Thursday 22 September 2011

அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள்.-ஜே. வி .ஸ்டாலின்

அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது
போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள்.-ஜே. வி .ஸ்டாலின்
எதிர்த்தரப்புப் பற்றி
          ஒரு கட்சியின் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிக்கப்படாத தலைமை அக்டோபர் (புரட்சிக்கான) தயாரிப்பில் ஒரு முதன்மையான காரணியாகும். இதுதான் அக்டோபர் புரட்சியின் சிறப்பு அம்சமாகும்; இதுதான் அக்டோபர் (புரட்சிக்கான) தயாரிப்புக் காலகட்டத்தின் போது போல்க்ஷ்விக்குகளுடைய செயல் தந்திரங்களின் முதலாவது தனிச்சிறப்பு அம்சமாகும்.
         போல்க்ஷ்விக் செயல் தந்திரங்களின் இந்த அம்சம் இல்லாமல், ஏகாதிபத்திய நிலைமைகளில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் வெற்றியைப் பெற்றிருப்பது என்பது சாத்தியம் இல்லை என்பதற்கு நிரூபணம் தேவைப்படாது.
         இந்த அம்சத்தில் அக்டோபர் புரட்சியானது 1871-ல் பிரான்சில் நடந்த புரட்சியில் இருந்து சாதகமாக வேறுபடுகிறது; அங்கே தலைமை இரு கட்சிகளுக்கிடையே பிளவுபட்டிருந்தது; அவற்றில் எதுவுமே கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்பட்ட முடியாமல் இருந்தது.
     இரண்டாவது தனிச்சிறப்பான அம்சம் ; அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்பு இவ்வாறு ஒரு கட்சித் தலைமையின் கீழ் அதாவது போல்க்ஷ்விக் கட்சித் தலைமையின் கீழ் தொடர்ந்து முன்னேறியது; ஆனால் இந்தத் தலைமையைக் கட்சி எவ்வாறு நிறைவேற்றியது? எந்த வழியினூடே இந்தத் தலைமை முன்னேறிச் சென்றது? புரட்சி வெடிக்கும் சமயத்தில் மிக அபாயகரமான குழுக்களாக சமரசக் கட்சிகளைத் தனிமைப்படுத்தும் வழியில் – சோசலிக்ஷ புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளையும் தனிமைப்படுத்தும் வழியில் – இந்தத் தலைமை முன்னேறியது.
    லெனினியத்தின் அடிப்படையான போர்த்தந்திரத்தின் (Strategic) விதி  என்ன?
 அது கீழ்க்கண்டவற்றை அங்கிகரிப்பதில் அடங்கியுள்ளது.
1.  புரட்சி வெடிக்கக் கூடிய காலகட்டத்தை எதிர்நேக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், சமரசவாதக் கட்சிகள் புரட்சியின் எதிரிகளின் மிக அபாயமான சமூக ஆதரவாகும்.
2.  இத்தகைய கட்சிகள் தனிமைப்படுத்தப்படாமல் எதிரியை (ஜாரிசம் அல்லது முதலாளித்துவ வர்க்கம்) தூக்கியெறிவது என்பது சாத்தியம் இல்லை.
3.  எனவே, புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் இத்தகைய கட்சிகளைத் தனிமைப்படுத்துவதை நோக்கியும் அவற்றிடமிருந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களை வென்றெடுப்பதை நோக்கியும் முக்கிய ஆயுதங்கள் செலுத்தப்பட வேண்டும்.

ஜாரிசத்துக்கு எதிரான போராட்டக் காலத்தில்-முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் (1905-1916) ஜாரிசத்துக்கு மிக அபாயகரமான சமூக ஆதரவாக தாராளவாத – முடியரசுவாதக் கட்சியான கேடட் கட்சி இருந்தது. ஏன்? ஏனென்றால் இது ஒரு சமரசவாதக் கட்சியாக, ஜாரிசத்துக்கும் பெரும்பான்மையான மக்களுக்கும் அதாவது மொத்த விவசாய வர்க்கத்திற்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் கட்சியாக இருந்தது. இயல்பாகவே கட்சியானது அந்த சமயத்தில், தனது பிரதான அடிகளை காடெட்டுக்களின் மீது தொடுத்தது. ஏனெனில் காடெட்டுக்கள் தனிமைப்படுத்தப்படாமல் ஜாரிசத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான  முறிவுக்குச் சாத்தியமில்லை. மேலும் இந்த முறிவானது உறுதிபடுத்தப்படாமல் இருந்தால் புரட்சியின் `வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் பலர், போல்க்ஷ்விக் போர்த்தந்திரத்தின் இந்தத் தனிச் சிறப்பான அம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை. போல்க்ஷ்விக் குகள் “காடேட்டுக்களைப் பார்த்து அதீதமாக அஞ்சுகின்றனர்.” என்று குற்றம் சாட்டினார்கள். காடேட்டுக்களுக்கு எதிரான போல்க்ஷ்விக்குகளின் போராட்டமானது, பிரதான எதிரியான ஜாரிசத்துக்கு எதிரான போராட்டத்தைப் ”பின் தள்ளிவிட்டது” என்று கருதினார்கள். ஆனால் நிரூபிப்பதற்கு போதிய ஆதாரமில்லாத  இந்தக் குற்றச்சாட்டுக்கள், பிரதான எதிரியின் மீதான வெற்றியை எளிமைப்படுத்தவும், துரிதப்படுத்தவும் சமரசவாதக் கட்சிகளைத் தனிமைப்படுத்தக் கோரிய போல்க்ஷ்விக்குகளின் போர்த்தந்திரத்தைப் புரிந்து கொள்ள அறவே தவறி விட்டன என்பதையே வெளிப்படுத்தின.
   
இந்தப் போர்த்தந்திரம் இல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளிவர்க்க மேலாதிக்கத்தைப் பெற்றிருக்க முடியாது என்பதற்கு நிரூபணம் தேவையில்லை.

அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் போராடும் சக்திகளின் ஈர்ப்பு மையம் வேறுதளத்திற்கு மாறியது. ஜார் மன்னன் ஒழிந்தான்; காடேட்டுக் கட்சியானது சமரசவாதக் கட்சி என்ற நிலையிலிருந்து ஆளும் சக்தியாக, ஏகாதிபத்திய ஆளும் சக்தியாக மாற்றப்பட்டிருந்தது. இப்போது யுத்தமானது, ஜாரிசத்துக்கும் மக்களுக்கும் இடையில் இல்லை; ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் பாட்டாளிகளுக்கும் இடையிலானதாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளான, சோசலிஸ்ட் புரட்சியாளர்களின் கட்சியும், மென்க்ஷ்விக்குகளின் கட்சியும் ஏகாதிபத்தியத்துக்கு மிகவும் அபாயகரமான  சமூக ஆதரவாக இருந்தன. ஏன்? ஏனெனில் அப்பொழுது இந்தக் கட்சியின் ஏகாதிபத்தியத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் சமரசம் செய்கின்ற சமரசக் கட்சிகளாக இருந்தன. இயல்பாகவே, போல்க்ஷ்விக்குகள் அந்த சமயத்தில், தங்களது பிரதான தாக்குதல்களை இந்தக் கட்சியின் மீது தொடுத்தனர். ஏனெனில் இந்தக் கட்சிகள் தனிமைப்படுத்தப்படாமல் இருந்தால், உழைக்கும் மக்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்க முடியாது; இந்த முறிவு உறுதிப்படுத்தப்படாதிருந்திருந்தால் சோவியத்  புரட்சி யின் வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் பலர், போல்க்ஷ்விக் செயல் தந்திரங்களின் இந்தத் தனிச் சிறப்பான அம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் மீதும், மென்க்ஷ்விக்குள் மீதும் போல்க்ஷ்விக்குகள் “அதீத வெறுப்பை” வெளிப்படுத்துகின்றனர்.- என்றும், பிரதான லட்சியத்தை “மறந்து விட்டனர்” என்றும் குற்றம் சாட்டினார்கள். ஆனால், இந்த செயல் தந்திரங்களைக் கையாண்டதால்தான், போல்க்ஷ்விக்குகள், அக்டோபர் புரட்சிக் கான வெற்றியை உறுதிப்படுத்த முடிந்தது என்பதை மிகத் தெளிவாக அக்டோபர் தயாரிப்புக் காலகட்டம் முழுவதும் மெய்ப்பிக்கிறது.
   
இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்தது என்ன வென்றால் அது விவசாய வர்க்கத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை மேலும் புரட்சிகரமாக்கியது; சோசலிக்ஷ்ட் புரட்சியளர்கள் மீதும் மென்க்ஷ்விக்குகள் மீதும் இருந்த அவர்களது பிரமை நீங்கியது; இந்தக் கட்சிகளிடமிருந்து அவர்கள் தங்களைத் துண்டித்துக் கொண்டனர்; நாட்டைச் சமாதானத்துக்கு இட்டுச் செல்லும் சக்திபடைத்த முரணில்லாத ஒரு சக்தியாக பாட்டாளிவர்க்கத்தை சுற்றி அவர்கள் திரண்டனர். இந்தக் காலப்பகுதியின் வரலாறானது, உழவர் வர்க்கத்தின் உழைக்கும் மக்களுக்காக அவர்களைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதற்காக சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் மென்க்ஷ்விக்குகள் ஆகியோருக்கும், போல்க்ஷ்விக்குகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் வரலாறாகும்.
   
இந்தப் போராட்டத்தின் இறுதி விளைவானது கெரன்ஸ்கியின் காலப்பகுதியான கூட்டரசாங்கக் காலப்பகுதிகளும் நிலப்பிரபுக்களின் நிலங்களை பறிமுதல் செய்ய மென்க்ஷ்விக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மறுத்த செயல், யுத்தத்தைத் தொடர்வதற்கு மென்க்ஷ்விக்குகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் நடத்திய சண்டை, போர்முனையில் சூன்தாக்குதல், இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனையைக் கொண்டுவந்தது. கோர்னிலோவ் கலகம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டது. அதோடு இவை இப் போராட்டப் பிரச்சனையை முழுமையாக போல்க்ஷ்விக் போர்த்தந்திரத்துக்கு சாதகமாகவே தீர்மானித்தன. ஏனெனில் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மென்க்ஷ்விக்குகளும் தனிமைப்படுத்தப்படாமல் இருந்தால் ஏகாதிபத்தியவாதிகளின் அரசாங்கத்தைத் தூக்கியெறிவது சாத்தியமாகியிருக்காது. இந்த அரசாங்கம் தூக்கியெறியப்படாமலிருந்தால் போரிலிருந்து விடுபட்டுவருவது சாத்தியமில்லாது போயிருக்கும்; சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளையும் தனிமைப்படுத்தும் கொள்கைதான் சரியான கொள்கை என்பது நிரூபிக்கப்பட்டது.
   
இவ்வாறு, அக்டோபருக்கான தயாரிப்புக்களைச் செய்வதில் மென்க்ஷ்விக்குகளையும் சோசலிஸ்ட்- புரட்சியாளர்களையும் தனிமைப்படுத்துவது    பிரதான வழியாக இருந்தது. இதுதான் போல்க்ஷ்விக் செயல்தந்திரங்களின் இரண்டாவது தனிச்சிறப்பான அம்சமாக இருந்தது.
   
போல்க்ஷ்விக் செயல் தந்திரங்களுடைய இந்தத் தனிச்சிறப்பான அம்சம் இல்லாமல், பாடாளிவர்க்கத்திற்கும் உழவர் வர்க்கத்தின் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான கூட்டு அந்தரத்தில் விடப்பட்டிருக்கும் என்பதற்கும் நிரூபணம் தேவையில்லை.
   
ட்ராட்ஸ்கி, ”அக்டோபர் படிப்பினைகள்” என்ற தமது நூலில் போல்க்ஷ்விக்குகளுடைய செயல் தந்திரங்களின் இந்தத் தனிச் சிறப்பான அம்சம் பற்றி எதையும் சொல்லாமல் விட்டு விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
   
மூன்றாவது தனிச்சிறப்பான அம்சம்; இவ்வாறு கட்சியானது அக்டோபருக்கான தயாரிப்புக்களைச் செய்கையில் சோசலிஸ்ட்- புரட்சியாளர்கள் கட்சியையும், மென்க்ஷ்விக்குக் கட்சியையும் தனிமைப்படுத்தும் வழியையும் அவர்களிடமிருந்து தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் பக்கம் வென்றெடுக்கும் வழியையும் பின்பற்றியது. ஆனால், கட்சி இந்தத் தனிமைப்படுத்தலை எந்த வடிவத்தில், எந்த முழக்கத்தின் கீழ் பருண்மையாக நிறைவேற்றியது? “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கத்தின் கீழ் சோவியத்துக் களை மக்களைத் திரட்டும் அமைப்புக்கள் என்பதிலிருந்து எழுச்சிக்கான அமைப்புக்களாகவும், அதிகாரத்துக்கான அமைப்புக் களாகவும், ஒரு புதிய பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கான கருவியாகவும் மாற்றுவதற்கான போராட்டத்தின் மூலம் சோவியத்துக்களின் அதிகாரத்துக்கான புரட்சிகர மக்கள் இயக்கத்தின் வடிவில் இது நிறைவேற்றப்பட்டது.
   
சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளை யும் தனிமைப்படுத்தும் கடமையினை நிறைவு செய்யக்கூடிய, பாட்டாளிவர்க்க புரட்சி லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் படைத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வெற்றிக்கு லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளை வழிநடத்திச் செல்லும் கடமைக்கு உதவிய முதன்மையான ஸ்தாபன நெம்புகோலான சோவியத்துக்களை போல்க்ஷ்விக்குகள் பற்றிக் கொண்டது ஏன்?
        
சோவியத்துக்கள் என்றால் என்ன?
    1917 செப்டம்பர் ஆரம்பத்திலேயே லெனின் கூறினார் .”சோவியத்துக்கள் ஒரு புதிய அரசு உறுப்புகளாக உள்ளன. முதலாவதாக அது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட ஆயுதந் தாங்கிய படையாக உள்ளது. பழைய நிரந்தர இராணுவத்தைப் போல மக்களுடன் தொடர்பில்லாத ஒரு படையல்ல இது; மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டதாகும். ராணுவக் கண்ணோட்டத்தில் நோக்கினால் இந்தப் படை முந்திய படைகளைவிட ஒப்பிட முடியாத அளவு அதிக சக்தி படைத்ததாகும். புரட்சிக் கண்ணோட்டத்தில் நோக்கினால் இதற்கு மாற்றாக வேறு எதையுமே வைக்க முடியாது. இரண்டாவதாக, இந்த அரச உறுப்பு பெரும்பான்மை யான பொது மக்களுடன் இணைப்பைக் கொண்டுள்ளது. இவ்வளவு நெருங்கிய பிரிக்க முடியாத, எப்போதும் கட்டுப்படுத்தக் கூடிய, புதுப்பித்துக் கொள்ளக் கூடிய ஓர் அரச உறுப்பு இதற்கு முன்னால் – இச்சாயலைக் கொண்டதாகக் கூட – இருந்தது கிடையாது. மூன்றாவதாக, அந்த அரச உறுப்பிலுள்ள நபர்கள் எந்தவிதமான அதிகாரவர்க்க சம்பிரதாயங்களுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் மக்கள் விருப்பப்படி திரும்பி அழைக்கப்படும் (வாபஸ் பெறப்படும்) நிலையில் உள்ளவர்கள். ஆதலால் அது இதற்கு முன் இருந்தவற்றை விட அதிக ஜனநாயகத் தன்மை உடையதாகும். நான்காவதாக, இது அதிகாரவர்க்க சம்பிரதாயங்கள் எதுவுமின்றி பலவகையான ஆழமான சீர்திருத்தங்களைச் செய்ய இயலும் வகையில் பல வகைத் தொழிலில் ஈடுபட்டவர்களோடும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தித் தருகிறது. ஐந்தாவதாக, அது ஒடுக்கப்படும் வர்க்கங்களாகிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மிகவும் அரசியல் உணர்வுடைய செயலாற்றல் மிக்க, மிகவும் முற்போக்கான பகுதிகளைக் கொண்ட முன்னணிப்படையின் ஒரு அமைப்பு வடிவமாக அமைகிறது. இவ்வாறு, இதுவரை வரலாற்றில் இருந்து, அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்த இந்த வர்க்கங்களின் பெரும் மக்கள் திரள் முழுவதையும் உயர்த்தி, பயிற்சியளித்து, கல்வியளித்து, தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கிற அரசு உறுப்பாக இது அமைகின்றது. ஆறாவதாக, இது நாடாளுமன்ற முறையின் அனுகூலங்களையும், உடனடியான, நேர்முகமான ஜனநாயக முறையின் அனுகூலங்களையும் இணைப்பதைச் சாத்தியமாக்கு கிறது; அதாவது மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சட்டம் இயற்றும் வேலை, அதை அமுல்படுத்தும் வேலை ஆகிய இரண்டையும் செய்யும் வகையில் ஒன்றிணைக்கும் சாத்தியத்தை உண்டாக்குகிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது, உலகலாவிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனநாயகத்தை வார்த்தெடுப்பதில் ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது…..

“புரட்சிகர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆக்க ரீதியான ஊக்கம் சோவியத்துக்களைத் தோற்றுவிக்காமலிருந்தால் ரக்ஷ்யாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பது கவைக்குதவாத ஒரு விவகாரமாய் இருந்திருக்கும். ஏனெனில் பழைய அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பாட்டாளிவர்க்கம் நிச்சயமாக அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளமுடியாது போயிருக்கும்; உடனடியாக ஒரு புதிய அரசு இயந்திரத்தை அமைப்பது என்பது முடியாது.”- (லெனின் ’போல்க்ஷ்விக்குகளால் நீடித்து அரசாள முடியுமா?’ தேர்வுநூல், தொகுதி-21,பக்கம் 258-259).
   
இதனால்தான், அக்டோபர் புரட்சியை அமைப்பாக்கும் பணிக்கும், பாட்டாளிவர்க்க அரசு அதிகாரத்தின் ஒரு புதிய சக்தி வாய்ந்த அரசு இயந்திரத்தை உருவாக்கும் பணிக்கும் உதவிய சோவியத்துக்களை முதன்மையான அமைப்பு இணைப்பாக போல்க்ஷ்விக்குகள் பற்றிக் கொண்டார்கள்.
   
”அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கமானது, அதன் உள்ளார்ந்த வளர்ச்சி நிலையிலிருந்து நோக்கினால், அது இரு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. முதலாவது (இரட்டை ஆட்சி நிலவிய போது போல்க்ஷ்விக்கு களின் ஜூலைத் தோல்வி வரை), இரண்டாவது (கோர்னிலோவ் கலகம் தோல்வியுற்ற பின்னர்).

முதல் கட்டத்தின்போது இந்த முழக்கம், மென்க்ஷ்விக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் காடேட்டுகளுடன் கொண்டிருந்த கூட்டை உடைப்பது; மென்க்ஷ்விக்குகளையும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது (ஏனெனில் அந்த நேரத்தில், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மென்க்ஷ்விக்குகளும் தான் சோவியத்துக்களாக இருந்தனர்; எதிர்த்தரப்பினருக்குச் (அதாவது, போல்க்ஷ்விக்குகளுக்கு) சுதந்திரமாக போரடும் உரிமையை அளிப்பது; இத்தகைய போராட்ட வழிமுறையின் மூலமாக சோவியத்துக்களைக் கைப்பற்றுவதில் வெற்றி பெறுவார்கள் என்றும், அமைதி வழியிலான புரட்சி வளர்ச்சியின் மூலமாகவே சோவியத் அரசாங்கத்தின் உட்கூறுகளை மாற்றியமைக்க முடியும் என்றும் எதிர்பார்த்ததின் காரணமாகச் சோவியத்தினுள் கட்சிகளின் சுதந்திரமான போராட்டத்துக்கு உரிமை தருவது ஆகியவற்றைக் குறிக்கிறது. இத் திட்டமானது, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகார த்தைக் குறிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் மென்க்ஷ்விக்குகளையும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் அதிகாரத்தை வைத்து, அவர்களது எதிர்ப்புரட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்தித்ததன் மூலம் (பாட்டாளிவர்க்க –மொ.பெ-ர்) சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நிலைமைகளைத் தயாரிப்பதற்கு இது உதவியது என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில்,இது அந்தக் கட்சிகளின் உண்மையான இயல்பு அம்பலப்பட்டுப் போவதைத் துரிதப்படுத்தியது.ஆயினும் போல்க்ஷ்விக்குகளின் ஜூலைத் தோல்வி இந்த வளர்ச்சிப் போக்கைத் தடுத்தது; ஏனெனில் இந்தத் தோல்வி ஜெனரல்கள் மற்றும் காடேட்டுக்களின் எதிர்ப்புரட்சிக்கு முன்னுரிமை அளித்தது; சோசலிஸ்ட் புரட்சியாளர்களையும் மென்க்ஷ்விக்குகளையும் எதிர்ப்புரட்சிகர அணிக்குத் தள்ளியது. மேலும் இது, “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றது. மீண்டும் அதை ஒரு புரட்சிகர எழுச்சியின் நிலைமைகளில் முன் வைக்கவும் கட்சியை நிர்ப்பந்தித்தது.
   
கோர்னிலோவ் கலகத்தின் தோல்வி இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தது. மீண்டும் “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கம் உடனடி முழக்கமாக மாறியது. ஆயினும் இந்த முழக்கம் இப்போது முதல் கட்டத்திலிருந்து மாறுபட்டதொரு பொருளைக் கொண்டிருந்தது. இப்போது இந்த முழக்கம், ஏகாதிபத்தியத்துடன் ஒரு முழுமையான முறிவையும் ஏற்கனவே போல்க்ஷ்விக்குகள் பெரும்பான்மையாக இருந்ததால் அவர்களுக்கு அதிகாரத்தை மாற்றித்தருவதையும் குறித்தது. இப்போது இந்த முழக்கம் ஒரு எழுச்சியின் மூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிப் புரட்சி நேரடியாக நெருங்கி வருவதைக் குறித்தது. இவை அனைத்துக்கும் மேலாக, இந்த முழக்கம், இப்போது பாட்டாளிவக்கச் சர்வாதிகார அமைப்பைக் குறிப்பதாகவும், அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது.
   
சோவியத்துக்களை அரசு அதிகார உறுப்புக்களாக மாறியமைத்த செயல் தந்திரங்களின் அளவிடற்கரிய  முக்கியத்துவம் லட்சக்கணக்கான மக்களை ஏகாதிபத்தியத்திட மிருந்து முறித்துக் கொள்ளச் செய்தது என்ற உண்மையிலும், மென்க்ஷ்விக் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களின் கட்சிகள் ஏகாதிபத்தியத்தின் கைத்தடிகள் என்பதை அம்பலப்படுத்தியதிலும் மக்கள் திரளை ஒரு நேரடிப் பாதையான பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்துக்குக்- இதுதான் அந்த வழியாக இருந்ததால்- கொண்டு வந்ததிலும் அடங்கியிருந்தது.

இவ்வாறு சமரசவாதக் கட்சிகளைத் தனிமைப்படுத்துவதற்கும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வெற்றிக்கும் மிகமிக முக்கிய நிபந்தனையாகச் சோவியத்துக்களை அரசு அதிகாரத்தின் உறுப்புகளாக மாற்றுக் கொள்கை-அக்டோபருக்கான தயாரிப்புக் காலத்தில் போல்க்ஷ்விக்குகளிடைய செயல்தந்திரங்களின் மூன்றவது குறிப்பான அம்சமாகும்.
   
நான்காவது குறிப்பான அம்சம்; போல்க்ஷ்விக்குகள் தங்களின் கட்சி முழக்கங்களைப் பெரும் மக்கள் திரளுக்கான முழக்கங்களாக, புரட்சியை முன்னுக்கு உந்தித் தள்ளிய முழக்கங்களாக எப்படி. ஏன் மாற்றினார்கள் என்பதையும், முன்னணிப்படையை மட்டுமன்றி, உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையினரை மட்டுமன்றி, மக்களின் பெரும்பான்மை யோரையும் கூடத் தங்கள் கொள்கை சரியானது என்பதை நம்ப வைப்பதில் எப்படி ஏன் வெற்றி பெற்றார்கள் என்பதையும் நாம் விவாதிக்கவில்லையென்றால் இந்தப் பகுதி முழுமையடையாது.
   
விசயம் என்னவென்றால் லட்சக் கணக்கான மக்களைக் கொண்டுள்ள உண்மையானதொரு மக்கள் புரட்சியாகப் புரட்சி இருக்கிறது என்றால்,அப்புரட்சியின் வெற்றிக்குச் சரியான கட்சி முழக்கங்கள் மட்டும் போதாது. ஏனெனில் புரட்சியின் வெற்றிக்கு மேலும் ஒரு அவசியமான நிபந்தனை தேவைப்படுகிறது; அதாவது மக்கள் தாங்களே தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இந்த முழக்கங்களின் சரியான தன்மையை உணர்ந்தறிய வேண்டும். அதன் பிறகுதான் கட்சி முழக்கங்கள் மக்கள் திரளின் முழக்கங்களாக மாறுகின்றன. அதன் பிறகுதான் புரட்சி மக்கள் புரட்சியாக ஆகின்றது. அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புக் காலத்தில் போல்க்ஷ்விக்குகளுடைய செயல் தந்திரங்களின் குறிப்பான அம்சங்களில் ஒன்று யாதெனில், இயல்பாகவே கட்சிமுழக்கங்களிடம், இன்னும் சரியாகச் சொன்னால் புரட்சியின் வாயிற்படிக்கே மக்கள் திரளைக் கொண்டுவந்த  பாதைகளையும் திருப்பங்களையும் அவர்கள் சரியாக தீர்மானித்தனர் என்பதாகும். இவ்வாறு இம் முழக்கங்களின் சரியான தன்மையை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணரவும், சோதிக்கவும், உண்மையுணரவும் அவர்களுக்கு உதவியது என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் போல்க்ஷ்விக்குகளது செயல் தந்திரங்களின் குறிப்பான அம்சங்களில் ஒன்று யாதெனில் போல்க்ஷ்விக்குகள் கட்சித்தலைமையை மக்கள் திரள் தலைமையுடன் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; அவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் தெளிவாக உணர்கின்றனர்; எனவே அவர்கள் கட்சித்தலைமைக்கு மட்டுமல்ல உழைக்கும் மக்களின் பெரும் மக்கள்திரள் தலைமைக்கும் விஞ்ஞானத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள்.
   
அரசியல் நிர்ணய சபையைக் கூட்டியதும் அதனைக் கலைத்ததுமான அனுபவம்  போல்க்ஷ்விக் செயல்தந்திரங்களின் மேலே குறிப்பிட்ட அம்சத்துக்கு ஒரு தெளிவான உதாரணத்தை அளித்தது.
   
போல்க்ஷ்விக்குகள், “சோவியத் குடியரசு” என்ற முழக்கத்தை 1917, ஏப்ரல் ஆரம்பத்திலேயே முன்வைத்தனர் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அரசியல் நிர்ணய சபை ஒரு முதலாளித்துவப் பாராளுமன்றமாக இருந்தது என்பதும் “சோவியத் குடியரசின்” கோட்பாடுகளுக்கு அடிப்படையிலேயே எதிராக இருந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். சோவியத் குடியரசை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போல்க்ஷ்விக்குகள், அதே நேரத்தில், தற்காலிக அரசாங்கம் அரசியல் நிர்ணய சபையை உடனே கூட்ட வேண்டும் என்று கோரியது ஏன்? போல்க்ஷ்விக்குகள் தேர்தலில் பங்கொடுத்துக் கொண்டது மட்டுமின்றி அவர்களே அரசியல் நிர்ணய சபையைக் கூட்டியது ஏன்? எழுச்சிக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகப் பழையதிலிருந்து புதியதற்கு மாறியதில், போல்க்ஷ்விக்குகள் சோவியத் குடியரசை அரசியல் நிர்ணய சபையுடன் தற்காலிகமாக இணைப்பது சாத்தியம் என்று கருதியது ஏன்?
இது ”நிகழ்ந்தது” ஏனெனில்;
(1)  அரசியல் நிர்ணய சபைக்கான கருத்து பெரும்பான்மையான மக்களிடையே நிலவிய மிகமிக பிரபலமான கருத்துக்களில் ஒன்றாக இருந்தது.
(2)  அரசியல் நிர்ணய சபையை உடனே கூட்ட வேண்டும் என்ற முழக்கம், இடைக்கால அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சிகர இயல்பை அம்பலப்படுத்த உதவியது.
(3)  மக்களீடம் இருந்த அரசியல் நிர்ணய சபையைப் பற்றிய கருத்தை மதிப்பிழக்கச் செய்ய அவர்களது கோரிக்கைகளான “நிலம், சமாதானம், சோவியத் அதிகாரம்” ஆகியவற்றுடன் அவர்களை அரசியல் நிர்ணய சபைக்குக் கொண்டு செல்வதும், அரசியல் நிர்ணய சபையின் உண்மை நிலையை நேருக்கு நேர் சந்திக்கச் செய்வதும் அவசியமானதாக இருந்தது.
(4)  மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அரசியல் நிர்ணய சபையின் எதிர்ப்புரட்சிகர இயல்பைப் புரிந்து கொள்ளவும், அதைக் கலைக்க வேண்டிய அவசியத்தை உணரவும் இதுதான் உதவி செய்தது.
(5)  இவை அனைத்தும் இயல்பாக, அரசியல் நிர்ணய சபையை ஒழித்துக் கட்டுவதற்கான வழிகளில் ஒன்று என்ற விதத்தில் சோவியத் குடியரசை அரசியல் நிர்ணய சபையுடன் தற்காலிகமாக இணைக்கும் சாத்தியப்பாட்டை முன்கூட்டியே அனுமானித்தது.
(6)  இத்தகைய சேர்க்கை, அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் ஏற்படுத்தப்பட்டதால் சோவியத்துக்களுக்கு அரசியல் நிர்ணய சபையைக் கீழ்படியச் செய்வதையும், சோவியத்துக்களுக்கு கீழ்ப்பட்டதாக அது மாற்றப்படுவதையும், அது வழியின்றி மறைந்து ஒழிந்து போவதையும் தான் குறிக்க முடிந்தது.
இத்தகையதொரு கொள்கையை போல்க்ஷ்விக்குகள் கடைப்பிடிக்காதிருந்தால் அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தது என்பது அவ்வளவு சுலபமாக நடந்தேறியிருக்காது. அதைத் தொடர்ந்து “அனைத்து அதிகாரமும் அரசியல் நிர்ணய சபைக்கே!” என்ற முழக்கத்தின் கீழ் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் மற்றும் மென்க்ஷ்விக்குகளின் நடவடிக்கைகள் அவ்வளவு எடுப்பான விதத்தில் தோல்வியடைந்திருக்காது என்பதற்கு நிரூபணம் தேவையில்லை.
    லெனின் கூறுகிறார்;
“1917, செப்டம்பர்-நவம்பரில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான- ரக்ஷ்ய முதலாளித்துவ நாடாளு மன்றத்துக்கான-தேர்தல்களில் நாங்கள் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களது செயல்தந்திரம் சரியா? தவறா?-1917, செப்டம்பர் நவம்பரில் நாடாளுமன்ற முறை ரக்ஷ்யாவில் அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதாகக் கருத ரக்ஷ்ய கம்யூனிஸ்ட்டு களாகிய எங்களுக்கு மேல் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் யாரையும் விட அதிகளவு உரிமை இருக்கவில்லையா? இருந்தது என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. இங்கு எழும் கேள்வி என்னவெனில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் அதிக காலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலம் இருந்துள்ளனவா என்பதல்ல; பெரும் திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக் கொள்ளவும், முதலாளித்துவ சனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவு (சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும்) தயாராக இருக்கிறார்கள் என்பதே ஆகும். பல விசேச நிலைமைகளின் காரணமாக 1917, செப்டம்பர் நவம்பரில் ரக்ஷ்யாவில் நகரத் தொழிலாளிவர்க்கமும், படைவீரர்களும், விவசாயிகளும்,சோவியத் அமைப்பை ஏற்றுக் கொள்வதற்கும், அதிக சனநாயக தன்மை வாய்ந்த  முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைத்து விடவும் நன்கு தயார் நிலையில் இருந்தனர் என்பது கொஞ்சம் கூட மறுக்க முடியாத நூற்றுக்கு நூறு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மையாகும். ஆயினும் போல்க்ஷ்விக்குகள் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணிப்புச் செய்யவில்லை; பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கு முன்பும் வென்ற பின்பும் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டனர்.” (லெ.நூ.தி. தொகுதி 25, பக்- 201-202)
 அப்படியானால் அவர்கள் ஏன் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணிப்புச் செய்யவில்லை? ஏனெனில் லெனின் கூறுகிறார்;
”சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்கள் முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பின்னரும் கூட முதலாளித்துவ சனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகர பாட்டாளிவர்க்கத்து க்குத் தீங்கிழைப்பதற்குப் பதிலாக இது போன்ற  நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியம் என்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள  பரந்துபட்ட மக்களுக்கு  நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்த நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாகக் கலைக்கப்படுவதற்கும் வகை செய்கிறது என்பதும்,  முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல் ரீதியில் காலாவதியாக்குவதற்குத்” துணைபுரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.” (லெ.நூ.தி. தொகுதி. 25. பக். 201-202).
ட்ராட்ஸ்கி போல்க்ஷ்விக்குகளுடைய  செயல்தந்திரங்க ளின் இந்தக் குறிப்பான அம்சத்தைப் புரிந்து கொளவில்லை என்பதும், அரசியல் நிர்ணய சபையைச் சோவியத்துகளுடன் இணைக்கும் ”தத்துவத்தை” ஹில்பர்டிங்கிசமாகும் (Hilferdingism) என ஆவேசமாக குற்றம் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
    அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதுடன் தொடர்பு கொண்டுள்ள எழுச்சிக்கான  முழக்கத்துடன் சோவியத்துகளின் சாத்தியப்பாடான வெற்றியுடனும் சேர்ந்துள்ள இத்தகைய தொரு இணைப்பை அனுமதிப்பதுதான் ஒரே புரட்சிகர செயல்தந்திரமாக இருந்தது என்பதையும், சோவியத்துக்களை அரசியல் நிர்ணய சபையின் தொங்கு சதையாக  மாற்றுகின்ற ஹில்ப்ச்ர்ட்டிங்கின் செயல்தந்திரங்களுடன் பொதுவாக  இதற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும் அவர் (ட்ராட்ஸ்கி) புரிந்து கொள்ளவில்லை. சில தோழர்கள் இந்தப் பிரச்சனையில் செய்துள்ள தவறுகள், குறிப்பான சில நிலைமைகளின் கீழ் “ஒன்றிணைக்கப்பட்ட அரசு அதிகார வகை” பற்றி லெனினும் கட்சியும் எடுத்த முற்றிலும் சரியான நிலையைக் குறை சொல்ல அவருக்கு எவ்விதக் காரணமும் அளிக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. (பார்க்க, லெ.நூ.தி.தொ-21, பக். 338)
போல்க்ஷ்விக்குகள் அரசியல் நிர்ணய சபை பற்றி இந்தத் தனிச் சிறப்பான கொள்கையை மேற்கொண்டிருக்காவிட்டால், அவர்கள் பெரும் மக்கள் திரளைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதையும், அப்படி அவர்கள் மக்கள் திரளைத் தங்கள் பக்கம் வென்றெடுக்காது போயிருந்தால் அக்டோபர் புரட்சியைப் பிரபலமான மக்கள் புரட்சியாக மாற்றியிருக்க முடியாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை.
    போல்க்ஷ்விக்குகள் தங்கள் கட்டுரைகளில் பயன்படுத்தும் “மக்கள்”, “புரட்சிகர சனநாயகம்” போன்ற வார்த்தைகளை ட்ராட்ஸ்கி ஆவேசமாக குறைகூறுவதும், மேலும் அவ்வார்த்தைகளை மார்க்சியவாதிகள் உபயோகிப்பது முறையல்ல எனக் கருதுவதும் சுவாரசியமான விடயங்களாகும்.
பாட்டாளிவர்க்கச் சார்வாதிகாரத்தின் வெற்றிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 1917 செப்டம்பரில் கூடச் சந்தேகத்திற்கிட மற்ற மார்க்சியவாதியான லெனின் “புரட்சிகர பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர சனநாயகத்துக்கு அதிகாரம் முழுவதும் உடனடியாக மாற்றித்தரப்பட வேண்டியது அவசியம்” குறித்து எழுதினார் என்பதை  ட்ராட்ஸ்கி மறந்து விட்டார் என்பது தெளிவு. (காண்க. லெ.நூ.தி. தொ-212, பக்-198)
கண்டத்தில் நடைபெறும் ஒவ்வொரு உண்மையான மக்கள் புரட்சிக்கும், அதிகாரத்துவ-இராணுவ அரசு இயந்திரத்தை  நொறுக்குவது முதல் நிபந்தனையாகும் என்று மார்க்ஸ் இகல்மேனுக்கு எழுதிய பிரபலமான கடிதத்தைச் (1871, ஏப்ரல்) சந்தேகத்திற்கிடமற்ற மார்க்சியவாதியான லெனின் மேற்கோள் காட்டி எழுதியுள்ள  பின்வரும் கூற்றை ட்ராட்ஸ்கி மறந்து விட்டார் என்பது தெளிவு:
“ஒவ்வொரு உண்மையான மக்கள் புரட்சிக்கும் அதிகாரத்துவ-இராணூவ அரசு இயந்திரத்தை அழிப்பது முன் நிபந்தனையாகும்”  என்ற மார்க்சின் மிக ஆழமான கூற்றுக்குக் குறிப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும். தாங்கள் மார்க்சியவாதிகளாக கருதப்பட வேண்டுமென விருப்புகிறவர் களும் ஸ்துருவேயின் சீடர்களுமான ரக்ஷிய பிளக்கானவ் வாதிகள் மற்றும் மென்க்ஷ்விக்குகளுக்கு ‘மக்களது’ புரட்சி என்ற கருத்தோட்டம் மார்க்சியத்தில் இருந்து வருவதே விநோதமாகத் தோன்றுகிறது; மேலும் அவர்கள் மார்க்ஸ் ‘கை தவறி’ இந்த வார்த்தையை எழுதியிருப்பார் என அறிவிக்கவும் செய்வார்கள். மிக மோசமான தாராளவாத திரிபுக்கு மார்க்சியத்தை உட்படுத்தி அது, முதலாளிவர்க்கப் புரட்சிக்கும் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கும் இடையில் நிலவும் எதிரெதிரான கருத்தே தவிர வேறொன்றுமில்லை என்ற நிலைக்கு மார்க்சியத்தைக் குறைத்து விட்டனர் – இந்த எதிரெதிரான கருத்துக்குக் கூட மிகவும் உயிரோட்டமில்லாத வழியில் பொருள் விளக்கமும் தருகிறார்கள்……
      ஐரோப்பாக் கண்டத்தில்,1871 இல் எந்தவொரு நாட்டிலும் பாட்டாளிவர்க்கம் மக்களின் பெரும்பான்மையாக இருக்கவில்லை. உண்மையில் இயக்கத்துக்குள் பெரும் பானமையான மக்களைக் கொண்டு வந்த ஒரு மக்கள் புரட்சியானது பாட்டாளிகள், விவசாயிகள் ஆகிய இருசாராரை யும் தழுவியதாகத் தான் இருந்திருக்க முடியும். அன்று ’மக்கள்’ எனப்படுவோர் இவ்விரு வர்க்கங்களும் தான். இவ்விரு வர்க்கங்களையும் ‘அதிகாரத்துவ – இராணுவ அரசு இயந்திரம்’ அடக்கி, நசுக்கி, சுரண்டுகிறது என்ற உண்மையே  இவை இரண்டையும் ஒன்றிணைக்கின்றன. இந்த இயந்திரத்தை உடைத்து நொறுக்குவது என்பது உண்மையிலேயே ‘மக்களின்’ பெரும்பான்மையோரான தொழிலாளர்களுக்கும், பெரும்பாலான விவசாயிகளுக்கும் நன்மை பயப்பதாகும்; ஏழை விவசாயிகளுக்கும் பாட்டாளி களுக்கும் இடையிலான ஒரு சுதந்திரமான கூட்டுக்கு இது ’முன்நிபந்தனை’ ஆகும். இத்தகையதொரு கூட்டு இல்லா விட்டால் சனநாயகம் நிலையற்றதாகும். சோசலிச மாற்றம் சாத்தியமில்லை.” (தொகுதி-23, பக். 354)
லெனினது இந்த வார்த்தைகளை மறந்து போய்விடக்கூடாது.
    கட்சியின் பக்கம் லட்சக் கணக்கான உழைக்கும் மக்களை வென்றெடுப்பதற்கான மிகமிக முக்கியமான  நிபந்தனை என்ற விதத்தில், புரட்சிகர நிலைக்கு அவர்களைக் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் வாயிலாகக் கட்சி முழக்கங்களின் சரியான தன்மையை உணரும்படி செய்யும் திறமைதான் அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தில் போல்க்ஷ்விக்குகளுடைய செயல்தந்திரங்களின் நான்காவது குறிப்பான அம்சமாகும்.
இந்தச் செயல்தந்திரங்களின் தனிச் சிறப்பான அம்சங்களைப் பற்றிஒரு தெளிவான கருத்தைப் பெறுவதற்கு நான் சொல்லியிருப்பவை முற்றிலும் போதுமானவையாகும் என நினைக்கிறேன்.
 ஜே.வி.ஸ்டாலின் போல்க்ஷ்விக் 1927,ஏப்ரல் 13.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்    செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு  லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 66-81

No comments:

Post a Comment