Tuesday 1 November 2011

சீனப்புரட்சியும் சீனப்பொதுவுடைமைக் கட்சியும்


பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்
செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 114 – 118

சீனப்புரட்சியும் சீனப்பொதுவுடைமைக் கட்சியும்

மாசேதுங்
 
 சீனப்புரட்சியின் கடைமைகள் இந்தக் காலத்தில் ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவ நிலப்பிரபு வர்க்கமும் புரட்சியின் முதன்மையான எதிரிகளாய் இருப்பதால் புரட்சியின் தற்போதைய கடமை யாவை?

தலையாய கடமை இந்த இரண்டு எதிரிகளையும் தாக்குவது, அதாவது அந்நிய ஏகாதிபத்திய அடக்கு முறையைத் தூக்கி எறிவதற்கு ஒரு தேசியப் புரட்சியை மேற்கொள்வதும் நிலப்பிரபுக்களின் அடக்கு முறையை தூக்கியெறிவதற்கு ஒரு சனநாயகப் புரட்சியை மேற்கொள்வதுமாகும். அதிலும் ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிவதற்கான தேசியப் புரட்சியே முக்கியமானதும் முதலாவதுமான கடமை என்பதன் கேள்விக்கே இடமில்லை.

இந்த இரண்டு மாபெரும் கடமைகளும் ஒன்றுக்கென்று நெருங்கிய தொடப்புடையன. ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவ நிலப்பிரபு வர்க்கத்தின் முக்கிய ஆதரவாய் இருப்பதால் ஏகாதிபத்திய ஆட்சி தூக்கியெறியப்பட்டாலொழிய அதற்கு முடிவு கட்டமுடியாது. மாறாக, சீனாவில் நிலப்பிரபுத்துவ நிலப்பிரபு வர்க்கம் ஏகாதிபத்தியக் கட்சியின் முக்கிய சமூக அடிப்படையாகவும் விவசாயிகள் சீனப்புரட்சியின் முக்கிய சக்தியாகவும் இருப்பதால், நிலப்பிரபுத்துவ நிலப்பிரபு வர்க்கத்தைத் தூக்கியெறிவதற்கான விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகளுக்கு உதவியளித்தாலொழிய ஆற்றல் மிக்கப் புரட்சிப் படைகளை அமைத்து ஏகாதிபத்திய ஆட்சியைத் தூக்கியெறிவது அசாத்தியமாகும். ஆகவே இரண்டு அடிப்படைக் கடமைகளும் அதாவது தேசியப் புரட்சியும், சனநாயகப் புரட்சியும் ஒரே நேரத்தில் வேறுபட்டும் இணைந்தும் உள்ளன.

சீனத் தேசியப் புரட்சியின் தலையாய உடனடியான கடமை ஜப்பானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளரை எதிர்ப்பதாக இருப்பதானாலும் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்குச் சனநாயகப் புரட்சி நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதனாலும் இரண்டு புரட்சிகரக் கடமைகளும் உண்மையில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றன. தேசியப் புரட்சியையும் சனநாயகப் புரட்சியையும் புரட்சியின் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கட்டங்கள் எனக் கருதுவது தவறாகும்.


சீனப் புரட்சியின் எதிரிகள் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பது தெளிவு. சக்தி வாய்ந்த ஏகாதிபத்திவாதிகளும் ஆற்றல் மிக்க நிலப்பிரபுத்துவ சக்திகளும் மட்டுமல்ல மக்களை எதிர்ப்பதற்காக ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் கள்ளக் கூட்டுச் சேரும் பூர்க்ஷ்வா வர்க்க பிற்போக்குவாதிகளும் சில சமயங்களில் எதிரிகளாவர். ஆகவே, புரட்சிகரச் சீன மக்களின் எதிரிகளின் வலிமையைக் குறைத்து எடை போடுவது தவறாகும்.
இத்தகைய எதிரிகளை எதிர்நோக்கும் போது, சீனப்புரட்சி நீண்டதாகவும், கொடியதாகவும் தான் இருக்க முடியும், எமது எதிரிகள் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பதால் நீண்ட கால நேரத்தில் தான் புரட்சிகர சக்திகள் இறுதியில் அவர்களை நொறுக்கவல்ல சக்தியாக தம்மைக் கட்டி வளர்த்துப் புடம் போட்டெடுக்க முடியும். சீனப்புரட்சியின் மீதான எதிரியின் அடக்குமுறை மிகக் கொடியதாக இருப்பதால், புரட்சிகர சக்திகள் தமக்கு வலுவூட்டி, உறுதியை முற்றாக வெளிப்படுத்தினாலொழிய தமது நிலைகளைப் பாதுகாக்க முடியாது; எதிரிகளின் நிலைகளைக் கைப்பற்றுவதைப் பற்றிப் பேசவே தேவையில்லை. ஆகவே, கண்ணிமைப்பதற்குள் சீனப்புரட்சியின் சக்திகளைக் கட்டியமைத்து விட முடியும் என்றோ சீனப்புரட்சிப் போராட்டம் ஒரு நாளில் வெற்றியடைந்து விடும் என்றோ நினைப்பது தவறாகும்.

இத்தைகைய எதிரிகளை எதிர்நோக்கும் போது சீனப்புரட்சியின் முதன்மையான வழிமுறை அல்லது அதன் முதன்மையான வடிவம் ஆயுதப் போராட்டமாக இருக்க வேண்டுமேயன்றி, சமாதான போராட்டமாக இருக்க முடியாது. ஏனென்றால், எமது எதிரிகள் சீன மக்கள் சமாதான நடவடிக்கையில் ஈடுபடுவதை இயலாத தாக்கி அவர்களது அரசியற் சுதந்திர உரிமைகள் அனைத்தையும் அபகரித்து விட்டார்கள். "சீனாவில் ஆயுதந் தாங்கிய புரட்சி ஆயுதந் தாங்கிய எதிர்ப்புரட்சியுடன் போரிடுகின்றது. அது சீனப்புரட்சியின் தனி இயல்புகளில் ஒன்றாகவும் அதன் மேம்பாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது என ஸ்டாலின் கூறுகின்றார். இந்த வரையறை முற்றிலும் சரியானது. ஆகவே ஆயுதப் போராட்டத்தையும் புரட்சிகரப் போரையும் கொரில்லாப் போரையும் இராணுவ வேலையையும் குறைத்து மதிப்பிடுவது தவறாகும்.

இத்தகைய எதிரிகளை எதிர் நோக்கும் போது புரட்சிகரத் தளப்பகுதிகள் பற்றிய பிரச்சனை எழுகிறது. வலிமை வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய பிற்போக்குச் சீனக்கூட்டாளிகளும் நீண்ட காலமாகவே சீனாவின் கேந்திர நகரங்களை வசப்படுத்தி உள்ளனர். ஆகவே புரட்சி அணிகள் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களை முன்னேறிய உறுதியான தளப்பிரதேசங்களாக மாபெரும் இராணுவ , அரசியல் பொருளாதார, பண்பாட்டுப் புரட்சிக்கோட்டைகளாக மாற்றி இவற்றிலிருந்து நகரங்களைப் பயன்படுத்தி கிராமப்பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கர எதிரிகளை எதிர்த்துப் போராடுவதும், இவ்வாறு நீண்டகாலப் போராட்டத்தின் மூலம், புரட்சியின் முழு வெற்றியைப் படிப்படியாகப் பெறுவதும் அவசியமானது. அவர்கள் ஏகாதிபத்தியத்துடனும் அதன் அருவருடிகளுடனும் சமரசம் செய்து கொள்ளாமல், போராடுவதில் உறுதியாக நிற்க விரும்பினால், தமது சொந்த வலிமை போதாத சமயத்திற்குப் பலம் வாய்ந்த எதிரிகளுடன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போராட்டம் நடத்துவதைத் தவிர்த்து தமது சக்திகளைக் கட்டிவளர்த்து புடம் போட்டெடுக்க எத்தனித்தால் அவர்கள் அப்படிச் செய்வது அவசியமானது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சமமற்றதாக இருத்தல் (அதன் பொருளாதாரம் ஒரு முகப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் இல்லை) அதன் ஆட்சிப்பகுதி பரந்ததாய் இருத்தல் (அது,புரட்சிகரச் சக்திகள் தந்திரமிக்கப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கின்றது) எதிர்ப்புரட்சி முகாம் ஒற்றுமையற்றும் முரண்பாடுகள் நிறைந்தும் இருத்தல், புரட்சியின் முதன்மையான சக்தியாய் விளங்கும் விவசாயிகளின் போராட்டம் பாட்டாளி வர்க்கச் சக்தியால் அதாவது பொதுவுடைமைச் சக்தியால் தலைமை தாங்கப்படுதல் ஆகிய காரணிகளினால் சீனப்புரட்சியில் முதன்முதலில் கிராமப் புறத்தில்தான் வெற்றியீட்டப்பட முடியும். மறுபுறம், அதே நிலைமைகள் தான் புரட்சியைச் சமற்றதாக்கி, புரட்சியின் முழு வெற்றிபெறும் கடமையை நீண்டகாலமானதாகவும், கடுமையானதாகவும் செய்கின்றன. புரட்சித் தளப்பகுதிகளில் நடைபெறும் நீடித்தப் புரட்சிப் போராட்டம் முக்கியமாக, சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் நிகழும் விவசாயக் கொரில்லாப் போராகவே இருக்கும் என்பது தெளிவு. எனவே கிராமப்பகுதிகளைப் புரட்சித் தளப்பகுதிகளாகப் பயன்படுத்தும் தேவையைப் புறக்கணிப்பதும் விவசாயிகள் நடுவில் கக்ஷ்டப்பட்டு வேலை செய்வதை அலட்சியம் செய்வதும் கொரில்லாப் போரைப் புறக்கணிப்பதும் தவறாகும்.

ஆனால் ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தினால் அது இதர போராட்ட வடிவங்களை நாம் கைவிடுவது என்று பொருளாகாது. அதற்கு மாறாக இதர பல்வேறு போராட்டங்களும் ஆயுதப் போராட்டத்துடன் இணையா விட்டால் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற முடியாது. கிராமியத் தளப்பகுதி பிரதேசங்களின் வேலையை வற்புறுத்தினால், அது நகரங்களிலும் எதிரியாட்சியில் இன்னும் இருக்கின்ற பரந்த இதர கிராமப்பகுதிகளிலும், வேலை செய்யாவிட்டால் கிராமியத் தளப்பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுவிடும். புரட்சியும் தோல்வி அடைந்து விடும். இன்னும் புரட்சியின் இறுதிக் குறிக்கோள் எதிரியின் முக்கிய தளங்களாகிய நகரங்களைக் கைப்பற்றுவது ஆகும். நகரங்களில் போதுமான வேலை செய்யப்படாவிட்டால் இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.

இவ்வாறு எதிரி இராணுவம், அதாவது மக்களுக்கெதிடான அவனது முதன்மையான ஆயுதம் அழிக்கப்பட்டாவிட்டால் கிராமியப் பகுதிகளிலோ, அல்லது நகரங்களிலோ புரட்சி வெற்றி பெற முடியாதென்பது தெட்டத் தெளிவு. ஆகவே போரில் எதிரித் துருப்புக்களை அழித்தொழிக்கும் அதே வேளையில் அவற்றைச் சின்னாபின்னப்படுத்துவதும் முக்கிய கடைமையாகும்.

நீண்ட காலமாக எதிரிகளால் கைப்பற்றப்பட்டு, இருண்ட பிற்போக்குச் சக்திகள் அதிக்கம் செலுத்துகின்ற நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதியிலுமுள்ள பிரச்சார அமைப்பு வேலைகளில் பொதுவுடைமைக் கட்சி அவசரத் தன்மையும், அசட்டுத் துணிச்சலும் உள்ளதாய் இருக்கக் கூடாது. மாறாக அது தலைமறைவாக வேலை செய்யும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை உடையதாகவும், வலிமையைச் சேகரித்துத் தன் வேளைக்காகப் பொறுத்திருப்பதாகவும் இருக்க வேண்டுமென்பதும் தெளிவு. எதிரிக்கெதிரான போராட்டத்தில் மக்களுக்குத் தலைமை தாங்கும்போது கட்சிச் சட்டமும் விதிகளும் சமூகப் பழக்கமும் அனுமதித்தவை போன்ற வெளிப்படையான எல்லாவற்றையும் பயன்படுத்தி, நியாயமானவையும், எமக்குச் சாதகமானவையும் கட்டிப்பாடுடையவையுமான போராட்டங்களை நடத்தும் கோட்பாட்டைக் கடைப்பிடித்து, மெதுவாகவும், உறுதியாகவும் படிப்படியாகவும் முன்னேறும் செயல் தந்திரத்தைக் கைக்கொள்ள வேண்டும். வெறுங்கூச்சலும் அசட்டுத் துணிச்சல் நடவடிக்கையும் வெற்றிக்கு வழிகோலமாட்டா.

No comments:

Post a Comment