Sunday, 13 November 2011

என்ன செய்யவேண்டும் முடிவுரை:மூன்றாம் காலப்பகுதிக்கு முற்றுப்புள்ளியிடுக.


முடிவு

         ருக்ஷ்ய சமூக- ஜனநாயகவாதத்தின் மூன்று காலப்பகுதிகளாகத் தெளிவாகப் பிரிக்கலாம்;

      முதலாவது காலப்பகுதி சுமார் பத்தாண்டுகள், அதாவது 1884இலிருந்து 1894 வரை அடங்கியது. இக்காலப்பகுதியில் சமூக – ஜனநாயகவாதத்தின் தத்துவமும் வேலைத்திட்டமும் தோன்றி வளர்ந்து கெட்டிப்பட்டது. இந்தப் புதிய போக்கின் ஆதரவாளர்கள் ருக்ஷ்யாவில் வெகுசிலரே இருந்தனர்.  தொழிலாளி வர்க்க இயக்கம் இல்லாமலே சமூக – ஜனநாயகவாதம் இருந்து வந்தது, ஓர் அரசியல் கட்சி என்கிற வகையில் அது கரு நிலையிலேயே இருந்தது.

               இரண்டாவது காலப்பகுதி மூன்று – நான்கு ஆண்டுகள், 1894 லிருந்து 1898 வரை, உள்ளது. இக் காலப்பகுதியில் சமூக – ஜனநாயகவாதம் ஒரு சமுதாய இயக்கமாக, திரளான மக்களின் எழுச்சியாக, ஓர் அரசியல் கட்சியாக அரங்கிலே தோன்றியது. இந்தக் காலப்பகுதி அதன் குழந்தைப் பருவமும் இளமைப் பருவமுமாகும். நரோதியத்தை எதிர்த்துப் போராடவேண்டும், தொழிலாளர்களிடையே சென்று பணியாற்ற வேண்டும் எனும் ஒரு மாபெரும் பொதுவான ஆர்வம் படிப்பாளிப் பகுதியினரைப் பற்றிக் கொண்டது; தொழிலாளர்கள் வேலைநிறுத்தச் செய்கையில் ஒரு பொதுவான உற்சாகத்தைக் காட்டினர். இயக்கம் மாபெரும் முன்னேற்றம் கண்டது. பெரும்பான்மையான தலைவர்கள் இளைஞர்களே, முப்பத்தைந்து வயது” (திரு.நி. மிகைலோவ்ஸ்கிக்கு இது ஒரு மாதிரியான இயல்பான எல்லைக் கோடாகத் தோன்றியது) எட்டாதவர்களே, இளமையின் காரணமாக அவர்கள் நடைமுறை வேலையில் பயிற்சியற்றவர்கள் எனக் காட்டிக் கொண்டு திகைப்பூட்டும் வேகத்திலே அரங்கை விட்டகன்றனர். என்றாலும் அவர்களுடைய நடவடிக்கையின் வாய்ப்பெல்லை பெரும்பாலும் விரிந்தகன்றி ருந்தது. அவர்களில் பலருடைய புரட்சிச் சிந்தனை நரோத்னயா வோல்யாவின் ஆதரவாளர்கள் என்ற வகையிலிருந்து தொடங்கியது. அநேகமாக அனைவருமே தம் இளமைப் பிராயத்தில் பயங்கரவாத வீரர்களை உற்சாகமாக போற்றி வணங்கினர். அந்த வீரமரபுகளின் உள்ளத்தை அள்ளும் மனப்பதிகைகளைக் கைவிடுவதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, நரோத்னயா வோல்யாவிடம் நீடித்துப் பற்றுறுதியுடன் பின்பற்றிவர தீர்மானித்துக் கொண்ட நபர்களுடன் (அவர்கள்பால் இளம் சமூக – ஜனநாயகவாதிகள் ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்தனர்) தனிப்பட்ட உறவுகளை அறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தால் இளம்தலைவர்களும் ஒவ்வொரு போக்கையும் சேர்ந்த சட்டவிரோதமான இலக்கியத்தைப் படிக்கும் படியும் சட்டபூர்வமான நரோதியத்தின் பிரச்சனைகளை உன்னிப்பாகப் பயிலும்படியும் சுயமுயற்சியாகவே போதனை பெறும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இப் போராட்டத்தில் பயிற்சி பெற்று சமூக-ஜனநாயகவாதிகள் தொழிலாளிவர்க்க இயக்கத்தில் இறங்கினார்கள்;  அப்படிச் செய்ததில் அவர்கள் தங்கள் பாதையிலே ஒளி பெய்து தடம் காட்டிய மார்க்ஸியத் தத்துவத்தையோ  எதேச்சாதிகார ஆட்சியைத் துக்கியெறியும் பண்பையோ “ஒரு கணமேனும்’ மறக்கவில்லை. 1898ம் ஆண்டு வசந்தகாலத்தில் கட்சி உருவாகியது.103  இது இக்காலப்பகுதியைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகளின் மிகவும் எடுப்பான, இதே நேரத்தில் கடைசியான, செய்கையாகும்.

             மூன்றாவது காலப்பகுதி 1897ம் ஆண்டில் தயாரானது, இதை நாம் மேலே பார்த்தோம், இது 1898 இல் (1898 --?)இரண்டாவது காலப்பகுதியைத் திட்டவட்டமாக வெட்டிவிட்டது. இந்த மூன்றாவது காலப்பகுதி கருத்து வேற்றுமையையும் அணிக் குலைவையையும் ஊசலாட்டத்தையும் கண்ட காலப்பகுதியாகும். இளமைப் பிராயத்தில் இளைஞனின் குரல் உடைகிறது. எனவே இக்காலப் பகுதியில் ருக்ஷ்ய சமூக-ஜனநாயகவாதத்தின் குரலில் உடைவு ஏற்படத் தொடங்கியது. அபஸ்வரம் கேட்கத் தொடங்கியது—ஒரு புறத்தில் திருவாளர்கள் ஸ்துரூவோ, புரொகபோவிச். புல்காக்கொவ், பெர்தியாயிவ் ஆகியோரின் எழுத்துக்களிலும், மறுபுறத்தில் வி.இ.,ஆர்.எம்., ப.கிரிச்சேவ்ஸ்கி, மார்தீனவ் ஆகியோரின் எழுத்துக்களிலும். எனினும், பிரிந்து திசைகெட்டுத் திரிந்தவர்களும் பின்வாங்கியவர்களும் தலைவர்கள் மட்டுமே; இயக்கம் என்னவோ தொடர்ந்து வளர்ந்து அசுர நடையில் முன்னேறியது. பாட்டாளி வர்க்கப் போராட்டம் தொழிலாளர்களின் புதிய பகுதிகளுக்குப் பரவி ருக்ஷ்யாவெங்கும் விரிந்தது. அதே நேரத்தில் அது மாணவர்களிடையேயும் மக்களின் பிற பகுதியினரிடையேயும் ஜனநாயக உணர்ச்சி மீண்டும் தலையெடுக்கத் தூண்டிவிட்டது. இருந்த போதிலும், தன்னியல்பான எழுச்சியின் விரிவுக்கும் வலுவிற்கும் முன்னே தலைவர்களின் அரசியல் உணர்வு மண்டியிட்டது. சமூக-ஜனநாயகவாதிகளிடையே வேறொரு வகையினர், “சட்டபூர்வமான” மார்க்ஸிய இலக்கியத்தை மட்டும் படித்து பயிற்சி பெற்ற வகைப்பட்ட ஊழியர்கள், ஆதிக்க நிலைக்கு வந்துவிட்டனர்;  எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் தன்னியல்பு தலைவர்களிடமிருந்து அதிகமாக அரசியல் உணர்வைக் கோரியதோ அவ்வளவுக்கவ்வளவு இந்த இலக்கியம் தனது போதாமையைக் காட்டிக் கொண்டது. தலைவர்கள் தத்துவ விக்ஷயத்திலும் (”விமர்சன சுதந்திரம்”) நடைமுறை விக்ஷயத்திலும் (”பக்குவமின்மை”) பின்னடைந்திருந்தது மட்டுமன்றி எல்லாவிதமான படாடோபமான வாதங்களைக் கொண்டு தம் பிற்பட்ட நிலையை நியாயப்படுத்தவும் முயன்றனர். சட்டபூர்வமான இலக்கியத்தில் பிரண்டானோவின் ஆதரவாளர்களும் சட்டவிரோரதமான இல்க்கியத்தில் வால்பிடிக்கும் போக்கைச் சேர்ந்தவர்களும் சமூக-ஜனநாயகவாதத்தைத் தொழிற்சங்கவாதத்தின் தரத்துக்குத் தாழ்த்தி விட்டனர். “Credo“ வேலைத்திட்டம் செயலுக்குக் கொண்டுவரப் படலாயிற்று. – சமூக-ஜனநாயகவாதிகளின் “பக்குவமற்ற வழிமுறைகள்” சமூக-ஜனநாயகவாத ரீதியில் இல்லாத புரட்சிகரமான போக்குகள் மீண்டும் தலையெடுக்கும்படி செய்தபோது.
                 

என்னமோ ஒரு ரபோச்சியே தேலோவிற்காக இத்தனைப் பக்கங்கள் எழுதி விளக்க வேண்டுமா? என்று வாசகர் விமர்சிக்கத் தலைப்படு வாரேயானால் நாம் செய்யக்கூடியது இதுதான்; ரபோச்சியே தேலோ இந்த மூன்றாவது காலப்பகுதியின் ”உணர்ச்சியை” மிக எடுப்பாக பிரதிபலித்த தினாலேதான் அதற்கு ”வரலாற்று ரீதியான” குறிபொருள் கிடைத்தது.*

*Den Sack schlagt man,den Esel meint man (கழுதையை நினைத்துக் கொண்டு சாக்குப்பையை அடிப்பது) எனும் ஜெர்மன் பழமொழியைக் காட்டியும் நான் பதில் சொல்ல முடியும். ரபோச்சியே தேலோ மட்டுமல்ல, பெருந்திரளான நடைமுறை ஊழியர்களும் தத்துவாசிரியர்களுங்கூட அன்றைய ஃபேக்ஷன் ஆக  இருந்த ”விமர்சனத்தால்” அடித்துச் செல்லப்பட்டார்கள். தன்னியல்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் குழம்பிப் போனார்கள். நம் அரசியல், அமைப்புத்துறைப் பணிகள் பற்றிய சமூக-ஜனநாயகவாதக் கருத்தோட்டத்தி னின்று நழுவித் தொழிற்சங்கவாதக் கருத்தோட்டத்தில் விழுந்தார்கள்.

அரசியல் பச்சோந்திகளான கிரிச்சேவ்ஸ்கி மார்தீனவ் வகையறாவுக்குத்தான் கருத்து வேற்றுமையையும் ஊசலாட்டத்தையும் ”விமர்சனத்திற்கும்” “பொருளாதாரவாதத்திற்கும்”  பயங்கரவாதத்திற்கும் சலுகை காட்டத் தயாராயிருக்கும் நிலையையும் சரிவர வெளியிட முடிந்தது. முன்பின் முரணற்ற ஆர்.எம்.க்கு முடியவில்லை. “பரம நிலையிலுள்ளதை” வணங்கும் ஒருவன் நடைமுறை வேலைபால் காட்டும் இறுமாந்த இளக்காரம் அல்ல. சின்னத்தனமான நடைமுறையும் தத்துவத்தின்பால் முற்றான உதாசீனமும் கலந்த கலவைதான் இந்தக் காலப்பகுதியை இனம் குறித்துக் காட்டியது. இக்காலப்பகுதியில் வெளிச்சம் போட்ட வீரர்கள் ”பகட்டான சொற்றொடர்களை” நேரடியாக நிராகரிப்பதில் ஈடுபடுவதை விட அவற்றைக் கொச்சைப்படுத்துவதிலேயே அதிகமாக ஈடுபட்டிருந்தார்கள். விஞ்ஞான சோக்ஷலிஸம் ஓர் உள்ளொற்றுமையுள்ள புரட்சித்தத்துவமாய் இருப்பது போய், புதிதாக வெளிவந்த ஒவ்வொரு ஜெர்மன் பாடப்புத்தகத்திலும் இருக்கிறதை எடுத்து “தாராளமாகக்” கலந்துவிட்ட ஒரு களோபரம் ஆகிவிட்டது; “வர்க்கப் போராட்டம்” எனும் கோக்ஷம் மேன்மேலும் விரிவான முனைப்பான நடவடிக்கைக்குத் தூண்டிவிடவில்லை, “பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப் பட்டிருக்கிறது” என்றதனால் அது ஒரு பூச்சுமருந்தாகவே பயன்பட்டது: கட்சி எனும் கருத்து புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு செயல்துடிப்புள்ள அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு வாய்த்த அறைகூவலாக பயன்படவில்லை, ஒரு தினுசான “புரட்சிகரமான அதிகாரவர்க்கத்தை” நியாயப்படுத்துவதற்கும் குழந்தைத் தனமான “ஜனநாயக” வடிவங்களை வைத்து விளையாட்டுக் காட்டுவதை நியாயப்படுத்துவதற்கும் அது பயன்பட்டது.


         மூன்றாவது காலப்பகுதி எப்போது முடிவடையும். (பல அறிகுறிகள் இன்று முன்னறிவித்து வரும்)  நான்காவது காலப்பகுதி எப்போது தொடங்கும் என்பதை நாமறியோம். நாம் வரலாற்றை விட்டு நிகழ்காலத்திற்கும் ஓரளவு எதிர்காலத்தை நோக்கியும் வந்து கொண்டிருக்கிறோம். எனினும் ஒரு விக்ஷயத்தை நாம் உறுதியுடன் நம்புகிறோம்: நான்காவது காலப்பகுதி செயல்துடிப்புள்ள மார்க்ஸியம் கெட்டிப்படுவதில் கொண்டுபோய் விடும். ருக்ஷ்ய சமூக-ஜனநாயகவாதம் நெருக்கடியிலிருந்து வெளிப்பட்டு முழு வளர்ச்சி உருவிலே நிற்கும். சந்தர்ப்பவாத பின்னணிப் படையை “விலக்கி” மிகப் புரட்சிகரமான வர்க்கத்தின் உண்மையான முன்னணிப்படை அதனிடத்தில் வரும் என்று.
              
இவ்வகையான “விலக்கலைச்” சாதிக்க அறைகூவி அழைக்கும் அர்த்தத்திலும் மேலே விளக்கியதனைத்தையும் சுருக்கித்தரும் வகையிலும் “என்ன செய்யவேண்டும்?” எனும் கேள்விக்கு நாம் கொடுக்கக் கூடிய சுருக்கமான பதில் இதுதான்.
  
மூன்றாம் காலப்பகுதிக்கு முற்றுப்புள்ளியிடுக.

லெனின் –என்ன செய்ய வேண்டும்?
பக்கம் 273-277
“முன்னேற்றப் பதிப்பகம்” 1976


        

No comments:

Post a Comment