அரசியல் செயல்தந்திரம் மற்றும் முழக்கங்களின் முக்கியத்துவம்-
வி.இ.லெனின்.
புரட்சி நமக்குக் கற்றுக் கொடுக்கும், திரளான மக்களுக்கும் கற்றுக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று போர்க்குணமிக்க (போராட்ட ஊக்கமுள்ள) ஓர் அரசியல் கட்சியின் முன் நிற்கும் கேள்வி இதுதான்: புரட்சிக்கு நாம் எதையாவது கற்றுக் கொடுக்க இயலுமா? புரட்சி மீது பாட்டாளிவர்க்க முத்திரை இடுவதற்கு, சொல்லளவில் அல்லாமல் புரட்சியை ஓர் உண்மையான, நிர்ணயமான வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கு சனநாயகப் போக்குள்ள முதலாளியவர்க்கத்தின் நிலையின்மையையும் அரை மனத்தன்மையையும், துரோகத் தன்மையையும் செயலறச் செய்வதற்கு, நம் சமூக- சனநாயக் கொள்கையின் (Doctrine) தவறின்மையையும், முழுவதும் புரட்சிகரமான ஒரே வர்க்கமாகத் திகழும் பாட்டாளிவர்க்கத்துடன் நமக்குள்ள பிணைப்பையும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்பதே.
தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கத்துக்கு துணைபோகும் படை என்ற பாத்திரத்தை வகிக்குமா? (இந்த துணைபோகும் படை ஏதேச்சாதிகார முறையை எதிர்த்துத் தாக்குவதில் வலிமை மிக்க சக்தியாய் இருந்தாலும் கூட அரசியல் ரீதியிலே சாத்தியமற்றது) அல்லது அது மக்கள் புரட்சியில் தலைவனாகப் பாத்திரம் வகிக்குமா என்பதைப் பொறுத்துத்தான் புரட்சியின் விளைவு இருக்கிறது.உணர்வுள்ள முதலாளிவர்க்கச் சார்பாளர்கள் இதை நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான், ஒஸ்வபஷ் தேனியே அக்கிமவிசமை, சமூக-சனநாயக இயக்கத்தில் “பொருளாதாரவாதத்தையும்” புகழ்ந்து பேசுகிறது; இந்தப் போக்கு இன்று தொழிற்சங்கங்களையும் சட்டபூர்வமாக இருந்துவரும் சங்கங்களையும் முன்னணியில் கொணர்ந்து நிறுத்தி வருகிறது. எனவேதான் புதிய- இஸ்கரா கருத்துக்களில் காணும் அக்கீமவ் வாதத்துக்குரிய போக்கை (ஒஸ்வபஷ்தேனியே இதழ் 72 இல்) திரு.ஸ்துருவே வரவேற்கிறார். எனவேதான், ருஷ்யாவில் சமூக-சனநாயக தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் முடிவுகளின் வெறுக்கத்தக்க புரட்சிப் பார்வையின் குறுகிய தன்மையை அவர் அவ்வளவு வலிந்து தாக்குகிறார்.
இப்பொழுது சமூக-சனநாயகவாதிகள் மக்களுக்கு தலைமைதாங்கி நடத்திச் செல்வதற்குப் பிழையற்ற செயல்தந்திர முழக்கங்களைப் பெற்றிருப்பது சிறப்பான முக்கியத்துவமுள்ள விஷயமாகும். புரட்சிக் காலப்பகுதியில் கோட்பாட்டு ரீதியிலே சரியான செயல்தந்திர முழக்கங்களின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்துவது போல் அபாயகரமானது வேறொன்றுமில்லை. எடுத்துக்காட்டாக இஸ்க்ரா தனது 104 ஆம் இதழில் சமூக-சனநாய இயக்கத்திலுள்ள தன் எதிராளிகளின் பக்கம் உண்மையிலேயே போய்விடுகிறது. மேலும் அதே சமயம், காலத்தின் முன் ஓடுகிறவையாயும் பல தோல்விகள், தவறுகள் முதலியவற்றைக் கண்டபோதிலும், முன்சென்று கொண்டிருக்கும் இயக்கத்தின் பதையைக் காட்டுகின்றவையாயும் உள்ள முழக்கங்களின் செயல்தந்திர முடிவுகளின் முக்கியத்துவத்தை அது இழித்துப் பழித்துப் பேசுகிறது. மாறாக, வெறுமே நிகழ்ச்சிகளின் வழிப்போக்கில் பின்னடைந்து நடக்காமல் உறுதியான மார்க்சியக் கோட்பாடுகளின் உணர்ச்சியில் பாட்டாளிவர்க்கத்தை வழிநடத்த விரும்பும் கட்சிக்கு சரியான செயல்தந்திர முடிவுகளை தயாரிப்பது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ருஷ்யாவின் சமூக-சனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் தீமானங்களிலும் சரி, இக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றுவிட்ட பகுதியினர் நடத்திய மாநாட்டின் தீமானங்களிலும் சரி, மிகச் சரிநுட்பமான கவனமாகச் சிந்தித்துத்தெளிந்த, முழு நிறைவாக உருப்பெற்றுள்ள செயல்தந்திரக் கருத்துக்களைக் காண்கிறோம். இவை யாரோ தனித்தனி எழுத்தாளர்கள் போகின்ற போக்கில் வெளியிட்ட கருத்துக்கள் அல்ல; சமூக-சனநாயக வாதிப் பாட்டாளிவர்க்கத்தின் பொறுப்புள்ள சார்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கருத்துக்கள் இவை. நம் கட்சி மற்றெல்லாக் கட்சிகளையும் விட முன்னால் நிற்கிறது; ஏனெனில் அதனிடம் ஒரு சரிநுட்பமான, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்திட்டம் (Programme)உள்ளது. ஒஸ்வபஷ் தேனியேயைச் சேர்ந்த சனநாயகப் போக்குள்ள முதலாளிவர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தின்றும், சோசலிஸ்டு- புரட்சியாளர்களின் புரட்சிகரமான சொல்லடுக்கு ஜாலத்தினின்றும் வேறுபட்டதாயுள்ள நிலையில் தன் செயல்தந்திரத் தீர்மானங்களின்பால் கோட்பாட்டு பூர்வமான ஒரு போக்கைக் கொண்டிருப்பதில் அது மற்றக் கட்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். புரட்சி நடந்துவரும் போதுதான் அக் கட்சிகள் ஒரு நகல் வேலைத்திட்டத்தை முன்வைப்பதைப் பற்றித் திடீரென சிந்திக்கத் தலைப்பட்டன. தம் கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருப்பது ஒரு முதலாளியப் புரட்சிதானா என்று ஆராய்ந்தறிவது பற்றியும் முதன்முறையாகச் சிந்திக்கத் தலைப்பட்டன.
எனவேதான், ருஷ்யாவின் சமூக-சனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் செயல்தந்திரத் தீர்மானங்களையும் மாநாட்டின் செயல்தந்திரத் தீர்மானங்களையும் கவனமாகப் பயிவதும். அவற்றிலேயுள்ள மார்க்சியக் கோட்பாடுகளில் இருந்து வழுவிய திரிபுகள் எவை என்று வரையறுத்துக் கொள்வதும், சனநாயகப் புரட்சியில் சமூக சனநாயகவாதிப் பாட்டாளிவர்க்கத்தின் பருண்மையான பணிகளைப் பற்றித் தெளிந்த அறிவு பெறுவதும் புரட்சிகரமான சனநாயகவாதிகளின் மிகமிக அவசரமான பணி என்று கருதுகிறோம். இந்தப் பணியின் பொருட்டுத்தான் இக்குறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.
ருஷ்யாவின் சமூக சனநாயகத் தொழிலாளர் கட்சி முழுவதும் எதிர்காலத்தில் முற்றாக ஒன்றுபடுவதற்கு அடிப்படையாகப் போர்த்தந்திர ஒற்றுமைக்குச் சொல்லளவில் இணங்கச் செய்வதோடு நின்று கொள்ளாமல் நடைமுறையில் அதற்கு வழியைச் செப்பனிட விரும்புகிறவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடுகளின் நிலையிலிருந்தும் புரட்சியின் படிப்பினைகளின் நிலையிலிருந்தும் நமது செயல்தந்திரங்களைச் சோதித்தறிவது அவசியமாகும்.
1905, ஜூலை. நி.லெனின்
‘சனநாயகப் புரட்சியில் சமூக சனநாயகத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்’ என்ற நூலின் முன்னுரையிலிருந்து.
No comments:
Post a Comment