூட விவசாயி மக்களுக்குச் சனநாயகம் தேவையாயுள்ளது. ஏனெனில் சனநாயக அமைப்பு முறை ஒன்றுதான் விவசாயி மக்களின் நலன்களைச் சரி நுட்பமாக வெளியிடவும் பெருந்திரள், பெரும்பான்மை எனும் வகையில் விவசாயி மக்களின் தலைமை நிலைமையை உறுதிப்படுத்தவும் முடியும். விவசாய மக்களின் அறிவுத் தெளிவு வளர வளர (ஜப்பானுடன் போர் நடந்த காலத்திலிருந்து அவர்களின் அறிவுத் தெளிவு விரைவாக வளர்ந்து வருகிறது. பள்ளிக்கூட அளவுகோலை வைத்து அறிவுத் தெளிவை அளந்து பழக்கப்பட்ட பலர் இவ்வளவு வேகமாக இது வளருமென்று எதிர்பார்க்கவில்லை).
        
மேன்மேலும் முரணின்றியும் உறுதியுடனும் அது முழுமையாக சனநாயகப் புரட்சியை ஆதரிக்கும். ஏனெனில் முதலாளி வர்க்கத்தைப் போல் மக்களின் மேலாதிக்கத்தைப் பற்றி அது பயப்படுவதற்கு ஏதுமில்லை. மாறாக, அதனால் ஆதாயம் தான் உண்டு. விவசாயி மக்கள் தம்முடைய அப்பாவித்தனமான முடியரசு வாதத்தைத் தூக்கியெறியத் தொடங்கியதும் சனநாயகக் குடியரசு அவர்களின் குறிக்கோளாகி விடும். ஏனெனில் முதலாளி வர்க்கத் தரகர்களின் உணர்வுபூர்வமான  முடியரசு வாதம் (மேலவை முதலியவற்றைக் கொண்டது.) விவசாயி மக்கள் இன்று அனுபவித்துவரும் அதே உரிமையின்மையும் ஒடுக்குமுறையும் அறியாமையையும்- ஐரோப்பிய அரசியல் சட்டமுறை எனும் பூச்சுப் பூசிச் சற்று மெருகிட்டதோடு சரி- குறிக்கும்.
       
எனவேதான் ஒரு வர்க்கம் என்கிற வகையில் முதலாளிவர்க்கம் இயல்பாகவும் தவிர்க்கமுடியாத படியும் மிதவாத முடியரசுவாதக் கட்சியின் அரவணைப்பின் கீழ் வரும் போக்கில் செல்கின்றனர். எனவே தான் முதலாளி வர்க்கத்தால் சனநாயகப் புரட்சியை முழுமையாக நடத்தி இருக்க முடியாது. விவசாயி மக்களால் அவ்வாறு நடத்தி இருக்க முடியும். அவ்வாறு நடத்தி முடிக்க அவர்களுக்கு நாம் உதவியளிக்க எல்லா முயற்சிகளும் செய்யவும் வேண்டும்.
           
இது சொல்லித் தெரிய வேண்டிய விக்ஷயமல்லவே, அரசியல் ஆனா, ஆவன்னா ஆயிற்றே, எல்லாச் சமூக-சனநாயக வாதிகளுக்கும் நன்றாகத் தெரிந்தது தானே என்று ஆட்சேபம் எழக்கூடும். இல்லை. அப்படி ஒன்றும் இல்லை. முதலாளிவர்க்கம் பின்வாங்குதலின் விளைவாகப் புரட்சியின் “வீச்சுக் குறைந்துவிடும்” என்று பேச முடிகிறவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஆசாமிகள் நிலப்பிரச்சனை பற்றிய வேலைத் திட்டத்தின் சொற்களைத் திருப்பியொப்பிக்கிறார்கள். அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே மனப்பாடமாகக் கற்றிருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் பாட்டாளி வர்க்கத்தின், விவசாயி மக்களின் புரட்சிகரமான, சனநாயகச் சர்வாதிகாரம் எனும் கருத்துருவத்தைப் பற்றி அவர்கள் பயப்பட்டிருக்க மாட்டார்கள். இந்தக் கருத்துருவம் மார்க்சிய உலகப் பார்வை முழுவதிலிருந்தும் நம் வேலைத்திட்டத்திலிருந்தும் தவிர்க்க முடியாதவாறு வருவதாகும். அப்படி இல்லாவிட்டால், முதலாளிவர்க்கம் எந்த எல்லைக்குப் போகத் தயாராக இருக்கிறதோ அந்த எல்லையுடன் அவர்கள் மாபெரும் ருக்ஷ்யப் புரட்சியின் வீச்சைக் கட்டுப்படுத்தி நிறுத்தி விடமாட்டார்கள். இப்படிப்பட்ட ஆசாமிகள் தம்முடைய பருண்மையான மார்க்சிய எதிர்ப்பான, புரட்சி எதிர்ப்பான தீர்மானங்களின் மூலமாகத் தம்முடைய சூட்சுமமான மார்க்சியப் புரட்சிகர சொற்றொடர்களைத் தோற்கடித்து விடுகிறார்கள்.
        

வெற்றிகரமான ருக்ஷ்யப் புரட்சியில் விவசாயி மக்களின் பாத்திரத்தை உண்மையாகவே புரிந்து கொண்டிருப்பவர்கள் முதலாளி வர்க்கம் பின்வாங்குமே யானால் புரட்சியின் வீச்சுக் குறைந்துவிடும் என்று பேசுவதாகக்கூடக் கனவுகாண மாட்டார்கள். ஏனெனில் உண்மையாகப் பார்த்தால், முதலாளிவர்க்கம் பின்வாங்கும் போதுதான், திரள் திரளான விவசாயி மக்கள் பாட்டாளிவர்க்கத்துடன் தோள்சேர்த்துத் தீவிரமான புரட்சியாளர்களாக வெளிக்கிளம்புகிற போது ருக்ஷ்யப் புரட்சி தன்னுடைய உண்மையான வீச்சை எடுத்துக்கொள்ளத் தொடங்கும். முதலாளித்துவ சனநாயகப் புரட்சியின் சகாப்ததில் சாத்தியமான மிக விரிவான புரட்சிகர வீச்சை உண்மையாகவே எடுத்துக் கொள்ளும். முரணின்றிக் கடைசிவரை கொண்டு சென்று முடிப்பதற்கு நம்முடைய புரட்சியானது முதலாளி வர்க்கத்தின் தவிர்க்க முடியாத  முரண்தன்மை முடக்கம் செய்யக் கூடிய சக்திகளை (அதாவது, “அதைப்புரட்சியில் இருந்து பின்வாங்கும்படி செய்ய” முடிகிற சக்திகளைச் சிந்தையின்மையின் காரணமாக இஸ்கராவின் காக்கேக்ஷிய ஆதரவாளர்கள் அதைக் கண்டு வெகுவாகப் பயப்பிடுகிறார்கள்) நம்பி நிற்க வேண்டும்.
        
எதேச்சாதிகார முறையின் எதிர்ப்பைப் பலத்தின் மூலமாக நசுக்கும் முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடற்ற நிலையை ஸ்தம்பிக்கச் செய்யவும், பாட்டாளி வர்க்கம்  விவசாயி மக்களுடன் கூட்டணி வகுத்துக் கொண்டு, சனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க வேண்டும். முதலாளிவர்க்கத்தின் எதிர்ப்பைப் பலத்தின் மூலமாக நசுக்கவும். விவசாயி மக்களின் குட்டி முதலாளிவர்க்கத்தினரின் நிலைப்பாடற்ற நிலையை முடக்கம் செய்து விடவும் மக்களிடையேயுள்ள அரைப்பாட்டாளி வர்க்கத் தன்மையுள்ள பகுதிகளோடு கூட்டணி வகுத்துக் கொண்டு பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியைச் சாதித்து முடிக்க வேண்டும். இவைதாம் பாட்டாளிவர்க்கத்தின் பணிகள் புரட்சியின் வீச்சைப் பற்றித் தம்முடைய வாதங்கள் தீர்மானங்கள் என்று அனைத்திலும் புதிய இஸ்க்ரா குழுவினர் இவற்றை மிகவும் குறுக்கி முன்வைக்கிறார்கள்.
         
எனினும் ஒரு விக்ஷயத்தை மறந்துவிடக் கூடாது. புரட்சியின் வீச்சுப் பற்றிய விவாதத்தில் அதை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். இந்தப் பணியிலுள்ள கக்ஷ்டங்கள் பிரச்சனையல்ல. அதன் தீர்வைத் தேடிப்பெறுவதற்கு என்ன வழி என்பதே பிரச்சனையாகும் என்பதை மறத்தலாகாது. புரட்சியின் வீச்சை வலுவானதாகவும் வெல்லக்கரியதாகவும் செய்வது எளிதா கடினமா என்பது பிரச்சனையல்ல. அந்த வீச்சை மேலும் வலுவுள்ளதாகச் செய்வதற்கு எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதே பிரச்சனை. நம் நடவடிக்கையின் அடிப்படையான தன்மை அவை பின்பற்றிச் செல்ல வேண்டிய திசை இதிலேதான் நம்முடைய கருத்துக்கள் வேறுபடுகின்றன. இதை நாம் வலியுறுத்தக் காரணம், கவனமற்ற, மனச்சாட்சியற்ற ஆசாமிகள் மிக அடிக்கடி இரண்டு வெவ்வேறான பிரச்சனைகளை- பின்பற்ற வேண்டிய திசை, அதாவது இரண்டு வெவ்வேறான பாதைகளில் ஒன்றைத் தேர்ந்து கொள்வது எனும் பிரச்சனையையும் நம் குறிக்கோளைச் சாதித்துக் கொள்வது சுலபமா,  குறிப்பிட்ட பாதையில் போனால் அதைச் சாதித்துக் கொள்வதின் வாய்ப்பு நெருங்குமா என்கிற பிரச்சனையையும்- குழப்பிக் கொள்கிறார்கள்.
        
மேலும் இந்தக் கடைசிப் பிரச்சனையை நாம் எடுத்துக் கவனிக்கவேயில்லை ஏனெனில் அது கட்சியில் எந்த வேறுபாட்டையோ கருத்து வேற்றுமையையோ உண்டாக்கவில்லை. உண்மையில் இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமானது. எல்லாச் சமூக- சனநாயக வாதிகளும் கறாராகக் கவனம் செலுத்தும் தகுதியுடையது. திரள்திரளாகப் பாட்டாளி வர்க்கத்தை மட்டுமின்று விவசாயி மக்களையும் இயக்கத்தினுள் கொண்டுவருவதிலுள்ள கக்ஷ்டங்களை மறப்பது மன்னிக்கத்தகாத  நம்பிக்கை வாதமாகும்.  இந்தக் கக்ஷ்டங்கள் தாம் பலதடவைகளில் சனநாயகப் புரட்சியை முற்றாக நடத்தி முடிக்கச் செய்யும் முயற்சிகளை நாசப்படுத்தியுள்ளன. மிகப் பெரும்பாலும் முரணுள்ள தன்னலமிக்க முதலாளி வர்க்கமே வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் அது மக்களுக்கு எதிராக  முடியரசின் பாதுகாப்பு எனும் வடிவத்தில் ஆதாயம் பெற்று முதலாக்கியது. அதே நேரத்தில் மிதவாதத்தின் ……..அல்லது ஒஸ்பவக்ஷ் தேனியே போக்கின் “கன்னிமையைக் காத்துக் கொண்டும்” இருக்கிறது, என்ற போதிலும், கக்ஷ்டம் என்பது அசாத்தியம் என்றாகிவிடாது. தேர்ந்து கொண்ட பாதை சரியானது என்கிற நம்பிக்கையே முக்கியமாகும். இந்த நம்பிக்கை அதிசயங்களைச் செய்ய முடிகிற புரட்சிகரமான ஆற்றலையும் புரட்சிகரமான ஆர்வத்தையும் நூறுமடங்காகப் பெருக்கிவிடும்.
      
தேர்ந்து கொள்ள வேண்டிய பாதை பற்றிய பிரச்சைனையில் இன்றைய சமூக-சனநாயக வாதிகளிடையேயுள்ள பிளவின் ஆழத்தைப் பார்ப்பதற்கு புதிய இஸ்க்ரா குழுவினரின் காக்கேக்ஷியத் தீர்மானத்தை ரு.ச.ச.தொ கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் தீர்மானத்துடனொப்பு நோக்கினால் உடனே தெரிந்துவிடும். காங்கிரஸ் தீர்மானம் கூறுகிறதாவது; முதலாளிவர்க்கம் முரண்தன்மையுள்ளது. நம்மிடம் புரட்சியின் ஆதாயங்களைப் பறிப்பதற்குத் தவறாமல் முயற்சிக்கும். எனவே தொழிலாளித் தோழர்களே போராட்டத்துக்கு மேலும் வலுவான தயாரிப்புக்கள் செய்யுங்கள்! ஆயுதம் எடுத்துக் கொள்ளுங்கள். விவசாயி மக்களை உங்கள் பக்கம் கொண்டுவந்து விடுங்கள்! போராட்டம் இன்றி நம்முடைய புரட்சிகரமான ஆதாயங்களைத் தன்னலம் தேடும் முதலாளிவர்க்கத்திடம் தாரை வார்க்க மாட்டோம். காக்கேக்ஷியப் புதிய இஸ்க்ரா குழுவின் தீர்மானம் கூறுகிறதாவது; முதலாளிவர்க்கம் முரண்தன்மை உள்ளதால் புரட்சியிலிருந்து பின்வாங்கக் கூடும். எனவே, தொழிலாளித் தோழர்களே! தயவு செய்து இடைக்கால அரசாங்கத்தில் கலந்து கொள்வது பற்றிச் சிந்திக்க வேண்டாம். ஏனெனில் அப்படிச் செய்தால் முதலாளிவர்க்கம் நிச்சயமாக பின்வாங்கிவிடும். அதனால் புரட்சியின் வீச்சிக் குறைக்கப்பட்டு விடும்!
       
ஒரு தரப்பினர் சொல்கிறதாவது: முரண்தன்மையுள்ள முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்பையோ செயல்முனைப்பின்மையையோ மீறிப் புரட்சியை முழு முடிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
       
மற்றத் தரப்பினர் சொல்கிறதாவது: சுதந்திரமாகப் புரட்சியை முழுமுடிவுக்குக் கொண்டு செல்வதைப் பற்றி சிந்திக்காதீர்கள். ஏனெனில் அப்படிச் செய்தால் முரண்தன்மையுள்ள முதலாளிவர்க்கம் அதிலிருந்து பின்வாங்கிவிடும்.
       
இவ்விரண்டும் நேரெதிரான பாதைகள் அல்லவா? ஒரு செயல்தந்திரத் தொகுதி மற்றயதை முற்றாக விளக்குகிறது என்பது வெளிப்படையில்லையா? முதலில் சொன்ன செயல்தந்திரங்கள் மட்டுமே புரட்சிகரமான சமூக-சனநாயகத்தின் சரியான செயல்தந்திரங்கள். இரண்டாவதாகச் சொன்னவை வெறுமனே ஒஸ்வபக்ஷ் தேனியே செயல்தந்திரங்களே என்பது வெளிப்படையாகவில்லையா?

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்   
செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு           
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 98 - 102

1 comment:

  1. பக்கம் தவறாக குறிப்பிட்டுள்ளது இது பக்கம் 103-110

    ReplyDelete