Sunday 13 November 2011

இயக்கத்தின் உயர்ந்த அலையும் தணிந்த அலையும்

இயக்கத்தின் உயர்ந்த அலையும்
தணிந்த அலையும்
                                                                 தோழர்  மாசேதுங்
      நாம் கடந்த ஆண்டில் பல இடங்களில் சண்டை செய்தும் நாடு முழுமையும் புரட்சிகரப் பெருக்கு வடிநிலையில் உள்ளது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு உள்ளோம். சிவப்பு அரசியல் அதிகாரம் ஒருசில சிறுபகுதிகளில் நிறுவப்பட்டிருக்கையில் முழுமையாக நாட்டில் மக்கள் சாதாரண சனநாயக உரிமைகளற்று இருக்கின்றனர். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், முதலாளிய சனநாயகவாதிகளுக்கும் கூட, பேச்சுச் சுதந்திரமோ, கூட்டச் சுதந்திரமோ கிடையாது; பொதுவுடமைக் கட்சியில் சேர்வதே மிக மோசமான குற்றமாயும் உள்ளது. செம்படை எங்கு சென்றாலும் வெகு மக்கள் உற்சாகமின்றியும் ஒதுங்கியுமே இருக்கின்றனர்; எமது பிரசாரத்தின் பின்னர் மட்டுமே அவர்கள் மெதுவாக நடவடிக்கையில் இறங்குகின்றனர். நாம் எந்த எதிரிக் கூறுகளை, எதிர்ப்பட்டாலும் எம் பக்கம் மாறிவருவதோ கலகங்களோ எதுவும் இல்லாதிருக்கிறது. நாம் சண்டையிட்டே தீர்க்க வேண்டியதாகிறது. இது மே 21 ஆம் நாள் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகப் பெரிய எண்ணிக்கையான “கலகக் காரர்களை”த் திரட்டிக் கொண்டதான எதிரியின் ஆறாவது சேனைக்குக் கூடப் பொருந்துவதாக இருக்கிறது. நாம் எமது தனிமைப்பாட்டைக் கூர்மையாக உணர்கிறோம். அது முடிவுக்கு வருமென்று நம்பிய வண்ணமாயும் இருக்கிறோம். நகர சிறு-முதலாளிய வர்க்கத்தையும் ஈடுபடுத்துவதான, சனநாயகத்திற்கான அரசியல் பொருளியல் போராட்டமொன்றைத் தொடுப்பதன் மூலம் மட்டுமே நாம் புரட்சியை முழுநாட்டினூடாகப் பீறிப்பாயும் பெருவெள்ளமாக மாற்ற முடியும்.
                              -சிங்காங் மலைகளிலான போராட்டம்- மாவோ
      தாக்குதலுக்கும் தற்காப்புக்கும், செயல்தந்திரத் திசைவழி காட்டுவதிலும் பல்வேறு “இடது” வழிகள் பிழையானவையாக இருந்தன. தோழர் ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறபடி, செயல்தந்திரத்தின் சரியான திசை வழிக்கு நிலைமை சரியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்ட வேண்டும்; (அதாவது, வர்க்க சக்திகளின் சரியானதொரு மதிப்பீடும், இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய சரியானதொரு மதிப்பீடும்- Judgement)
      அதற்குச் சரியான போராட்ட வடிவமும், அதை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு வடிவமும் தேவைப்படுகிறது; “எதிரி முகாமில் உண்டாகும் ஒவ்வொரு பிளவையும் சாதகமாகப் பயன்படுத்தவும், நண்பர்களைத் தேடிக்கண்டு பிடிக்கவும்” சரியாகத் தெரிந்திருக்க வேண்டும்; மிகச் சிறந்தவகை மாதிரிகளில் ஒன்று தோழர் மாசேதுங்கின் சீனப் புரட்சி இயக்கத் திசைவழியாகும். 1927 இல் புரட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதிலும் புரட்சிப் பேரலை தாழ்ந்த மட்டத்தில் வீழ்ந்து கிடக்கிறதென்றும் நாடு முழுவதிலும் உள்ள நம்மவர்களை விடவும் எதிரி வலிமையுடையவனாக இருக்கிறான் என்றும், துணிச்சல் வாதத் தாக்குதல்கள் தவிர்க்க இயலாத தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் தோழர் மாவோ சரியாகச் சுட்டிக்காட்டினார்;  ஆனால் பிற்போக்கு ஆட்சிமுறைக்குள்ளேயே தொடர்ச்சியான பிளவுகளும் போர்களும் இருக்கிற, புரட்சிக்கான மக்கள் கோரிக்கைப் படிப்படியாகப் புத்துயிர் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிற,  பொது நிலைமைகளில் முதலாவது மாபெரும் புரட்சியின் போராட்டங்களினூடாக மக்கள் திரள் கடந்து வந்ததும் போதியளவு வலிமையுடைய செம்படை ஒன்றும், சரியான கொள்கைகளையுடைய ஒரு பொதுவுடைமைக் கட்சியும் இருக்கின்ற குறிப்பான நிலைமைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  “சிவப்பு அரசியல் அதிகாரமுடைய பகுதிகள்” ‘அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள ஒரு வெள்ளை ஆட்சிமுறைக்கு நடுவில்” தோன்றுவதற்கு முடியும் என்றும் தோழர் மாவோ சரியாகச் சுட்டிக் காட்டினார்.
      ஆளும் வர்க்கங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கிற காலப்பகுதியில் சிவப்பு அரசியல் அதிகாரத்தை விரிவாக்குவது ஒப்பிட்டளவில் துணிச்சலானது என்றும், இராணுவ நடவடிக்கைகளால் சூழப்பட்டிருக்கிற பகுதி ஒப்பிட்டளவில் பரந்திருக்க முடியும்” என்றும் கூட அவர் கூறினார்;  அதே வேளையில் ஆளும் வர்க்கங்களுக்கு  இடையில் ஒப்பிட்டளவில் நிலைத்தன்மை (Stabilitiy) இருக்கிற காலப்பகுதியில் அத்தகைய விரிவாக்கம் படிப்படியாக  முன்னேறக் கூடிய ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார். அத்தகைய காலப்பகுதியில், நம்முடைய செயல்களில் மிகமிக மோசமானது யாதெனில் நமது சக்திகளை (படைகளை-Force) துணிச்சலாக முன்னேற்றுவதற்காகப் பிரிப்பதாகும்; மேலும் உள்ளூர் வேலைகளில் (ஸ்தல வேலைகளில்) (நிலத்தைப் பகிர்தல், கட்சியை விரிவுபடுத்துதல்,உள்ளூர் ஆயுதப்படைகளை அமைப்பாக்கித் திரட்டுதல்) மிகமிக மோசமானது யாதெனில் நமது ஆட்களைச் சிதறவிடுவதும், மைய மாவட்டங்களில் திடமான அடித்தளம் நிறுவுவதைப் புறக்கணிப்பதும் ஆகும்.
      அந்த ஒரு காலகட்டத்திலும் கூட, நமது எதிரிகளின் வலிமையிலுள்ள  வேறுபாடுகளுக்குத் தக்கவாறு நமது செயல் தந்திரம் மாற வேண்டும். நமது மாறும் செயல் தந்திரத்தைத் தீர்மானிப்பதற்கான ஒரு முக்கிய அடிப்படை வெவ்வேறு எதிரிகளின் நலன்களின்பால் புரட்சியின் வெவ்வேறு தாக்கமாகும். இதன் விளைவாக, “எதிர்ப்புரட்சிக்குள்ளேயுள்ள ஒவ்வொரு சச்சரவையும் பயன்படுத்துக; அதற்குள்ளே இருக்கிற விரிசல்களை அகலப்படுத்தி செயலூக்கமுள்ள நடவடிக்கைகளை எடுங்கள்” என்றும், “தனிமைப்படுத்தும் கொள்கையை எதிர்க்கவும்; சாத்தியமான எல்லா நட்புச் சக்திகளையும் வென்றெடுக்கும் கொள்கையை உறுதிப்படுத்துக” என்றும் தோழர் மாசேதுங் எப்போதுமே தூக்கிப் பேசினார். “முரண்பாடுகளைப் பயன்படுத்துக; பலரை வென்றெடுங்கள்; சிலரை எதிர்க்கவும்; நமது எதிரிகளை ஒருவர் பின்  ஒருவராக நசுக்குக;” என்பது போன்ற செயல்தந்திரக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் “சுற்றிவளைத்து அடக்குத”லுக்கு எதிராகத் தோழர் மாசேதுங் தலைமை தாங்கிய  அந்த இயக்கங்களில் அறிவுக்கூர்மையுடன் வளப்படுத்தப்பட்டது.
      ……..வெள்ளைப் பகுதி வேலைக்கான இந்தச் செயல்தந்திரக் கோட்பாடுகளின் சரியான தன்மையை 1935 டிசம்பர் 9 இல் நடந்த இயக்கத்தின் வெற்றி நிரூபித்தது; செயல்தந்திரத்தின் இத்தகைய சரியான திசைவழிக்கு நேர்மாறாக, பல்வேறு “இடது” வழிகளில் சென்ற தோழர்கள் எதிரிக்கும் நமக்கும் இடையில் நிலவிய சக்திகளின் சமநிலையைப் புறவயமாக ஆராயத் தவறிவிட்டனர்; அதற்கேற்ற போராட்ட வடிவங்களையும், அமைப்பு வடிவங்களையும் மேற்கொள்ளத் தவறிவிட்டனர்: மேலும் எதிரியின் உள் முரண்பாடுகளைத் தெரிந்து புரிந்து கொள்ளவும், அல்லது போதிய கவனம் செலுத்தவும் தவறிவிட்டனர். எனவே, அவர்கள் தற்காப்புநிலை எடுக்க வேண்டிய சமயத்தில் “தாக்குதல் வழியைக் கண்மூடித்தனமாக மேற்கொண்டதால் தோல்வி ஏற்பட்டது; அதுமட்டுமல்லாது, சரியான நேரத்தில் தாக்குதல் நடத்திய  போதிலும் கூட , வெற்றிகரமான தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பது எப்படி என்பதை அவர்கள் அறியாதபடியால் அப்போதும் தோல்வி அடைந்தனர். “ஒரு நிலைமையை மதிப்பீடு செய்வதில்” அவர்கள் கடைப்பிடித்த வழி,  சொந்த விருப்பிக்குட்பட்டதாகவும், தொடக்க நிலையிலுள்ளதாகவும், மறைமுகமானதாகவும், ஒரு பக்கம் சார்ந்ததாகவும், மேலோட்டமானதாகவும்,  அவர்களுடைய நோக்கு நிலைக்கு சாதகமாக உள்ள மேலோட்ட நிகழ்வாகவும் இருந்தது; அவ்வழியை எடுத்துக் கொண்டு, விரிந்து பரந்ததாகவும், ஆழ்ந்ததாகவும், நேரடியானதாகவும்,  எல்லாப்பக்கமும் சார்ந்ததாகவும் இன்றியமையாத (Essential)தாகவும் பெரிதுபடுத்தினர்; (எதிரியின் வலிமை, தற்காலிக வெற்றி, நமது வலிமைக் குறைவு, தற்காலிக தோல்வி, மக்கள் திரளின் அரசியல் விழிப்புணர்வின் போதாத்தன்மை, எதிரியின் உள் முரண்பாடுகள், நடுநிலையாளர்களின் முற்போக்குத் தன்மை போன்ற)  அவர்களின் நோக்குநிலையுடன் முழுவதும் ஒத்துப்போகாத எல்லா உண்மைகளையும் அவர்கள் ஒத்துக்கொள்ள அஞ்சினார்கள் அல்லது அவர்கள் இந்த எல்லா உண்மைகளையும் அறியவில்லை.
கட்சி வரலாற்றின் மீதான தீர்மானம்
புரட்சிப் பேரலை
இன்றுள்ள புறவய நிலைமை இப்போதைய மேலோட்டமான தோற்றத்தை மட்டும் பார்த்துச் சாரம்சத்தைப் பார்க்காத தோழர்களை இலகுவில் தவறாக வழிநடத்தக் கூடிய ஒன்றாகவே இன்னும் உள்ளது. குறிப்பாக செம்படையில் வேலை செய்யும் எமது தோழர்கள் போரில் தோல்வியுற்றாலோ சுற்றிவளைக்கப்பட்டாலோ அல்லது வலிமை வாய்ந்த எதிரிப்படையாற் சுற்றிவளைக்கப்பட்டாலோ தற்காலிகமானதும் குறிப்பானதும் குறுகியதுமான நிலையைத் தன்னையறியாது அடிக்கடி பொதுவானதாக்கி மிகைப்படுத்துவர். அவர்களுக்குச் சீனாவிலும் உலகிலுள்ள நிலைமை முற்றிலும் நம்பிக்கை இடம் அளிக்காதது போலவும், புரட்சியின் வெற்றிக்கான வாய்ப்புக்கள் எட்டாக்கனியாகவும் தோன்றுகின்றன. விசயங்களைப் பார்க்கும் போது அவற்றின் தோற்றத்தைப் பிடித்துக் கொண்டு அவற்றின் சாரம்சத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் பொதுவான நிலைமையின் சாரம்சத்தை அறிவியல் ரீதியாக ஆராயாமையேயாகும். சீனாவில் புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் தோன்றுமா என்ற கேள்விக்குப் புரட்சியின் பேரெழுச்சியை ஏற்படுத்தும் பலவித முரண்பாடுகள் உண்மையில் தொடர்ந்து வளர்கின்றனவா என்பதை அலசி ஆராய்வதன் மூலந்தான் அதற்குத் தீர்வுகாண முடியும். உலகில் ஏகாதிபத்தியங்களிக்கிடையிலும் ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் குடியேற்ற நாடுகளுக்கு இடையிலும், ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் சொந்த நாடுகளிலேயுள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு இடையிலுமுள்ள முரண்பாடுகள் வளர்கின்றதனால் ஏகாதிபத்தியங்களுக்குச் சீனாவுக்காகப் போட்டியிடும் தேவை மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. சீனாவுக்காக ஏகாதிபத்தியங்களுக்கிடையே ஏற்படும் போட்டி மிகவும் உக்கிரமடைந்தும், ஏகாதிபத்தியத்துக்கும் சீனதேசம் முழுவதுக்கு மிடையிலுள்ள முரண்பாடும், சீன மண்ணிலேயே  ஒருங்கு வளர்ந்து வருவதனால் சீனாவின் பல்வேறுபட்ட பிற்போக்கு ஆளும் கும்பல்களுக்கிடையே நாளுக்கு நாள் விரிவடைந்தும் தீவிரமடைந்தும் வருகிற சிக்கலான போர்நிலைமை உண்டாகியும், அவற்றுக்கு இடையேயுள்ள  முரண்பாடுகளை- போர்ப்பிரபுக்களுக்கிடையேயுள்ள சிக்கலான போரை- தொடர்ந்து வரி அதிகரிக்கிறது. இதனால் வரிகொடுக்கும் பரந்துபட்ட பொதுமக்களுக்கும் பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவின் தேசியத் தொழிலாளிகளுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டைத் தொடர்ந்த ஏகாதிபத்தியம் சீனத் தேசியத் தொழிலுக்கு இடம் விட்டுக் கொடுக்கவில்லை” என்ற உண்மை ஏற்படுகிறது. சீனத் தொழில் முதலாளிகள் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சலுகைகள் பெற முடியாமல் ஏற்படும் தோல்வியினால் ஏகாதிபத்தியத்துக்கும் சீனத் தேசியத் தொழிலுக்கும் முரண்பாடு எழுகிறது. இதனாலே சீன பூர்க்ஷ்வா வர்க்கத்திற்கும் சீனத் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு வளர்கிறது. சீன முதலாளிகள் தொழிலாளர்களை வெறித்தனமாக சுரண்டுவதன் மூலம் தமது வளர்ச்சிக்கு வழியைக் கண்டுபிடிக்க முயல, அதனைச் சீனத் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். ஏகாதிபத்திய வணிக ஆக்கிரமிப்பு, சீன வணிக முதலாளிகளின் கொள்ளையடிப்பு, அரசாங்கத்தின் பளுவான வரி இன்ன பிறவற்றினைத் தொடர்ந்து நிலப்பிரபு வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கு மிடையிலுள்ள முரண்பாடு மேலும் ஆழமாகிறது. அதாவது குத்தகை, கடும் வட்டி ஆகியவற்றின் மூலமான சுரண்டல் மேலும் கொடூரமானதாக, விவசாயிகளுக்கு நிலப்பிரபுக்கள் மீதுள்ள வெறுப்பு மேலும் வளர்க்கிறது. பிறநாட்டுப் பொருட்களின் சுமையினாலும், பரந்துபட்ட தொழிலாளர்களும் விவசாயிகளும் பொருட்களை வாங்குவதற்குச் சக்தியற்றவராகயிருப்பதனாலும், அரசாங்கத்தின் வரி அதிகரிப்பினா லும் சீனப் பொருட்களை வியாபாரம் செய்வோரும், தனிப்பட்ட உற்பத்தியாளரும் திவாலாகும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். தானியமும் நிதியும் குறைவாயிருந்த நிலைமையிலும் பிற்போக்கு அரசாங்கம் தமது படைகளை முடிவின்றிப் பெருக்கி, அதன் மூலம் போர்களை நாளுக்கு நாள் விரிவாக்கியதால், பரந்துபட்ட போர்வீரர்கள் மாறாத வறுமைக்குள்ளாயினர். அரசாங்க வரி அதிகரித்ததனாலும், நிலப்பிரபுக்களின் குத்தகையிலும் வட்டியிலும் அதிகரிப்பேற்பட்ட தனாலும், போர் அழிவுகள் நாள்தோறும் பெருகியதாலும் நாட்டில் எங்கும் பஞ்சமும் கொள்ளையுமாயிருக்கின்றது; பரந்துபட்ட விவசாயிகளும் நகரிலுள்ள வறிய மக்களும் உயிர்வாழ முடியாமலிருக்கின்றனர். பள்ளிகளில் பணமில்லாமையால் பல மாணவர்கள் தங்கள் படிப்புக்கு இடையூறு நேரலாம் என்று அஞ்சுகின்றனர்; உற்பத்தி பின்தங்கியிருப்பதால் பல பட்டதாரிகள் வேலைபெறும் நம்பிக்கையின்றி இருக்கின்றனர். நாம் இந்நிலைமைகளை எல்லாம் ஒருகால் புரிந்து கொள்வோமானால், சீனா எவ்வளவு அச்சமும் ஏக்கமும், கவலையும் கொள்ளும் நிலையிலும், எவ்வளவு குழப்பமான நிலையிலும் இருக்கிறதென்பதை அறிந்து கொள்வோம். ஏகாதிபத்தியங்களுக்கும் போர்ப் பிரபுக்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் எதிரான புரட்சிப் பேரெழுச்சியை எப்படியும் தவிர்க்க முடியாதென்பதையும், அது வெகு விரைவில் ஏற்படும் என்பதையும் உணர்ந்து  கொள்ளுவோம். சீனா முழுவதும் காய்ந்த விறகுகள் பரப்பப்பட்டிருக்கின்றன; அவை சட்டெனப் பெருஞ்சுவாலை விட்டெரியும். “சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டமுடியும்” என்ற பழமொழி இப்போதைய நிலைமை வளரும் வகையைக் கூறுவதற்கான பொருத்தமான வர்ணனையேயாகும். பல இடங்களிலும் வளர்ந்து வரும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களையும், விவசாயிகளின் கிளர்ச்சிகளையும், போர்வீரர்களின் கலகங்களையும், இந்தப் “பொறி” “பெருங்காட்டுத் தீயை மூட்டுவதற்கு” அதிக நேரமாகாது என்பதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
                       மேலே கூறப்பட்ட, கியாங்சியை வென்றெடுப்பது என்ற பிரேரணையில் தவறு என்னவென்றால், ஓராண்டுகால வரையறை வகுத்ததேயாகும். கியாங்சியை வென்றெடுப்பது கியாங்சி மாகாணத்திலுள்ள நிலைமைகளைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு நாடு பரந்த புரட்சிப் பேரெழுச்சி விரைவில் ஏற்படும் என்ற நிலைமையைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டது. ஏனெனில் புரட்சிப் பேரெழுச்சி விரைவில் ஏற்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்காவிடில் கியாங்சியை ஓராண்டுக்குள் வென்றெடுக்க முடியும் என்று முடிவுகட்டுவது ஒருபோதும் சாத்தியமாகயிருந்திராது. இந்தப் பிரேரணையில் ஒரே ஒரு குறைபாடு ஓராண்டு காலத்துக்குள் எனக் கால வரையறை வகுத்ததே யாகும்; இப்படி காலவரையறை வகுத்திருக்கக் கூடாது. இதனால் அது ”புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படும்” என்ற வாக்கியத்திலுள்ள “விரைவில்” என்ற சொல்லுக்கு தவிர்க்க முடியாதபடி ஓர் அவசியத் தன்மையைக் கொடுத்து விட்டது. கியாங்சியிலுள்ள அக நிலை நிலைமைகளையும், புறநிலை நிலைமைகளையும் பொறுத்தவரை, அவை மிகவும் கவனத்துக்குரியவை.  மையக் குழுவுக்கு எழுதிய கடிதத்திற்கு எழுதிய கடிதத்தில் காட்டப்பட்ட அகவய நிலைமைகளுடன் புறவய நிலைமைகளில் மூன்றும் இப்போது தெளிவாகச் சுட்டிக் காட்டப்படலாம். முதலாவதாக, கியாங்சின் பொருளாதாரம் முதன்மையாக நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம். வணிக முதலாளிவர்க்கம் ஒப்பீட்டளவில் பலவீனமானது. நிலப்பிரபுக்களின் ஆயுதசக்திகள் மற்றெல்லாத் தென்மாகாணங்களிலுள்ளவற்றினையும் விடப் பலவீனமானவை. இரண்டாவதாக, கியாங்சிடம் அதற்கெனத் தனிப்பட்ட மாகாணத் துருப்புக்கள் இருக்கவில்லை. அது எப்பொழுதும் பிற மாகாணத் துருப்புக்களாலேயே பாதுகாக்கப்பட்டது. “பொதுவுடமையாளர்களை அடக்குவதற்கோ” “கொள்ளைக்காரரை அடக்குவதற்கோ” அனுப்பப்படும் இத்துருப்புக்கள் உள்ளூர் நிலைமைகளுடன் பழக்கப்படாதவையாகயிருப்பதோடு, அவற்றின் நலன்கள் உள்ளூர்த் துருப்புகளுடைய வற்றைப் போல அவ்வளவிற்கு நேரடியாகத் தொடர்புடையனவும் இல்லை. ஆகையால் அவை வழக்கமாக உற்சாகம் குன்றியவையாயிருந்தன. மூன்றவதாக, ஹாங்காங்கிற்கு அருகாமையிலுள்ளதும், கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளதுமான குவாங்துஙைப் போலன்றிக் கியாங்கி ஒப்பீட்டளவில் ஏகாதிபத்தியப் பாதிப்பின்றும் விடுபட்டிருக்கிறது. இந்த மூன்று அம்சங்களையும் நாம் ஓரளவு புரிந்து கொண்டால் மற்றெல்லா மாகாணங்களையும் விடக் கியாங்சியில் கிராமியக் கிளர்ச்சிகள் மிகப் பரந்தவையாக இருப்பதற்கும். செம்படையும், கொரில்லா அலகுகளும் மிகவும் அதிகமாக இருப்பதற்குமான காரணத்தை எம்மால் விளக்கிக் கூறமுடியும்.
அப்படியானால், “புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படும்” என்ற சொற்றொடரிலுள்ள “விரைவில்” என்ற சொல்லை நாம் எப்படி விளக்க வேண்டும்? இது பல தோழர்கள் நடுவிலுள்ள ஒரு பொதுக்கேள்வி. மார்க்சியர்கள் சோதிடரல்லர். எதிர்கால வளர்ச்சியினதும் மாற்றங்களினதும் பொதுவழியைத் தான் அவர்கள் தெரிவிக்க வேண்டும். அதைத்தான் உண்மையில் தெரிவிக்கவும் முடியும். நாளையும் பொழுதையும் எந்திர ரீதியில் நிர்ணயிக்கக்கூடாது. அப்படி நிர்ணயிக்கவும் முடியாது. ஆனால், சீனாவில் புரட்சிப்பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படுமென்று நான் கூறும் போது சிலர் கூறுவது போல “வரக்கூடும்” என்ற ஒன்றினைப்பற்றி, அதாவது செயல் முக்கியத்துவம் அற்றதும் பெறமுடியாததும் கற்பனையானதுமான ஒன்றைப் பற்றி நான் பேசவில்லை என்பது உறுதி. இது கரையிலிருந்து பார்க்கையிலே பாய்மர நுனி கண்ணுக்குப் புலனாகக் கூடியதாக உள்ள, கடலில் தூரத்தில் வரும் கப்பலைப் போன்றது; இது உயர்ந்த மலை உச்சியில் நின்று கிழக்கை நோக்குகையில் தங்கமயமாய் பரவிக் கொண்டிருக்கிற, அதன் கதிர்கள் தெரியக் கூடியதாய் உள்ள எழு ஞாயிறு  போன்றது; இது பிறக்கும் தறுவாயில் தாயின் கருவறையில் அமைதியின்றி அசைந்து கொண்டிருக்கும் குழந்தை போன்றது.     
மாசேதுங்
--”சிறுபொறி பெருங்காட்டுத் தீயை மூட்டமுடியும்” என்பதிலிருந்து
இயக்கத்தின் உயர்ந்த அலையும் தாழ்ந்த அலையும்
கட்சியின் செயல்தந்திரங்கள்
ஹோ-கான்சி
     அக்டோபர் 1924 இல் குவாங்டுங் வணிகர் தொண்டர் படை (Kuwangtung Merchant Volunteers Crops) சம்பவத்தில் புரட்சியாளர்களுக்கும் எதிர் புரட்சியாளர்களுக்கு மிடையிலான போராட்டம் மிகக் கடுமையான வடிவம் எடுத்தது. இந்தப் படை நிலவுடமையாளர்களினதும், தரகுமுதலாளிகளினதும் ஆயுதமேந்திய அமைப்பாகும்; சென் லிம்-யிக் என்ற பிரிட்டிக்ஷாருக்குச் சொந்தமான ஹாங்காங் வங்கிக் கழகத்தின் தரகு முதலாளி இதற்குத் தலைமை தாங்கினார். இந்தப் படைக்குப் பிரிட்டிக்ஷாரின் ஆதரவு இருந்தது; சென் சியங்-மிங் என்ற போர்ப்பிரபுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. இந்தப் படை பிரிட்டிக்ஷாரின் ஆதரவுடன் சென்சியுங்-மின் என்ற பிரபுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, குவாங்டுங்கிலிருந்த சன்யாட்-சென்னின் புரட்சி அரசாங்கத்தைத் தூக்கியெறிய உள்ளேயிருந்தும் வெளியிலிருந்தும் திட்டமிட்டது. ஆனால் சன்யாட்-சென் இந்தப் போராட்டத்தில் மாபெரும் உறுதியோடு செயற்பட்டார். தொழிலாளர் மற்றும் உழவர் மக்கள் திரளின் ஆதரவுடன் வணிகத் தொண்டர் படையின் ஆயுதமேந்திய கலகத்தைப் புரட்சி அரசாங்கம் வெற்றிகரமாக ஒடுக்கி விட்டது.
 சீனப்புரட்சியின் எழுச்சியுடன் கூடவே உழைக்கும் வர்க்க இயக்கம் மறுமலர்ச்சி அடைந்தது.
பிப்ரவரி 7 படுகொலைக்குப்பிறகு, பீசிங்-ஹாங்கோவ் இருப்புப்பாதை மற்றும் வூகான் மாநகரில் இருந்த தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. மற்றத் தொழிசங்கங்களும் கூட தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; கான்ட்டனிலும் ஹூனாவிலுமிருந்த தொழிற்சங்கங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தன. ஆனால் கான்ட்டனில் இருந்த புரட்சி அரசாங்கம் இத் தொழிற்சங்கங்களை அறிந்தேற்றிருந்தாலும்; போராட்டத்தில் நிலைத்து நின்ற அன்யுவான் தொழிற்சங்கம் ஏராளமாகச் சாதித்திருந்த போதிலும் கூட, நாட்டிலிருந்த உழைக்கும் வர்க்க இயக்கம் மொத்தத்தில் தற்காலிகமாகத் தணிந்த அலையின் நிலையிலிருந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதும், போராட்டத்தை மீண்டும் தொடர்வதுமே தொழிற்சங்கங்களின் மிக மிக அவசரமான கடமைகளாக இருந்தன. இந்தப் போராட்டத்தில் பலியான பலருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதி திரட்டுவதற்காகத் தொழிற்சங்கச் செயலகம் ஒரு தனிக்குழுவை அமைத்தது. பன்னாட்டு உழைக்கும் வர்க்க இயக்கத்தின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட சீனப் பொதுவுடைமைக் கட்சி, “தொழிற்சாலை தொழிற்சங்கக் குழுக்களை” அமைப்பதை அதன் மையக் கடமையாகக் கொண்டது; அதாவது தொழிற்சாலைப் பட்டறைகளில் பத்துப்பேருக்கும் குறைவானவர்களைக் கொண்ட இரகசியக் குழுக்களை அமைப்பதைக் கடமையாகக் கொண்டது. தொழிலாளர் கூட்டத்தினரைத் திரட்டி அமைப்பாக்கும் நோக்கத்துக்காக இக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 1924 பிப்ரவரியில் பீகிங்கில் தேசிய இரும்புப் பாதை தொழிலாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (The National Railway Workers Trade Union Federation) நிறுவப்பட்டது.
       தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும். தொழிலாளர் அமைப்புக்களைப் பாதுகாக்கவும் கோமின்டாங்கின் அரசியல் செயல்திட்டம் வாய்ப்பளித்தது.  காண்ட்டனிலிருந்த உழைக்கும் வர்க்க இயக்கம் இவ்வாறாக முன்னேற முடிந்தது. உழைப்பாளர் படைகூட கட்டியமைக்கப்பட்டது.
       1924 இல் பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட காண்டன் க்ஷமீனில் இருந்து அயல்நாட்டார்களது தொழிற்சாலைகளில் பொதுவுடைமைக் கட்சி ஒரு பெரிய வேலை நிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தியது. அந்த மாவட்டத்துக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் சீனர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காட்டவேண்டுமென்று போலீஸ் புதிய விதி செய்தது. இதை எதிர்த்தே அந்த வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இது ஒரு மாத காலத்துக்கு மேல் நீடித்தது. இறுதியில் இந்த ஒதுக்கல் விதியை விலக்கிக் கொள்ளுமாறு ஏகாதிபத்தியர்கள் நிர்ப்பந்திக்கப்படனர். அந்த வேலை நிறுத்தம் உள்ளூரில் மட்டுமன்றி வெளியே மைய வடசீனாவரையில் தொலை தூரங்களிலும் கூடத் தாக்கத்தை ஏற்படுத்தி எதிரொலித்தது. க்ஷாங்காயிலிருந்த நான்யாங் புகையிலைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள். ஹாங்கெள ரிக்க்ஷாக்காரர்கள், சூச்சோவ் நெசவாளர்கள், மற்றும் செக்கியாங்கைச் சேர்ந்த யுயாவ் உற்பத்தித் தொழிலாளர்கள் ஆகியோர் அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்தனர். இந்த வேலைநிறுத்தம் ஒவ்வொன்றிலும் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். நாட்டில் உழைக்கும் வர்க்க இயக்கம் மறுமலர்ச்சி பெற்றதை இதெல்லாம் காட்டியது.
      இந்தக் காலப்பகுதியில் தெற்கில் உழவர் இயக்கமும் படிப்படியாகவும் உறுதியாகவும் வளர்ச்சியடைந்தது. 1921 ஆம் ஆண்டு போன்ற தொடக்கக் காலத்திலேயே குவாங்டங்கில் பெங்க்பய் உழவர்களிடையே பெருமளவிலான  புரட்சிகரப் பணியாற்றி இருந்தார்.  
      1923 சனவரியில் ஹாய்ஃபெங் உழவர் சங்கம் கூட்டப்பட்டது. அதில் 1,00,000 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த சங்கம் கொடுங்கோல் நிலப்பிரபுக்களை எதிர்த்தும் நிலக் (குத்தகை) வாடகையைக் குறைக்கக் கோரியும் போராட்டங்களை நடத்தியது. 1914 இல் பிற்போக்குப் போர்ப்பிரபுவாகிய  சென் சியங்-மிங்கால் இச்சங்கம் கலைக்கப்பட்ட போதிலும்கூட, இது போன்ற உழவர் அமைப்பு  ஹாய்பெஃங்கிலிருந்தும் லுஃங்பெங்கிலிருந்தும் சாவோச்சோவுக்கும், ஸ்வாட்டோவு க்கும், அப்புறமாக க்வாங்டங் மாகாணம் (புராவின்ஸ்) முழுமைக்கும் பரவியது. 1923 அக்டோபரில் ஹூனானிலுள்ள ஹாங்க்ஷானில் 1,00,000 உழவர்களைக் கட்சி திரட்டியது. ஹூனான் போப்பிரபுக்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராகக் கடுமையான போராட்டங்களை அவர்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியது. குவாங்டங்கையும் ஹூனானையும் மையமாகக் கொண்ட தென்பகுதியில் உழவர் இயக்கம் அமைப்பு ரீதியாக விரிவடைந்து பொருளியல் போராட்டங்களை நடத்தியது மட்டுமில்லாமல், அரசியல் போராட்டங்களிலும் பங்கேற்றது. கான்ட்டனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்த உழவர் தற்காப்புப் படைப் பிரிவுகள் வணிகத் தன்னார்வப் படைகளின் கலகத்தை அடக்குவதற்குச் சன்யாட்-சென்னுக்கு உதவியும் செய்தன.
      இரண்டாவது சிஹ்லி-ஃபெடியென் போர்க்காலத்தின் போது ஃபெங்யு-ஹலாங் சிஹ்லி குறுங்குழு 1924 அக்டோபரில் ஆட்சிகவிழ்ப்புச் சதியை நடத்தினார். அவர் தன் துருப்புக்களின் பெயரைத் தேசியப் படை என்று மறுபெயரிட்டார். சிஹ்லி போர்ப்பிரபுக்களைப் பீகிங்கிலிருந்து வெளியேற்றினார்.
      இந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து ஃபெங்டியன் போர்ப்பிரபுக்களின் செல்வாக்கு வடசீனாவுக்குள்ளும் ஊடுருவியது. இறுதியாக, பீகிங்கிலும் அரசியல் அதிகாரத்தை அவர்கள் எடுத்துக் கொண்டனர். சிஹ்லி குறுங்குழுவின் முக்கிய சக்திகள், வு பெயி-லு தோல்வியுற்ற பிறகு, யாங்ட்சி பள்ளத்தாக்குக்குப் பின்வாங்கினார். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அங்கிருந்தபடியே வலிமையைத் திரட்டினார். சாங்ட்சோ-லின், டுவான் சி-ஜூயி மற்றும் ஃபெங் யு-சியாங் என்ற மூன்று குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழான ஒரு கூட்டணி ஆட்சி வடிவத்தைப் பீகிங் ஆட்சி எடுத்தது. டுவான் சி-ஜூயி “தற்காலிக நிர்வாக ஜெனரல்” என்ற பட்டத்துடன் தலைமை ஏற்றார்.
      பீகிங்கிலிருந்த புதிய போர்ப்பிரபுக்களின் அரசாங்கம் இன்னமும் உறுதிப்படாத நிலையில் தொழிலாளர் மீதான ஒடுக்கு முறையைத் தற்காலிகமாகத் தளர்த்தியது. பிப்ரவரி 7 படுகொலையிலிருந்து சிறையில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் தலைவர்களை மீட்கவும், ரெயில்வே தொழிற்சங்கத்தை மீட்டமைக்கவும், வேலையில்லாதோர்க்கு வேலை பெறவும் கட்சிக்கு இது ஒரு வாய்ப்பளித்தது. 1925 பிப்ரவரியில், ரெயில்வே தொழிற்சங்கங்களின் இரண்டாவது தேசிய பேராயம் பீகிங்கில் நடத்தப்பட்டது. உடனடியாக இதைத் தொடர்ந்து ட்சிங்கடாவ்-ட்சினான் ரெயில்வே தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தமும், அதைத் தொடர்ந்து பீகிங், வுகான், க்ஷென்யாங் மற்றும் டாங்க்க்ஷானில் தொடர்ச்சியான பல வேலைநிறுத்தங்களும் நடந்தன.
      தேசிய அசெம்பிளியைக் கூட்டுவதற்கும், சமமற்ற ஒப்பந்தங்களை ஒழித்துக் கட்டவுமான நாடு தழுவிய மக்கள் திரள் இயக்கத்தைத் தொடங்கியதன் மூலம் சனநாயகப் புரட்சிப் பதாகையில் கீழே பரந்து பட்ட மக்களைத் திரட்டுவதற்கும் அமைப்பாக்குவதற்கும் இந்தச் சூழ்நிலைகளில் கட்சி தீர்மானம் செய்தது. கட்சியின் அழைப்புக்கு விடையளிப்பது போல “தேசிய அசெம்பிளியை நிறுவுவதற்கான சங்கங்கள்” க்ஷாங்காய், செக்கியாங், குவாங்டுங், ஹூனான, ஹூப்பெயி மற்றும் பல இடங்களில் வெற்றிகரமாகக் கட்டப்பட்டன.
      சனவரி 1925 இல், மக்கள் திரள் இயக்கம் ஏற்கனவே முழுவீச்சில் இருக்கும் போது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் நான்காவது தேசியப் பேராயம் க்ஷாங்காயில் கூட்டப்பட்டது. 980 கட்சி உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவம் செய்த 20 பேராளர்கள் அதில் கலந்து கொண்டனர்.
      கட்சியின் பேராயம் அந்த நேரத்திலிருந்த அரசியல் நிலைமையை விரிவாகப் பகுத்தாய்ந்தது. போர்ப்பிரபுக்களின் ஆட்சி விரைவாகச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலப்பகுதி அது; ஏனெனில் அப்போது போர்ப்பிரபுக்களின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு, புதிய போர்ப்பிரபுக்கள் தங்கள் நிலையை உறுதி செய்து கொள்ளாத நேரம். சீனாவில் மக்கள் இயக்கம் மேலும் வளர்வதற்கு இது சாத்தியமாக இருந்தது. கட்சியின் கொள்கைகளையும், அதன், பிரச்சாரம் மற்றும் அமைப்பு நாடு தழுவிய அளவில் மக்கள் இயக்கத்தைக் கட்டிவளர்ப்பது எப்படி என்பது போராயத்தில் நடந்த  விவாதங்களின் மையப் பொருளானது இயற்கையே யாகும்.
      முதலாளிய சனநாயகப் புரட்சியில் பங்கேற்பதில் உழைக்கும் வர்க்கத்துக்குத் தனது சொந்த நோக்கம் ஒன்று உள்ளது- அதாவது சனநாயகப் புரட்சி முழுமையாக வெற்றிபெற்ற பிறகு மக்களைப் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்றுக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் நோக்கம் உள்ளது -  என்பதைப் பேராயம் சுட்டிக்காட்டியது. எனவே, இந்தப் புரட்சியில் உழைக்கும் வர்க்கத்தின் இடம் மற்றவர்க்கங்களுடையதை விட வேறுபட்டிருந்தது. உழைக்கும் வர்க்கம் உடமை வர்க்கத்தின் வாலாக இருந்துவிடாமல் தனக்கென சுதந்திரமான நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். உழைக்கும் வர்க்கம் தலைமை ஏற்பதன் மூலம் மட்டுமே சீனச் சனநாயக  புரட்சி ஒரு முழுமையான வெற்றியை அடைய முடியும்.
முன்னோக்கிய நடைபோட்டுக் கொண்டிருந்த தொழிற்சங்க இயக்கத்துக்கு புதிய  காலப்பகுதி தொடங்கி விட்டதென்று பேராயம் சுட்டிக்காட்டியது. சீனாவில் தேசிய அசெம்ளியைக் கூட்டுவதென்பது அந்த நேரத்தில் தெளிவான ஒரு சாத்தியப்பாடுடன் இருந்தது. எனவே, தேசிய சனநாயக இயக்கத்தில் தலைமை நிலையை அடைவதற்கு உழைக்கும் வர்க்கம் அந்த இயக்கத்தில் செயலூக்கமுடன் பங்கேற்பதோடு, தனது சொந்த, ஆற்றல் வாய்ந்த மக்கள் அமைப்புக்களைக் கட்டியமைக்க வேண்டும். போர்பிரபுக்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இந்த அமைப்புக்கள் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது பட்டறையிலும் மூன்றுக்கு மேற்பட்ட உழைப்பாளரைக் கொண்ட தொழிற்சங்க குழுக்களின் வடிவில் கட்டப்பட்ட வேண்டும்; ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உள்ள வெவ்வேறு வேலைத்துறைக்கும் ஏற்றவாறு இக்குழுக்களைக் கிளைகளாக ஒன்று சேர்க்க வேண்டும்; இந்தக் கிளைகள் சேர்ந்ததே தொழிற்சங்கமாகும்; இந்தத் தொழிற்சங்கங்களை இணைத்து வட்டாரத் தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டும். ரெயில்வே, சுரங்கங்கள், துணி ஆலைகள் போன்ற தொழிற்சாலைகளிலும் க்ஷாங்காய். ஹாங்கோவ், டியெண்ட்சின் போன்ற வணிக நகரங்களிலும் முதலில் அமைப்பு வேலையைச் செய்தாக வேண்டும்.
      சீனாவின் தேசிய சனநாயகப் புரட்சியின் ஆதாரசக்தி உழவர்களே என்றும், அவ்வர்க்கம்தான் உழைக்கும் வர்க்கத்தின் முதன்மையான கூட்டாளி என்றும் பேராயம் மேலும் சுட்டிக்காட்டியது. எனவே அரசியல் மற்றும் பொருளியல் போராட்டங்களை நடத்துவதற்கு உழவர்களை அமைப்பு ரீதியாக திரட்டத் தன்னாலானது அனைத்தையும் பொதுவுடைமைக் கட்சி செய்தாக வேண்டும். அதற்கேற்ப நிலைப்பிரபுத்துவ ஆட்சியையும் அதன் ஆயுதப்படைகளையும் எதிர்த்துப் போரிட உழவர்சங்கங்களையும், உழவர் தற்காப்புப் படைகளையும் கட்டியமைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. நாடுமுழுவதும் உழவர் இயக்கத்தை விரிவாக்க, தெற்கு மாகாணத்தில் நடத்திய உழவர் இயக்கத்தின் அனுபவங்களை முழுதும் பயன்படுத்திப் பிரபலப்படுத்தியாக வேண்டியிருந்தது.
      கடந்த ஆண்டில் ஐக்கிய முன்னணியின் வேலையில் நேர்ந்த “இடது” மற்றும் ”வலது” சந்தர்ப்பவாத தவறுகளைப் பேராயம் விமர்சித்தது. கோமின்டாங் சீரமைக்கப்பட்ட பிறகு அதற்குள்ளேயே இடது, வலது மற்றும் மையப் பிரிவுகள் தோன்றியதை அது சுட்டிக்காட்டியது. மையப்பிரிவை விமர்சித்துக் கொண்டும், வலது சாரிகளை எதிர்த்துக் கொண்டும், இடதுசாரி அணிகளை விரிவுபடுத்துகின்ற கொள்கையை அது அம்பலப்படுத்தியது.
      மக்கள் திரள் போராட்டங்களின் புதிய அலை ஒன்றுக்காக அமைப்பு ரீதியாகத் திரட்டித் தயார் செய்ததே நான்காவது தேசியப் பேராயத்தின் தலையாய சாதனையாகும்.
      ஒரு விவசாயத் திட்டத்தை முன்வைக்கத் தவறியது அதன் குறைபாடாகும். தனது பீகிங் திடீர்ப் புரட்சியின் போது ஃபெங்யு – சியாங் புரட்சியின் பக்கமிருந்தார்; தனது நிலைக்கு ஆதாரம் தேடுவதற்காக டாக்டர் சன்யாட்-சென்னை வடக்கே வருமாறு அழைத்தார். துவான் சிஜூயி மற்றும் சாங்சா வே-லின் ஆகிய இருவரும் பிரபலமடைவதற்காக, தேசிய விவகாரங்களில் ஆலோசனை கலப்பதற்காக அழைக்கும் சாக்கில் இது போலக் கூப்பிட்டனர். பொதுவுடைமைக் கட்சியின் உறுதியான ஆதரவோடு 1924 அக்டோபரில் குவாங்டுங்கை விட்டுப் பீகிங்க்குக்குக் கிளம்பினார். அங்கே ”எனது வடதிசைப் பயணம் பற்றிய கொள்கை அறிக்கை”யை வெளியிட்டார். சமமற்ற உடன்படிக்கைகளை ஒழித்துக் கட்டுமாறும், தேசிய அசெம்ளியைக் கூட்டுமாறும் அதில் அவர் அறைகூவல் விடுத்தார். எனினும் அவர் பீகிங் சென்றதும் துவான் சி-ஜூயி தேசியப் பேரவையைக் கூட்டுவதில் துளிகூட ஆர்வங்காட்டவில்லை என்பதைக் கண்டார். ”தேசிய மறுவாழ்வு பற்றிய மாநாட்”டைக் கூட்டுவதன் மூலம் உண்மையில் துவான் தேசியப் பேரவையை எதிர்க்க முயன்று கொண்டிருந்தார். துவானுடையத் திட்டத்தை முறியடிக்கும் பொருட்டு 1925 மார்ச்சில் சன்யாட்- சென்னும் லிதா-சாவோவும் தேசிய அசெம்ளியை நிறுவுவதற்கான சங்கங்களின் தேசியப் பேராயத்தைக் கூட்ட அழைப்பு விடுத்தனர். தேசிய மறுவாழ்வு பற்றிய மாநாட்டின் பண்புகளை அம்பலப்படுத்துவதிலும், புரட்சிகரக் கருத்தியல்களை வெளிப்படுத்துவதிலும், அரசியல் நடவடிக்கைகளில் கிளர்ந்தெழச் செய்வதிலும் பேராயம் மகத்தான விளைவுகளை ஏற்படுத்தியது.   
தன் வடதிசைப் பயணத்தின் போது நேர்ந்த மிகுதியான வேலைப் பளுவினாலும், அசதியாலும் நோய்வாய்ப்பட்டுச் சிறிது குணமான பிறகு 1925 மார்ச் 12 இல் சன்யாட்-சென் இறந்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்து கொண்டே சோவியத் ஒன்றிய பொதுவுடைமைக் கட்சியின் மையச் செயற் குழுவுக்கு, இரண்டு மாபெரும் நாடுகளான சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையே நட்பு ரீதியான கூட்டுறவு நிலவ வேண்டுமென்ற தனது விருப்பார்வத்தை வெளியிட்டார். சன்யாட்-சென் மறைவுக்குத் தனது இரங்கல் செய்தியை ஸ்டாலின் பெயரால் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மையக் குழு தந்தியடித்தது. டாக்டர் சன்யாட்-சென்னின் மாபெரும் சாதனை சீனத் தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் நினைவில் என்றென்றும் வாழும் எனவும் சனநாயகப் புரட்சியில் முழு வெற்றி அடைகின்ற வரையில் சன்யாட்-சென்னின் பதாகையை உயர்த்திப் பிடிக்குமாறு கோமின்டாங்கின் சனநாயகப் பிரிவினரை ஊக்குவிக்க வேண்டுமெனவும் அந்தத் தந்திச் செய்தி சுட்டிக்காட்டியது.
      இந்த சனநாயகப் புரட்சியாளர்கள் மற்றும் பொதுவுடைமைக் கட்சியின் மாபெரும் நண்பராகிய சன்யாட்-சென்னின் திடீர் இறப்புக்கு நாடு முழுவதும் துக்கம் கொண்டாடிய வண்ணம் அரசியல் பிரச்சாரம் இயக்கம் விரிவாக நடத்தப்பட்டது. பொதுவுடைமைக் கட்சிக்கும், கோமிண்டாங்குக்கும் இடையிலான கூட்டுறவின் பயனாகவும், இரண்டு கட்சிகளின் புரட்சிகர உறுப்பினர்களின் கூட்டு முயற்சியாலும் மூன்று முக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கொள்கைகள் மீதமைந்த மூன்று மக்கள் கோட்பாடுகள் நாடு முழுவதும் மிக விரைவாக அறியப்பட்டது.
-’நவசீனப் புரட்சியின் வரலாறு’ என்ற நூலிலிருந்து.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்   
செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு           
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 195 – 209

No comments:

Post a Comment