மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்
ருஷ்யாவின் சமூக-சனநாயகத் தொழிலாளர்கள் (போல்ஷெவிக்குகள்) கட்சியின் மையக் குழுவுக்கு ஒரு கடிதம்.
ஆதிக்கமுள்ள ”சோசலிஷ்டுக்” கட்சிகள் ஆக விஷமத்தனமாக கையாண்டும். பெருப்பாலும் மிகப் பெருமளவு விரிவாகப் பரப்பி வரும் மார்க்சியம் பற்றிய புரட்டுக்களின் ஒன்று புரட்சி எழுச்சிக்கான தயாரிப்பும், பொதுவான புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதிவரும் “பிளான்கிவாதம்” என்று கூறும் சந்தர்ப்பவாத பொய்யேயாகும்.
சந்தர்ப்பவாதத்தின் தலைவரான பெர்ன்ஷ்டைன் மார்க்சியத்தை பிளான்கின்வாதம் எனக் குற்றம் சாட்டியது மூலம் ஏற்கனவே அவப்பேறான புகழை ஈட்டியிருந்தார். நமது இன்றைய சந்தர்ப்பவாதிகள் பிளான்கின்வாதம் என்று கூக்கிரலிடுவது மூலம் பெர்ன்ஷ்டைனின் அற்பமான “கருத்துக்களை” கிஞ்சிதம் மேம்படுத்தவோ அல்லது செழுமைப்படுத்தவோ இல்லை.
புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதுகிறார்கள் என்பதால் மார்க்சியவாதிகள் மீது பிளான்கின்வாதம் என்று கூறிக் குற்றம் சாட்டப்படுகிறது! மார்க்ஸ் இந்த விஷயத்தில் மிகவும் திட்டவட்டமாக—துல்லியமாக, ஐயத்துக்கிடமற்ற தன்மையில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். புரட்சி எழுச்சியைக் குறிப்பாயும் ஒரு கலை என்று குறிப்பிட்டு அது கலையாகக் கட்டாயம் கருதப்பட வேண்டும் என்றும் முதல் வெற்றியை நீங்கள் போராடி அடைய வேண்டும் பிறகு வெற்றியிலிருந்து வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், எதிரியின் குழப்பத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, எதிரியை எதிரித்துத் தாக்குதலை என்றும் நிறுத்திவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார் என்பதை மார்க்சியர் எவரும் மறுக்கமாட்டார் என்றிருக்கும் பொழுது இதைவிட உண்மையைப் படுமோசமாகப் புரட்டும் செயல் வேறுண்டா?
புரட்சி எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் அல்லது ஒரு கட்சியினையோ நம்பிச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனை. புரட்சி எழுச்சி மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை. புரட்சி எழுச்சி வளர்ந்து வரும் புரட்சி வரலாற்றின் திருப்புமுனையைச் சார்ந்திருக்க வேண்டும்; அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயற்பாடு அதன் உச்சத்தில் இருக்கும். எதிரிகளின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் வலுவாக இருக்கும். இது மூன்றாவது நிபந்தனை. புரட்சி எழுச்சி பற்றிய பிரச்சனையை எழுப்புவதற்கான இந்த மூன்று நிபந்தனைகளும் மார்க்சியத்தைப் பிளான்கிவாதத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
ஆயினும் இந்த நிபந்தனைகள் நிலவும் போது, புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதமறுப்பது மார்க்சியத்துக்குத் துரோகம் செய்வதாகும்; புரட்சிக்குத் துரோகம் செய்வதாகும்.
நிகழ்ச்சிகளின் முழுமையான போக்கும். புரட்சி எழுச்சி நாள் நிகழ்ச்சி நிரலில் புறநிலை நோக்கில் வைத்திருக்கும் ஒரு தருணம் குறிப்பாய் இன்றைய தருணமே. இதைக் கட்சி கட்டாயம் உணர வேண்டும் என்பதையும், புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்ட ஒப்பு நோக்கும் முறையினைப் பயன்படுத்துவதும், ஜுலை 3-4 மற்றும் செப்டம்பர் நாட்களுக்கிடையேயான வேறுபாட்டை ஆய்வு செய்வதும் சிறப்பானதாக இருக்கும்.
ஜூலை 3-4-இல் செய்ய வேண்டிய சரியான காரியம் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்வதே என்று உண்மையை மீறாமல், வாதிட்டிருக்க முடியும். காரணம், நமது எதிரி நம்மை எப்படியும் புரட்சி எழுச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி, நம்மைக் கலகக்காரர்களாக இரக்கமின்றி நடத்தியிருப்பார்கள். எனினும், இந்தக் காரணத்தால் அந்த நேரத்தில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள ஆதரவாக முடிவு செய்வது தவறாக இருந்திருக்கும். புரட்சி எழுச்சியின் வெற்றிக்கான புறவய நிலைமைகள் அன்று இருக்கவில்லை.
1. புரட்சியின் முன்னணிப் படையான வர்க்கத்தின் ஆதரவு இன்னும் இருக்கவில்லை.
பெத்தோகிராத் மற்றும் மாஸ்கோவின் தொழிலாளர் படைவீரர்களிடையே பெரும்பான்மையினர் இன்னும் நம் பக்கமிருக்கவில்லை. இப்போது இரண்டு சோவியத்துக்களிலும் இது முற்றிலும், ஜூலை ஆகஸ்ட் வரலாற்றிலும், போல்ஷெவிக்குகள் “இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டதால்” ஏற்பட்ட அனுபவத்தாலும் கர்னீலவ் கலகத்தின் அனுபவத்தாலும் உருவாக்கப்பட்டது.
2. அந்தச் சமயத்தில் நாடு தழுவியதான புரட்சிகர கிளர்ச்சி இல்லை. கர்னீலவ் கலகத்துக்குப் பிறகு இப்போது இருக்கிறது. மாகாணங்களிலுள்ள நிலைமையும், பல ஸ்தலங்களில் சோவியத்துக்கள் ஆட்சி அதிகாரம் மேற்கொண்டிருப்பதும், இதை நிரூபிக்கின்றன.
3. அந்த சமயத்தில் எமது எதிரிகளிடையிலும், உறுதியற்ற குட்டி முதலாளிய வர்க்கத்தினரிடையிலும் எந்தவொரு முனைப்பான அரசியல் அளவுக்கும் ஊசலாட்டம் இருக்கவில்லை. இப்போது ஊசலாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. நமது தலையாய எதிரி “கூட்டணி நாடுகள்” மற்றும் உலக ஏகாதிபத்தியம். (உலக ஏகாதிபத்தியத்துக்குக் கூட்டணி நாடுகள் தலைமை தாங்குகின்றன) வெற்றிகரமான முடிவு வரை போரை நடாத்துவது, அல்லது ருஷ்யாவுக்கு எதிராகத் தனிப்பட்ட ஒரு சமாதானம் செய்து கொள்வது என்பவற்றுக்கிடையில் ஊசலாடத் தொடங்கியுள்ளது. மக்களிடையே பெரும்பான்மையைத் தெளிவாக இழந்துவிட்ட எமது குட்டி முதலாளிய சனநாயகவாதிகள் மிகப் பெருமளவுக்கு ஊசலாடத் தொடங்கியுள்ளனர். காடேட்டுக்களுடனான கூட்டணியை அதாவது ஒரு கூட்டாட்சியை அவர்கள் மறந்து விட்டார்கள்.
4. எனவே ஜூலை 3-4 இல் புரட்சி எழுச்சி என்பது தவறாக இருந்திருக்கும்; நாம் ஆட்சி அதிகாரத்தைப் புலப்படுத்தும் வகையில் அரசியல் முறையிலும் நீடித்து வைத்திருக்க முடியாது. சில சமயங்களில் பெத்ரோகிராத் நமது கரங்களில் இருந்த போதும் அதை நாம் புலப்படும் வகையில் நீடித்து வைத்திருக்க முடியாது. காரணம், அந்த சமயத்தில் நமது தொழிலாளர்களும், போர்வீரர்களும் பெத்ரோகிராத்துக்காகப் போராடி உயிரிழந்திருக்க மாட்டார்கள். கேரென்ஸ்கிகள், தெஸெரெத்தேலிகள் மற்றும் செர்னோவ்கள் மீது அந்த சமயத்தில் அந்தக் “கொடூரத் தன்மை” அல்லது மூர்க்கமான பகைமை இருக்கவில்லை. சோசலிஸ்டுப் புரட்சியாளர்களும், மென்ஷெவிக்குகளும் பங்குபற்றிய அடக்குமுறை வேட்டைக்குப் போல்ஷெவிக்குகள் இலக்கானதால் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து நமது மக்கள் இன்னும் உறுதிப்பட்டிருக்கவில்லை.
ஜூலை 3-4 இல், அரசியல் முறையில் நாம் ஆட்சி அதிகாரத்தை நீடித்து வைத்திருந்து இருக்க முடியாது, காரணம், கர்னீலவ் கலகத்துக்கு முன்னால் இராணுவமும் மாகாணங்களும் பெத்ரோகிராத்தை எதிர்த்து அணிவகுத்துச் செல்லக் கூடும். சென்றிருக்க முடியும்.
இப்போது சித்திரம் முற்றிலும் வேறாக உள்ளது.
நமக்கு ஒரு வர்க்கத்தின் பொரும்பான்மையினது ஆதரவு, புரட்சியின் முன்னணிப் படையின் ஆதரவு இருக்கிறது. அது மக்களைத் திரட்டிச் செல்லும் ஆற்றல் கொண்டது.
நமக்கு மக்களில் பெரும்பான்மையினது ஆதரவு இருக்கிறது. காரணம், செர்னோவின் ராஜினாமா; இது உழவர்கள், சோஷலிஸ்டுப் புரட்சியாளர் கூட்டணியிடமிருந்தோ (சோஷலிஸ்டு- புரட்சியாளர்களிடமிருந்தோ) நிலத்தைப் பெற மாட்டார்கள் என்பதற்கான ஒரே அடையாளமல்லாவிடினும் மிகவும் எடுப்பான தெளிவான அடையாளமாகும். இதுவே புரட்சியின் பொதுமக்கள் ஆதரவுத் தன்மைக்கு முதன்மையான காரணம்.
ஏகாதிபத்தியம் முழுவதும் மென்ஷெவுக்குகள் மற்றும் சோஷலிஸ்டுப் புரட்சியாளர்கள் கூட்டணி முழுவதும் நம்பமுடியாத விசித்திரமான பாணியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் எந்த வழியில் செல்வது என்பதை நிச்சயமாக அறிந்துள்ள ஒரு கட்சியின் சாதகமான நிலைமையில் நாம் இருக்கிறோம்.
நமது வெற்றி உறுதிப்பட்டுள்ளது. காரணம், மக்கள் முழுமையாகப் பொறுமை இழந்து விட்டார்கள், எல்லா மக்களுக்குமான உறுதியான மீள்வழியை நாம் காட்டுகிறோம்: “கர்னீலவ் நாட்களில்” நமது தலைமையின் மதிப்பை மக்கள் அனைவருக்கும் எடுத்துக் காட்டினோம். கூட்டணி அரசியல்வாதிகளிடம் ஒரு சமரசத்திற்கான யோசனைகளை முன்மொழிந்தோம். அவர்களது ஊசலாட்டத்தில் எந்தவித குறைவும் இல்லாவிடினும் அவற்றை (யோசனைகளை) அவர்கள் நிராகரித்தார்கள்.
நமது சமரச யோசனை இதுவரை நிராகரிக்கப்படவில்லை என்றும், சனநாயக மாநாடு அதை இன்னும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் நினைப்பது மாபெருந்தவறாகும். இந்த சமரச யோசனை ஒரு கட்சியால் கட்சிகளிடம் முன்மொழியப்பட்டது; இது வேறு எந்த வழியிலும் முன்மொழியப்பட்டிருக்க முடியாது. இது கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது. சனநாயக மகாநாடு ஒரு மாநாடு என்பதைத் தவிர வேறு எதுவுமல்ல: ஒரு விஷயத்தை மறந்து விடக் கூடாது; அதாவது, பெரும்பான்மையான புரட்சிகர மக்கள்- வெறுப்படைந்த ஏழை விவசாயிகள் இதில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை. இது மக்களில் சிறுபான்மையினரின் மாநாடு ஆகும். இந்தக் கண்கூடான உண்மையை மறந்துவிடக் கூடாது. சனநாயக மாநாட்டை ஒரு நாடாளுமன்றம் என்று நாம் கருதுவோமானால் அது பெருந் தவறாகும். அது நமது நாடாளுமன்ற மூடத்தனத்தையே அறவே காட்டுகிறது; அது தன்னைத்தானே புரட்சியின் ஒரு நிரந்தரமான சர்வ சுதந்திர நாடாளுமன்றம் என்று பறைசாற்றிக் கொண்டாலும் கூட அது எதையும் முடிவு செய்ய முடியாது. முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு வெளியே பெத்ரோகிராத் மாஸ்கோ தொழிலாளிவர்க்கக் குடியிருப்பு வட்டாரங்களில் அமைந்திருக்கிறது.
எமக்கு முன்னால் வெற்றிகரமான புரட்சி எழுச்சிக்கான, புறவய நிலைமகள் அனைத்தும் உள்ளன. உலகிலேயே மிகவும் வேதனையானதும் மக்களைச் சலிப்புக்குள்ளாகிவிட்டதுமான ஊசலாட்டத்திற்குப் புரட்சி எழுச்சியில் நாம் பெறும் வெற்றிமட்டுமே முடிவு கட்ட முடியும், புரட்சி எழுச்சியில் நாம் பெறும் வெற்றி மட்டுமே உழவர்களுக்கு உடனடியாக நிலம் வழங்கும். இதற்கான நிலைமையின் தனிச் சிறப்பு வாய்ந்த சாதகம் நமக்கு இருக்கிறது. புரட்சி எழுச்சியில் நாம் பெறும் வெற்றி மட்டுமே புரட்சிக்கு எதிராக முடுக்கப்படும் தனியான சமாதானம் என்ற சூழ்ச்சியைத் தோற்கடிக்கும். முழுமையான மேலும் நீதியான மேலும் முன்னதான சமாதானத்தை, புரட்சிக்கு அனுகூலமான ஒரு சமாதானத்தை வெளிப்படையாகப் பிரேரனை செய்வது மூலம் இதைத் தோற்கடிக்கும்.
இறுதியாக நமது கட்சி மட்டுமே வெற்றிகரமான புரட்சி எழுச்சி மூலம் பெத்ரோகிராத்தைப் பாதுகாக்க முடியும்; ஏனென்றால் சமாதானத்திற்கான நமது யோசனை நிராகரிக்கப்படுமானால், நாம் ஒரு போர் நிறுத்தத்தைக் கூட நாடிப் பெறவில்லையானால், அதன் பின் நாம் “பாதுகாப்புவாதிகள்” ஆகிவிடுவோம். போர்க் கட்சிகளின் தலைமையில் நாம் இருப்போம். நாமே மிக மேம்பட்ட போர்க் கட்சியாகிவிடுவோம். போரை உண்மையிலேயே புரட்சிகரமான முறையில் நடத்துவோம். முதலாளிகளிடம் இருந்து எல்லா ரொட்டிகளையும் (உணவையும்) காலணிகளையும் பறித்துக் கொள்வோம், அவர்களுக்கு ரொட்டிப் பொருக்குகளை மட்டுமே விட்டுவைத்து மரப்பட்டைக் காலணிகளையும் அணிவிப்போம். எல்லா உணவையும், காலணிகளையும் போர்முனைகளுக்கு அனுப்பி வைப்போம்.
அதன் பின் நாம் பெத்ரோகிராதைப் பாதுகாப்போம்.
ருஷ்யாவில் உண்மையிலேயே ஒரு புரட்சிகரப் போரை நடத்துவதற்கான பொருளாதய, ஆன்மீக- இருவகை மூலவளங்களும் இன்னும் அளவற்றதாக இருக்கின்றன. செர்மானியர் நமக்குக் குறைந்த பட்சம் போர்நிறுத்தத்தையாவது அனுமதிப்பார்கள் என்பதற்கான வாய்ப்புகள் ஒன்றுக்கு நூறு இருக்கிறது. தற்போது ஒரு போர்நிறுத்தத்தை உறுதியாகப் பெறுவது உலகம் முழுவதையும் வென்று பெறுவதாகும்.
* * *
புரட்சியைப் பாதுகாக்கவும், இரு கூட்டணிகளையும் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகளும் “தனித்தனியாகத்” துண்டாட விடாமல் ருஷ்யாவைப் பாதுகாக்கவும், பெத்ரோகிராத் மற்றும் மாஸ்கோ தொழிலாளர்களின் புரட்சிஎழுச்சி முற்ற முழு அவசியம் என்பதைக் கண்டுணர்ந்துவிட்ட நாம், முதலில் வளர்ந்துவரும் புரட்சி எழுச்சியின் நிலைமைகளுக்கு ஏற்ப மாநாட்டில் நமது அரசியல் செயல்தந்திரங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்; இரண்டாவதாக, புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்ற மார்க்சின் கருத்தை நாம் சொல்லளவோடு மட்டும் ஏற்கவில்லை என்பதைக் காட்ட வேண்டும்.
மாநாட்டில் ஆள் தொகையைத் தேடித் திரியாமல், ஊசலாட்டக்காரர்களை ஊசலாட்டக்காரர் முகாமிலேயே விட்டு வைக்க அஞ்சாமல் நாம் உடனடியாக போல்ஷெவிக் குழுவை உறுதியாக இணைக்க வேண்டும். ஊசலாட்டக்காரர்கள் உறுதியான பற்றார்வமுள்ள போராட்ட வீரர்கள் முகாமில் இருப்பதை விட அங்கேயே இருப்பது புரட்சி இலட்சியத்துக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.
நீண்ட பேச்சுக்களின், பொதுவான பேச்சுகளின் ஒவ்வாத தன்மையினை மிகவும் உறுதியான முறையில் வலியுறுத்தியும், புரட்சியைக் காக்க உடனடிப் போராட்டம் அவசியம் என்பதையும், முதலாளித்துவ வர்க்கத்துடன் முற்றாக முறித்துக் கொள்ளவேண்டியதன் அடிப்படை அவசியத்தையும், இன்றுள்ள அரசாங்கத்தை முழுமையாக அகற்றி எறிவதற்கும், ருஷ்யாவைத் “தனித்தனியாகத்” துண்டாடுவதற்கு ஆயத்தம் செய்துவரும் ஆங்கில-பிரஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுடன் பூரணமாக முறித்துக் கொள்ளவும், புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் புரட்சிகர சனநாயகவாதிகளிடம் உடனடியாக அனைத்து ஆட்சி அதிகாரமும் மாற்றியளிக்கப்பட வேண்டும் என்பதையும் எல்லாம் வலியுறுத்தும் ஒரு சுருக்கமான பிரகடனத்தைப் போல்ஷெவிக்குகளிடமிருந்து உருவாக்கிப் பெற வேண்டும்.
மக்களுக்கு சமாதானம், உழவர்களுக்கு நிலம், தகாத லாபங்களைப் பறிமுதல் செய்தல், உற்பத்தியை முதலாளிகள் இழிவான முறையில் சீர்குலைப்பதைத் தடை செய்தல் ஆகிய வேலைத்திட்டச்ப் பிரேரணைகள் தொடர்பான இந்த முடிவு குறித்த சுருக்கமான, மிகவும் கூரியதான வகைமுறை விளக்கத்தை நமது பிரகடனம் வழங்க வேண்டும்.
இந்தப் பிரகடனம் எவ்வளவுக்கு எவ்வளவு மேலும் சுருக்கமானதாகவும், அதிகக் கூரியதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேலும் நல்லது. மேலும் இரண்டு உயர் முக்கியத்துவமுள்ள முடிவுகள் மட்டும் இதில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அதாவது, மக்கள் ஊசலாட்டங்களால் சலிப்படைந்திருக்கிறார்கள், சோஷலிஸ்டு-புரட்சியாளர் மற்றும் மென்ஷெவிக்குகளின் உறுதியின்மையால வெறுப்படைந்திருக்கிறார்கள்; அவை புரட்சிக்குத் துரோகம் செய்து விட்டன. எனவே, இந்தக் கட்சிகளிடமிருந்து திட்டவட்டமாக விலகி முறித்துக் கொள்கிறோம் என்பதே.
மற்றும் இன்னொரு விசயம், பிரதேசக் கைப்பற்றல்கள் இல்லாத சமாதானத்தை உடனடியாக முன்வைப்பது மூலமும், கூட்டணி ஏகாதிபத்தியவாதிகளுடனும் எல்லா ஏகாதிபத்தியவாதிகளுடனும் உடனடியாக முறித்துக் கொள்வது மூலமும் ஒருகால் நாம் உடனே ஒரு போர்நிறுத்தத்தைப் பெறலாம். இல்லையேல் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் முழுவதும் நாட்டைப் பாதுகாக்க ஒன்று திரளும், பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் புரட்சிகர சனநாயகவாதிகள் உண்மையில் புரட்சிகரமான போரைத் தொடுப்பார்கள்.
இந்தப் பிரகடனத்தைப் படித்த பிறகு, பேச்சு வேண்டாம். முடிவுகள் வேண்டும், தீர்மானம் எழுதுதல் வேண்டாம். செயல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பின் நாம் நமது குழு முழுவதையும் ஆலைகளுக்கும் பாசறைகளுக்கும் அனுப்ப வேண்டும். அவர்களுக்குரிய இடம் அங்குதான், அங்குதான் வாழ்க்கையின் துடிப்பு இருக்கிறது. அங்குதான் நமது புரட்சித் தாரகத்தின்மூலாதாரம் உள்ளது. அங்குதான் சனநாயக மாநாட்டின் இயங்கு சக்தி உள்ளது.
அங்கு, ஆர்வமிக்க, உணர்ச்சியான உரைகளில் நாம் நமது வேலைத்திட்டத்தை விளக்கி, ஒன்று, மாநாடு இதை முற்றிலுமாக ஏற்க வேண்டும் இல்லையேல் புரட்சி எழுச்சிதான் ஏற்படும் என்ற மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும். நடுப்பாதை இல்லை. தாமதம் சாத்தியமல்ல, புரட்சி செத்துக் கொண்டிருக்கிறது.
பிரச்சனையை இந்த வழியில் முன்வைத்து, நமது குழு முழுவதையும் ஆலைகளிலும் பாசறைகளிலும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் நாம் புரட்சி எழுச்சியைத் தொடக்குவதற்கான சரியான தருணத்தை நிர்ணயிக்க முடியும்.
புரட்சி எழுச்சியை மார்க்சிய வழியில், அதாவது ஒரு கலையாகக் கருத வேண்டுமாயின் நாம் அதே சமயம் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் புரட்சிப்படைப் பிரிவுகளின் தலைமையகத்தை அமைக்க வேண்டும். நமது படைகளை விநியோகம் செய்ய வேண்டும். நம்பகமான படை அணிகளை மிகவும் முக்கியமான படை முனைகளுக்கு அனுப்ப வேண்டும் அலெக்சாண்டிரின்ஸ்கி அரங்கைச் சுற்றி வளைத்து பீட்டர்-பால் கோட்டைகளைக் கைப்பற்றி இராணுவத் தலைமையையும் அரசாங்கத்தையும் கைது செய்து, எதிரி நகரின் கேந்திர முனைகளை அணுக இடந்தருவதை விட அழிவதே மேல் என்று கருதும் படைப்பிரிவுகள் ஜங்கர்களுக்கும் கொடிய டிவிஷனுக்கும் எதிராக முன்செல்ல வேண்டும். ஆயுதமேந்திய தொழிலாளர்களை அணிதிரட்டி இறுதியான மூர்க்கமான போரில் போராடும் படியும், உடனே தந்தி தொலைபேசி செயலகங்களைக் கைப்பற்றுமாறும் அறைகூவல் விடவேண்டும். நமது புரட்சி எழுச்சித் தலைமையகத்தை மத்திய தொலைபேசிச் செயலகத்துக்கு மாற்றி அதைத் தொலைபேசி மூலம் எல்லா ஆலைகள், எல்லாப் படைப் பிரிவுகள், ஆயுதந்தாங்கிப் போராடும் எல்லா முனைகள் ஆகியவற்றோடும் தொடர்புபடுத்த வேண்டும்.
இன்றைய தருணத்தில் புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதாவிட்டால் மார்க்சியத்தின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ, புரட்சியின்பால் மெய்பற்றுடன் இருப்பதோ சாத்தியமல்ல என்ற உண்மையைச் சித்தரித்துக்காட்ட மட்டுமே இது உதாரணமாகக் காட்டப்பட்டது.
நி.லெனின்(நூல்திரட்டு, தொகுதி 26, பக்கங்கள் 22-27)
No comments:
Post a Comment