Sunday, 13 November 2011

சோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்கள் நிலையும்




உழைக்கும்
பெண்களின் சர்வதேச தினம்

போல்சிவிக்ஷம், ருக்ஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் சாராம்சம் முதலாளித்துவத்தின் கீழ் யார் மிகவும் அதிகமாக ஒடுக்கப்பட்டார்களோ, அந்த மக்களை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு வருவதே, முடியாட்சி, முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள், இரண்டிலுமே முதலாளிகள் அவர்களை கீழே போட்டு மிதித்து, ஏமாற்றித் திருடிக் கொண்டிருந்தார்கள். நிலமும் தொழிற்சாலைகளும் தனிப்பட்டவர்களுடைய உடைமையாக இருந்த வரை, இத்தகைய ஒடுக்குமுறை, இத்தகைய மோசடி, மக்களின் உழைப்பை முதலாளிகள் இப்படி கொள்ளையடிப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது

முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொய்மையையும் பாசாங்குத்தனத்தையும் அம்பலப்படுத்தி, நிலத்திலும் தொழிற்சாலைகளிலும் தனிச்சொத்துரிமையை ஒழித்து, உழைக்கும் மக்களிடம், சுரண்டப்படும் மக்களிடம் எல்லா அரசு அதிகாரத்தையும் குவிப்பதே போல்சிவிக்ஷம், சோவியத் ஆட்சியின் சாரம்சமாகும். அவர்கள், இந்த வெகுஜனங்கள், அரசியலைக் கையிலெடுக்கிறார்கள், அதாவது புதிய சமூகத்தை நிர்மாணிக்கின்ற பணியைத் தொடங்குகிறார்கள். இது சுலபமான காரியமல்ல; முதலாளித்துவம் வெகுஜனங்களைக் கீழே போட்டு மிதித்து ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கூலி அடிமைத்தனத்தை, முதலாளித்துவ அடிமைத்தனத்தை விட்டு வெளியே வருவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை; வேறு வழி இருக்கவும் முடியாது.

   ஆனால் வெகுஜனங்களை அரசியலுக்குக் கொண்டுவருவது -----பெண்களையும் அதே மாதிரியாகக் கொண்டுவராமல்---- முடியாது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலத்தின் பாதியளவிலிருக்கும் பெண்குலம் இரு மடங்கு ஒடுக்கப்படுகிறது. உழைக்கும் பெண்களும் விவசாயிப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் ஆனால் அதற்கும் மேலாக, முதலாளித்துவக் குடியரசுகளில், மிகவும் அதிகமான ஜனநாயகம் நிலவுகின்றவற்றில் கூட,
 முதலாவதாக, சட்டம் அவர்களுக்கு ஆண்களோடு சமத்துவம் கொடுக்கவில்லை என்பதால், அவர்களுக்குச் சில உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
 இரண்டாவதாக---- இது மிகவும் முக்கியமானதாகும் -----அவர்கள் ”வீட்டுவேலை என்ற அடிமைத்தனத்தில்” .சிக்கியிருக்கிறார்கள். ஏனெனில் சமையலறையிலும் வீட்டிலும் அற்பமான, அழுக்குப் படிந்த, முதுகெலும்பை உடைக்க கூடிய, அறிவை மந்தப்படுத்துகின்ற உழைப்பு என்ற அடிமை வேலையை அவர்கள் அளவுக்கு மீறிச் செய்ய வேண்டியிருக்கிறது.

  பெண்களுக்குச் சமத்துவம் மறுக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுவதன் மூலவேர்களை சோவியத் புரட்சி, போல்க்ஷிவிக் புரட்சி, பிடுங்கியதைப் போல உலகத்தின் வேறு எந்தக் கட்சியும், புரட்சியும் எந்தக் காலத்திலும் கனவில் கூட நினைத்தது கிடையாது. இங்கே சோவியத் ருக்ஷ்சியாவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் இல்லாத நிலைமையில் (ஒரு) சுவடு கூட சட்டத்தில் விட்டுவைக்கப்படவில்லை. சோவியத் ஆட்சி விக்ஷேசமாகத் திருமணம், குடும்பம் பற்றிய சட்டங்களிலே இருந்த, அருவருப்பூட்டும் கேவலமான, பாசாங்குத்தனமான சமத்துவமற்ற நிலையையும், குழந்தைகளுக்கிடையே கூட  சமமான அந்தஸ்து இல்லாத நிலையையும் அகற்றிவிட்டது.

  பெண்கள் விடுதலையில் இது முதல் நடவடிக்கை மட்டுமே; ஆனால் முதலாளித்துவ குடியரசுகளில்----  அவற்றில் அதிக ஜனநாயகம் உள்ளவற்றையும் சேர்த்துக் கொண்டு----ஒன்றுலாவது இந்த முதல் முயற்சியைச் செய்வதற்குக் கூட துணிவு வரவில்லை.”புனிதமான தனிச் சொத்துரிமையைக்” கண்டு ஏற்படுகின்ற பயம்தான் இதற்கு காரணம்.

இரண்டாவதும், மிக முக்கியமானதுமான நடவடிக்கை நிலத்திலும் தொழிற்சாலைகளிலும் தனிச் சொத்துரிமையை ஒழிப்பதாகும். இந்த நடவடிக்கை, -- இது மட்டுமே-- தனித் தனியாக  வீடுகளை நிர்வகிப்பதிலிருந்து விரிந்த அளவிலான சமூகப்படுத்தப்பட்ட குடும்ப சேவைகளுக்கு மாற்றுவதன் மூலம் “ வீட்டு அடிமைத் தனத்திலிருந்து” பெண்களை விடுதலை செய்து, அவர்களுடைய முழுமையான விடுதலைக்கு, உண்மையான விடுதலைக்கு வழி வகுக்கும்.

   இந்த மாற்றம் கடினமானதே; ஏனென்றால் இதில் மிக ஆழமாக வேரூன்றிவிட்ட, உறுதியான, மரத்துப்போன, இறுக்கமான “ஒழுங்கமைப்பை” (அருவருப்பான, காட்டுமிராண்டித்தனமான முறை என்று சொல்வது உண்மையாகப் பொருத்தமாக இருக்கும்.) திருத்தியமைப்பது சம்பத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மாற்றம் ஆரம்பமாகிவிட்டது; இதற்கு விசை கொடுத்துச் செலுத்தி விட்டோம்; புதிய பாதையில் நாம் புறப்பட்டு விட்டோம்.

   இப்படிப்பட்ட இணையற்ற,நம்ப முடியாத அளவுக்குக் கடினமான ஆனால் மாபெரும் கடமையை உலகத்திலே மகத்தானதும் உண்மையிலேயே விடுதலையை ஏற்படுத்துவதுமான இந்தக் கடமையை முதல் முதலாகச் செய்கின்ற  சோவியத் ருக்ஷ்சியாவுக்கு, இந்த சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று, உலகத்தின் எல்லா நாடுகளிலுமுள்ள உழைக்கும் பெண்கள் எண்ணற்ற பொதுக் கூட்டங்களில் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். மூர்க்கத்தனமான,---அடிக்கடி காட்டுமிராண்டித்த னமாகவும்  மாறுகின்ற--- முதலாளித்துவ பிற்போக்குக்கு முன்னால் உறுதியிழக்க வேண்டாம் என்று உத்வேகமூட்டக்கூடிய அறைகூவல்கள் வரும். ஒரு முதலாளித்துவ நாடு எந்த அளவுக்குச் “சுதந்திரமானதாகவும்” “அதிக ஜனநாயகம்” உடையதாகவும் இருக்கின்றதோ அந்த அளவுக்கு அங்கேயுள்ள முதலாளித்துவக் கும்பல் அதிகக் காட்டுத்தனமாகத் தொழிலாளர் புரட்சியைத் தாக்கும். வட அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற ஜனநாயகக் குடியரசு இதற்கு உதாரணமாகும். ஆனால் தொழிலாளிகளில் பெரும்பான்மையினர் ஏற்கனவே விழிப்படைந்து விட்டார்கள். ஆசியாவிலும் கூட செயலற்ற, மந்தமான, தூக்க மயக்கமுடைய மக்கள் திரளினர் ஏகாதிபத்திய யுத்தத்தினால் முற்றிலும் விழித்துக் கொண்டு விட்டனர்.

    உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேக்க நிலை உடைக்கப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து மக்களினங்களுடைய விடுதலை, மூலதனம் என்ற நுகத்தடியிலிருந்து உழைக்கும் ஆண்கள் பெண்களுடைய விடுதலை என்ற பேரெழுச்சியை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் லட்ச்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த இலட்சியத்தைத் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். 

மூலதனம் என்ற நுகத்தடியிலிருந்து உழைப்பின் விடுதலை என்ற இந்த இலட்சியம் உலகமுழுவதிலும் வெற்றி பெறப் போகும் காரணம் இதுவே.


1921, மார்ச் 4                                          நூல் திரட்டு.
                                                     தொகுதி 42,
                                                     பக்கங்கள் 368-370
சோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்கள் நிலையும்
பக்கங்கள் 26 -29

No comments:

Post a Comment