Sunday 13 November 2011

லெனின்: என்ன மாதிரியான அமைப்பு நமக்கு வேண்டும்




 என்ன மாதிரியான அமைப்பு

நமக்கு வேண்டும்?

     தாக்குதலுக்கு உடனடியாக அறைகூவல் விடுப்பதை நிராகரிப்பது; “எதிரியின் கோட்டையைச் சரியான முறையில் முற்றுகையிடுமாறு” கோருவது; அல்லது வேறுவிதமாகச் சொன்னால், ஒரு நிரந்தரமான படையைத் திரட்டுவதிலும் ஒருங்கமைப்பதிலும் அணியமைப்பதிலும் முயற்சிகள் அனைத்தையும் செலுத்தக் கோருவது – இதுவே நம் “திட்ட வழிப்பட்ட போர்த்தந்திரம்” என்று மேலே சொன்னதிலிருந்து வாசகர் புரிந்து கொள்வார். ரபோச்சியே தேலோ “பொருளாதாரவாதத்தை” விட்டுத் தாக்குதலுக்காகக் கூச்சலிடும் நிலைக்குத் தாவியதற்காக (1901 ஏப்ரல் மாதத்தில் லிஸ்டோக் ரபோச்சிவா தேலா ””99 இதழ் 6 இல் இவ்வாறு கூச்சலிட்டது) நாம் கேலிசெய்த பொழுது நாம் “வறட்டுத்தத்துவாதிகளாக”  இருப்பதாகவும், நம் புரட்சிக் கடமையை புரிந்து கொள்ளத் தவறுவதாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படி நாம் அழைப்பதாகவும் மற்றபடியும் நம் மீது குற்றச் சாட்டுக்களை வீசிற்று. உண்மைதான், கோட்பாடு அறவே இல்லாதவர்களும் ஆழ்ந்த பொருளுள்ள ஓர் “இயக்கப்போக்கு வழிப்பட்ட போர்த்தந்திரத்தைக் “ குறிப்பிட்டுக் காட்டி எல்லா வாதங்களையும் தட்டிக்கழிப்பவர்களும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் போடுவதைக் கண்டு நாம் சிறிதும் வியப்படையவில்லை; இவற்றை நதேழ்தின் திரும்பிச் சொன்னதைக் கண்டும் நாம் வியப்படைய வில்லை; அவருக்குப் பொதுவாகவே திடமான வேலைத்திட்டங்கள் பாலும் போர்த்தந்திரத்தின் அடிப்படைக் கூறுகள் பாலும் அளவற்ற வெறுப்புண்டு.
             

நிகழ்ந்த வரலாறு திரும்ப அப்படியே நிகழ்வதில்லை என்று சொல்லப் படுவதுண்டு. ஆனால் வரலாற்றை திரும்ப அப்படியே நிகழும்படி செய்ய நதேழ்தின் எல்லா முயற்சிகளும் எடுக்கிறார்; “புரட்சிகரமான பண்பாடுவாதத்தை” வன்மையாகக் கண்டிப்பதிலும் “போர்முரசு கொட்டுவது” பற்றியும் ஒரு தனி “புரட்சி நடக்கவிருக்கும் காலத்துக்குரிய நோக்குநிலை” முதலானவை பற்றியும் கூச்சலிடுவதிலும் அவர் த்காச்சோவை ஆர்வமுடன் காப்பியடிக்கிறார். வரலாறு வகைப்பட்ட ஒரு முதல் நிகழ்ச்சி துன்பியலாக இருக்கிறதென்றால் அதன் மறுபிரதி கேலிக்கூத்தேயாமும்” எனும் பிரசித்தி பெற்ற  பொது மொழியை அவர் மறந்து விட்டார் போலும். த்காச்சோவின் பிரச்சாரத்தால் தயாரிக்கப்பட்டு உண்மையாகவே பயமுறுத்திய “பயமுறுத்தும்” பயங்கரவாதத்தின் மூலமாக நிறைவேற்றப் பார்த்த அதிகார த்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேன்மை இருந்தது; ஆனால் ஒரு குட்டி த்காச்சோவின் “உணர்ச்சியைத் தூண்டிவிடும்” பயங்கரவாதம் வெறுமனே நகைக்கத்தக்கதாய் உள்ளது, சராசரி நபர்களைக் கொண்ட அமைப்பு என்ற கருத்தை இந்தப் பயங்கரவாதத்துடன் இணைத்தளிக்கும்போது அது மேலும் நகைக்கத்தக்கதாயுள்ளது.


            நதேழ்தின் எழுதுகிறார்: “இஸ்க்ரா மட்டும் தன் ஏட்டறிவுத்தனத்திலிருந்து விடுபட்டு வருமேயானால், இவை இஸ்க்ரா, இதழ் 7ல் வெளிவந்த தொழிலாளியின் கடிதம் போன்ற உதாரணங்கள்; விரைவிலே, வெகுவிரைவிலே, “தாக்குதல்” துவங்க இருப்பதின் அறிகுறிகள் என்றும், இன்று (இன்று தான் என்று அவர் சொன்னார்!) ஓர் அனைத்து ருக்ஷ்யப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்ட அமைப்புப் பற்றிப் பேசுவது செயல்தொடர்பற்ற கருத்துக்களையும் செயற்தொடர்பற்ற நடவடிக்கையையும் பிரச்சாரம் செய்வதாகவே பொருள் என்றும் உணர்ந்து கொள்ளும்” என்று, சிந்தனைக்கெட்டாத குழறுபடி இது – ஒரு புறத்தில், உணர்ச்சியைத் தூண்டிவிடக் கூடிய பயங்கரவாதம், “சராசரி மக்களைக் கொண்ட அமைப்பு.” அவற்றுடன் கூடவே உள்ளூர்ப் பத்திரிகை போன்ற “மேலும் ஸ்தூலமான” ஒன்றைச் சூழ்ந்து திரள்வது “மேலும் சுளுவானது” என்கிற கருத்து; மறுபுறத்தில், ஓர் அனைத்து ருக்ஷ்ய அமைப்பைப் பற்றி “இன்று” பேசுவது  செயல்தொடர்பற்ற கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதாகவே பொருள் எனும் கருத்து – அல்லது, பச்சையாகச் சொன்னால், அது “இன்று” ஏற்கனவே காலங்கடந்ததாகிவிட்டது!. அப்படியானால். ”உள்ளூர்ப் பத்திரிகைகளை விரிந்தகன்ற முறையிலே அமைப்பது” எனும் விக்ஷயம் எப்படி? அருமை நண்பர் நதேழ்தின் அவர்களே, இதுவும் காலங்கடந்ததாகவில்லையா? இத்துடன் இஸ்க்ராவின் பார்வைநிலையும் போர்த்தந்திரத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; உணர்ச்சியைத் தூண்டிவிடக்கூடிய பயங்கரவாதம் முட்டாள்தனமானது; சராசரி மக்களைக் கொண்ட அமைப்பு பற்றியும் உள்ளூர்ப் பத்திரிகைகளை விரிந்தகன்ற முறையிலே வெளியிடுவது பற்றியும் பேசுவது “பொருளாதாரவாதத்துக்கு” நன்றாக கதவைத் திறந்துவிடுவதாகவே பொருள். புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு தனி அனைத்து ருக்ஷ்ய அமைப்புப் பற்றி நாம் பேசித்தீர வேண்டும்; வெறும் காகிதத் தாக்குதல் அல்ல, உண்மையான தாக்குதல் தொடங்கும் வரை அதைப் பற்றிப் பேசுவது என்றைக்கும் காலங் கடந்ததாகிவிடாது.


            நதேழ்தின் தொடர்கிறார்; “அமைப்பு பொறுத்தவரை நிலைமை ஒன்றும் ஒளிமயமாக இல்லை. ஆம், நம் போராட்டச்சக்திகளில் பெருந்திரள் தொண்டர் களும் எழுச்சியாளர்களும் ஆவர் என்று இஸ்க்ரா சொன்னது முற்றிலும் சரி….. நம் சக்திகளின் நிலை பற்றி இவ்வளவு நிதானப்புத்தியுள்ள சித்திரம் கொடுப்பது நல்லதுதான். எனினும், அதே நேரத்தில், மக்கள் நம்முடன் இருக்கவில்லை என்பதையும் எனவே எப்பொழுது இராணுவ நடவடிக்கை களைத் துவங்கலாம் என்று அவர்கள் நம்மைக் கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் ஏன் மறக்கிறீர்கள்?அவர்களாகவே  போய் ’கலகம்’ செய்வார்கள், அவ்வளவுதான்…… மக்கள் கும்பல், இயற்கைச் சக்தி போன்ற அழிவுச் சக்திகளுடன் தானாகவே  எழுச்சியில் ஈடுபடும்போது “நிரந்தரத் துருப்புக்களை” அது மூழ்கடித்து ஒதுக்கித் தள்ளிச் செல்லக் கூடும்; இந்த ‘நிரந்தரத் துருப்புக்களிடையேதான்’ நாம் மிகவும் முறையுள்ள அமைப்பைப் புகுத்தக் காலமெல்லாம் தயாரித்துவந்தும் சமாளிக்க முடியாமல் போனோம்.” (கொட்டை எழுத்தில் போட்டது நாம்.)


             திகைப்பூட்டும் தர்க்கம் இது! “மக்கள் நம்முடன் இருக்கவில்லை என்ற காரணத்திற்காகவே உடனடியான ”தாக்குதல்” பற்றிக் கூச்சலிடுவது முட்டாள்தனமாகும், அசிங்கமாகும். ஏனெனில், தாக்குதலுக்குப் பொருள் நிரந்தர்த் துருப்புக்களின் தாக்குதல்தான், தன்னியல்பாக வெடிக்கும் மக்களின் எழுச்சியல்ல. நிரந்தரத் துருப்புக்களை மக்கள் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடும் என்கிற காரணத்திற்காகவே நிரந்தரத் துருப்புக்களின் இடையே “மிக முறையான அமைப்பைப் புகுத்தும்” நாம் வேலையின் மூலமாக மக்களின் தன்னியல்பான எழுச்சியுடன் “சம நடை போட்டுச் செல்ல” தவறக் கூடாது. ஏனெனில், எந்த அளவிற்கு இவ்வகை அமைப்பைப் புகுத்துவதைச் “சமாளிக்கிறோமோ”  அந்த அளவுக்கு மக்கள் இந்தத் துருப்புக்களை மீறிச் செல்வது பெரும்பாலும் நடக்காது, அதற்கு மாறாக இத்துருப்புக்கள் மக்களுக்குத் தலைமை வகித்துச் செல்லும். நதேழ்தின் குழம்பிப் போயிருப்பதற்குக் காரணம், முறையான அமைப்புக்கு உட்பட்டு வரும் துருப்புக்கள் மக்களிடமிருந்து தம்மைப் பிரித்துத் தனிமைப்படுத்துகிற ஏதோ ஒரு வேலையில் ஈடுபடுவதாக அவர் நினைப்பதேயாகும். உண்மையில் நடப்பது அப்படியல்ல. எல்லாப் பக்கங்களில் இருந்து நடத்தப்படுகிற, எல்லாவற்றையும் தழுவி நிற்கிற அரசியல் கிளர்ச்சியில் அந்தத் துருப்புக்கள் முற்றாக ஈடுபட்டுள்ளன; அதாவது மக்களின் தன்னியல்பான முறையில் செல்லும் அழிவுச் சக்தியையும் புரட்சியாளர்களுடைய அமைப்பின் உண்ர்வுபூர்வமான அழிவுச் சக்தியையும் நெருங்கி வரச் செய்து ஒரே முழுமையாகச் சந்தித்து கலகம் செய்யும் வேலையில் அத் துருப்புக்கள் முற்றாக ஈடுபட்டுள்ளன. பெருமான்களே, பழிசேராதவர் மீது நீங்கள் பழி போடுகிறீர்கள். ஏனெனில் தம் வேலைத்திட்டத்தில் பயங்கரவாதத்தை சேர்த்துக் கொண்டுள்ள ஸ்வபோதா குழுதான் பயங்கரவாதிகளைக்  கொண்ட ஓர் அமைப்பு வேண்டுமென்று அறைகூவுகிறது, இவ்வகை அமைப்பு மக்களோடு மேலும் நெருங்கிய தொடர்புகளை வைக்காதபடி உண்மையிலே நம் துருப்புக்களைத் தடுத்துவிடுகிறது – துரதிக்ஷ்டவசமாக இந்த மக்கள் இன்னும் நம் பக்கம் வந்தவர்களாயில்லை; துரதிக்ஷ்டவசமாக, தங்கள் இராணுவ நடவடிக்கைகளை எப்போது, எப்படித் தொடங்குவது என்று இம்மக்கள் இன்னும் நம்மைக் கேட்கிறவர்களாயில்லை, அல்லது மிகமிக அரிதாகவே கேட்கிறார்கள்.


             இஸ்க்ராவுக்குப் பயங்காட்டும் முயற்சியில் ஈடுபட்டு நதேழ்தின் மேலும் சொல்வதாவது: “வானைக் கீறிய இடியேறு போல் நிகழ்ந்த அண்மைக்கால நிகழ்ச்சிகளை நாம் தவறவிட்டது போலவே புரட்சியையும் தவறவிடத்தான் போகிறோம்.” மேலே மேற்கோள் காட்டப்பட்டதுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இந்த வாக்கியம் ஸ்வபோதா புனைந்துவிட்ட “புரட்சி நடக்கவிருக்கும் காலத்துக்குரிய நோக்குநிலை”* அபத்தம் என்று தெளிவாகப் புலப்படுத்துகிறது. பச்சையாகச் சொன்னால், இந்தத் தனி ”நோக்குநிலைக்கு” அர்த்தம் விவாதிப்பதும் தயாரிப்புச் செய்வதும் ”இப்போது” காலங்கடந்ததாகி விட்டன என்பதே. அப்படியானால், “ஏட்டறிவுத் தனத்தை” எதிர்க்கும் இந்த மாவீரரைக் கேட்கிறோம்: “தத்துவம்** போர்த்தந்திரம் பற்றிய பிரச்சனைகள்” குறித்து நீங்கள் 132 பக்கங்கள் கொண்ட குறுநூல் எழுதியதின் பயன் என்ன? “அடியுங்கள், வீழ்த்துங்கள்!” என்று சுருக்கமாக அறைகூவல் விடுக்கும் 132,000 துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதுதானே, - அதுவல்லவா “புரட்சி நடக்கவிருக்கும் காலத்துக்குரிய நோக்குநிலைக்கு” அழகாயிருந்திருக்கும்?

*”புரட்சி நடக்கவிருக்கும் காலம்,” பக்கம் 62.
·         ** நதேழ்தின் தம்தத்துவப் பிரச்சனைகள் பற்றிய மதிப்புரையில்தத்துவப் பிரச்சனைகள் பற்றிய விவாதத்துக்கு ஒரு பங்கும் செலுத்தவில்லை; பின்னரும் வாசகப் பகுதியைத் தவிர என்று ஒருக்கால் சொல்லலாம், ஆனால் அதுபுரட்சி நடக்கவிருக்கும் காலத்துக்குரிய நோக்கு நிலையிலிருந்துபார்த்தால் மிகமிக வேடிக்கையாயிருக்கிறது: “மொத்தத்தில் பெர்ன்க்ஷ்டைன் வாதம் இன்றைய தருணத்தில் நமக்கு அவசர அவசியமற்றதாகி வருகிறது; அதே போலத்தான் திரு.ஸ்துரூவே ஏற்கனவே பதவி சம்பாதித்துக் கொண்டு விட்டதை திரு. ஆதமோவிச் நிரூபிப்பாரா அல்லது திரு.ஸ்துரூவே திரு.ஆதமோவிச்சை மறுத்துப் பேசிப் பதவியை விட்டு விலக மறுப்பாரா என்கிற பிரச்சனையும் அவசர அவசியமற்றதாகி வருகிறது. – இதனால் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. ஏனெனில் புரட்சிக்கான தருணத்துக்கு மணியடித்தாகி விட்டது” (பக்கம்110).  நதேழ்தின் தத்துவத்தின்பால் காட்டும் முடிவற்ற புறக்கணிப்புக்கு இதை விட எடுப்பான உதாரணத்தைச் சிந்தித்துப்பார்க்க முடியாது. “புரட்சி நடக்கவிருக்கும் காலத்தைநாம் பிரகடனப்படுத்திவிட்டோம். எனவே சுத்தமான மார்க்ஸியவாதிகள் விமசகர்களை அவர்கள் நிலைகளினின்று துரத்தியடிப்பதில்  இறுதியாக  வெற்றி  பெறுகிறார்களா இல்லையா என்பதிலே “ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை” யாம்!! நாம் விமசகர்களுடன் நடத்தும் தத்துவார்த்த போர்களின் விளைவுகள் புரட்சியின் போதுதான் நமக்கு மிகவும் தேவைப்படும், அப்போதுதான் அவர்களின் நடைமுறை நிலைகளை எதிர்த்து நாம் உறுதியாக போராடமுடியும்;  இதை நம் போலி அறிஞர் காணத் தவறுகிறார்!.
                     

 இஸ்க்ரா செய்வது போல், நாடு தழுவிய அரசியல் கிளர்ச்சியைத் தமது வேலைத் திட்டத்துக்கும் தமது போர்த்தந்திரத்துக்கும் தமது அமைப்புத் துறைப் பணிக்கும் மூலக்கல்லாக வைத்துக் கொள்கிறவர்கள் புரட்சியைத் தவற விடுவது அரிதினும் அரிதாகும். அனைத்து ருக்ஷ்யப் பத்திரிகையினின்று விரிந்து படர்ந்து வரும் தொடர்புகளைக் கொண்ட வலைப்பின்னலை அமைப்பதில் இன்று ருக்ஷ்யா முழுவதிலும் ஈடுபட்டிருப்பவர்கள் அந்த வசந்தகால நிகழ்ச்சிகளைத் தவறவிடவில்லை என்பது மட்டுமல்ல, அதற்குப் பதிலாக அந்த நிகழ்ச்சிகளை முன்னறிந்து கூறும் வாய்ப்பையும் அவர்கள் நமக்கு அளித்தார்கள். இஸ்க்ராவின் 13ஆம், 14ஆம் இதழ்களில் வர்ணிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாடங்களையும்101 அவர்கள் தவறவிடவில்லை; மாறாக, அவற்றில் கலந்து கொண்டார்கள், தன்னியல்பாக நிமிர்ந்து எழும் மக்களுக்குத் துணை போவது தங்கள் கடமை என்று தெளிவாக உணர்ந்து இருந்தார்கள்; அதே நேரத்தில், பத்திரிகை வாயிலாக இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி ருக்ஷ்யாவிலுள்ள எல்லாத் தோழர்களும் தெரிந்துகொள்ள உதவுவதும் தாங்கள் சேகரித்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள உதவுவதும் தங்கள் கடமை என்றும் தெளிவா உணர்ந்திருந்தார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும் வரை புரட்சியைத் தவறவிடமாட்டார்கள். புரட்சி நம்மிடம் முதன்மையாகக் கோருவது கிளர்ச்சி செய்வதில் அனுபவம். ஒவ்வொரு கண்டனத்தையும் (சமூக- ஜனநாயகவாத வகையில்) ஆதரிக்கும் திறமை, தன்னியல்பான இயக்கத்தை நண்பர்களின் தவறுகளினின்றும் எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் பாதுகாத்தபடியே வழிகாட்ட்இச் செல்லும் திறமை ஆகியவையே.


      ஆக, பொதுப் பத்திரிகைக்காகக் கூட்டாக வேலை செய்வதின் மூலமாக ஓர் அனைத்து ருக்ஷ்யப் பத்திரிகையை மையமாகக் கொண்ட அமைப்புக்கான திட்டத்தை இவ்வளவு விரிவாக வற்புறுத்தும்படி நம்மைக் கட்டாயப்படுத்தும் கடைசிக் காரணத்திற்கு வந்திருக்கிறோம். ஒரு செயல்துடிப்புள்ள சமூக – ஜனநாயகவாத அமைப்புக்கு வேண்டிய நெளிவு சுளிவுத் தன்மையை இவ்வகை அமைப்பு ஒன்றுதான் உறுதிப்படுத்திக் கொடுக்கும். நெளிவு சுளிவுத் தன்மை என்றால், மிகவும் வேறுபட்ட, விரைவாக மாறிவருகிற நிலைமைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல். “ஒரு புறத்தில் எதிரி தன் சக்திகள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து வலிமை மிகுந்திருக்கும் போது அந்த எதிரியுடன் பகிரங்கமான போரில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது; மறுபுறத்தில், அந்த எதிரியின் எளிதிலியங்காத் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு அவன் சிறிதும் எதிர் பாராத நேரத்திலும் இடத்திலும் தாக்குவது என்பதாகும்”* எழுச்சிகளையும் தெருப்போராட்டத்தையும் மட்டும் எதிர்பார்த்தோ, “சுவையற்ற அன்றாடப் போராட்டத்தின் முன்னேற்ற நடையை” மட்டும் வைத்தோ கட்சி அமைப்பைக் கட்டுவது உண்மையிலேயே ஒரு கொடிய தவறாக இருக்கும். நாம் எப்போதும் நம் அன்றாட வேலையை நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.  எப்போதும் எந்த ஒரு நிலைமைக்கும் தயாராக இருக்கு வேண்டும், ஏனெனில் எப்போது எழுச்சி நிகழும் காலம் போய் அமைதி நிலவும் காலம் வருமென்று முன்கூட்டி அறிவது பெரும்பாலும் அசாத்தியம்  என்றபோதிலும் அவ்வாறு முன்கூட்டி அறிய சாத்தியப்படும் வழக்குகளில் நம் அமைப்பை


இஸ்க்ரா, இதழ் 4 “எங்கிருந்து தொடங்குவது?”. நதேழ்தின் எழுதுகிறார்: “புரட்சி நடக்கவிருக்கும் காலத்துக்குரிய நோக்கு நிலை ஏற்காதவர்களான புரட்சிப் பண்பாடுவாதிகள் நீண்ட காலத்துக்கு வேலை செய்து வரவேண்டியிருக்கும் வாய்ப்புநிலை பற்றிச் சிறிதும் கலக்கம் அடையவில்லை” என்று (பக்கம் 62). இதற்கு நாம் சொல்ல வேண்டியிருப்பது இதுதான்; மிகவும் நீண்ட காலத்துக்கான வேலைக்கு அரசியல் போர்த்தந்திரத்தையும் அமைப்புத்துறைத் திட்டத்தையும், அதே நேரத்தில் இந்த வேலையைச் செய்துவரும் நிகழ்வுப் போக்கிலேயே நம் கட்சி தன் தலைமை இடத்தில் நின்றபடித்திலும்  எந்த மாற்றத்திலும் தன் கடமையை நிறைவேற்றுவதற்கான தயார் நிலையையும் உறுதிப்படுத்தாவிட்டால் – இதைச் செய்வதில் நாம் வெற்றிபெறாவிட்டால் நாம் இரங்கத்தக்க அரசியல் சாகஸவாதிகளாகக் காட்டிக்கொண்டவர்களாவோம். சமூக – ஜனநாயகவாதத்தின் இலட்சியம்  மனிதகுலம் முழுவதின் வாழ்க்கை நிலைமைகளை அடிப்படையாகவே உருமாற்றிவிடுவதாகும், எனவே வேலைசெய்யவேண்டியிருப்பதின் காலநீளத்தைப் பற்றி ஒரு சமூக – ஜனநாயகவாதி “கலக்கமடைவதற்கு” இடமே கிடையாது; நதேழ்தின் ஒருவர் தான் இதை மறக்கமுடியும், ஏனெனில் அவர் நேற்றைய தினத்திலிருந்துதான் தம்மை ஒரு சமூக – ஜனநாயகவாதியாகச் சொல்லிக் கொள்ளத் தொடங்கினார்.

மறுநிர்மாணம் செய்துகொள்வதற்கு இந்த முன்னறிவை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; காரணம் ஓர் எதேச்சாதிகார நாட்டில் இம் மாற்றங்கள் திகைக்கத்தக்க விரைவுடன் நிகழ்கின்றன, சில சமயங்களில் ஜாராட்சி யானிச்சாரிகள்102 இரவுத் தாக்கு ஒன்றிலிருந்தே இவை தொடரக் கூடும். புரட்சியையுங்கூட தனியொரு செயலாகவே கருதக் கூடாது. (நதேழ்தின் வகையறா இப்படித்தான் கருதுவதாகத் தெரிகிறது). ஏறத்தாழ பலமான எழுச்சிகளும் ஏறத்தாழ முழுமையான அமைதி நிலவும் காலங்களும் விரைவாக மாறிமாறி நிகழக்கூடிய ஒரு வரிசைத் தொடராகவே புரட்சியைக் கருத வேண்டும். இக் காரணம் பற்றியே நம் கட்சியமைப்பின் நடவடிக்கையின் முதன்மையான உள்ளடக்கமாகவும் குவிமையமாகவும் இருக்கவேண்டியது மிகவும் பலமான எழுச்சிக்காலத்திலும் முழு அமைதி நிலவும் காலத்திலும் ஒருங்கே சாத்தியமானதும் அவசியமானதுமான வேலையாகும், அதாவது அரசியல் கிளர்ச்சி நடத்தும் வேலையாகும். இந்த அரசியல் கிளர்ச்சி வேலை ருக்ஷ்யா முழுவதிலும் தொடர்புபடுத்தப்பட்டிருக்க வேண்டும், எல்லா வாழ்க்கைத் துறைகளின் மீதும் ஒளி பாய்ச்ச வேண்டும். ஆனமட்டும் பரவலாக மக்கட் பகுதியினரிடையே  நடத்தப்பட வேண்டும்.  ஆனால் மிக அடிக்கடி வெளியிடப்பட்டுவரும் ஓர் அனைத்து ருக்ஷ்யப் பத்திரிகை இல்லாமல் இன்றைய ருக்ஷ்யாவில் இவ் வேலையைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது. இந்தப் பத்திரிகையைச் சுற்றிச் சூழ்ந்து உருவாகக் கூடிய அமைப்பு, அதன் கூட்டாளிகளின் (அதாவது, அந்தப் பத்திரிகைக்காக வேலை செய்யும் எல்லோரையும் குறிக்கும் பரந்த அர்த்தத்தில் இச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்) அமைப்பு எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும்; தீவிரமான புரட்சித் “தளர்ச்சி” நிலவும் காலங்களில் கட்சியின் கெளரவத்தையும்  கண்ணியத்தையும் தொடர்ச்சியையும் உயர்த்திப் பிடிப்பதிலிருந்து நாடுதழுவிய ஆயுதமேந்திய எழுச்சிக்குத் தயாரிப்பது, நேரம் குறிப்பது, நடத்தி முடிப்பது வரை எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும்.
         

ஏதாவது உள்ளூர் ஒன்றிலோ பலவற்றிலோ எல்லாத்தோழர்களும் சிறைப்படுத்தப்படுவது போன்ற மிகச் சாதாரணமான நிகழ்ச்சியைச் சிந்தித்துப் பாருங்கள். எல்லா உள்ளூர் அமைப்புக்களையும் இணைக்கும்படியான தனியொரு பொதுவான, ஒழுங்குமுறையான நடவடிக்கை இல்லாத நிலையில் இப்படிப்பட்ட கைதுகள் அடிக்கடி பல மாதங்களுக்கு வேலை நின்று போய்விடுகிற நிலைமையை உண்டாக்குகின்றன. ஆனால், எல்லா உள்ளூர் அமைப்புக்களுக்கும் ஒரே பொதுவான நடவடிக்கை இருந்திருந்தால் அப்போது, மிகப் பலபேர் கைதுசெய்யப்படும் நிலைமை ஏற்பட்டாலும் கூட  இரண்டு மூன்று செயல்முனைப்புள்ள நபர்கள் ஒரு சில வாரங்களுக்குள்ளே பொது மையத்துக்கும் பதிய இளைஞர் குழுக்களுக்கும் (இவை இன்றுகூட வெகுவிரைவில் முளைத்தெழுவதை நாம் அறிவோம்)இடையே தொடர்பு ஏற்படுத்தி விட முடியும். கைதுகளினால் இடர்ப்படுத்தப்பட்ட பொதுவான நடவடிக்கை எல்லோருக்கும் தெரிகிறதாயிருக்கும் நிலை ஏற்படும்போது புதிய குழுக்கள் தோன்றவும்  மையத்துடன் மேலும் விரைவாகத் தொடர்புகள் ஏற்படுத்தி கொள்ளவும் முடியும்.
         

மறுபுறத்தில் ஒரு மக்கள் திரளின் புரட்சியெழுச்சியைதச் சிந்தித்துப் பாருங்கள். இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் இதற்காக நாம் தயார் செய்ய வேண்டும் என்று அனேகமாக எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் எப்படி? என்பதே விக்ஷயம். புரட்சியெழுச்சியைத் தயாரிப்பதற்கு மத்திய குழு எல்லா இடங்களிலும் ஏஜெண்டுகளை முடியாதென்பது உறுதி. நம்மிடம் ஒரு மத்திய குழு இருந்திருத்தாலுங்கூட இன்றைய ருக்ஷ்ய நிலைமைகளில் இப்படி நியமிப்பதின்மூலம் அது எதனையும் சாதிக்க முடியாது. ஆனால் பொதுவான பத்திரிகையை நிலைநிறுத்தியும் விநியோகித்து வரும் போக்கில் உருவாகக் கூடிய ஏஜெண்டுகளைக்* கொண்ட வலைப்பின்னலமைப்பு ஒரு புரட்சி எழுச்சிக்கான அறைகூவலுக்காக “கை கட்டிக் காத்திருக்க” வேண்டியிராது., ஒரு புரட்சி எழுச்சி நிகழ்வதாயிருந்தால் மிகப் பெரும்பாலும் வெற்றி பெறுவதை உறுதி செய்யக் கூடியதான  ஒழுங்குமுறையான நடவடிக்கையை அது செய்து கொண்டிருக்க முடியும். இவ்வகை நடவடிக்கை உழைப்பாளி மக்களின் மிக விரிந்த பரந்த பகுதியினருடனும் எதேச்சாதிகார ஆட்சிமீது அதிருப்தி கொண்டுள்ள எல்லாச் சமுதாயப் பிரிவினருடனும் தமக்குள்ள தொடர்புகளைப் பலப்படுத்தும்; இது ஒரு புரட்சியெழுச்சிக்கு எவ்வளவோ முக்கியமானதாகும். இவ்வகை நடவடிக்கைதான் பொதுவான அரசியல் நிலைமையைச் சரியாக மதிப்பிடும்படியான திறமையையும், அதன் வழியாக ஒரு புரட்சியெழுச்சிக்குச் சரியான தருணத்தைத் தேர்ந்தெடுக்கும் திறமையையும் வளர்த்துக் கொள்ள உதவும். இவ்வகை நடவடிக்கைதான் ருக்ஷ்யா முழுவதையும் கிளர்ச்சிகொள்ளச் செய்துவரும் அரசியல் பிரச்சனைகளுக்கும் இடைநிகழ்ச்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எல்லா உள்ளூர் அமைப்புகளும் ஒரே நேரத்தில் பதிலளிக்கும்படியும் இவ்வகை ”இடைநிகழ்ச்சிகளுக்கு” மிக வீறுடனும் சீராகவும் சூழ்வினைத்திறத்துடனும் எதிர் செயல் புரிந்திடவும் பயிற்சி தரும்; ஏனெனில் அரசாங்கத்திற்கு (மக்களனைவரும் மிகவும் வீறுடனும் மிகவும் சீராகவும் மிகவும் சூழ்வினைத்திறத்துடனும் அளிக்கும்””பதில்” என்பதே ஒரு புரட்சியெழுச்சியின் சாரம்சமாகும்.

*அந்தோ, என்ன கக்ஷ்டம்! மீண்டும் ”ஏஜெண்டுகள்” எனும் மோசமான வார்த்தையை உதிர்து விட்டேனே! மார்தீனவ் வகையறாவின் ஜனநாயக ரசனை மிக்க காதுகளுக்கு அது கடூரமாகப் படுகிறதாம். 1870-80 களில் இந்த வீரர்களைப் புண்படுத்தாத இந்தச் சொல் 1890-1900 களின் கற்றுக்குட்டிகளைப் புண்படுத்துகிறதேனோ தெரியவில்லை. இந்தச் சொல் எனக்குப் பிடித்திரு க்கிறது. ஏனெனில் எல்லா ஏஜெண்டுகளும் தங்கள் சிந்தனைகளையும் செயல்களையும் அர்ப்பணித்துப் பேணும் பொதுவான இலட்சியத்தை இது தெளிவாகவும் நறுக்காகவும் குறிக்கிறது. இதை விட்டு வேறு சொல் ஒன்று நான் எடுத்தாளவேண்டியேற்பட்டால் “கூட்டாளி” எனும்  சொல்லைத்தான் தேர்ந்தெடுப்பேன், எனினும் அதில் ஓரளவுக்கு ஏட்டறிவுத்தனமும் தெளிவின்மையும் தொனிக்கிறது. இராணுவ முறையில் அமைந்த ஏஜெண்டுகளின் அமைப்புதான் நமக்கு வேண்டும். ஆனால் மார்தீனவ் கூட்டத்துக்கு (குறிப்பாக வெளிநாட்டிலிருப்பவர்களுக்கு) ”தளபதியாக நீ இரு நீ இரு  பரஸ்பரம் பதவிகொடுத்துக் கொள்வதே” பிடித்தமான விளையாட்டாக இருக்கிறதல்லவா, எனவே அவர்கள் “நாடுகடவுச் சீட்டு ஏஜெண்டுகள்” என்பதற்குப் பதிலாக  “புரட்சியாளர்களுக்கு நாடுகடவுச் சீட்டு வழங்குவதற்கான தனிப்பிரிவின் தலைவர்” என்றெல்லாம் சொல்ல விரும்பக் கூடும்.

கடைசியாக இவ்வகை நடவடிக்கைதான் ருக்ஷ்யா முழுவதிலுமுள்ள எல்லாப் புரட்சிகரமான அமைப்புகளும்  ஒன்றோடொன்று மிகத் தொடர்ச்சியான, அதே நேரத்தில் மிக இரகசியமான தொடர்புகளை வைத்து வருவதற்குப் பயிற்சி தரும், அவ்வழியே உண்மையான கட்சி ஒற்றுமையையும் தோற்றுவிக்கும். ஏனெனில் இவ்வகைத் தொடர்புகளில்லாமல் புரட்சியெழுச்சிக்குரிய திட்டத்தைக் கூட்டாக விவாதிப்பதோ, புரட்சியெழுச்சி நிகழவிருக்கும் நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமான தயாரிப்பு நடவடிக்கைகளை (இவை மிகவும் கண்டிப்புடன் இரகசியமாக வைக்கப்பட வேண்டியவை) எடுத்துக் கொள்வதோ சாத்தியமாயிராது.
           

சுருங்கச் சொன்னால், “ஓர் அனைத்து ருக்ஷ்ய அரசியல் பத்திரிகைக்கான திட்டம்”  என்பது வறட்டுத் தத்துவாதத்தாலும் ஏட்டறிவுத்தனத்தாலும் பீடிக்கப்பட்டுள்ள செயல் தொடர்பற்ற ஊழியர்களுடைய உழைப்பிலே விளைந்த பயன் அல்லவே அல்ல (இவ்விக்ஷயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திக்காதவர்களுக்குத்தான் அப்படித் தோன்றியது), அவசர அவசியமான அன்றாட வேலையை ஒரு கணமேனும் மறவாமல் புரட்சியெழுச்சிக்காக உடனடியான முழுவிவான தயாரிப்புச் செய்வதற்கு வேண்டிய மிகவும் நடைமுறை வகைப்பட்ட திட்டமே அது.

லெனின் –என்ன செய்ய வேண்டும்?
பக்கம் 262-272
“முன்னேற்றப் பதிப்பகம்” 1976

No comments:

Post a Comment