Tuesday 7 February 2012

ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்-வி.ஐ.லெனின்

ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்

நான்  இந்த வரிகளை அக்டோபர் 8 ஆம் நாள் எழுதுகிறேன். இவை 9 ஆம் நாளிக்குள் பெத்ரோகிராத் தோழர்களுக்குப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை எனக்குக் கிஞ்சித்தும் இல்லை. வடக்குப் பிராந்தியம் சோவியத்துகளின் காங்கிரஸ் அக்டோபர் 10 ஆம் நாள்நடைபெற இருப்பதால் இவை முகவும் தாமதமாக வந்து சேரலாம். இருந்த போதிலும் பெத்ரோகிராத் மற்றும்  அந்தப் “பிராந்தியம்” முழுவதும் தொழிலாளர் படையாளிகள் நடத்தவிருக்கும் போராட்டம், விரைவில் நடைபெறும். ஆனால் இன்னும் நடைபெறவில்லை என்று இருக்கும் பட்சத்தில், நான் எனது “பார்வையாளரின் அறிவுரைகளை” அளிக்க முயல்வேன்.

ஆட்சி அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்களுக்கு மாற்றி வழங்கப்பட வேண்டும் என்பது தெட்டத் தெளிவானது. பாட்டாளிகளின் புரட்சிகர ஆட்சி அதிகாரம் (அல்லது போல்ஷெவிக் ஆட்சி அதிகாரம் – இப்போது இவை  இரண்டும் ஒன்றே) பொதுவாக உலகம் முற்றிலும் குறிப்பாக, போரிடும் நாடுகளில் உள்ள  எல்லா உழைக்கும் மக்கள், எல்லாச் சுரண்டப்படும் மக்கள் மற்றும் ருஷ்ய  உழவர்களின் உச்சபட்சமான அனுதாபத்தையும், தயக்கமற்ற ஆதரவையும் உறுதியாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை எந்த போல்ஷெவிக்கும் மறுக்கமுடியாது. இந்த மிகவும் நன்கறியப்பட்ட, நீண்ட காலமாக நிலைநாட்டப்பட்டுவிட்ட  உண்மைகள் குறித்து விவரிக்கத் தேவை இல்லை.

இங்கு விவரிக்கப்பட வேண்டுவது என்னவென்றால், ஒரு வேளை எல்லாத்  தோழர்களுக்கும் முற்றும் தெளிவாக இல்லாத சிலவற்றை, அதாவது சோவியத்துக்களுக்கு இப்போது ஆட்சி அதிகாரத்தை மாற்றி வழங்குவது என்பது ஆயுதமேந்திய எழுச்சி என்றே பொருள்படும் என்பதையே ஆகும். இது கண்கூடானதாகத் தோன்றலாம். ஆனால் எல்லோரும் இந்த அம்சம் குறித்துச் சிந்தனை செலுத்தியிந்தார்கள் அல்லது சிந்தனை செலுத்தி வருகிறார்கள் என்று கூற முடியாது. இப்போது ஆயுதமேந்திய எழுச்சியைத் தள்ளுபடி செய்வது, போல்ஷெவிசத்தின் கேந்திர முழக்கம் (எல்லா ஆட்சி அதிகாரமும் சோவியத்துக்களுக்கே) மற்றும் பொதுவாகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வதேசியவாதத்தைத் தள்ளுபடி செய்வதாகவே பொருள்படும்.

ஆனால் ஆயுதமேந்திய எழுச்சி அரசியல் போராட்டத்தின் ஒரு விஷேட வடிவமாகும். விஷேச விதிகளூக்குக் கட்டுப்பட்டதாகும்.இவை குறித்துக் கவனமாகச் சிந்தித்தல் வேண்டும் “போரைப் போலவே அந்த அளவுக்கு முழுமையாகப் புரட்சி எழுச்சியும் ஒரு கலையாகும்” என்று எழுதிய போது கார்ல் மார்க்ஸ் இந்த உண்மையையே தனிச்சிறப்புடைய துலக்கத்துடன் வெளியிட்டார்.

இந்தக் கலையின் முக்கியமான விதிகள் என்ற முறையில் மார்க்ஸ் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.

1.   புரட்சிகர எழுச்சியுடன் என்றுமே விளையாட வேண்டாம். ஆனால். அதைத் துவங்கும்போது நீங்கள் கடைசிவரையில் செல்லவேண்டும் என்பதை உறுதியாக உணர்ந்திருக்க வேண்டும்.

2.   தீர்மானகரமான முனையில். தீர்மானகரமான தருணத்தில் மாபெரும் வலுமிக்க சக்திகளை ஒரு முனைப்படுத்த வேண்டும். இல்லையேல், மேலும் நல்ல ஆயத்தங்களும் ஒழுங்குதிரட்சியும் கொண்ட எதிரி கலகக்காரர்களை அழித்துவிடுவார்.

3.   புரட்சி எழுச்சி தொடங்கிவிட்டது என்றால், நீங்கள் மிகப்பெரிய வைராக்கியத்துடன் செயற்படவேண்டும். தவறாமல் எல்லா வழிகளிலும் எதிர்த்தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். “தற்காப்புப் போக்கு ஆயுதமேந்திய எழுச்சி அனைத்தின் மரணமாகும்.”

4.   நீங்கள் எதிரி மீது திடீர்த் தாக்குதல் தொடுக்க முயலவேண்டும். அவரது படைப்பலம் சிதறிக் கிடக்கும் தருணத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

5.   எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி நாள் தோறுமான வெற்றிகளுக்காக (ஒரு நகரம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மணிக்கு மணி என்று சொல்லலாம்) நீங்கள் பாடுபட வேண்டும். “தார்மீக மேநிலையை” எப்பாடுபட்டும் நீடித்து வைத்திருக்க வேண்டும்.

இதுகாறும் “உலகமறிந்துள்ள புரட்சிக் கொள்கையின் மாபெரும் விற்பனரான தந்தோனின் துணிச்சல், துணிச்சல், மேலும் துணிச்சல் (de I’audace, de I’audace de I’audace) என்னும் சொற்களால் ஆயுதமேந்திய எழுச்சி சம்பந்தமாக எல்லாப் புரட்சிகளின் படிப்பினையையும் மார்க்ஸ் தொகுத்தளித்தார்.

ருஷ்யாவுக்கும் 1917 அக்டோபருக்கும் அதை பிரயோகம் செய்தால் அதன் பொருள் எவ்வளவு சடுதியாகவும் எவ்வளவு வேகமாகவும் சாத்தியமோ அது போன்ற ஒரு சமயத்தில் பெத்ரோகிராத் மீது எதிர்த்தாக்குதல், இது உள்ளே இருந்தும் வெளியில் இருந்தும் தவறாமல் தொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்க வட்டாரங்களில் இருந்தும், பின்லாந்தில் இருந்தும், ரெவெலில் இருந்தும், கிரோன்ஷ்டாத்தில் இருந்தும் தொடுக்கப்பட வேண்டும். கடற்படை முழுவதன் எதிர்த்தாக்குதல், நமது “முதலாளித்துவக் காவற்படை”  (இராணூவப் பள்ளி மாணவர்கள்) நமது “வாந்தே துருப்புக்கள்” (கசாக்குப் படையின் பகுதி) இத்தியாதிகளின் 15,000 அல்லது 20,000 (ஒருவேளை அதிகம்) பேரின் மீது படைப் பலத்தின் மாபெரும் மேலாதிக்கத்தை ஒரு முனைப்படுத்தல் என்பதாகும்.

நமது மூன்று பிரதான சக்திகளான கடற்படை, தொழிலாளர்கள், சேனைப் பிரிவுகளைத் தக்கபடி இணைத்து, அவை பின்வருவனவற்றை எப்பாடுபட்டும் தவறாது பற்றிப் பிடித்துவிடாது வைத்திருக்க வகை செய்ய வேண்டும்: (அ) தந்தி அலுவலகம், (ஆ) தொலைபேசி இணைப்பகம், (இ) இரயில்வே நிலையங்கள் (ஈ) எல்லாவற்றுக்கும் மேலாகப் பாலங்கள்.

மிகவும் உறுதியான நபர்கள் (நமது “அதிரடிப் படைகள்” இளம் தொழிலாளர்கள், சிறந்த கடலோடிகள்) சிறிய படைப் பிரிவுகளாக அமைக்கப்பட்டு; மிகவும் முக்கியமான இடங்களைப் பிடித்தடக்கவும் எல்லா இடங்களிலும் எல்லா முக்கியமான இடங்களிலும் எல்லா முக்கியமான செயற்பாடுகளிலும், பங்குபற்றும்படி செய்தல் வேண்டும். உதாரணமாக:

பெத்ரோகிராதைச் சுற்றி வளைத்துக் கொண்டு தொடர்புகளை வெட்டி விடுதல்; கடற்படையினர், தொழிலாளர் மற்றும் துருப்புக்களின் கூட்டுத்தாக்குதல் மூலம் அதைக் கைப்பற்றல் – இந்தப் பணிக்குக் கலையும் மும்மடங்கு துடுக்கும் தேவை. விரோதியின் ”மையங்களை” (இராணுவப்பள்ளி, தந்தி அலுவலகம், தொலைபேசி இணைப்பகம் ஆகியவற்றை) தாக்கிச் சுற்றிவளைத்துக் கொள்ளும் நோக்கமுடன் துப்பாக்கி எறிகுண்டுகளை ஆயுதமாக ஏந்திய சிறந்த தொழிலாளர்களின் படைப்பிரிவுகளை அமைப்பது. அவர்களது கோட்பாட்டு வாசகம்: எதிரி முன்னேற இடம் கொடுப்பதை விட கடைசி மனிதன் வரை சாவது மேல்!” என்பதாக இருக்க வேண்டும்.

போராடுவது என்று முடிவு செய்யப்படுமானால் தலைவர்கள் தந்தோன் மற்றும் மார்க்சின் மாபெரும் கட்டளை வாசகங்களை வெற்றிகரமாகப் பிரயோகிப்பர் என்று நம்புவோமாக.

ருஷ்யப் புரட்சியின் வெற்றியும், உலகப் புரட்சியின் வெற்றியும் ஒருங்கே இந்த இரண்டு அல்லது மூன்று நாள் போராட்டத்தைச் சார்ந்திருக்கிறது.

நூல்திரட்டு தொகுதி 34 பக்கங்கள் 179-181
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் பற்றி-
ஒரு தொகுப்பு – பக்கங்கள் 140-143

No comments:

Post a Comment