Monday 14 November 2011

மார்க்சியமும் திருத்தல்வாதமும்


மார்க்சியமும் திருத்தல்வாதமும்
   வடிவ கணித வெளிப்படை உண்மைகள் மனித நலன்களைப் பாதிக்குமாயின் அவற்றை மறுக்க நிச்சயம் முயற்சி செய்வார்களெனக் கூறும் பிரபல முதுமொழி ஒன்று உண்டு; இறையியலின் பழங்காலத் தப்பெண்ணங்களுக்கு முரணான இயற்கை – வரலாற்றுத் தத்துவங்களுக்கு வெறித்தனமான எதிர்ப்புக் காட்டப்பட்டது. இனியும் காட்டப்பட்டு வருகிறது. ஆகவே மார்க்சியத் தத்துவம்- தற்கால சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொளி கூட்டி அதனை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக் காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு (பொருளாதார வளர்ச்சி காரணமாய்) தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்புத் தோன்றுமென்பதை நிருபிப்பதுமான இந்த மார்க்சியத் தத்துவம் – அதன் வாழ்வு முழுவதும் போராடியே ஒவ்வொரு அடியாய் முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.
     மார்க்சியமானது முதலாளித்துவ விஞ்ஞானத்துக்கும் தத்துவவியலுக்கும் எதிரானது என்பதைக் கூறத் தேவையில்லை சொத்துடைத்த வர்க்கங்களின் வளரும் தலைமுறையை மழுங்கடிக்கவும், உள்நாட்டு, வெளிநாட்டுப் பகைவர்களுக்கு எதிராய் அதைப் “பயிற்றுவிக்கவும்” அதிகாரபூர்வமான பேராசிரியர்களால் அதிகாரபூர்வமாய் இவை போதிக்கப்படுகிறவை. இந்த விஞ்ஞானம் மார்க்சியம் என்பதாய் ஒன்று இருப்பதைக் கேட்பதற்குக் கூட மறுக்கிறது; மார்க்சியம் ஏற்கனவே பொய்யென நிரூபிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு விட்டதெனக் கூறுகிறது. சோக்ஷலிசத்தை மறுத்துப் பிழைப்புத் தேடிக்கொள்ளும் இளம் அறிவியலாளர்களும், காலாவதியாகிவிட்ட எல்லா வித “அமைப்புக்களின்” மரபுகளையும் பாதுகாத்து நிற்கும் தள்ளாத கிழவர்களும் ஒருங்கே துடித்தெழுந்து மார்க்சைத் தாக்குகின்றனர். மார்க்சியத்தின் முன்னேற்றமானது, தொழிலாளி வர்க்கத்தினரிடையே அதன் கருத்துக்கள் பரவி வேரூன்றி உறுதி பெறுவதானது, மார்க்சியத்தின் மீதான இந்த முதலாளித்துவ தாக்குதல்களின் வேகத்தையும் கடுமையையும் தவிர்க்க முடியாதபடி அதிகரிக்கச் செய்கிறது. அதிகாரபூர்வமான விஞ்ஞானத்தால் “அழித்தொழிக்கப்படும்” ஒவ்வொரு தரமும் மார்க்சியம் மேலும் மேலும் வலுவும் உறுதியும் சக்தியும் பெற்று ஓங்குகிறது.
   தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடன் தொடர்புகொண்டு பிரதானமாய்ப் பாட்டாளி வர்க்கத்திடம் நிலவும் தத்துவங்களிடையேகூட மார்க்சியம் தனது நிலையை  எடுத்தயெடுப்பிலேயே உறுதியாய் நாட்டிக் கொண்டுவிடவில்லை. அதன் வாழ்வின் முதல் அரை நூற்றாண்டில் (1840 ஆம் ஆண்டுகளிலிருந்து தொடங்கி) மார்க்சியம் அடிப்படையிலேயே தனக்கு விரோதமான தத்துவங்களுக்கு எதிராய்ப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது நாற்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் மார்க்சும் எங்கெல்சும் தத்துவவியல் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தினராய் இருந்த தீவிர இளம் ஹெகலியர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொண்டனர். நாற்பதாம் ஆண்டுகளின் முடிவில் பொருளாதாரத் தத்துவத் துறையில் புருத்தோனியத்தை18 எதிர்த்து போராட்டம் ஆரம்பமாயிற்று. கொந்தளிப்பு மிக்க 1848 ல் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட கட்சிகளையும் தத்துவங்களையும் பற்றிய விமர்சனத்தின் வாயிலாய்  ஐம்பதாம் ஆண்டுகளில் இந்தப் போராட்டம் முடிவடையலாயிற்று. அறுபதாம் ஆண்டுகளில் போராட்டம் பொதுத் தத்துவத் துறையிலிருந்து நேரடியான தொழிலாளர் இயக்கத்துக்கு மேலும் நெருங்கிய ஒரு துறைக்கு இடம் பெயர்ந்து சென்றது. அகிலத்திலிருந்து பக்கூனினியம்19  வெளியேற்றப்பட்டதில் இது முடிவுற்றது. எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சிறிது காலத்துக்குப் புருதோனியர் முல்பெர்கரும், எழுபதாம் ஆண்டுகளின் கடைசிப் பகுதியில் நேர்காட்சிவாதி டூரிங்கும் ஜெர்மனியில் அரங்கிலே ஆடினர். ஆனால் பாட்டாளி வர்க்கத்திடம் ஏற்கனவே மிகச் சொற்பச் செல்வாக்கே இருந்தது. தொழிலாளர் இயக்கத்தில் ஏனைய எல்லாச் சித்தாந்தங்களின் மீதும் இதற்குள்ளாகவே மார்க்சியம் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி வெற்றிகண்டு வந்தது.
        தொண்ணூறாம் ஆண்டுகளுக்குள் இந்த வெற்றி பிரதானமாய் நிறைவு எய்திவிட்டது.  புருத்தோனிய மரபுகள் வேறு எங்கையும்விட மிக அதிகக் காலத்துக்கு நிலைத்திருந்த லத்தீனிய நாடுகளிலுங்கூட, தொழிலாளர் கட்சிகள் தமது வேலைத்திட்டங்களையும் போர்த்தந்திரங்களையும் நடைமுறையில் மார்க்சிய அடித்தளங்கள் மீதுதான் வகுத்துக் கொண்டன. தொழிலாளர் இயக்கத்தின் புத்துயிர் பெற்ற சர்வதேச நிறுவனம் – காலத்துக்குக் காலம் கூடிய சர்வதேச காங்கிரஸ்களின் வடிவில் அமைந்த இது – தொடக்கத்திலிருந்து அநேகமாய்ப் போராட்டமின்றியே மார்க்சியக் கருத்தோட்டத்தையே முக்கியமான எல்லாக் கூறுகளிலும் ஏற்று வந்தது. இவ்விதம் மார்க்சியம் தனக்கு விரோதமான அதிக அளவுக்கோ குறைந்த அளவுக்கோ ஒருமித்ததாய் அமைந்த தத்துவங்கள் யாவற்றையும் வெளியேற்றியபின், அந்தத் தத்துவங்களில் அடங்கிய  போக்குகள் பிற வழிகளில் தலைகாட்ட முற்பட்டன. போராட்டத்தின் வடிவங்களும் முகாந்திரங்களும் மாறியனவேயன்றி போராட்டம் தொடர்ந்து நடைபெற்றே வந்தது. மார்க்சியத்தின் இரண்டாவது அரைநூற்றாண்டானது (தொண்ணூறாம் ஆண்டுகளிலிருந்து) மார்க்சியத்துக்கு விரோதமாய் மார்க்சியத்தினுள்ளிருந்தே செயல்பட்ட ஒரு போக்கிற்கு எதிரான போராட்டத்துடன் தொடங்கிற்று.
     ஒரு காலத்தில் வைதீக மார்க்சியவாதியாய் இருந்த பெர்ன்க்ஷ்டைன் மிகுந்த சப்தம் எழுப்பி, மார்க்சுக்குத் திருத்தங்கள் செய்வதன், மார்க்சைத் திருத்துவதன், திருத்தல்வாதத்தின் மிகமுனைப்பான வெளிப்பாடாய் முன்வந்ததால், இந்த போக்கு பெர்ன்க்ஷ்டைனின் பெயரில் அழைக்கப்பட லாயிற்று. ருக்ஷ்யாவிலும்கூட, நாட்டின் பொருளாதாரப் பிற்பட்ட நிலை காரணமாகவும், பண்ணையடிமை முறையின் மீதமிச்சகளின் சுமையால் இருத்தப்பட்ட விவசாயிகள் மக்கள் தொகையில் பெரும்பான்மையோராய் இருப்பதன் காரணமாகவும் மார்க்சியமல்லாத சோக்ஷலிசம் இயல்பாகவே வெறெங்கையும்விட மிக நெடுங்காலத்துக்கு நிலைத்திருந்துள்ள ருக்ஷ்யா விலுங்கூட,  தெட்டத் தெளிவாய் நம் கண்முன்னே இது திருத்தல்வாதமாய்  மாறிக் கொண்டிருக்கிறது. நிலப் பிரச்சனையிலும் (நிலம் அனைத்தையும் ஸ்தல அரசுடைமையாக்கும் திட்டத்திலும்) மற்றும் வேலைத்திட்டம்,  போர்த்தந்திரம் பற்றிய பொதுப் பிரச்சனைகளிலும் நமது சமூக- நரோத்னிக்குகள்20 தமது பழைய கருத்தமைப்பின் அழுகிப்போன, காலாவதியாகிவிட்ட, மீதமிச்சங்களுக்குப் பதிலாய் மார்க்சுக்குத் “திருத்தங்கள்” செய்வதை மேலும் மேலும் கைக்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பழைய கருத்தமைப்பு அதற்குரிய வழியில் ஒருமித்தமாய் அமைந்து அடிப்படையிலேயே மார்க்சியத்துக்குப் பகைமையானதாய் இருந்தது.
        மார்க்சியத்துக்கு முற்பட்ட சோக்ஷலிசம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. அது  தொடர்ந்து நடத்தியே வருகிறது. ஆனால் முன்புபோல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாதமாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது. ஆகவே திருத்தல்வாதத்தின் சித்தாந்த உள்ளடக்கத்தைப் பரிசீலனை செய்வோமாக.
         தத்துவவியல் அரங்கில் திருத்தல்வாதமானது முதலாளித்துவ பேராசிரிய “விஞ்ஞானத்தைப்” பின்தொடர்ந்து சென்றது. பேராசிரியர்கள் “கான்டுக்குத் திரும்பிச் சென்றனர்” திருத்தல்வாதம் உடனே நவீன-கான்டியர்களின்21 வாலைப் பற்றிக் கொண்டு பின்சென்றது. தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை எதிர்த்துப் பாதிரிமார்கள் ஆயிரம் தரம் கூறிவந்திருக்கும் வழக்கமான வெற்றுரைகளைப் பேராசிரியர்கள் திருப்பிக் கூறினர் – உடனே திருத்தல்வாதிகளும் இளக்காரமாய் நகைத்துக் கொண்டு பொருள்முதல்வாதம் நெடுங்காலத்துக்கு முன்பே “தவறென நிரூபிக்கப்பட்டு விட்டதே” என்று (கடைசியாய் வெளிவந்த Handbuch கிலிருந்து சொல்லுக்குச் சொல் அப்படியே திருப்பிக் கூறி) ஜபமந்திரத்தை முணுமுணுப்பது போல முணுமுணுத்தனர். பேராசிரியர் ஹெகலைச் “செத்த நாய்” என ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதேபோதில் ஹெகலினுடையதைவிட ஆயிரம் மடங்கு அற்பமான, படுமட்டமான கருத்துமுதல்வாதத்தை உபதேசம் செய்து, மிக அலட்சியமாய் இயக்கவியலிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர் – உடனே திருத்தல்வாதிகள் அவர்கள் பின்னால் ஓடி, “சாதுர்யமான” (மற்றும் புரட்சிகரமான)  இயக்கவியலைக் கைவிட்டு அதற்குப் பதில் “எளிய” (மற்றும் அமைதியான) “பரிணாமத்தைக்” கைக்கொண்டு, விஞ்ஞானத்தைக் கொச்சையாக்கி இழிவுபடுத்தும் தத்துவவியல் சகதிக் குழியிலே மூழ்கினர். பேராசிரியர்கள் தமது கருத்துமுதல்வாத “விமர்சன” அமைப்புக்களை ஆதிக்கத்திலிருந்த மத்திய காலத் “தத்துவவியலுக்கு” (அதாவது இறையியலுக்கு) உகந்தவாறு சரிசெய்து அதிகாரபூர்வமான தமது சம்பளக்களைச் சம்பாதித்துக் கொண்டனர் – திருத்தல்வாதிகளும் உடனே அவர்களை நெருங்கிச்சென்று மதத்தை, தற்கால அரசு சம்பந்தமாய் மட்டுமின்றி முன்னேறிய வர்க்கத்தின் கட்சி சம்பந்தமாகவுங்கூட, அவரது ”சொந்த விவகாரமாக்க” முயன்றனர்.
          மார்க்சுக்குச் செய்யப்பட்ட இத்தகைய ”திருத்தங்களுக்கு” வர்க்க முறையில் மெய்யான பொருள் என்னவென்பது கூறாமலே விளங்குகிறது. சர்வதேச சமூக-ஜனநாயக இயக்கத்தில் பிளெஹானவ் ஒருவர்தான் திருத்தல்வாதிகளுடைய படுமோசமான இந்த வெற்றுரைகளை முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணேட்டத்திலிருந்து விமர்சித்துக் கண்டித்த மார்க்சியவாதி என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். பிளெஹானவின் போர்த்தந்திரச் சந்தர்ப்பவாதத்தைப் பற்றிய விமர்சனமாய் மூடிமறைத்து பழைய பிற்போக்குத் தத்துவவியல் குப்பைக் கூளத்தைக் கள்ளத்தனமாய் உள்ளே கொண்டுவர மிகவும் தவறான முயற்சிகள் செய்யப்படும் இத்தருணத்தில் இதை மேலும் அழுத்தம் திருத்தமாய் வலியுறுத்துவது அவசியமாகும்.*
          அரசியல் பொருளாராதத்துக்கு வருவோமாயின் இத் துறையில் திருத்தல்வாதிகளுடைய “திருத்தங்கள்” மேலும் அதிக விரிவாகவும் நுட்ப விபரங்கள் வழிப்பட்டனவாயும் இருந்ததை முதற்கண் குறிப்பிதல் வேண்டும். “பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய விவரங்களைக்” கொண்டு பொது மக்களை வயப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. பெருவீத உற்பத்தி குவிவதும் சிறுவீத உற்பத்தியை அது அகற்றிவிடுவதும் விவசாயத்தில் நடைபெறவே இல்லையென்றும், வர்த்தகத்திலும் தொழில் துறையிலும் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது. நெருக்கடிகள்
*பக்தானவ், பஸாரவ் மற்றும் சிலர் எழுதும் மார்க்சியத்தின் தத்துவவியலில் ஆராய்ச்சிகள் என்னும் புத்தகத்தைப் பார்க்கவும். இப்புத்தகத்தைப் பரிசீலிக்க இதுவல்ல இடம். நவீன கான்டியத் திருத்தல்வாதிகளைப் பற்றி மேலே நாம் கூறியுள்ளவை யாவும் இந்தப் “புதிய” நவீன-ஹியூமிய, நவீன-பேர்கிலியத் திருத்தவாதிகளுக்கும் சாரம்சத்தில் பொருந்தும் என்பதை வருங்காலத்தில் கூடிய சீக்கிரம் ஒரு கட்டுரைத் தொடரிலோ, தனிப் பிரசுரத்திலோ நிரூபிப்பேன் என்று மட்டும் தற்போது குறிப்பிடுகிறேன்.                                            
இப்பொழுது அரிதாகியதோடு பலம் குறைந்துவிட்டதாகவும், இவற்றை அறவே நீக்கிவிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுக்களும் மூலதனத்துக்கு அளித்திடுமென எதிர்பார்க்கலாம் என்பதாகவும் கூறப்பட்டது. முதலாளித்துவம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் “தகர்வு பற்றிய தத்துவம்” வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் வலிமை குறைந்து தணிந்துவிடும் போக்கின் காரணத்தால் ஆதாரமற்றதாகுமெனக் கூறப்பட்டது. முடிவில் மார்க்சின் மதிப்புத் தத்துவத்தையும் பேம்-பாவர்க்கின் வழியில் திருத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டது.
      இந்த பிரச்சனைகளில் திருத்தல்வாதிகளை எதிர்த்து நடத்திய போராட்டமானது, இதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு டூரிங்குடன் எங்கெல்ஸ் நடத்திய சர்ச்சையைப் போல் அதே அளவுக்குப் பயனுள்ள முறையில் சர்வதேச சோக்ஷலிசத்தில் தத்துவார்த்தச் சிந்தனையை மறுமலர்ச்சி பெறச் செய்தது. உண்மைகள், புள்ளிவிவரங்கள் இவற்றின் துணைகொண்டு திருத்தல்வாதிகளுடைய வாதங்கள் பகுத்தாரயப்பட்டன. தற்காலச் சிறுவீத உற்பத்தி குறித்து திருத்தல்வாதிகள் முனைந்து நின்று பகட்டான சித்திரம் தீட்டினர் என்று நிரூபிக்கப்பட்டது. தொழில் துறையில் மட்டுமின்றி, விவசாயத்திலுங்கூட சிறுவீத உற்பத்தியைவிடப் பெருவீத உற்பத்தியே தொழில்நுட்ப வழியிலும் வர்த்தக வழியிலும் மேலானது என்பது மறுக்க முடியாத உண்மைகளால் மெய்ப்பிக்கப்படுகிறது. ஆனால் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி விவசாயத்தில் குறைந்த அளவு வளர்ச்சியே பெற்றிருக்கிறது; தற்காலப் புள்ளிவிபர இயலாளர்களும் பொருளியலாள ர்களும். பொதுவாகப் பேசுமிடத்து, உலக பொருளாதாரத்தின் பரிவர்த்தனை நிகழ்ச்சிப் போக்கினுள் விவசாயம் மேலும் மேலும்  இழுத்துக் கொள்ளப் படுவதைச் சுட்டிக்காட்டும் தனிக்கிளையையும் (சில நேரங்களில் செயற்பாடு களையுங் கூட)  தேர்வாய்வு செய்வதில் அதிகத் தேர்ச்சியுடையோராய் இல்லை. சிறிவீத உற்பத்தியானது இயற்கைப் பொருளாதாரத்தின் இடிபாடுகள் மீது தன்னை நிலைநிறுத்திக் கொள்வது எப்படியெனில், இடையறாது உணவுத் தரத்தை மோசமாக்கியும், நிரந்தர பட்டினியாலும் வேலை நேரத்தை அதிகமாக்கிச் சென்றும் கால்நடைகளின் தரத்தையும் பராமரிப்பையும் சீர்கேடுறச் செய்தும்தான் – சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவ பட்டறை
 உற்பத்தியை எதிர்த்துக் கைத்தொழில் உற்பத்தி தன்னை நிலைநிறுத்தி வந்த அதே வழிகளில்தான், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் முதலாளித்துவ சமுதாயத்தில் சிறுவீத உற்பத்தியின்  அடித்தளங்களுக்குத்  தவிர்க்க முடியாதவாறும் விடாப்பிடி யாகவும் குழிபறிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் குழப்படியாகவும் சிக்கலாகவுமுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்கை அதன் எல்லா வடிவங்களிலும் ஆராய்வதும், சிறு உற்பத்தியாளரால் முதலாளித்துவத்தில் விவசாயியின் சிறு சாகுபடிக்கு விடிமோட்சமில்லை என்பதையும் பாட்டாளியின் கண்ணோட்டத்தை விவசாயி ஏற்பது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்திக் காட்டுவதும் சோக்ஷலிசப் பொருளியலுக்குரிய கடமையாகும். இந்த பிரச்சனையில் திருத்தல்வாதிகள் ஒருச்சார்பாகவும் முதலாளித்துவத்தின் முழு அமைப்புடன் தொடர்பின்றியும் தேர்வு செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மேம்போக்கான பொது முடிவுகளுக்கு வந்து விஞ்ஞானத்தின் கண்ணோட்டத்தில் கேடு புரிந்தனர். புரட்சிகர பாட்டாளியின் பார்வை நிலையை ஏற்குமாறு வற்புறுத்துவதற்குப் பதிலாய் சிறு உடமையாளனின் போக்கை (அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தாரின் போக்கை) ஏற்குமாறு தெரிந்தோ தெரியாமலே தவிர்க்க முடியாதபடி விவசாயியை அழைப்பதன் மூலம், அல்லது வற்புறுத்தியதன் மூலம் அவர்கள் அரசியலின் கண்ணோட்டத்தில் கேடு புரிந்தனர்.
    நெருக்கடிகளின் தத்துவம் குறித்தும் தகர்வின் தத்துவம் குறித்தும் திருத்தல்வாதத்தின் நிலை மேலும் படுமோசமானதாகவே இருந்தது.  மிக சொற்ப காலத்துக்கு மட்டுமேதான், அதுவும் மிக மோசமான கிட்டப்பார்வை கொண்டவரால்தான், ஒரு சில ஆண்டு காலத் தொழில் துறை ஏற்ற நிலையாலும் சுபீட்சத்தாலும் வயப்படுத்தப்பட்டு, மார்க்சின் தத்துவத்தினு டைய அடிப்படைகளைத் திருத்தியமைக்க வேண்டுமென நினைக்க முடியும். நெருக்கடிகள் கடந்த காலத்துக்குரியனவாகிவிட வில்லை, சுபீட்சத்தைப் பின்தொடர்ந்து நெருக்கடி வருகிறது என்பதை எதார்த்த நிலைமைகள் மிக விரைவாகவே திருத்தல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்தின. குறிப்பிட்ட நெருக்கடிகளின் வடிவங்களும் வரிசைமுறையும் சித்திரமும் மாறியனவே யன்றி, நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாய்த்தான் நிலைத்திருந்தன.  கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் உற்பத்தியை ஒன்றுபடுத்திய அதே நேரத்தில், எல்லோருக்கும் கண்கூடாய்த் தெரியும்படியான முறையில் உற்பத்தியின் அராஜகத்தையும் பாட்டாளி வர்க்கத்தினுடைய வாழ்வின் காவந்தின்மையையும் மூலதனத்தின் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி, இதன் மூலம் வர்க்கப் பகைமைகளை முன்பின் கண்டிராத அளவுக்குக் கடுமையாக்குகின்றன. முதலாளித்துவ மானது அழிவை நோக்கி – தனிப்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடிகளைக் குறிக்கும் பொருளிலும் முதலாளித்துவ அமைப்பு அனைத்தின் முழுநிறைத் தகர்வைக் குறிக்கும் பொருளிலும் – விரைந்தோடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பாய் இதே புதிய பகாசுர டிரஸ்டுகளின் மூலம் மிகமிகத் தெளிவாகவும் மிகமிகப் பெரிய அளவிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியும் ஐரோப்பா பூராவிலும் பயங்கரமாய் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டமும் – எக்கணமும் மூண்டுவிடும் நிலையிலுள்ள தொழில் துறை நெருக்கடியைப் பற்றிக் கூறவே வேண்டாம், பல அறிகுறிகள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றன – திருத்தல்வாதிகளுடைய அண்மைக் காலத்தியத் “தத்துவங்கள்” எல்லோராலும், திருத்தல்வாதிகளிடையேகூட பலரும் அடங்கலாய் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் நிலையை உண்டாக்கியுள்ளன. ஆனால் அறிவுத்துறையினரது இந்த நிலையின்மை தொழிலாளி வர்க்கத்துக்கு அளித்திடும் படிப்பினைகள் ஒருபோதும் மறக்கப்படலாகாது.
      மதிப்புத் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் பேம்-பாவர்க்கின் பாணியில் சிறிதும் தெளிவற்ற சூசகங்களையும் பெருமூச்சுக்களையும் தவிர்த்து, திருத்தல்வாதிகள் வேறு எதுவுமே அளித்திடவில்லை. ஆகவே விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சியில் எவ்வித தடமும் விட்டுச் செல்லவில்லை என்பதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.
       அரசியல் துறையில், திருத்தல்வாதமானது மார்க்சியத்தின் அடித் தளத்தை, அதாவது வர்க்கப் போராட்டத் தத்துவத்தைத் திருத்த மெய்யாகவே பெருமுயற்சி செய்தது. அரசியல் சுதந்திரமும் ஜனநாயகமும் அனைத்து மக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்துக்கான அடிநிலையை அகற்றிவிடுவதாகவும், தொழிலாளி வர்க்கத்துக்குத் தாய்நாடில்லை என்கிற கம்யூனிஸ்டு அறிக்கையின் பழம்பெரும் நிர்ணயிப்பைப் பொய்யாக்கி விடுவதாகவும் கூறினார்கள். ஏனெனில் ஜனநாயகத்தில் ‘பெரும்பான்மை யோரின் சித்தம்” ஆதிக்கம் செலுத்துவதால், அரசை வர்க்க ஆதிக்கத்திற்கான உறுப்பாய் யாரும் கருதலாகாதென்றும், பிற்போக்காளர்களுக்கு எதிராய் முற்போக்கான, சமுதாய-சீர்திருத்த முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டுக்கள் நிறுவிக்கொள்வதை நிராகரிக்கலாகாதென்றும் கூறினர்.
        திருத்தல்வாதிகளின் இந்த வாதங்கள் ஓரளவு பாங்குற வகுக்கப் பெற்ற கருத்தமைப்பாகும் என்பதை, அதாவது பிரசித்தமான பழைய மிதவாத-முதலாளித்துவ கருத்தமைப்பாகும் என்பதை மறுப்பதற்கில்லை.  முதலாளித்துவப் பாராளுமன்ற முறையில் வாக்குரிமையையும் அரசாங்க விவகாரங்களில் பங்கு கொள்ளும் உரிமையையும் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்வதால் இது வர்க்கங்களையும் வர்க்கப் பிரிவினைகளையும் ஒழித்திடுகிறது என்று மிதவாதிகள் எப்பொழுதுமே கூறி வந்துள்ளனர். இத்தகைய கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பாவின் வரலாறு அனைத்தும், இருபதாம் நூற்றண்டின் துவக்க ஆண்டுகளில் ருக்ஷ்யப் புரட்சியின் வரலாறு அனைத்தும் கண்கூடாய்க் காட்டுகின்றன. “ஜனநாயக“ முதலாளித்துவத்தின் சுதந்திரத்தில் பொருளாதாரப் பாகுபாடுகள் மேலும் தீவிரமாகிக் கடுமையாகின்றனவே ஒழிய குறைந்துவிடவில்லை. மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசுகளிலுங்கூட பாராளுமன்ற முறை இக் குடியரசுகளும் வர்க்க ஒடுக்குமுறை அமைப்புகளே என்ற அவற்றின் உள்ளியல்பான தன்மையை அப்பட்டமாய்த் தெரியப்படுத்துகிறதேயன்றி, அவற்றின் வர்க்க ஒடுக்குமுறையை அகற்றிவிடவில்லை. அரசியல் நிகழ்சிகளில் முன்பு நேரடிப் பங்கு பெற்ற பகுதிகளைக் காட்டிலும் அளவிட முடியாத விரிவான மக்கள் பகுதியோருக்கு அறிவொளியூட்டி அவற்றை ஒழுங்கமைத்திடத் துணைபுரிவதன் மூலம் பாராளுமன்ற முறை நெருக்கடிகளையும் அரசியல் புரட்சிகளையும் அகற்றிவிடவில்லை. இப் புரட்சிகளின்போது உள்நாட்டு யுத்தம் அதிகபட்ச அளவுக்கு கடுமையாகும்படியே செய்கிறது. தவிக்க முடியாதபடி எப்படி இது கடுமையாகிவிடுகிறது என்பதை1871 ஆம் ஆண்டு வசந்தத்தில் பாரீஸ் நிகழ்ச்சிகளும்1905 குளிர்காலத்தில் ருக்ஷ்ய நிகழ்ச்சிகளூம்22 மிக மிகத் தெளிவாய்க் காட்டின. பாட்டாளிவர்க்க இயக்கத்தை நசுக்கும் பொருட்டு பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் ஒரு கணங்கூடத் தயங்காது தேசம் அனைத்துக்கும் எதிரான பகைவனுடன்,  பிரஞ்சு நாட்டைச் சீரழியச் செய்த அந்நியச் சேனையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பாராளுமன்ற முறை, முதலாளித்துவ ஜனநாயகம் இவற்றின் தவிக்க இயலாத உள்ளார்ந்த இயக்கவியலை – சர்ச்சைக்கு வெகுஜனப் பலாத்காரத்தின் மூலம்முன்னிலும் கூர்மையான முடிவுகாண வழிவகுக்கும் இதனை – புரிந்து கொள்ளாத எவராலும் இந்தப் பாராளுமன்ற முறையின் அடிப்படையில் கோட்பாட்டு வழியில் முரணின்றியும் தொழிலாளி வர்க்க வெகுஜனங்கள் இந்த “சர்ச்சைகளில்” வெற்றிகர பங்கு கொள்ள மெய்யாகவே அவர்களைத் தயார் செய்யும் விதத்திலும் பிரசாரமும் கிளர்ச்சியும் நடத்த ஒருபோதும் முடியாது. மேற்கு நாடுகளில் சமுக-சீர்திருத்த மிதவாதிகளுடனும், ருக்ஷ்யப் புரட்சியில் மிதவாதசீர்திருத்தவாதிகளுடனும் (கார்டேட்டுக்கள்24) செய்து கொள்ளப்பட்ட கூட்டணிகள், ஒப்பந்தங்கள், இணைப்புக்கள் இவற்றின் அனுபவமானது,  வெகுஜனங்களுடைய உணர்வை மழுங்கடிக்கவே இந்த ஒப்பந்தங்கள் உதவுகின்றன, போராடும் வீரர்களை அவை சிறிதும் போராடும் ஆற்றலற்ற, மிகுந்த ஊசலாட்டமும் துரோகத் தன்மையும் கொண்டவர்களுடன் இணையச் செய்து, வெகுஜனங்களுடைய போராட்டத்தின் மெய்யான முக்கியத்துவத்தைப் பலவீனப்படுத்துகின்றனவே அன்றி அதனை உயர்த்தவில்லை என்பதை ஐயந்திரிபற நிரூபித்துக் காட்டியுள்ளது. பிரன்சில் மில்லிரண்டிசம்25- விரிவான, மெய்யாகவே தேச அளவில் திருத்தல்வாத அரசியல் போர்த்தந்திரத்தைக் கையாளுவதில் மிகப் பெரிய முயற்சியான இது-  உலகெங்கணும் பாட்டாளி வர்க்கம் எந்நாளும் மறக்க முடியாத வகையில் திருத்தல்வாதம் குறித்து நடைமுறை வாயிலான ஒரு பதிப்பீட்டை அளித்திருக்கிறது.
      சோக்ஷலிச இயக்கத்தின் இறுதி நோக்கம் குறித்து திருத்தல்வாதம் அனுசரிக்கும் போக்கு அதன் பொருளாதார, அரசியல் போக்குகளுடன் சேர்ந்து அதன் முழு உருவையும் பூர்த்தி செய்து காட்டும் இயற்கையான நிரப்புக் கூறாகும். “இயக்கமே யாவும், இறுதி நோக்கம் ஒரு பொருட்டல்ல”- பெர்ன்க்ஷ்டைனுடைய இந்த தாரகமந்திரம் நீண்ட பல வியாக்கியானங்களைக் காட்டிலும் சிறப்பாய் திருத்தல்வாதத்தின் உட்பொருளைத் தெரிவிக்கிறது. தனது நடத்தையை சந்தர்ப்பத்துக்குச் சந்தர்ப்பம் மாற்றி நிர்ணயித்துக் கொள்ளுதல், அன்றன்றைக்குமான நிகழ்ச்சிகளுக்கும் அற்ப விவகார அரசியல் திருப்பங்களுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளுதல், பாட்டாளி வர்க்கத்தின் தலையாய நலன்களையும் முதலாளித்துவ அமைப்பு அனைத்தின், முதலாளித்துவ பிரிணாமம் அனைத்தின் அடிப்படைக் கூறுகளையும் மறந்துவிடுதல்,  இந்தத் தலையாய நலன்களை அந்தந்த தருணத்துக்குரிய மெய்யான அல்லது கற்பிதமான நலன்களுக்காக பலியிடுதல் – இவையேதான் திருத்தல்வாதத்தின் கொள்கை. இந்தக் கொள்கையின் தன்மையிலிருந்தே வெளிப்படையாய் பெறப்படுவது என்னவெனில், இது எண்ணிலடங்கா பல்வேறு வடிவங்களை ஏற்கும் என்பதும், ஓரளவுக்கோ பெருமளவுக்கோ “புதுமையான” ஒவ்வொரு பிரச்சனையும் நிகழ்ச்சிகளில் ஓரளவுக்கோ பெருமளவுக்கோ எதிர்பாராத, முன்னறியாத ஒவ்வொரு திருப்பமும் – அடிப்படை வளர்ச்சித் திசையை அது மிகச் சொற்ப அளவுக்கு மட்டுமேதான், மிகமிகச் சொற்ப காலத்துக்கேதான் மாற்றுகிறது என்றாலுங்கூட – தவிக்க முடியாத வகையில் ஏதேனும் ஒரு வகைத் திருத்தல்வாதத்தை எப்பொழுதும் தோற்றுவிக்கவே செய்யும் என்பதுதான்.
     திருத்தல்வாதம் தவிர்க்க முடியாததாய் இருப்பதற்குத் தற்கால சமுதாயத்தில் அதற்குள்ள வர்க்க வேர்கள்தான் காரணம். திருத்தல்வாதம் ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு. ஜெர்மனியில் வைதீகவாதிகளுக்கும்25 பெர்ன்க்ஷ்டைனியர்களுக்கும்26 பிரான்சில் கெட்டிஸ்டிகளுக்கும்27 ழொரேசிஸ் டுகளுக்கும்28  (தற்போது இன்னும் முக்கியமாய் புருசிஸ்டுக்களுக்கும்), கிரேட் பிரிட்டனில் சமுக-ஜனநாயக சம்மேளனத்துக்கும் சுயேட்சைத் தொழிற் கட்சிக்கும்29 பெல்ஜியத்தில் புருக்கேருக்கும் வன்டெர்வேல்டேக்கும் இத்தாலியில் முழுமையாளர்களுக்கும்30 சீர்திருத்தவாதிகளுக்கும், ருக்ஷ்யா வில் போல்க்ஷிவிக்குகளுக்கும் மென்க்ஷிவிக்குக்ளுக்கும் இடையிலான உறவிநிலை இந் நாடுகள் யாவற்றின் தற்போதைய நிலையில் இருந்துவரும் மிகப் பல்வேறுபட்ட தேசிய நிலைமைகளையும் வரலாற்றுக் கூறுகளையும் மீறி,, சாரம்சத்தில் எங்கும் ஒன்றேபோல் இருக்கிறது: சிறிதளவேணும் தகவல் தெரிந்த சிந்தனை ஆற்றல் கொண்ட எந்த சோக்ஷலிஸ்டுக்கும் இதுகுறித்துக் கடுகளவும் சந்தேகம் இருக்க முடியாது உண்மையில் இன்றைய சர்வதேச சோக்ஷலிஸ்டு இயக்கத்தினுள் நிலவும் “பிரிவினை” தற்போது உலகின் பல்வேறு நாடுகள் யாவற்றிலும் ஒரேவிதமான வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறது. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளிலும் பல்வேறுபட்ட போக்குகள் சர்வதேச சோக்ஷலிஸ்டு இயக்கம் ஒன்றினுள் போராடிக் கொண்டிருந்ததுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலைமை பிரமாண்டமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்குச் சான்று பகர்கிறது. லத்தீனிய நாடுகளில் “புரட்சிகர சிண்டுக்கலிசயாய்”31 உருவாகியுள்ள அந்த “இடதுசாரியிலிருந்தான திருத்தல்வாதமுங்” கூட தன்னனை மார்க்சியத்துக்குத் தகவமைத்து, மார்க்சியத்தைத் ”திருத்தி வருகிறது” இத்தாலியில் லப்ரியோலாவும் பிரான்சில் லாக்ர்டேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சின் நிலையிலிருந்து சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சின் நிலைக்கு அடிக்கடி வேண்டுகோள் விடுக்கின்றனர்.
       சந்தர்ப்பவாதத் திருத்தல்வாதத்தைப் போல அதே அளவுக்கு வளர்ச்சியடையாது இருந்து வரும் இந்தத் திருத்தல்வாதத்தின் சித்தார்ந்த உள்ளடக்கத்தை இங்கு நாம் பகுத்தாராய்வதற்கில்லை. இந்த திருத்தல்வாதம் இன்னும் சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு ஆகவில்லை, எந்தவொரு நாட்டிலும் சோக்ஷலிஸ்டுக் கட்சியுடன் இன்னமும் அது எந்தவொரு பெரிய நடை முறைப் போராட்டத்தின் சோதனையையும் கண்டதில்லை. ஆகவே, மேலே சித்தரிக்கப்பட்ட “வலதுசாரியிலிருந்தான திருத்தல்வாதத்தைப்” பரிசீலிப்ப துடன் நாம் நிறுத்திக் கொள்கிறோம்.
         முதலாளித்துவ சமுதாயத்தில் இது தவிக்க முடியாததாய் இருப்பதன் மூலகாரணம் என்ன? தேசியத் தனி இயல்புகளிலும் முதலாளித் துவ வளர்ச்சியின் அளவுகளிலும் இருக்கும் வேறுபாடுகளைக் காட்டிலும் இது ஆழமுடையதாய் இருப்பது ஏன்? ஏனெனில் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்துடன் கூடவே விரிவான குட்டிபூர்க்ஷுவாப் பகுதியோர், சிறு உடமையாளர் பகுதியோர் எப்பொழுதுமே இருந்து வருகிறார்கள். முதலாளித்துவம் சிறுவீத உற்பத்தியாளர்களிடமிருந்துதான் தோன்றியது. இடையறாது தோன்றிக் கொண்டும் இருக்கிறது. முதலாளித்து வம் தவிக்க முடியாதபடி மீண்டும் மீண்டும் பல புதிய “மத்தியதரப் பகுதிகளை” (ஆலைகளை அண்டிப் பிழைக்கும் தொழிலாளர்கள், வீட்டுப்பணித் துறை, சைக்கிள், மோட்டார் தொழில்களைப் போன்ற பெருந் தொழில்களை யுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடெங்கும் சிதறிக் கிடக்கும் சிறு தொழிலகங்கள், இன்ன பல) தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறு புதிய உற்பத்தியாளர்கள் இதே போலத் தவிர்க்க முடியாதபடித் திருப்பவும் பாட்டாளி வர்க்க அணிகளுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். விரிவான தொழிலாளர் கட்சிகளின் அணிகளில் குட்டிபூர்க்ஷுவா உலகக் கண்ணோட்டம் திரும்பத் திரும்பத் தலைதூக்குவது இயற்கையே. பாட்டாளி வர்க்கப் புரட்சியால் கதி மாற்றங்கள் ஏற்படுகின்ற வரையில் இது இயற்கையே. அதுவரை எப்பொழுதும் இப்படியேதான் நடைபெறும். ஏனெனில் இத்தகைய ஒரு புரட்சியை உண்டாக்க மக்கள் தொகையில் பெரும்வாரியானோர் “அறவே” பாட்டாளி வர்க்கத்தவராக்கப்படுவது அவசியமென நினைப்பது மிகப் பெரும் தவறாகும். இப்பொழுது அடிக்கடி நாம் சித்தாந்தத் துறையில் மட்டும் அனுபவித்து வருகின்றவை, அதாவது மார்க்சுக்குத் தத்துவார்த்தத் திருத்தங்கள் செய்வது குறித்த சர்ச்சைகள் – நடைமுறையில் தற்போது தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்டத் துணைப் பிரச்சனைகள் குறித்து மட்டும் திருத்தல்வாதிகளுடனான போர்த்தந்திரக் கருத்து வேறுபாடுகளாகவும் அவற்றின் அடிப்படையிலான பிளவுகளாகவும் தலைதூக்குகின்றவை – பாட்டாளி வர்க்கப் புரட்சியானது சர்ச்சைக்குரிய எல்லாப் பிரச்சனைகளையும்  கூர்மையாக்கிவிடும்போதும், வெகுஜனங்களின் நடத்தையை நிர்ணயிப்பதில் மிகுந்த உடனடி முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பற்றிய எல்லாக் கருத்து வேறுபாடுகளையும் ஒன்றுகுவியச் செய்யும்போதும், மும்முரமான போராட்டத்துக்கிடையில் நண்பர்களிடமிருந்து பகைவர்களை இனங்கண்டு கொள்வதையும் முடிவுகட்டும்படியான விதத்தில் பகைவனுக்கு அடிகொடுக்கும் பொருட்டு மோசமான கூட்டாளிகளை விலக்கித் தள்ளுவதையும் அவசியமாக்கிவிடும்போதும் ஒப்பிடமுடியாத மிகப்பெரிய அளவிலே வருங்காலத்தில் தொழிலாளி வர்க்கம் நிச்சயம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
       பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் திருத்தல்வாதத்தை எதிர்த்துப் புரட்சிகர மார்க்சியசம் நடத்தும் சித்தாந்தப் போராட்டமானது, குட்டிபூர்க்ஷுவா அற்பவாதிகளின் எல்லா ஊசலாட்டங்களையும் மீறித் தனது இலட்சியத்தின் முழுநிறை வெற்றியை நோக்கி முன்னேறி வீறு நடைபோடும் பாட்டாளி வர்க்கத்தினுடைய மபெரும் புரட்சிப் போர்களின் பீடிகையே ஆகும்.
                                                                       
1908 மார்ச் பிற்பாதியில்—                                      நூல்திரட்டு,
ஏப்ரல் 3 (16)க்குப்                                       தொகுதி 17,
பிற்படாமல்- எழுதப்பெற்றது.                            பக்கங்கள் 15-26

1908 செப்டம்பர் 25க்கும்]அக்டோபர் 2க்கும் (அக்டோபர் 8க்கும் 15க்கும்)இடையில்
கார்ல் மார்க்ஸ் (1818-1883),எஸ்.பீட்டர்ஸ்பர்க் என்னும் திரட்டில் வெளிவந்த்து.
ஒப்பம்: விளா.இலியின்.

No comments:

Post a Comment